ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

பாடும் நிலா ஒரு நேர்த்தியாளர் - கையறு நிலைக் கட்டுரை

 
பாட்டுத் தலைவன் குறித்து எழுத வேண்டுமென்றால், எழுதிக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு செய்திகள். அவ்வளவும் வியப்பான செய்திகளே. அவர் பெற்றிறாத பிள்ளை நான். எனது பெரியப்பா என்றும் சொல்லலாம். பெற்றால்தான் பிள்ளையா என்ன? அவரது பாடல்களால் கட்டப்பட்டு ஈர்க்கப்பட்டபின் நான் அவரது பிள்ளை என சொல்வதில் பிழையில்லை. உண்மையில் அவரை நான் பாராமல் ஓர் ஆசிரியர் போல ஏற்றுக் கொண்டே பாடல் பயின்றனன். "ல, ள, ழ" உச்சரிப்புக்களை அவரது பாடல்களே, சிற்றூரில் பிறந்த எனக்கு உணர்த்தின. பிறவியில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரே மனிதர். ஆனால் நேரில் அவரைப் பார்க்காமலேயே என் பிறவி முடிந்து விட்டது. 
1. எல்லாக் கால கட்டத்திற்கும் இவரது பாடல்கள் உண்டு. 
2. பாடல் பாடுவதில் இவர் ஒரு நேர்த்தியாளர். பாடுவதாலேயே அவர் குரல் பயிற்சி பெற்று அவர் பாடும் பாடல்களுக்கு உதவியது. தவிர, அவர் பாடுவதற்கு தனியாகப் பயிற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை.
3. இவர் பாடும் பாடலில் அவர் செய்யும் தவறுகள் கூட அழகே.
4. தவறுகளை அவரே ஒப்புக்கொண்டு, அதைத் தவறு என்று சொல்பவர். அதைத் தவறென்று அறியாமல் பிறர் ஏதோ பாடலின் அணிக்கூறு (சங்கதி) என்றெண்ணிப் பாடுவதையும் அவரே செல்லச் சீற்றத்துடன் கூறுவார். அப்போதுதான் அது தவறு என்றே அனைவருக்கும் புலப்படும்.
5. எவ்வளவு உரக்க அல்லது தாழப் பாடினாலும் குரல் கட்டுப்பாட்டை இழக்காதவர். பாடும் பொழுது முகம் கோணாமல் இயல்பான சிரித்த முகத்தோடே இருப்பவர்.
6. புகழின் உச்சத்திலிருந்து இறங்காமல் இருப்பினும் அகம் பிடிக்காதவர். அதனாலேயே எல்லோர் அகத்திலும் இடம் பிடித்தவர்.
7. கலையில் அரசியல் செய்யாதவர். நிறைகுடம்.
8. நடிகர்களுக்கேற்ற குரல் மாற்றம், கதையின் சூழ்நிலை மாற்றம் பொறுத்து குரல் வேறுபடுத்துதலில் மன்னன்.
9. விருதுகள் இவருக்குக் கிடைத்தது, அந்த விருதுகளுக்குத்தான் பெருமை.
10. எனது சிற்றூர் மொழியில் சுருங்கச் சொன்னால் அவர் ஒரு பாட்டுச்சாமி. ஒரே ஒரு பாட்டுச்சாமிதான். இன்னொன்று வர இயலாது.

யானை தடவும் குருடன் போல் எனக்குத் தெரிந்த பத்தே வியப்புகளை இங்கு அடுக்கியுள்ளேன். இவர் இல்லாத உலகில் நாம் இருக்கிறோமே என்று உள்ளம் தவிக்கிறது.

"வீசிச் சென்று விந்தை செய்ய
பாச வலையில் பாடற் கொண்டு 
பாடிப் பறந்த பகலவப்  பாட்டுத்
தலைவரின் குரலில் தவறும் அழகே !!!"
                                                    - கையறுநிலைப்பா.

"நா.. பெத்தெடுத்திடாத முத்துமணித் தேரே
நா.. தத்தெடுத்திடாத தங்கமணிச் சீரே
ஒரு சொந்தமிருந்தும் பந்தமிருமிருந்தும் சொல்லவில்லையே..."

என்று என் பெரியப்பா என்னை "ஒரு பாட்டாலே..." சொல்லியழைக்கிறார். 
- கண்ணீருடன்...

வியாழன், 23 ஏப்ரல், 2015

உத்தம வில்லன் பாடலில் வரும் யாழ்

உத்தம வில்லனில் "காதலா கடவுள் முன்..." பாடலில் வரும் இந்த யாழ் என்னை மிகவும் கவர்ந்தது. ஒளிக்கருவியின் கோணமும் மிக அருமை. இரண்டு யாழ்களை தலைவி வாசிப்பது போன்று அமைந்திருக்கும் பாங்கு அருமையானது.
யாழ் மிகவும் பழமையான இசைக்கருவி. ஏறத்தாழ தொழிற்நுட்ப அடிப்படையில் அமைந்த முதல் தந்திக்கருவி அல்லது கம்பிக்கருவி அல்லது நரம்புக்கருவி யாழ்தான். யாழில் பலவகைகள் உள்ளன.
வில்யாழ்(21 நரம்புகளை உடையது)
பேரியாழ் (21 நரம்புகளை உடையது)
மகரயாழ் (17 அல்லது 19 நரம்புகளை உடையது)
சகோடயாழ் (16 நரம்புகளை உடையது)
கீசக யாழ் (14 நரம்புகளை உடையது)
செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது)
சீறியாழ் (7 நரம்புகளை உடையது)
யாழ் நூலில் கூறப்படும் யாழ் வகைகள்:
வில் யாழ்
சீறி யாழ், செங்கோட்டியாழ்
பேரி யாழ்
சகோட யாழ்
மகர வேல்கொடி யாழ்
மகர யாழ் / காமன் கொடி யாழ்
மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்
செங்கோட்டு யாழ்
எருது யாழ்
மயில் யாழ்
மயூரி யாழ்
யாழ் சுருங்கி வீணையானது. அதன் பிறகு சிதார், கிடார் என்று ஆகிவிட்டது.

பேரிசைக்குயிலின் பிறந்தநாள்

பேரிசைக்குயில் ஜானகியம்மாவின் பிறந்தநாள் (23 ஏப்ரல் 1938) இன்று. அனைத்து வகையான பாடல்களையும் பாடும் இந்தப் பேரிசைக்குயில் உலக மக்கள் நினைவில் நீங்கா இடம் பெற்று  நீடுழி வாழ வாழ்த்துகிறோம்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

இரவல் குரல் கலைஞர் இரவீணா இரவி

விரைவாய் முன்னேறி வரும் இரவல் குரல் கலைஞர் இரவீணா இரவி. 22 அகவை நிரம்பாத இவர் பின்னணி குரல் கலைஞர் சிறீஜாவின் மகள். வானபிரஸ்தம் (மலையாளம்) திரைப்படத்தில் குழந்தைக்கு இரவல் குரல் கொடுக்கத் தொடங்கியவர். தமிழில் ஊட்டி படத்தில் குழந்தைக்கு குரல் கொடுத்தவர். சாட்டை படத்தின் மூலம் மகிமாவுக்கு குரல் கொடுக்கத் தொடங்கினார். அனைத்து முன்னணி இயக்குநர்களின் பார்வையிலும் பட்டு இப்போது அதிகமான படங்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சமந்தா (கத்தி), எமி (ஐ) , அம்யுரா(அனேகன்) குறிப்பிடத்தக்கவை. இவரது இயல்பான குரல் நிமிர்ந்து நில் படத்தில் அமலா பாலுக்குப் பொருந்தியது. ஐ படத்திற்காக நிறையவே மெனக்கெட்டுப் பேசியிருக்கிறார்.

வியாழன், 9 ஏப்ரல், 2015

இறையடி சேர்ந்த நாகூர் அனிஃபாவிற்கு அஞ்சலி

பாடகர் நாகூர் அனிஃபா அவர்கள் இறையடி சேர்ந்தார். ஐந்தாம் வகுப்பு வரைக்குமே படித்திருந்தாலும் தன் குரலால் உலகத்தை ஈர்த்தவர் அனிஃபா (89). அவர் பாடும் நிலா பாலுவுடன் சேர்ந்து பாடிய இப்பாடல் அவருக்கு அஞ்சலியாகட்டும். 

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

இமான் இப்படிச் செய்யலாமா?

என்னை மட்டுமல்ல. பல இசை விரும்பிகளையும் கவர்ந்தவர் இசையமைப்பாளர் இமான். அதற்கு அவரது இசை மட்டும் காரணமல்ல. அவரது பண்பும்தான்.


அண்மையில் இவர் இசையில் வெளிவந்துள்ள படம் வலியவன். அதில் கொஞ்சம் நேரம் மழை வரும் பாடலின் இசை என்னை மிகவும் கவர்ந்தது. எங்கேயோ கேட்ட பாடல் போல இருக்கிறதே என்று நினைத்துப்பார்த்தால் இந்தப் பழைய பாடல் நினைவுக்கு வந்தது. இந்தப்பாடல் நியாயத் தராசு படத்தில் ச‌ங்கர் இசையில் 11-08-1989இல் வெளிவந்த வெண்ணிலா என்னோடு வந்து ஆடவா பாடலைப் போலவே இருக்கிறது.
இடையில் இமான் தன் இசையின் நுட்பத்தில் மெல்லியதாக வேறு மாதிரி பாடலை மாற்றியிருக்கிறார். நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஓ காதல் கண்மணி பாடல்கள் ஒரு பார்வை

பாடல்களை வானொலியில் கேட்டு, ஒலிநாடாவில் கேட்டு, பின்பு குறுவட்டு, அடர் குறுவட்டுக்களில் கேட்டு, பண்பலையில் கேட்டு விருப்பப் பாடல்களாக மாறிய காலம் கோளேறிவிட்டது. இன்று யூ‍ட்யூப் மூலமே பாடல்கள் இலவசமாகக் கேட்கப்பட்டு புகழடைகின்றன. 
தமிழில் தலைப்பு வைத்திருப்பதிற்கு மகிழ்ச்சி. முன்பு சொன்னது போல் ஓகே கண்மணி இல்லை. ஓகே என்பது தமிழ் தான் என்று இக்காலத் தலைமுறை சொல்வதைக் கேட்டு அன்பாகக் கண்டிக்கலாம்.
தெலுங்கில் ஓ பங்காரம் என்று தலைப்பு. பங்காரம் என்பதற்கு தங்கம் என்று பொருள். படம் இந்தியில் வெளியாகவில்லை. தமிழிலேயே மணிரத்னத்தின் படமான கடலைப் பார்க்க ஆளில்லை. இதில் இந்தி வேறு எதற்கு என்று விட்டு விட்டதற்கு நன்றிகள்.
பாடல்களுக்கு வருவோம்.
இசைப்புயல் என்ன பாட்டுப் போட்டாலும் கேட்பதற்கு ஒரு கூட்டம் தொடக்க காலம் தொட்டே இருக்கிறது. இப்படத்தில் எல்லாப் பாடல்களும் மற்ற மணிரத்னத்தின் படங்கள் போல் வைரமுத்துவால் எழுதப்படவில்லை. அவர் ஒரு பாட்டிற்கே 25 ஆயிரத்திற்கு மேல் ஊதியம் கேட்கிறாராம். ஓ காதல் கண்மணி சிறு முதலீட்டுப் படம் என்பதறிக.
1. காரா ஆட்டக்காரா - ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் எழுதி தனது உறியடிக் குரலில் பாடியிருக்கிறார். தர்ஷணா, ஷாஷா திருப்பதி உடன் பாடியிருக்கிறார்கள். பாடலில் வரும் வரிகளை இசைப்புயலும், மணிரத்னமும் எழுதியிருக்கிறார்கள். இது கண்டிப்பாக ஒரு மாத்திரைதான். தொடர்ந்து கேட்டால் மனம் பறக்கும். சுவைஞர்களுக்குப் பித்துப் பிடிப்பது உறுதி. உறியடிக்குரலர் பாடியிருப்பது பல மேடைகளில் புதிய பாடகர்களால் பாடப்பட்டு பாராட்டுப் பெறும்.

2. ஏய். சினாமிக்கா - கார்த்திக் பாடியிருக்கிறார் வைரமுத்து வரிகளை. பாடலானது தொலைக்காட்சியில் ஒளி(லி)த்த பின்பு பாராட்டுப் பெறும்.

3. பறந்து செல்ல வா.. - கார்த்திக் உடன் ஷாஷா திருப்பதி சேர்ந்து பாடியிருக்கிறார். வரிகள் வைரமுத்து.  இசைப்புயலின் மெட்டமைப்பு புதியது.

4.  மென்டல் மனதில் -  இசைப்புயல் மணிரத்னத்துடன் சேர்ந்து எழுதி, ஜோனிடா காந்தியுடன் சேர்ந்து பாடியிருக்கிறார். பாடல் வரிகளுக்கு தலைமை இல்லாமல், இசைக்கு முதன்மை தரும் பாடல். இணையத்தில் ஏற்கனவே வெற்றி பெற்ற பாடல்.

5. நானே வருகிறேன் - வைரமுத்துவின் வரிகளை ஷாஷா திருப்பதியுடன் சேர்ந்து நமது விஜய் தொலைக்காட்சி புகழ் சத்யபிரகாஷ் பாடியிருக்கிறார். இது இசைப்புயல் வகை கரைநாட்டு இசை. வழக்கம் போல் ஆண் குரல் மேல் நிலைகளில் மட்டுமே பாடவைக்கப்பட்டுள்ளது. இதுவும் மனம் பறக்கும் பாடல்தான். மேடைப்பாராட்டுக்கள் பல பெறும்.

6. தீரா உலா - புயல் தர்ஷணா, நிகிதா காந்தியுடன் சேர்ந்து பாடியிருக்கிறார். வரிகள் வைரம் தான். கரை நாட்டு இசையினை, மேற்கத்திய இசையின் பின்புலத்தில் தன் குரலை கணினிமயமாக்கிக் கொடுத்திருக்கிறார் புயல் தன்வழியில்.

7. மென்டல் மனதில் (பெண்குரல் - ஜோனிட்டா காந்தி). பாடல் மறுகலவை செய்யப்பட்டுள்ளது. இப்பாடலில் இசைப்புயல் மணிரத்னத்துடன் சேர்ந்து எழுதிய‌ வரிகள் வேறு. ஆண் குரலில் இப்பாடல் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டதால் பெண் குரலில் வெற்றியடைவது ஐயம்.

8. மலர்கள் கேட்டேன் - சின்னக்குயில் சித்ராவுடன் புயல் இணைந்து பாடியிருக்கிறார். இதுவும் கரை நாட்டு இசைதான். இசையின் முதல் நிலையான ஏழு ஒலிகள் வருகின்றன. இசை கற்றோரை இது கவரும்.

9. மௌலா வா சல்லீம் - ஏ.ஆர்.அமீன் பாட வைக்கப்பட்டிருக்கிறார். அதிகமான மேல் நிலைகள் இல்லை. அரபு மொழி புரியாவிடினும் பாடலைக் கேட்டால் மனதில் ஓர் ஆழ் அமைதி கிட்டும். முகம்மதிய உடன்பிறப்புக்களையும் தாண்டி அனைவரையும் கவரும்.

பின்குறிப்பு: இசைப்புயலின் இசையை மட்டுமே நம்பி மணிரத்னம் படமெடுத்திருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. படம் கடலைப் போல் உள்வாங்காமல் வெற்றியடைய வாழ்த்துவோம்.

வியாழன், 17 ஜனவரி, 2013

இனியவை இருபது - இசைப்புயலின் தாய் மண்ணே வணக்கம்

இசைப்புயலின் தாய் மண்ணே வணக்கம் சென்னை இசை நிகழ்ச்சி செயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. அதில் என்னைக் கவர்ந்த இருபது பாடல்களை இனியவை இருபது என தொகுத்தளித்திருக்கிறேன்.

14/01/2013 - பொங்கல் திருநாள்
1. தீ..தீ.. (திருடா திருடா) - நிதி மோகன், இரஞ்சித் பரோட்(விஐபி இசையமைப்பாளர்)
புதியதாய் இந்த இசைக்கருவியினை இசைக்கத் தொடங்கியுள்ளேன். தவறிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார் இசைப்புயல். பிறகு தடவித்தடவி ஏதோ ஒரு பெயர் தெரியாத இசைக்கருவியினை வாசித்தார்.

இதைத் தொடர்ந்து வந்த சித்ரா மெட்டுமாறா புதிய பதிப்பாக பின்வரும் பாடல்களைப் பாடினார். பாடல்கள் கொஞ்சம் மட்டும் தான், முழுதாக இல்லை.
2. கண்ணாமூச்சி... (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
3. அன்பே சுகமா... (பார்த்தாலே பரவசம்)
4. எங்கே எனது கவிதை... (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) இது இராஜீவ் மேனனுக்குப்பிடித்த பாடல் என்றார் இசைப்புயல்.

பின்வரும் பாடல்கள் அனைத்தும் முழுதாகப் பாடப்பட்டன.
5. அடியே... (கடல்) சித் இற்றீராம்
6. ஹலோ...(இருவர்) நிதிமோகன் - இவர் தமிழைச் சரியாக உச்சரிக்கவில்லை.
7. புதிய மனிதா...(எந்திரன்) மனோ, அமீனா
8. வெண்ணிலவே...(மின்சாரக்கனவு) ஹரிஹரன், சின்மயி - ஹரிஹரன் சில தவறுகளுடன் இந்தப்பாடலைப் பாடினார்.

15/01/2013 - மாட்டுப் பொங்கல் திருநாள்
பின்வரும் பாடல்கள் அனைத்தும் சிறிது மட்டுமே பாடப்பட்டன.
9. எனக்கொரு...(பாய்ஸ்) கார்த்திக்
10. ஆத்தங்கர மரமே...(கிழக்குச்சீமையிலே) கார்த்திக், சின்மயி
11. அக்கடா...(இந்தியன்) நிதி மோகன்
12. ஜீலை மாதம்...(சின்மயி, பென்னி தயாள்)
13. என்றென்றும்...(அலைபாயுதே)நரேஷ் ஐயர், கார்த்திக், பென்னி தயாள்
14. கண்ணும்... (திருடா திருடா) கார்த்திக், பென்னி தயாள்
15. நிலா காய்கிறது...(இந்திரா) ஹரிஹரன்
16. உயிரே... (பம்பாய்) ஹரிஹரன், சித்ரா
17. புது வெள்ளை...(ரோஜா) ஹரிஹரன், சித்ரா
18. மூங்கில்...(கடல்) அபய், ஹரிணி (முழுப்பாடல்)
19. நெஞ்சினிலே...(உயிரே) சித்ரா - ஒரு சரணம்
20. நெஞ்சுக்குள்ளே...(கடல்) ஷக்திஸ்ரீ  கோபாலன் (முழுப்பாடல்)

இந்தப் பாடல் கூட மேடையில் பாட முடியுமா என என்னை எண்ணி வியக்க வைத்த பாடல்கள் பின்வருவன.
தீ..தீ.. (திருடா திருடா) - நிதி மோகன், இரஞ்சித் பரோட்(விஐபி இசையமைப்பாளர்)
புதிய மனிதா...(எந்திரன்) மனோ, அமீனா

இசைப்புயல் இது போன்ற நிகழ்ச்சிகளை சென்னையில் தொடர்ந்து செய்து வந்தால் என் போன்ற சுவைஞர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

திங்கள், 17 செப்டம்பர், 2012

தேனினும் இனியது இந்த இசை


   ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தூக்கத்தைக் கெடுத்த அருமையான நிகழ்ச்சிவிடுமுறை நாளாதலால், வழக்கமாகத் தூங்கலாம் என்று நினைத்த பொழுது செயா தொலைக்காட்சியில் நீதானே என் பொன் வசந்தம் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாகியது. படத்தின் பாடல்களை ஏற்கனவே கேட்டும், பலவகையான திறனாய்வுகளை[1] வலைப்பூக்களில் படித்தும், பட்டும் கொண்டிருந்தாலும், இசைஞானியின்[2] நிகழ்ச்சியாதலால் பார்க்கவே மனதிற்குத் தோன்றியது. சரியாக பிற்பகல் 2:30க்கு தொடங்கிய நிகழ்ச்சி முடிய மாலை 7:30 மணி ஆகிவிட்டது. நிகழ்ச்சியில் பல இயக்குநர்களின் படுதல்கள்[3] பகிரப்பட்டன. எல்லாரும் பொறாமைப்படும் மனிதராக படத்தின் இயக்குநர்[4] பேசப்பட்டார்படத்தின் பாடல்கள் அனைத்தும் நிகழ்நேர இசையுடன்[5] பாடப்பட்டன. சரியாக எண்பதுகளிலேயே ‌தமிழ் திரையிசையில் மறக்கப்பட்ட‌ நிகழ்நேர இசை மீண்டும் வந்தது இனிமை.
   நிகழ்நேர இசையில் வறட்டு இழுவைக் கருவிகளிலும்[6], நீண்ட ஊதி[7] கருவிகளிலும் வாசிக்கப்பட்ட இசைஞானியின் சில திரை இசைப்பாடல்களின் பகுதி[8] நிகழ்ச்சியில் முதலில் வாசிக்கப்பட்டது.
அவையானவை பின்வருமாறு:
  1. எந்தப்பூவிலும் வாசமுண்டு (முரட்டுக்காளை)
  2. தென்பாண்டி சீமையிலே (நாயகன்)
  3. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் (நானே ராஜா நானே மந்திரி)
  4. ராஜா கையவச்சா (அபூர்வ சகோதரர்கள்)
  5. கண்மணி அன்போடு (குணா)
  6. சுந்தரி கண்ணால் ஒரு சேதி (தளபதி)
 இந்தப்பாடல்களை இதுவரை வார்த்தைகளோடு கேட்ட நாம், வார்த்தைகள் இல்லாமல் கேட்ட பொழுது கிடைத்த இனிமையே தனி.
 இந்தப்பாடல் இசையினை வாசித்த ஆங்கிலக்கலைஞர்[9] இசைஞானிக்கென்று ஒரு தனி மொழி இருக்கிறது என்று கூறிய விதம் நம்மை மகிழவும், பெருமிதம் கொள்ளவும் வைத்தது.
  படத்தின் இயக்குநர், நான் விரும்பிய ஐந்து பாடல்களைப் நீங்கள் பாட வேண்டுமென்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே கூறியவுடன் "அதுசரி" என்று தொடங்கிய ஞானி, பின்வரும் பாடல்களைப் பாடியதோடு மட்டுமல்லாமல், சில நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார்.
  1. கோடைகால காற்றே... (மறைந்த மலேசியா வாசுதேவன் பாடியது)
  2. கண்மணியே காதல் என்பது... - ஆறிலிருந்து அறுபது வரை (எஸ்.பி.பாலசுப்ரமண்யம், எஸ்.ஜானகிஇந்தப்பாடல் அந்தக்காலத்திலேயே வெட்டி ஒட்டப்பட்டது.
  3. அடி ஆத்தாடி... - கடலோரக்கவிதைகள் (இளையராஜா, எஸ். ஜானகி)
  4. ஒரு பூங்காவனம்... - அக்னி நட்சத்திரம் (எஸ். ஜானகி) நீச்சல் குளத்தில் பாடப்படும் பாடல் என்று சொன்னவுடன் தான் செய்த மெட்டையும், அதற்கு பொருத்தமான சரணம் வர தான் பட்ட பாட்டையும் அவர் கூறியது சிறப்பு.
  5. தென்றல் வந்து... - அவதாரம் (இளையராஜா, எஸ். ஜானகி)
   இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இப்படத்திற்கு நாட்டின் மிக உயரிய விருது[10] கிடைக்கும் என்று கூறியவுடன், அது தனக்குத் தேவையில்லை என்று கையசைத்தது, அவர் ஞானிதான் என்பதை இன்னொரு முறை உறுதிப்படுத்தியது.
   படத்தின் இயக்குநருக்கு இருக்கும் பல பெண் துணை இயக்குநர்கள்[11] போல, இசைக்கலைஞர்களிலும் பல பெண்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
   இசைக்கருவிகளின் ஆதிக்கம் அதிகமாகவும், உரத்த குரலில் கத்துவதை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தலைமுறை, இது போன்றதொரு இசையும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இது போன்ற இசையினை இசைஞானியால் மட்டுமே கொடுக்க இயலும். படத்தின் பாடல்கள் கேட்கக்கேட்க அனைவருக்கும் பிடிக்கலாம்.
   இது போன்ற முயற்சிகள் தொடர வாழ்த்துவோம்.

[1]  விமர்சனங்கள்
[2] இளையராஜா
[3] அனுபவங்கள்
[4] கௌதம் வாசுதேவ் மேனன்
[5]  Live Concert
[6]  Violion, Bow
[7]  Trumpet, Clarinet
[8]  Part of the music
[9]  Conductor Nick
[10] National Award
[11] Anjana, Janet

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

இசைஞானியின் ஆங்கிலம்


விடுதலை நாளன்று (15/08/2012) இசைஞானியும் கௌதமும் பேசுவதைப் பார்க்க நேர்ந்தது. தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்து அவர்கள் பேசியது அருமையாக இருந்தது.இதுவரை பொதுமக்கள் ஞானியைத் தமிழில் பேசுவதையே பார்க்க நேர்ந்திருக்கும். அவர் பேசிய ஆங்கிலமும், பேசிய விதமும் இதுவரை பொதுமக்கள் பார்த்திருக்காத‌ ஒன்று. இதைப் பார்த்த பிறகு நீதானே என் (எந்தன்) பொன் வசந்தம் படத்தினையும், படப்பாடல்களையும் நிறையவே எதிர்பார்க்கத் தோன்றுகின்றது. இதை ஏற்பாடு செய்த செயா தொலைக்காட்சியைப் பாராட்டலாம்.

புதன், 25 ஜனவரி, 2012

நண்பன் தரவரிசை

ஒரு வழியாக நண்பன் பார்த்தாகி விட்டது. திறனாய்வெல்லாம் இணையத்தில் ஏற்கனவே நிறைய வந்து விட்டதால் அதில் நடித்துள்ள நடிகர்களின் தரத்தினை வரிசைப் படுத்துகிறேன். அவ்வளவே....

தரம் 1: சத்யராசு
தரம் 2: சத்யன்
தரம் 3: இற்றிகாந்த்
தரம் 4: சீவா
தரம் 5: விசய்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

பொறியன் திரைப்பாடல் திறனாய்வு

எந்திரன், இயந்திரன் என்பது எல்லாம் வடமொழி. பொறியன் என்பதே தமிழ் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

புதிய மனிதா பூமிக்கு வா என்பதில் வரும் பூ இசையணி ஆகும். அதைக் கேட்கும் பொழுதே நம்மையறியால்
பூ மிக்கு வா என்று பாடத்தோன்றுகின்றது. இருப்பினும் சாதனைப் பாடகர் எஸ்.பி.பி யின் குரலையே இசைப்படுத்தும்
பொறியால் இசையமைத்திருக்கிறது சற்றே நெருடுகின்றது. பின்னர் அவர் மனிதருக்குப் பாடவில்லை. பொறியனுக்கே
பாடியிருக்கிறார் என்றெண்ணும் பொழுது நெருடல் மறைகின்றது. சரணம் ஏற்ற இறக்கத்தோடு வருவது நம்மை புல்லரிக்கவைக்கிறது.
முதன் முறையாக இரகுமானின் மூத்த பெண் கதிஜா பாடியிருக்கிறார்.

அரிமா அரிமா வில் ஹரிஹரனின் குரல் பிளிறிவருகின்றது. படத்தில் நூறு இரஜினிகள் தோன்றுவார்கள் போலும்.

பூம் பூம் ரோபோ பாட்டில் யோகி.பி குரல் மேலோங்கி ஒலிக்கிறது. சுட்டி சுட்டி ரோபோ பட்டிதொட்டி எல்லாம் நீ பட்டுக்குட்டியோ:‍‍
பெண்குரலில் பாடலுக்கு மெருகேற்றுகின்றது.

இரகுமானும், கேஸியும் சேர்ந்து இரும்பிலே பூத்த இதயம் பாடியிருக்கிறார்கள். ஆங்கில வார்த்தைகள் வந்து போகின்றன.

காதல் அணுக்கள் பாடலை விஜய் பிரகாஷீம், ஸ்ரேயா கௌஷலும் பாடியிருக்கிறார்கள்.
பாடல் நாள் செல்லச் செல்ல மெதுவாக பேசப்படலாம்.

சின்மயி, ஜாவேத் அலியுடன் பாடும் கிளிமாஞ்சாரோவில் கின்னிக் கோழி,, ஆஹ்ஹா ஆஹ்ஹா
இனிமையாய் வந்து போகின்றது. சின்மயி தன் குரலை சற்றே மாற்றித்தான் பாடியிருக்கிறார்.

நரேஷ் ஐயரும், பென்னி தயாளும் குழுப்பாடகர்கள் ஆகி விட்டார்கள். "புதிய மனிதா...", "அரிமா அரிமா..."
ஆகிய பாடல்களில் அவர்கள் பாடியிருபபதை பாடலைப் பல முறை கேட்டால்தான் புரிகின்றது.

இரகுமானிடம் ஒரு கேள்வி: தமிழே தெரியாத பாடகர்களை வைத்து அதிகமாக பாடற் செய்கின்றீர்களே,
எப்பொழுது நமது புஷ்பவனம் குப்புசாமியினை இந்தியில் பாடவைக்கப் போகிறீர்கள்?

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

திகம்பர சாமியார் 1950 - அரிய செய்தி தமிழில் முதன்முறையாக‌


1950ல் வெளிவந்த திகம்பர சாமியார் என்னும் இப்படத்தில் எம்.என்.நம்பியார் ஒன்பது தோற்றங்களில் வந்திருக்கிறார். இது வி.சி.கணேசன் ஒன்பது தோற்றங்களில் நடித்து வெளிவந்த நவராத்திரி திரைப்படத்திற்கு முன்பே வந்தபடம்.

அரிதான இப்படம் இப்பொழுது எங்கும் காணக்கிடைக்காதது பெருவியப்பே. இப்படம் அந்நாட்களில் பெரும் பெயர் பெற்றிருக்கிறது.

இணையத்திலும் கூட காணக்கிடைக்காத இதைப்பற்றி அண்மையில் நடிகை மனோரமா கூறுகையில்தான் சில செய்திகள் தெரியவந்தன.

எழுத்தாளர் இராண்டார் கை இந்து நாளிதழில் இதைப்பற்றி எழுதியிருந்த கட்டுரை தேடுபொறி உதவியுடன் சிக்கியது. அதைத்தழுவி எழுதப்பட்டதே இக்கட்டுரை. அதைத்தவிர பிற செய்திகளையும் எடுத்தாண்டிருக்கிறேன்.

இந்தப்படம் வெளிவந்த ஆண்டில் (1950) 13 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய புதினம் இது அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற துப்பறியும் கதையாகும்.

இப்பொழுது பலராலும் பார்க்க விரும்பும் ஒருபடமாக இது விளங்கினாலும், அரிதான இப்படம் இப்பொழுது எங்குமே கிடைக்கவில்லை. யாரிடமாவது இருப்பின் மின்மடலனுப்பவும்.

தமிழில் வெளிவந்த இப்படத்தினைப் பற்றி செய்திகள் அனைத்து இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைப்பது அடுத்து எழும் விந்தை.

இதில் ஒரு நம்பியார் மட்டுமே வந்தாலும் அவர் வெவ்வேறு தோற்றங்களில் வந்து கடத்தப்பட்ட கதையுடைத்தலைவியினை தேடுவார். அண்மையில் இதைப்பற்றிப் பேசிய மனோரமா இதில் நம்பியார் 15 தோற்றங்களில் வந்திருக்கிறார் என்ற செய்தினைச் சொல்லியிருக்கிறார்.

மார்டன் தியேட்டர்சில் எடுக்கப்பட்ட இப்படம் கும்பகோணம், தஞ்சாவூர்,மன்னார்குடி ஆகிய இடங்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் நம்பியார் காவல்துறை மறைவு உளவாளியாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பொதிகைத் தொலைக்காட்சியில் மட்டுமே உள்ள இத்திரைப்படம் எப்பொழுதாவது ஒளிபரப்புச் செய்யப்படும். பழங்காலத்தில் வந்த படமாதலால் சிலர் இதில் நம்பியார் பதினொரு தோற்றங்களில் வந்திருக்கிறார் என்றும் புதுச்செய்தி சொல்லிவருகின்றனர் இக்காலத் தலைமுறையினருக்கு.

மனோரமா அக்கால நடிகை என்பதால் அவர் சொல்வதை மட்டும் வைத்துப்பார்த்தால் எம்.என்.நம்பியார் 15 தோற்றங்களில் வந்தார் என்பதை நம்பலாம்.

பல தோற்றங்களில் வந்தாலும், இத்தோற்றங்கள் பெரிதும் பெயர் பெற்றவையாம்.
காதுகேளாத சித்துவேலை செய்பவன், அரபுநாட்டு வணிகன், தொழிலதிபன், நாதசுர கலைஞன், நிலமுள்ள பெருஞ்செல்வந்தன், அஞ்சல்காரன்.

குமாரி கமலா நடமாடும் புகழ்பெற்ற "நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே..." பாடல் இப்படத்தில் இடம்பெற்றதே. அந்நாளைய வடமொழிப்பாடல்களிலிருந்து மூன்று பாடல்கள் சுடப்பட்டு இதில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது துணைச்செய்தி.

இராமநாதன், சுப்பையா நாயுடு இசையமைத்துள்ள இப்படத்தில் நடித்த இன்னபிற கலைஞர்கள்:

எம்.சி.சக்கரபாணி, ஏ.கருணாநிதி, சி.கே.சரசுவதி,லட்சுமி பிரபா, டி.பாலசுப்ரமண்யம், தனலட்சுமி, டி.கே.இராமசந்திரன், ஏழுமலை.

இப்படத்தை இக்காலத்தலைமுறையினர் வெகுசிலரே பார்த்திருக்கின்றனர். பார்த்தவர்களும் எத்தனை தோற்றம் என்று சரிவர கூறவில்லை. T.R.சுந்தரம் இயக்கிய இப்படத்தினை, நான் நம்பியாரின் தோற்றங்களை எண்ணும் வண்ணம் பார்க்க விரும்புகிறேன். 15 தோற்றங்கள் எனில் அதுதான் உலக சாதனை. உலகநாயகன் செய்தது அல்ல.

புதன், 27 மே, 2009

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடும் நிலா பாடிய மற்றுமிரு பாடல்கள்

தொலைவிலிருந்தாலும் கருத்தொருமித்த நண்பரின் அணுகுதலால் இப்பதிவு பெய்யப்படுகின்றது. இந்நண்பர் எனக்கு பாடும்நிலா[1] குறிப்பிட்ட இசையமைப்பாளரின்[2] இசையில் பாடிய மற்றுமிரு பாடல்களை மின்னஞ்சலில் அனுப்பினார். (பாடவா‍… – வெற்றி, நிழல் என்றும்… - குமரன்) பாடல்கள் மிகவும் பெயர் பெற்றதாக அமையவில்லையானாலும், இது போன்ற சுவைஞர்களும் பாடும்நிலாவிற்கு இருக்கின்றார்கள் என்பதை எண்ணும் பொழுது உள்ளம் புளங்காகிதம் அடைகின்றது. மேல்நிலைகள்[3] அதிகம் இல்லாத இப்பாடல்களைத் தொடர்ந்து கேட்க, இதயம் வருடும் மயிலிறகாக அமையும் என்பதில் ஐயமில்லை. பாடல் அனுப்பிய இணைய நண்பருக்கு[4] நன்றிகளை அள்ளித்தெளிக்கின்றேன்.

[1] எஸ்.பி.பாலசுப்ரமண்யம்
[2] Harris Jeyaraj
[3] High Pitch
[4] Subhash

வியாழன், 23 ஏப்ரல், 2009

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடும் நிலா பாடிய ஒரே பாடல்.

தனது பெயரினை எப்பொழுதுமே பாதி ஆங்கிலத்தில், படத்தின் தலைப்பில் பெற்றிருப்பவர் Harris ஜெயராஜ்.ஏனோ தெரியவில்லை இவரது இசையில் பாடும் நிலா பாலு ஒரே ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார். அது மிகவும் அருமையான பாடல். அந்தப்பாடல் நன்றாக வந்திருந்த போதிலும் அதற்குப்பின் குறிப்பிட்ட இசையமைப்பாளர் இசையில் அவர் பாடவே இல்லை. அதற்கான காரணமும் இசைவிரும்பிகளுக்கும் தெரியவில்லை.

இந்தக்கட்டுரை வந்த பிறகாவது பாடும் நிலா குரல் அவரது இசையில் ஒலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.இது இசையமைப்பாளருக்கு இழுக்கே தவிர, பாடும் நிலாவுக்கு அன்று. இப்பதிவினைப் படிக்கும் இசைவிரும்பிகள் இதற்கான காரணத்தினைக் கூறினால் நன்றாக இருக்கும்.

அது அருளில்(விக்ரம் - சோதிகா) வரும் பட்டுவிரல் எனக்கு... எனத்தொடங்கும் அருமையான பாடல். சொர்ணலதாவோடு சேர்ந்து பாடியிருப்பார் பாடும்நிலா. பாடலில் மேல்நிலைகளில் அவருக்கே உரிய அணுக்கங்களோடு அணி செய்திருப்பார். அது விக்ரமுக்கும் செம்மையாய்ப் பொருந்தி வரும்.

வளர்ந்து வரும் இசையமைப்பாளரான இவர் தமிழைக் கொலை செய்யும் பாடகர்களுக்கு வாய்ப்புத்தந்து வருகிறார். சோதி நெறஞ்சவ .. சொன்னவுடன் சமஞ்சவ.. (சுக்வீந்தர் சிங்கின் தமிழ்க்கொலையில் 12பி பாடல்)ஒர் எடுத்துக்காட்டு.

தனது படங்களிலெல்லாம் மும்பை செயற்றீயினை ஒரு பாடல் பாட வைத்து விடவேண்டும் என்று கொள்கை வைத்திருப்பவர் குறித்த இசையமைப்பாளர். மற்ற பாடகர்களின் தேதிகளுக்காக காத்திருக்கும் இவருக்கு பாடும் நிலாவின் தேதி கிடைக்கவில்லையா என்ன?


திங்கள், 6 ஏப்ரல், 2009

பசங்க திரைப்பாடல் திறனாய்வு


நான்கு முத்தான பாடல்களைத் தந்திருக்கும் புத்திசைய‌மைப்பாளருக்கு1 இது இரண்டாவது படம். இரண்டு கரைநாட்டு2 இசை. இரண்டு மேற்கத்திய இசை. "அன்பாலே அழகாகும் வீடு...” வார்த்தைகள் புரியும் இசைஞானி காலத்து திரைக்கரைநாட்டு இசை. "சின்னக்கண்ணன் அழைக்கிறான்..." க்குப்பிறகு குறித்த‌ ஆண்பாடகர்3 பாடியிருக்கும் திரையிசைப்பாடல். அழகான இப்பாடல் பாடியவர்களும்4 பொருளுணர்ந்து பாடியிருப்பது சிறப்பு. இது எனது இரண்டாவது "கண்கள் இரண்டால்..." என இசையமைப்பாளர் கூறியிருப்பது மேலும் சிறப்பு.

"ஒரு வெட்கம் வருதே..." தமிழ் தெரியாத பெண்5 குரலின் மெருகோடு காதை வருடும் மயிலிறகாக‌ வருகின்றது. மென்பொருளையே உருட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு தென்றல் வீசுஞ்சோலையில் உலாவுவதுபோல் உணர்வு தரும் அருமையான மெல்லிசை. பாடலில் ஆண்பாடகர்6 குரலை சற்றே கீழ்நிலையில் சரி செய்து கொள்ள வேண்டும். மேல்நிலை7களிலேயே பாடிப்பாடி கீழ்நிலையில்8 சில வார்த்தைகள் உள்ளே சென்றுவிட்டது.

"நாந்தான் கொப்பன்டா...9" வார்த்தைகள் அதிகம் சிதையாமல் வந்திருக்கும் மேல்நாட்டு இசை. மெச்சலாம். "கல்லும் முள்ளும்...10" பாடலும் மேல்நாட்டு இசையே. மேல்நிலைகள் அதிகம் இருக்கும் இப்பாடலை முணுமுணுக்க இயலாது.

கணினி இசைக்காலத்தில் கரைநாட்டு இசையினை மறக்காமல் அதற்கே உரிய நேர்த்தியோடு இரண்டாவது படத்திலும் மற்றொரு முறை தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர்.
இழுவை இசைக்கருவிகளும்11 சரி, வறட்டு விரல் இழுவை இசைக்கருவிகளும்12 சரி அருமையாக ஒலிப்பது பாடல்களில் அழகினை மேலும் கூட்டுகிறது. பாடல்கள் வெற்றியடைய வாழ்த்துவோம்.

இப்படத்திற்கு இசையமைத்தவர் நாற்பத்தொன்று ஆண்டு இளைஞர் ஆவார்.சிலகாலம் தொலைக்காட்சியில் அறிவிப்பாளராகவும், கொடைக்கானலில் இசை ஆசிரியராகவும் பணியாற்ற இவர் திருச்சியில் படித்தவர்.பாடல்களை http://www.tamilbeat.com/ தளத்திலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
------------
1ஜேம்ஸ் வசந்தன்
2கடற்கரையோர ஊர்களான தஞ்சாவூர்,திருவையாறு,கும்பகோணம் ஊர்களில் பிறந்ததால் கரைநாட்டு இசை என அழைக்கப்படுகிறது. Carnatic or classical music
3பாலமுரளிக்கிருஷ்ணா
4பாலமுரளிக்கிருஷ்ணா, குழந்தை சிவாங்கி குழுவினர்
5ஷ்ரேயா கோஷல்
6நரேஷ் ஐயர்
7High Pitch
8Low Pitch
9Singers: Larson Cyril, Satyanarayana
10Singer: Benny Dayal
11Violin
12Base Guitar

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

நான் கடவுள் இரண்டாம் பகுதிக்கு ஆயத்தம் - இயக்குனர் பேரரசு


கோடம்பாக்கத்தில் ஒருபடம் வெற்றி பெற்று விட்டால் போதும், அதே நடையில் கதை செய்து காசு பார்க்க நினைப்பார்கள். அவ்வகையில் அண்மையில் "வில்லு"வில் கையைச் சுட்டுக்கொண்ட கதையுடைத்தலைவனும், "திருவண்ணாமலை" சரிவர செல்லாததில் இயக்குனர் பேரரசுவும் இணைந்து நான் கடவுளை தலைகீழ் செய்து ஒரு கதை செய்ய நினைக்கிறார்கள். இது நகைச்சுவைக்காக பின்னப்பட்ட கற்பனையே. பிறர் சிந்தை நோகச் செய்ய அல்ல.

நான் கடவுள் படத்தின் கதையினைச் சுட்டு[1] தன் நடையில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார் பேரரசு. படத்தின் கதையுடைத்தலைவன்[2] அமர்ந்து இயக்குனரை கண்ணுங்கருத்துமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

"தலைவரே இதுல அஞ்சு பாட்டு; எல்லாமே நான் தான் எழுதறேன். படத்துக்குப்பேரு வாரணாசி. சிவகாசி, திருப்பாச்சி வரிசையில இதுவும் கலக்கீடும்.”

"ஒங்களுக்கு இணையா[3] மூன்றெழுத்து நடிகை[4]யக் கேட்டிருக்கிறோம். இந்தப்படத்தோட முதல் பகுதி ஏற்கனவே எடுத்துட்டதால இத நாம நகைச்சுவையா பண்றோம்.”

"எடுத்த ஒடனே நீங்க ஒத்தக்கால்ல நடனம் ஆடுறீங்க. நீங்க மட்டும் தான் ஆடுறீங்க.

'நாந்தாண்டா கடவுள்

எல்லாமே பொதுவில்,

உருளுங்கடா தெருவில்'

அப்டீன்னு, எல்லாரும் தெருவுல உருள்றாங்க. நீங்க மிதிச்சு மிதிச்சு அருள் தர்றீங்க. எப்டீ?”

"ம். நல்லாயிருக்கு.", கதையுடைத்தலைவர் தலையசைக்கிறார்.

"இசை நம்ம இசையமைப்பாளர்[5]தான். அவரும் இசைக்கருவிகள் மேல் உருண்டே எல்லா இசையும் இந்தப் படத்துக்கு அமைக்கிறார்.”
"அப்றம், இந்தப்படத்துல நீங்க ஒப்பனையில்லாம நடிக்கிறீங்க. எல்லாரும் ஒங்களப்பாத்து மிரள்றாங்க. தாடி, மீசையெல்லாம் ஒட்டுத்தான். நீங்கதான் வேற மாதிரி செய்யமாட்டீங்கள்ல‌.”

"கதையெல்லாம் முதல் பகுதி நான் கடவுள் மாதிரிதான். ஒங்கப்பன் ஆத்தாவயெல்லாம் போட்டு அடியடின்னு அடிக்கிறீங்க. எடைல கெட்ட வார்த்த பேசுறீங்க. அதுவும் வடமொழில[6]தான். எல்லாத்துக்கும் நீங்க பயிற்சி எடுத்துட்டு வரணும்.” பேரரசு அள்ளி விடுகிறார்.

"இதெல்லாம் எனக்கு ஒத்து வருமா? எதாச்சும் குத்துப்பாட்டு இருக்கா?” கதையுடை கனைக்கிறது.

"உச்சக்காட்சில சண்டைக்கு மாறா நாம குத்துப்பாட்டு வைக்கிறோம். குருட்டுப்பெண்ணான தலைவிக்கு நீங்க வாழ்வு தர்றீங்க. எதிர் நாயகனை ஒழிச்சுக்கட்டுறீங்க. அப்றம் ஒரு சாமியார் தலைவிக்கு பார்வை கொடுக்கறார். அப்றம் என்ன குத்துப்பாட்டுதான். வாரணாசிலயே எடுக்கறோம். அப்பப்ப சென்னயத் தொட்டுக்கறோம்."

"அந்த சாமியாரா நானே வர்றேன்; எம்பேரு மருதகாசி." பேரரசு தொடர்கிறார். "நீள நீளமா உரையாடல்[7] பேசப்போறேன்."

குத்துப்பாட்ட மறந்துட்டேனே.

"நீ கண்ணு கொடுத்த சாமி - ஒன்ன

கட்டிக்கிட்டேன் மாமி

ஒன்னோட எதயம் காமி - அதுல

நான் மட்டுந்தான் சாமி”

"யோவ் புதுசா எதாச்சும் சொல்லுயா நானே வில்லு ஓடாத கடுப்புல இருக்கேன்." கதையுடை மீண்டும் கனைக்கிறது.

இதே மாதிரி கோப்பப்படுங்க. எடைல ஓம். ஸம்பவாமி.. அப்டீயிப்டீன்னு கெட்ட வார்த்தை பேசுங்க. படம் பிச்சிக்கும். பேரரசுவின் பிதற்றல் தொடர்ந்தது.
"இதுல 'பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே...' பாட்ட நம்ம இசையமைப்பாளர் கலவை[8] செய்வார். அத வேண்ணா நீங்களே ஒங்க குரல்ல பாடுங்க.

"போடாங்... நீ இப்டீயே பேசிக்கிட்டு இருந்தேன்னா இந்தப்பாட்ட அப்றம் நம்ம தயாரிப்பாளர்தான் பாடணும்.” கோபமாகச் செல்கிறார் கதையுடை.
"அப்பாடா ஒரு வழியா நம்ம தலைவர படத்தோட பாத்திரத்துக்கு ஏத்த மாதிரி மாத்திட்டேன்.” பேரரசு பெருமூச்சு விடுகிறார்.



[1] வட்டார வழக்கு, திருடுதல் என்பது பொருள்

[2] விஜய்தான் வேறுயார்?

[3] Pair

[4] த்ரிஷா

[5] இற்றீகாந்த் தேவா

[6] சமற்கிருதம்

[7] Dialouge

[8] re- mix


ஏன் திரைத்துறை கட்டுரைகள் அதிகம் வருகின்றன?

திரைப்படத்துறையினைப்பற்றி கட்டுரைகள் எல்லா வலைப்பூக்களிலுமே அதிகமாகத்தான் தெரிகின்றன. ஏனெனில் முழுக்க முழுக்க திரையினைப் பார்த்து வாழ்வினை வாழக் கற்றுக் கொண்ட தலைமுறையினர்தாம் நாம்.

அதிகம் திரைப்படம் பார்த்த தலைமுறை:

ஒருதலைமுறை என்பது முப்பது ஆண்டுகள். இந்த முப்பது ஆண்டுகளாகத்தான் திரைத்துறை பொதுமக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. ஏனெனில் திரைப்படங்களை திரையில் மட்டும் பாராமல் தொலைக்காட்சிகளிலும், குறுவட்டுக்களிலும் அதிகம் பார்த்தது இத்தலைமுறைதான்.

திரைப்படத்துறை மெதுமெதுவாக அழிந்து வந்த போதிலும், அதைப்பற்றிய கட்டுரைகள், துணுக்குகள், செய்திகளுக்குப் பஞ்சமில்லை.

நான் ஏன் திரைத்துறை பற்றி அதிகம் எழுதுகிறேன்?

நானும் கூட தமிழ் எக்காளம் தொடங்கும் பொழுது திரைப்படத்துறையினைப்பற்றி குறைவாகவே எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் என்னையும் அறியாமல நானும் இத்தலைமுறையிலேயே இருப்பதால் நானும் இவ்வாறு அதிகமாக எழுத வேண்டியதாயிற்று.

திரைத்துறை பிறந்து நூறாண்டுகளுக்கு மேலாகி விட்ட பொழுதும், சென்ற தலைமுறையினர் இத்துணை அதிகமாக திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் காலத்தில் குறுவட்டு கிடையாது. உண்மையான திரைப்பட ஒலி நாடா வர மூன்றாண்டுகள் வரை பிடிக்கும். தொலைகாட்சிகள் பெரும்பாலும் கிடையாது. இருந்தாலும் அதில் ஒன்றிரண்டு படங்கள்தாம் வாரத்திற்கொரு முறை ஒளிபரப்பி வந்தார்கள்.
இதழ்கள்:

தங்களைத்தாங்களே முதலிடம் என்று பீற்றிக்கொண்டிருக்கும் வார[1], நாளிதழ்களும்[2] திரைத்துறையினை விடவில்லை. அவர்களைச் சிரமேற்கொண்டுதான் செயல்படுகின்றன. அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல.

திரைத்துறைக்கென தனியே இருக்கும் இதழ்களைக் காட்டிலும், இன்ன பிற வார இதழ்கள்தாம் திரைச் செய்திகளை முன்னர் கொடுப்பதில் தனியார்வம் காட்டி வருகின்றன.

எழுத்தாளர்கள்:

திரைத்துறைக்கு வரவே மாட்டேன் என்று கூறிவரும் எழுத்தாளர் ஞாநி கூட தனது கட்டுரைகளாக ஓ..பக்கங்களில் திரைத்துறையில் அண்மையில் வந்த சில திரைப்படங்கள் வன்முறையினைத் தூண்டுவதாக எழுதியிருந்தார். அவர் அத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தாலொழிய அந்தக் கட்டுரைகளை எழுதியிருக்க மாட்டார். பெரும் எழுதாளர்கள்[3] பகுதி நேரமாக திரைத்துறையில் பணியாற்றி பொருளீட்டுகின்றனர்.

தமிழ் எக்காளத்தில் ஏன்?

எல்லோருக்கும் திரைத்துறை என்பது வாழ்வளிக்கும் துறையாக இருக்கின்றது. நல்ல பாடல் குரல்வளமுடையவர், ஒரு முறையாவது திரையில் பாட மாட்டோமா? என்று நினைக்கிறார். அது போலவே ஒவ்வொருவரும் நினைப்பதால் இத்துறையில் கட்டுரைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் இத்துறை மெதுமெதுவாக அழிந்து வருகின்றது என்பது மட்டும் உண்மை. எதிர்காலத்தில் இத்திரைத்துறை இப்போது இருக்கும் நிலையிலிருந்து மாறுபட்டு வேறு வடிவம் பெரும் என்பது மறுக்க முடியாத உண்மை.எல்லோரையும் கவரும் இத்துறை இக்காரணங்களால் எம்முழக்கத்திலும் வருகின்றது.
விளைவுகள்:

திரைப்படம் பார்த்து வாழ்வினைக் கற்றுக்கொள்பவர்கள் நெகிழ்தன்மையுடைவராக இருப்பர். இவர்கள் அதிகம் உணர்ச்சி வயப்படுபவராகவோ, அல்லது ஞாநிபோல பிதற்றிக்கொண்டோ இருப்பர். வாழ்வின் ஒவ்வொரு பகுதியினையும் இவர்கள் திரைப்படத்தோடு ஒப்பிட்டுக்கொண்டே இருப்பர். இவர்களை விலை கொடுத்து வாங்குவது எளிது. இவர்களால் தன்னால் சிந்தனை செய்ய இயலாமல் பிறர் ஏற்கனவே செய்தவற்றை மெருகேற்றும் வேலையிலேயே இருப்பர். தன்னலமிக்கவர்களாக வாழும் இவர்களது வாழ்வு குமுகாயத்தோடு[4] பொருத்தமுற அமையாது.

நமக்கு முந்தைய தலைமுறையினர் தங்கள் செயல்களைத் தாமாகவே செய்தார்கள், சிரித்தார்கள். ஆனால் நாம் இன்று பொதுவாழ்வில் கூறிச்சிரிக்கும் சின்னச்சின்ன சிரிப்புகள் கூட ஏதோ ஒரு சிரிப்பு நடிகர் ஏற்கனவே ஏதோ ஒரு திரைப்படத்தில் செய்ததாகத்தான் இருக்கின்றது.

இப்படிப்பட்ட தலைமுறையினை ஏமாற்றுவதோ, விலை கொடுத்து வாங்குவதோ, மிதித்து நசுக்குவதோ நாடாள்வோருக்கு மிக எளிது. தமிழினமே தன்மானத்தோடு சிந்திப்போம்.



[1] குமுதம், ஆனந்த விகடன்

[2] தினகரன், தினத்தந்தி

[3] சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர்,பாலகுமாரன்

[4] Society