சனி, 19 ஆகஸ்ட், 2023

கனவைத் தேடி

அந்தி நேரத்து மணியோசை குயிலுடன் கூடிய கூவலுடன் இணைந்தே ஒலித்தது. மாலைப் பறவைகள் கூடு தேடிச் செல்லும் பொழுதில் படித்துறையில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான் மயிலன். அந்தி நேரத்தில் தானெழுதிய அகக்காண் அட்டைக் குறிப்புகளை கண்முன்னே கொணர்ந்து மூளையேற்றிக் கொள்தல் மயிலனின் வழக்கம்.

"கனவு மூவகைப்படும்: முதலாவது தூக்கத்தில் வருவது, அடுத்தது சோம்பலில் வரும் பகற்கனவு, மற்றொன்று குறிக்கோள் கனவு." எப்போதோ, யாரோ எழுதிய கவிதையை வாசித்தது உள்ளத்தில் உதித்தது மயிலனுக்கு.
1. நன்கு பயின்று பள்ளியில் முதல்வனாக வேண்டும்.
2. அருமையான வேலையினை எளிமையாக முடிக்க வேண்டும்.
3. நால்வருக்கு நன்மை செய்து நற்றோனாக வாழ வேண்டும்.
அகக்காண் அட்டைப் பதிவுகளை மீண்டும் ஒரு முறை படித்து ஏற்றிக் கொண்டான். பதிவுகளைப் படித்து முடித்த நேரம்,
"வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி" என்ற பாடல் ஒலிப்பானில் வரத் தொடங்கிற்று.
நீதி: குறிக்கோள் கனவை நாடோறும் பயின்று வரின் நிகழும்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

எழுத மறந்த கதை 2013

செம்மொழியில் கற்போம் சிசிஎன்ஏ (2013) என்று தொடர் எழுதலாம் என்று நினைத்து மறந்தே போன கதை. இப்பொழுது ஏனோ இதை எழுத விருப்பமில்லை.

"முன்னுரை:
அண்மையில் சிசிஎன்ஏ தேறிவிட்டேன். எனினும் அதிலுள்ள நுட்பங்களெல்லாம் தேர்வுக்காக மட்டும் படித்து, நிகழ்நேரப் பணிக்காக சரிவர படிக்கவில்லையோ என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. இவ்வாறு ஒரு தொடர் எழுதும் பொழுது தொழிற்நுட்பமும் படித்தாகிவிட்டது, கற்ற தமிழும் மறக்காமல் இருக்கும் என்ற ஓர் எண்ணமே உள்ளத்தில் தோன்றுகிறது. தமிழில் இதுபோன்ற ஒரு தொழில்நுட்பத் தொடர் அல்லது தொழில்நுட்ப நூல் செய்ய வேண்டுமென்பது எனது தீராத அவா. அதுவே இத்தொடர் எழுதக் காரணமாகும்.
இன்றைய நாட்களில் சிறு அலுவலகங்களில் கூட‌ வலையம்(Network) என்பது இன்றியமையாததாகி விட்டது. வலையத்தினை எவ்வாறு அமைப்பது, அதற்கான அமைவுகள் (Configuration) எவை என்பதைப் பற்றியும் இத்தொடரில் விளக்கமாகக் காணலாம்.
தொடருக்கு உள், தொழிற்நுட்ப விளக்கங்களுக்குச் செல்லும் முன், முதலில் வலைய வகைகளைப் பற்றி காணலாம்.
LAN, MAN, WAN, Internet, Intranet, extranet, wifi
சிஸ்கோவின் வலைய வித்தகர்களுக்கான சான்றிதழ்கள்.
Entry, Associate, Professional, Expert
Cisco icons & symbols

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

தொடக்கன் - ஓர் இனிய எளிய எழுச்சி

எமது எளிய தமிழ், அறிவியற்றமிழ்=அறிவியல்+தமிழ் நூல்களை இலவசமாகவே கொடுப்பதற்காக‌ எளிய வலைப்பூ தொடங்கியுள்ளோம். அனைவருடனும் பகிர்க. பயன்பெறுக.

திங்கள், 12 செப்டம்பர், 2011

தமிழில் புதிய வார்த்தை சித்தாமாமா.


ஒராண்டு பதினொரு மாதங்கள் ஆன என் ஆண் மகவு, "பொற்கோ" சில நாட்களாகப் பேசி வருகிறான். "அம்மா, அப்பா, தண்ணி, மாமா, தாத்தா, சித்தி" எனச் சரியாகப் பேசி வருபவனுக்கு "சித்தப்பா" என்ற வார்த்தை சரியாக வரவில்லை. அதற்கு மாற்றாக‌ "சித்தாமாமா" எனக்கூறிவருகிறான். அவன் அவ்வார்த்தையைக் கூறும் பொழுது நாங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

"குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்."

என்ற திருக்குறளுக்கொப்ப அவன் பேசுவதை நாங்கள் நாள்தோறும் சுவைத்து வருகிறோம். 

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

தம்பிக்குத் திருமணம்


எனதருமைத் தம்பிக்கு வரும் செப்டம்பர்த் திங்கள் இரண்டாம் நாள் (02-09-2011) திருமணம்
நடக்கவிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அழைப்பிதழ் ஆங்கிலத்தில் உங்களை அழைக்கிறது.


சனி, 31 ஜனவரி, 2009

பன்னாட்டு நிறுவனத்தில் விரைவுந்து பார்த்து மகிழும் கூட்டம்


இளவல் அறிவு பன்னாட்டு நிறுவனத்தில் திட்ட அறிக்கை மென்பொறிஞனாக இருக்கிறான். நிறுவனத்தின் பெயரை உனது முழக்கத்தில் சேர்க்காதே என்னும் கூற்றோடுதான் இந்த ஒளிப்படங்களைக் கொடுத்தான். பாருங்கள் எல்லோர் மனதிலும் ஏதோ தாங்களே பந்தயத்தில் வெற்றி பெற்றது போன்ற உணர்வு!!!

விரைவுந்து






புதிய விரைவுந்துப் பந்தயத்திற்கான அமைப்பினைப் பார்க்கத்தான் எம் இளவலுக்கு எத்துணை ஆசை. பார்த்தவுடன் பாருங்கள் எத்துணை வகையாக தன் கைபேசியில் சுட்டு எடுத்துவிட்டான்!! அவன் எடுத்த படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவன் மட்டுமல்லாது அவனது அலுவலகத்தில் அனைவரும் குறிப்பிட்ட விரைவுந்தினை மொய்ப்பதைப் பார்த்தீர்களா!!

மனைவியின் பொழுதுபோக்கு

என்னுடன் பேசுவதே என் மனைவியின் மிகப்பெரிய பொழுதுபோக்கு. விடுமுறையானால் என்னைப்பாடச்சொல்லி தனியாக அவள் மட்டுமே சுவைப்பாள். அவளுக்குக்காக பாடும்பொழுது என்குரல் மேலும் பரிமளிப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.

அவளுக்காக பாடும் பொழுது பெரும்பாலும் நான் பாடும் நிலா பாலு1 பாடிய பாடல்களையே பாடுகின்றேன். அதுவே அவளுக்கும் பிடிக்கிறது.

அண்மையில் நான் பாடிய பாடல்கள்:

கூ..க்கூ... - காதல் பரிசு

கல்யாண மாலை..., குருவாயூரப்பா... - புதுப்புது அர்த்தங்கள்

இது மாதிரி பாட்டெல்லாம் இப்போ வர்றதில்லீங்க என்னும் என் மனைவி குரலில் அவளது இசையார்வமும், தமிழ் பாடல்கள் குறித்த கவலையும் தெரிந்தது.

1S.P. Balasubramanyam

செவ்வாய், 27 ஜனவரி, 2009

என்னைக் கவர்ந்த வலைப்பதிவுகள்

பொதுவாக தமிழ்மணத்தில் அவ்வப்போது உலாவுவது என் வழக்கம். அப்படி உலாவும் வேளையில் என் மனம் கவர்ந்த பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அதனால் பிறந்தது இவ்வலைப்பதிவு. ஜெயகாந்தன் என்னும் நாய்க்கு http://kattamanaku.blogspot.com/2009/01/blog-post_25.html
ஒரு படத்தின் கதை அம்பலம்  http://subankan.blogspot.com/2009/01/blog-post_27.html
புதுச்சேரி மாநிலத்தமிழாசிரியர்களுக்கு இணையம் பற்றிய அறிமுகம் http://muelangovan.blogspot.com/2009/01/blog-post_27.html

சனி, 24 ஜனவரி, 2009

கணினிச்சொல் அகரமுதலி திறந்த வெளித் திட்டம் அறிவிப்பு


கணினிச்சொல் அகரமுதலிக்கான முதல்கட்ட ஆயத்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறேன். இதில் சில உறுப்புக்களை மட்டுமே கருத்தில் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு முழு உரிமையும் தந்திருக்கிறேன். நீங்கள் இதைச் சரிவரப்பயன்படுத்தி தமிழ்ச்சொற்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தாரீரோ.

இதில் ஏழு உறுப்புகள் உள்ளன. முதலில் ஆங்கிலச்சொல். இரண்டாவது இணையான தமிழ்ச்சொல். மூன்றாவது தமிழ் போன்ற சொல். அதாவது சில சொற்கள் காலத்தால் தமிழில் கலந்து விட்டன. அவையெல்லாம் தமிழ் ஆகாது. வடமொழி இன்னபிற சொற்களையும் இதில் எழுதலாம்.

நான்கில் ஆங்கில விளக்கமும், ஐந்தில் தமிழ் விளக்கமும் சரியாக இருந்தால் பத்திகளில் கொடுக்கலாம். ஆறில் வலைமனைகள் ஏதேனும் தொடர்புடையதாக இருப்பின் அதைத் தரவேண்டும். ஏழாவது ஏதேனும் குறிப்பிட்ட சொல் தொடர்பாக ஆராய்ச்சிகள் அல்லது இன்னும் ஏதேனும் இருப்பின் அதைத் தெரிவித்தல் சிறப்பு.

பின்பு குறித்த கோப்பினை சேமிக்க வேண்டும். முழு உரிமை தந்தது புதிய சொற்களை பல்வேறு நாடுகளிலிருந்து தமிழுக்குக் கொடுப்பதற்கே. வேறு ஏதேனும் சீர் கேட்டுக்கன்று. எனவே கோப்பினைச் சரிவர பயன்படுத்தி தமிழ்ப்பெய்ய வேண்டுகிறேன்.
இந்தத் திட்டத்தில் எல்லாரும் ஒரு உறுப்பாகச் செயற்பட வேண்டும். இது ஒரு கூட்டுமுயற்சியே. இணையத் தமிழர்களே தமிழுக்குள் மின்சாரம் பாய்ச்ச ஆயத்தமா? சொற்கள் சரிவரச் சேர்ந்த பின் முழு அகரமுதலியானது வெளியிட்டு உலகால் அங்கீகரிக்கப்படும் நாள் அண்மையில் உள்ளது என்கிற கனவோடு...

பெருங்கோன் பா.நி.ஆ. பிரசன்னா.

1.கணினித்துறையல்லாத வேறு சொற்களை எழுத வேண்டாம்.

2. எழுதி விட்டு கண்டிப்பாகச் சேமிக்கவும். உங்கள் பதிவு சரிவர இருந்தால் அது அகரமுதலியில் சேர்க்கப்படும்.

3. சொல்லுக்கான சான்றுகள், உங்கள் பெயர் விவரங்களை விரும்பினால் பதிவில் சேர்க்கலாம்.
அகரமுதலி வெள்ளோட்டப்பதிப்பினைக்காண கீழே சொடுக்கவும்.

http://spreadsheets.google.com/ccc?key=p_tGs8BDc0isXR3lFomIPGg

செவ்வாய், 20 ஜனவரி, 2009

கருத்துரைகளைத் தமிழில் எழுதலாமே


எமது நண்பர்களெல்லாம் பெரும்பாலும் தமிழில் எழுதத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். (இணைய நண்பர்கள் சிலரைத் தவிர) http://tamileditor.org/
பயன்படுத்தி தமிழில் தட்டச்சுச் செய்ய கேட்டுக்கொள்கிறேன். இது எளிமையாகத் தமிழில் தட்டச்சுச் செய்ய உதவும். இது கொண்டு எம்மிளவலும், மனைவியும் தமிழில் தட்டச்சுச் செய்கிறார்கள். நீங்களும் முயல‌லாமே.

சீருரு பயன்படுத்தி எழுதப்படுவதால் எல்லா வகையான உலாவிகளுக்கும் இது பொருத்தமானதாக அமைகின்றது. எம்பதிவுகளை நாம் இந்த எழுதி கொண்டே எழுதிப் பதிப்பிக்கின்றோம். இந்தக் கோப்பினை எளிமையாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இது கொண்டு எழுதி அதை எதில் வேண்டுமானாலும், படியெடுக்கலாம். இதற்காக வேறு ஏதேனும் எழுத்துருவினைச் சிறப்பாக இணையிறக்கம் செய்யத் தேவையில்லை. விரைவில் எம்நண்பர்கள் தமிழில் தட்டச்சுச் செய்வார்கள் என்ற முனைப்புடன்.... 
பெருங்கோன்.பா.நி.ஆ.பிரசன்னா.

சனி, 17 ஜனவரி, 2009

எம் தேடுபொறி தயார்

வலையன்பர்களே, இணையத்தில் எமது தளங்களில் மட்டும் தேடுதல் செய்ய கூகுள் கொண்டு வசதி செய்துள்ளோம். கீழ்க்காணும் தளம் சென்று தேடுதல் செய்யலாம். தமிழ், ஆங்கிலம் இரண்டையும் ஏற்பதாக இந்தத்தேடுபொறி அமைந்துள்ளது. கருத்துரைகள் தேவை.


தூய மரியன்னை பேராலயத் திருத்தலம், பங்களூரு

பங்களூரில், சிவாஜி நகரில் அமைந்துள்ள இதுவும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள இத்திருத்தலத்தினை காண கண்கள் கோடி வேண்டும். அத்துணை அழகு. உயர்ந்த கோபுரம், குடில்கள், தேர் வருகை என இயேசு பிறப்பு பெருவிழாவினையொட்டி களை கட்டியிருந்தது தூய மரியன்னை பேராலயத் திருத்தலம்.

தமிழ்நாட்டிலிருந்து வந்த எம் அன்னையார், "தம்பீ!! நா அந்தக் கோயில பாத்துட்டு போகலாமின்னு இருக்கேன்..",என்றார்கள். சரி அம்மா என்று நானுந்தம்பியும் என் மனைவியுடன் அவரையும் அழைத்துச் சென்றோம். காற்றுப்பதன‌ப் பேருந்துப் பயணம், சரியாக ஒரு மணிநேரம் பிடித்தது. பேராலயத்திருத்தலம் அடைந்ததும், "தம்பீ இதையெல்லாம், படம் பிடி" என்றார்கள். அந்த பொன் தருணத்தில் நாம் கைபேசி கொண்டு சொடுக்கிய வண்ணங்களைத் தாம் இப்போது இங்கு காண்கின்றீர்கள்.

கடவுள் நம்பிக்கையுடையோர் கடவுளையும், இல்லார் கட்டிடக்கலையையும் சுவைக்கின்றனர். நீங்களும் சுவையுங்கள். அன்று நாங்கள் யாரோ நேர்த்திக்கடன் தீர்க்க இட்ட சோற்றினைச் சுவைத்து பேரன்னையை வேண்டி வீடு திரும்பினோம்.
கடவுளழகையும், கட்டிடக்கலையழகையும் காணக் கண்கள் கோடி வேண்டும்தானே!!!







பதிவிறக்கம் செய்ய‌: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/shivaji.pdf

செவ்வாய், 6 ஜனவரி, 2009

தமிழ்மணத்திற்கு நன்றிகள்

எங்கள் தமிழில் எழுதப்பட்ட எண்ணங்களை பரிந்துரைக்கும் தமிழ்மணத்திற்கு பொன்நன்றிகள் என்றென்றும். எமது தலை இயேசுப் பெருவிழாவினையும் இது பரிந்துரை செய்கிறது.
பெருங்கோன் பா.நி.ஆ.பிரசன்னா.


திங்கள், 5 ஜனவரி, 2009

இயேசு பிறப்புப் பெருவிழா

நண்பர் இற்றீ கலியாண இராமன் இந்த இயேசு பிறப்பு பெருவிழா பற்றி ஏதேனும் கூறு என்று கேட்டிருந்தார். அதனாலேயே இக்கட்டுரையினை வரைகின்றேன்.

இயேசு பெருமான் பிறப்புப் பெருவிழா

ஆண்டு தோறும் வரும் இயேசு பெருமான் பிறப்புப் பெருவிழா என்றாலும், இது எனது திருமணத்திற்கு பிறகு வரும் பெருவிழாவாதலால் தனிச்சிறப்புப் பெற்றிருந்தது.நான் சிறுவனாயிருந்த பொழுது பார்த்த பெருவிழாவினை விட இது வேறுபட்டது. மாமன், மாமியின் புதுவகையான கண்ணும் கருத்து எனக்கு மகிழ்ச்சி தந்தது. நான் சென்றது நள்ளிரவு திருவழிபாடு. மனைவி ஊரான மாரம்பாடியில் நிகழ்ந்தது. புத்தாடைகள் அணிந்திருந்தோம். இதயத்தில் இயேசு மற்றுமொரு முறை பிறந்திருந்தார். இனிப்புகள் உண்டோம்.

புதிதாக ஏதேனும் சொல்ல வேண்டுமெனில் திருத்தலத்தின் வேலைப்பாடுகளைச் சொல்லலாம். எத்துணை முறை பார்த்தாலும் அலுக்காத அழகுடன் திருத்தலம் மின்னியது சிறப்பு. பெருமான் பிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட குடிலினை கைபேசி கொண்டு களவாடிக் கொண்டேன்.

பங்குத்தந்தை சொற்பொழிவு குறித்து ஏதும் சொல்ல வாய்ப்பில்லை. இப்பொழுதெல்லாம் பங்குத்தந்தைகள் தூங்கிவழிந்து கொண்டுதான் பேசுகிறார்கள். சற்றே வருத்தத்துடன்தான் உண்மையை எழுதுகிறேன். அதனாலேயேதான் கத்தோலிக்கர்கள் பிற இறை பிரிவிற்குச் சென்று விடுகின்றார்கள்.

ஏழைக்கு ஏதெனும் உதவ வேண்டும். ஏழையின் சிரிப்பில்தான் இறைவன் தெரிகின்றார் என்று என்றோ அண்ணா சொன்னதைத்தான் பெருமான் பிறப்புச் செய்தியாகக் கருதிக் கொண்டேன். திருத்தலத்திற்குள் ஒரு நாயும் அவ்வப்போது வந்து வழிபாடு செய்தது. பாவம் மார்கழிக் குளிர் வேறென்ன செய்யும் வெறும்நாய்?

முந்தாநாள் வயல்வெளி வீச்சுப்பார்வை:

இயேசு பிறப்பிற்கு முந்தின நாள் மாமன் மாமி நிலங்களைப் பார்க்கத் திட்டமிட்டோம். ஏறக்குறைய ஒன்றரை ஏக்கர் என்று சொன்னார்கள். இதோ இங்கதான்... என்று கூறிக்கொண்டே ஒரு மைல் தொலைவு என்னைக் கூட்டிச் சென்றார் மாமனார். சென்ற இடங்களையெல்லாம் கைபேசி ஒளிக்கருவியில் களவாடினேன். "சென்ற வாரந்தான் மழை கொட்டியது அதனால் தான் இந்தப் பசுமை" என்றார் மகிழ்வாக மேவாயைத் தடவியபடி. ஆம். மாமனாருக்கு மீசை இல்லை. நான் படமெடுப்பது பார்த்து என் மனைவிக்கும் மகிழ்ச்சி.

சுட்ட படங்களைத்தான் இங்கே பார்க்கிறீர்கள். பசுமைதான் உழவின் நிறம். பற்பல செய்திகளை அடுக்கிக் கொண்டே சென்றார் மாமன். பரவாயில்லையே!! ஒரு பசுமை இதழ் நடத்தும் அளவிற்கு இவருக்குத் திறமுண்டு என்று நினைத்துக் கொண்டே தலையாட்டினேன்.

பசுமை இல்லாமலிருந்ததால்தான் வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன். என்று வள்ளலார் பாடினார் என்ப‌தை நினைவு கூர முடிந்தது. முந்தின நாள் மாலை வெயில் தாழும் நேரம் சென்றதால் ஒரு வீச்சுப்பார்வையுடன் வீடு திரும்பினோம். புளியமரம், நன்செய் பயிர்கள் என எல்லாவற்றையும் வீச்சுப்பார்வையிலேயே தொட்டதால், விரிவாக எழுத மற்றொரு முறை பார்க்க வேண்டியிருக்கிறது. என்போன்ற பொறிநிறைஞர்கள் மடிக்கணினியும், கணினி அமைவுகளும் கொண்டே வாழ்வதால், இது போன்ற வயல்வெளி வீச்சுப்பார்வைகள் கிட்டும் பொழுது வீடுபேறு அடைந்த மகிழ்ச்சி அடைவோம். இது போன்ற வீடுபேறு எப்போழுதும் கிடைக்காதா என்று ஏங்கும் மனத்துடன் வீச்சுப்பார்வை விடைபெற்றது.

மறுநாள் அக்காள் வீடு
அவசர அவசரமாகத்தான் சென்றோம் அக்காள் வீட்டிற்கு. குட்டிப்பையனுக்கு கணினி தருவதற்கு. கணினி தந்து விட்டு உண்டுவிட்டு சற்றே ஓய்வெடுத்தோம். நிரல்களை விட, ஏன் திரைப்படங்களை விட அதிகம் விளையாட்டுக்களையே அதிகம் விரும்புகின்றன. உள்ளிருப்பைவிட வேறு ஏதேனும் விளையாட்டுக்களை நிறுவாமல் போனது சற்றே என்னை நெளியவைத்தது. இருப்பினும் குட்டிப்பையனை உச்ச நடிகர் திரைப்படம் காட்டி நிறைவடையச் செய்தேன். மாலை ஆகி விட்டது. பிறகென்ன மறுநாள் அலுவலகம். அதே அவசரயுக வாழ்க்கை, தமிழ் படிப்பதால் சற்றே மகிழ்வோடிருக்கிறது.

பெருங்கோன்.பா.நி.ஆ. பிரசன்னா

பதிவிறக்கம் செய்ய‌: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/christmas1.pdf