செவ்வாய், 28 ஜூலை, 2015

காலம் ஆனார் கலாம்.

அக்கினிச் சிறகுகள் எழுதிய‌ அக்கினி அணைந்தது.
ஒரே பக்கமுள்ள ஓவிய நாணயம் உடைந்தது.
மறுபக்கமே இல்லாத மாமனிதர் கலாம் ஆனார் காலம்.
- கண்ணீர் அஞ்சலிகள்.

செவ்வாய், 21 ஜூலை, 2015

கணினிக்கதை: தன்மி புள்ள நுட்பா நுட்பா

தன்மி அனுப்பி, தொலை அணுகல்
திண்ணமாய்க் கற்றுத் தெரிந்து கொண்டனள்
நுணுக்கக் கலைஞன் நெடிலனின் தோழியாம்
நுட்பா என்னும் நங்கை யினாளே.
-    கதைப்பா.
"நலமா நெடிலன்?" தான் புதிதாய் வாங்கியிருந்த ஆண்ட்ராய்டு லாலிபாப் கைபேசியில் சிரித்த முகமாய்த் தன்மி (selfie) எடுத்து அனுப்பினாள் நுட்பா.
'ழ‌' என்னும் மாதிரியினைத் (pattern) தடவிச் சிணுங்கிய கைபேசியைத் திறந்தான் நெடிலன் தனது தலையைக் கோதியபடி.
"நலம்." ஒன்றைச் சொல்லில் சிரிப்பான்கள் (smileys) ஏதுமில்லாமல் சரியாகப் பதினொரு நொடிகளில் மறுமொழி வந்தது.
மறுமொழிக்காகக் காத்திருந்தவள், வெவ்வேறு நிலைகளில் (different poses) தொடர்ந்து தன்மிகளை அனுப்பினாள்.
"என்ன வேணும் நுட்பா?" ஒற்றைச் சொல் மூன்று சொற்களாய் வளர்ந்தது இரண்டு சிரிப்பான்களுடன்.
"ஒரு சின்ன ஐயம். வீட்டுக்கு வந்து விளக்க முடியுமா நெடில்?" தன்மிகள் ஏதுமில்லாமல் செய்தி மட்டும் அனுப்பினாள் நுட்பா.
"சாப்டப்போறேன். ஒடனே வரணுமா?" இம்முறை மறுமொழி ஒன்பது நொடிகளில் வந்தது.
"வீட்டுக்கு வந்து சாப்டுங்க நெடில்." விடாமல் தொடர்ந்தாள் நுட்பா.
கட்டை விரல் உயர்த்திய சிரிப்பானை மறுமொழியாக அனுப்பி விட்டு நுட்பாவின் வீட்டிற்கு விரைந்தான் நெடிலன் தனது மகிழ்வுந்தில்.
ஐந்து மணித்துளிகளில் வீட்டிற்கு வந்தவனை வரவேற்று சாப்பிடச் சொன்னாள் நுட்பா.
“முதல்ல ஐயத்தைத் தீர்ப்போம். பிறகு சாப்பாடு.” அன்புக்கட்டளையிட்டான் நெடிலன்.
“இது என்னோட Crome Book. புதுசா அலுவலகத்துல குடுத்துருக்காங்க. தொலை அணுகல் மூலமா அலுவலகக் கணினியில் வேலை செய்யணும். Configure பண்ணத் தெரியல. அதான் கூப்டேன்.” மெலிதான அச்சத்துடன் கேட்டாள் நுட்பா.
“இது ரொம்பச் சின்ன வேலை.”  நுட்பாவின் Crome Book ஐ கையில் வாங்கியவாறே பேசினான் நெடிலன்.
“மொதல்ல, Chrome Remote Desktop செயலியை Crome Book ல பயனர் பேரு கொடுத்து நிறுவணும்.”
“ஏற்கனவே நிறுவியாச்சு.” சற்றே குரல் உயர்த்திப் பேசினாள் நுட்பா.
"அது மட்டும் போறாது…" நெடிலன் பேசியதைக் கேட்டவுடன், நாக்கைப் பற்களால் கடித்துச் சிரித்தாள்.
“இந்த Screen மொதல்ல Enable remote connections பொத்தான சொடுக்கணும். அதுக்கப்பறமா, ஒரு கோப்பினை கூகுளே நம்மளோட system த்துல பதிவிறக்கி நிறுவும். இது ஒவ்வொரு system பொறுத்து மாறுபடும். இத நீ ஒன்னோட அலுவலக கணினில ஏற்கனவே செஞ்சிருந்தாத்தான், இப்ப இங்க ஒன்னோட கணினிய அணுக முடியும். அத நீ செய்யல. அதனாலதான் இந்தச் சிக்கல்.” அவள் தவறைப் புட்டு வைத்தான் நெடிலன்.
"இப்ப என்ன செய்யறது?"  மீண்டும் அச்சமுற்றாள் நுட்பா.
“நீங்க, குழுவோட கடவுச்சொல்தான (team common password) பயன்படுத்தறீங்க‌, ஒங்க குழுவுல இப்ப யாரு அலுவலகத்துல இருக்காங்களோ, அவங்கள இந்த வேலயைச் செய்யச் சொல்லு.” திண்ணமாய்ச் சொன்னான் நெடிலன்.
நொடிகளில் தனது குழுத்தோழிக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் நுட்பா.
“பொதுவான PIN எண் கொடுக்கச் சொல்லு நுட்பா. எடுத்துக்காட்டா, ஒன்னோட கைபேசி எண், அலுவலக எண் எதாவது பொதுவா இருக்கட்டும். அப்பத்தான் ஒன்னோட குழுவுல எல்லாரும் அணுக முடியும். நீ மட்டும் அணுகணும்னா, ஒனக்கு மட்டும் தெரிஞ்ச எண்ணக் குடுக்கலாம்.நெடிலன் தன் நெற்றியைத் தடவியவாறு பேசினான்.
“ம்.. இப்ப சரியா வந்துடுச்சு பாரு..” நுட்பாவின் மடிக்கணினியில் மீண்டும் குறிப்பிட்ட செயலியை இயக்கியவன் வியப்புடன் பேசினான்.
வியந்தவன் தொடர்ந்தான். “இதுபோல எத்தன கணினிய வேணும்னாலும், நாம தொலைவிலிருந்தே அணுகலாம். இதே மாதிரி, தொலை நிலை உதவியும்(remote assistance) கூட இருக்கு. இது எல்லாமே கூகுள் இலவசமாவே தர்றது.”
தொலை அணுகல் அருமையாய் வர இருவரும் சேர்ந்து சிரித்தவாறே குழுமி (groupie) எடுத்துக் கொண்டார்கள்.
"இந்தப் பெட்டியத் (Crome Book) தொறந்தா நேரம் போறதே தெரியாதே. சீக்கிரமாச் சாப்ட வாங்கப்பா." சமையலறையிலிருந்து நுட்பாவின் அம்மா குழலரசி குரல் கொடுத்தாள்.
"தன்மி புள்ள நுட்பா நுட்பா" அவள் எடுத்து அனுப்பிய ஒளிப்படங்களைப் பார்த்து நெடிலன் கிண்டலாய்ப் பாடத் தொடங் கினான்.
கலைச்சொற்கள்:
தன்மி (தனக்குத் தானே எடுத்துக் கொள்ளும் ஒளிப்படம்) – selfie.
மாதிரி – pattern
சிரிப்பான்கள் – smileys
கட்டை விரல் உயர்த்திய சிரிப்பான் – thumbs up smiley
தொலை அணுகல் – remote access
தொலை நிலை உதவி – remote assistance
குழுமி (ஒன்றுக்கு மேற்பட்டோர் சேர்ந்து தங்களைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் ஒளிப்படம்) – groupie