சனி, 17 டிசம்பர், 2016

வினாவும் நானே விடையும் நானே

1. எக்ஸ்பி சகாப்தம் முடிந்து விட்டது என்கிறார்களே, நான் அதை இன்னும் பயன்படுத்தலாமா?
எக்ஸ்பியின் உலா முடிந்து விட்டது என மைக்ரோசாஃப்ட் அறிவித்தாலும், இன்னும் பல இணைய உலாவி மையங்களிலும் (browsing centre), பேரங்காடிகளில் (old big shopping malls) பில் போடும் இடங்களிலும், எக்ஸ்பி இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் வேறு ஏதேனும் ஒரு நச்சு நிரல் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்திக் கொண்டும், எக்ஸ்பி அப்டேட்டுகளை நீக்கியும், இணையம் பயன்படுத்த குரோம் உலவியைக் கொண்டும் பயன்படுத்தலாம் என்பது உண்மைதான். இருப்பினும் வேறு ஏதேனும் உபுண்டு போன்ற ஒரு திறமூல இயங்குதளத்திற்கு தங்களை மேம்படுத்திக் கொள்வது உகந்ததாக இருக்கும்.

2. யூட்யூப் தளத்திலுள்ள காணொளிகளை பதிவிறக்க செய்ய ஏதேனும் தளம் இருக்கிறதா?
Keepvid.com என்ற தளத்தை அணுகி அதிலுள்ள பெட்டியில் குறிப்பிட்ட காணொளியின் உரலியை (URL) இட்டு டவுண்லோட் பொத்தானைச் சொடுக்கவும். வெவ்வேறு வடிவங்களில் குறிப்பிட்ட காணொளியாது வகைப்படுத்தப்பட்டிருக்கும். தேவையான தொடுப்பைச் சொடுக்க, குறிப்பிட்ட வடிவத்தில் காணொளியானது பதிவிறங்கத் தொடங்கும். ஜாவா பிளக்கின் கொண்டு செய்யப்பட்டிருக்கும் இத்தளம் விரைவாகச் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 19 நவம்பர், 2016

கணினிச்சிரிப்புகள்

"நம்ம தலைவருக்கு ஃபேஸ் புக் பத்தி ஒன்னுமே தெரியாது போலிருக்கே..."
"ஏன் என்னாச்சு?"
"ஃபேஸ்புக்க பைண்டிங் பண்ணி நம்ம அலுவலக நூலகத்துல வச்சுட்டா அப்பப்ப பாத்துக்கலாம்ங்கறார்."

"அரசருக்கு எல்லாமே தெரியும் போலருக்கே?"
"எப்படி சொல்ற?"
"போர்ல வீரர்களுக்கு மாற்றாக ரோபோக்கள பயன்படுத்தலாம்கிறார்"
"அட நீ வேற.. ரோபோக்கள பயன்படுத்தினா புறமுதுகு சிக்கல் வராதில்லையா அதுக்குத்தான் அப்படிச் சொல்றார்.”

“நம்ம ஹெச் ஓ டி மேடத்துக்கு கம்ப்யூட்டர்ல அன்னா ஆவன்னா கூட தெரியாது போலருக்கே.”
“எப்டீ சொல்ற?”
“அடுத்த ப்ராஜெக்ட்ட நாம எம் எஸ் ஆஃபிஸீல பண்ணலாம்ன்னு சொன்னா, அதுக்கு அவுங்க அதுக்கெதுக்கு எம்.எஸ் ஆஃபிஸ் போகணும். நம்ம ஆஃபிஸுலேயே பண்ணலாமேன்னு சொல்றாங்களாம்.”

“டேய் ஒனக்குத் தெரியுமா? நா.. கூகுள்+, ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் எல்லாத்துலயும் அக்கெளண்ட் வச்சிருக்கேன்.”
“ஒனக்கு வாழ்க்கைன்னா என்னான்னு தெரியுமாடா?”
“அடக்கடவுளே. எனக்குத் தெரியாதே. அதுக்குச் சீக்கிரமா லிங்க் அனுப்புடா.”

“தலைவர் மகளிரணித்தலைவி மேல ரொம்பக் கோவமா இருக்காரே ஏன்?”
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்ட்ராய்டுக்குப் போட்டியா நம்ம கட்சியிலர்ந்து பெண்ட்ராய்டு கைபேசி தருவோம்ன்னு மேடையிலயே அறிவிச்சுட்டாங்களாம்.”

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

முன்பு பதிவிறக்கம், இப்போது பதிவேற்றம்

முன்பெல்லாம் இணையம் என்றதும் எதையாவது பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
இப்பொழுது என் வன் வட்டிலுள்ள தரவுகளை முகில் கணினியில் பதிந்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. அதனால் பலவற்றைத் தொடர்ந்து பதிவேற்றிக் கொண்டிருக்கிறேன்.
அது பதிவிறக்க காலம். இது பதிவேற்ற காலம்.

புதன், 11 பிப்ரவரி, 2015

அடுத்த இரண்டாண்டுகளில் எண்ணியல் துறையில் வரும் மாற்றங்கள்.

தொழிற்நுட்பம் மிக விரைவாக தனது அடுத்த வளர்ச்சியில் அடியெடுத்து வைக்கின்றது. அடுத்த இரண்டாண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
1. இப்பொழுது பயன்பாட்டிலிருக்கும் குறுவட்டுக்கள் வழக்கொழிந்து போகும்.
இப்பொழுதே இதனைப் பயன்படுத்துபவர்கள் குறைந்து விட்டார்கள். கணினி மாத இதழோடுகூட இப்பொழுதெல்லாம் சாதாரண குறுவட்டு கொடுப்பதில்லை. எல்லோரும் டிவிடி கொடுக்கிறார்கள். இப்பொழுது பயன்படுத்தப்படும் குறுவட்டு, டிவிடிகளுக்கு மாற்றாக நீலஉயர்குறுவட்டு(Blu-ray Disk)பெருமளவு பயன்படுத்தப்படும்.
2. ஐபி முகவரி பதிப்பு 4 வழக்கொழிந்து போகும். ஏற்கனவே ஐபி முகவரி பதிப்பு நான்கினை ஆறாக புதுப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள் பல நிறுவனத்தார். ஆனாலும் இரண்டுமே பயன்பாட்டில் இருக்கின்றது. எனினும் ஐபி4 லிருந்து ஐபி6 க்குச் செல்ல பல வரம்பெல்லைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதற்கேற்ப தடுப்புச்சுவரினையும் சரிவர அமைக்க வேண்டும் இல்லையேல், வைரஸ்கள் பரவுதலைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
விண்டோஸ் 2008 சர்வர் பதிப்பு, விண்டோஸ் 7 பதிப்புகளில் நாம் மிகுதியாக ஐபி6னைப் பயன்படுத்தலாம். எனவே ஐபி4 ஆனது வழக்கொழிந்து போய்விடும்.  
3. மெய்நிகர் விசைப்பலகைகள் (Virtual Keyboards)
இப்பொழுது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் விசைப்பலகைகளுக்கு மாற்றாக விர்ச்சுவல் கீபோர்டு என்றழைக்கப்படும், மெய்நிகர் விசைப்பலகைகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இப்பொழுதே இது போன்ற விசைப்பலகைகள் உள்ளதென்றாலும், அவை அனைவராலும் பயன்படுத்தப்படுவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட கம்பியில்லா கருவிகளை இப்பலகைகள் கொண்டு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும்.
இப்பொழுதே சில பயன்பாடுகள் மட்டும் இது போன்ற தொழிற்நுட்பத்தின் கீழ் கிடைக்கின்றன. முழுமையான மெய்நிகர் விசைப்பலகைகள் கிடைக்கிறதென்றாலும் அதன் விலை அதிகம். இது கொண்டு நாம் கணினி, மடிக்கணினி, கைபேசி, இன்னபிற கருவிகள் என அனைத்தையும் கம்பியின்றி இயக்கலாம். இதில் வெறும் கதிர்கள் மட்டும் பயன்படுத்தப்படும். மேலும் தொடு செயல்கள் மூலம் இதனை அணுகுவதால், தட்டச்சுச் செய்யும் உணர்வேயின்றி தட்டச்சுச் செய்து பயன்படுத்தலாம்.  
4. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்கும்.
அனைவரும் இணைய இதழ் நடத்துபவர்களாகவோ அல்லது குழு நடத்துபவர்களாகவோ இருப்பார்கள். அதிவிரைவாக இணையப்பகிர்தல்கள் அமையும். பணத்திற்கு இருக்கும் மதிப்பினை விட ஒவ்வொருவரும் வைத்திருக்கும் செய்திகளுக்கு மதிப்பு அதிகமாக இருக்கும். இதில் தரவினங்களும் அமையும்.
5. தொலை இயக்கிகளில் ப்ளூடூத் பயன்பாடு:
இப்பொழுது நமது தொலை இயக்கிகளில் அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்குகின்றன. எனவேதான் நாம் அந்த குறிப்பிட்ட உணரிக்கு நேராக நமது தொலை இயக்கியினை வைத்து இயக்க வேண்டும். அதற்கு மாற்றாக ப்ளூடூத் பயன்படுத்த நமது தொலை இயக்கியினை எங்கிருந்து வேண்டுமானதும் குறிப்பிட்ட தொலைவிற்குள் பயன்படுத்தலாம்.  
இப்பொழுதே சில கைபேசிகளில் உள்ள இந்த பயன்பாட்டின் மூலம் மடிக்கணினி, கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றை இயக்க முடிகிறது என்றாலும், நிறுவனத்தார் தரும் தொலை இயக்கிகளில் இவ்வகை நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இந்நுட்பம் பயன்படுத்தப்பட்டால் நாம் ஒவ்வொரு கருவிக்கும் தனித்தனியாக தொலை இயக்கி வாங்கத்தேவையில்ல்லை. ஒரே இயக்கி மூலம் அனைத்தையும் செயல்படுத்தலாம்.
6. இணையவாசகர்கள் தங்களுக்கான திரட்டிகளைத் தாமே செய்துகொள்வர்:
ஒவ்வொரு செய்திகளுக்காக ஒவ்வொரு தளம் சென்று பாராமல் தங்களுக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ள இணையத்திலிருந்து செய்திகளைத் திரட்ட அவர்களுக்கான மென்பொருட்களை அவர்களே செய்து கொள்வார்கள். செய்தித்திரட்டி, தொழிற்நுட்பத்திரட்டி, பாடற்திரட்டி, திரைத்துறைதிரட்டி, கவிதைத்திரட்டி, கதைத்திரட்டி, புதியமேம்பாடுகள் திரட்டி என பெயரிட்டு அவர்களுக்கான செய்திகளை தெரிந்து கொள்வர்.
இதற்கான அறிகுறிகள் இன்றைய நாட்களிலேயே தென்படுகின்றன. அதற்கான rss, atom களை மட்டும் குறிப்பிட்டாலே போதும், தானியங்கி முறையில் வலைப்பக்கம் கிடைத்து விடும். பின்பென்ன நீங்களும் வலைமனையின் பிதாமகன்தான். இப்பொழுது இணைய உலகையே கலக்கி வரும் கூகுள் இயங்குவது இந்த முறையிலேயேதான்.
இந்த மாற்றங்கள் பெருநகரங்களைக் குறிவைத்தே எழுதப்பட்டிருக்கின்றன. இவை சிற்றூர்களைச் சேர இன்னும் நாட்களாகும்.

வியாழன், 17 ஜூலை, 2014

என்றும் இனியது எங்கள் எக்ஸ்பி - கணினிக்கதை

(தமிழ் கம்ப்யூட்டர் சூலை 16-31, 2014, இதழில் வெளியான எனது படைப்பு பக்கம் 18)

கோனகம் அடுக்குமாடிக்குடியிருப்பின் பன்னிரெண்டாவது தளத்தின் உப்பரிகையில் (balcony) நின்று கொண்டு எலுமிச்சை தேநீர் அருந்திக் கொண்டிருந்தான் நெடிலன். முன்னிரு நாட்களில் பெய்திருந்த கோடை மழையில் நனைந்திருந்த நெடுஞ்சாலையின் ஓரத்திலிருந்த உப்பினிவிளக்கின் (halogen lamp) ஒளி சீராக ஊர்திகளில் விழுவதை, தனது உப்பரிகைத்  தேநீரோடு சேர்த்து உறிஞ்சினான்.


தொலைவிலிருந்து தனக்குத் தெரிந்த ஓர் ஊர்தி வருவதை உணர்ந்தவன், தனது பார்வையைக் கூராக்கி, தொலை ஊர்தியை உற்று நோக்கினான் தேநீர் கோப்பையை கைமாற்றியபடி. “இது நுட்பாவோட ஊர்தியாச்சே” மனதில் நினைத்தபடி தேநீரில் அடுத்த மிடறு விழுங்கினான்.

அவன் நினைத்தவாறே நுட்பா தனது ஊர்தியை ஓரங்கட்டிவிட்டு தூக்குக்கூட்டில் (lift) ஏறினாள். ஏறியவள் எண் பன்னிரெண்டினை அழுத்தி விட்டு, தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொண்டாள்.

"என்ன நுட்பா, படபடப்பாய் இருக்கற, எலுமிச்சை தேநீர் குடி, அமைதியா என்ன சேதின்னு சொல்லு." அவளுக்குத் தேநீர் தந்து தேற்றினான் நெடிலன்.

"பழைய கல்லூரியிலர்ந்து கூப்ட்ருக்காங்க. ஒரு கருத்தரங்கு நடத்தணுமாம். என்ன செய்றதுன்னே தெரியல?” தேநீரை வாங்கியும் வாங்காமலும் பேசினாள் நுட்பா.

"தலைப்பு என்ன?" இது நெடிலன்.

"என்றும் இனிய‌து எங்கள் எக்ஸ்பி" இது நுட்பா.

"இது ரொம்ப எளிமையான தலைப்பு. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எக்ஸ்பியோட மேம்படுத்துதல்கள நிறுத்திட்டாலும், ஏற்கனவே அத உரிமையோட வாங்கனவங்க அத பயன்படுத்தறத தடுக்கப்போறதில்லை. இன்னும் எத்தனையோ இணைய மையங்கள் எக்ஸ்பியைப் பயன்படுத்திக்கிட்டுத்தான் இருக்கறாங்க.” நேர்த்தியாப் பேசினான் நெடிலன்.

கொஞ்சம் நிம்மதியுடன் அவன் பேசுவதைக் கேட்டாள் நுட்பா.

"எக்ஸ்பியை நாம காசு கொடுத்து வாங்கினதா வச்சுக்கிட்டு, நம்ம இத்தத் தலைப்புல கல்லூரி கருத்தரங்க நடத்தலாம். ஏறத்தாழ முப்பது வகையான மென்பொருட்கள போர்ட்டபிளாக நிறுவிப் பயன்படுத்தலாம். அதுக்கு இந்த  http://portableapps.com/apps தளம் வழிவகுக்கறது.”தேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு தனது புருவமுயர்த்திப் பேசினான் நெடிலன்.

"நாம ஏற்கனவே வாங்கியிருக்கற எக்ஸ்பியை நிறுவின பிறகு, மொதல்ல விண்டோஸ் அப்டேட் அப்டீங்கற மேம்படுத்துதல் சேவைய நிறுத்தணும். அதுக்கப்பறமா, நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருள (anti-virus software) நிறுவணும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தோட நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருள் நாம நிறுவப்போறதில்ல. அதுக்கு ஏற்கனவே இருக்கற எக்ஸ்பியின் எச்சரிக்கை செய்திகள நாம அமைதிப்படுத்தணும்.  அதனால இந்த சாளரத்துல இருக்கறத தேர்ந்தெடுக்கணும்.” சொன்னதோடு மட்டுமின்றி தனது மடிக்கணினியில் இருந்து தான் மெய்நிகர் (virtual box) நிலையில் நிறுவியிருந்த எக்ஸ்பியில் காட்டத் தொடங்கினான் நெடிலன்.

"சரி செய்தாய்ச்சு. அப்றம் என்ன பண்றது?" ஆர்வமிகுதியில் கேட்டாள் நுட்பா.
“Portableapps.com/appsல இருந்து Mcafee Stinger Portable Antivirus பதிவிறக்கம் செஞ்சு நிறுவணும். நிறுவறதோட நிறுத்தாம ஒரு மொற முழுக்க கணினியச் சோதன செஞ்சுக்கணும்.

இப்போ நாம் வேற நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருள் நிறுவிட்டதால, விண்டோஸ் எந்தவொரு பிழைச் செய்தியையும் காட்டாது.”தனது மடிக்கணினியைச் சுட்டிக்காட்டித் தொடர்ந்தான் நெடிலன்.

"எக்ஸ்பியை மெம்படுத்த (update)முயற்சிக்கக் கூடாது.”

"சரி நல்ல உபாயம் (suggestion) சொன்னிங்க நெடில். அடுத்த கட்டம் என்ன?"

"வேற என்ன? நமக்கு என்னென்ன மென்பொருட்கள் தேவையோ, 
எல்லாத்தையும் போர்ட்டபிளாகவே நிறுவிக்கலாம்.” அடுத்த கட்டத்தை விளக்கினான் நெடிலன்.

"போர்ட்டபிள் மென்பொருள்ன்னா என்ன? கருத்தரங்குக்கு ஏத்த மாதிரி விளக்கமாச் சொல்லுங்க.” தனது கேள்வியில் முனைப்பாய் இருந்தாள் நுட்பா.

“Install it once, use it anywhere அப்டீங்கறதுதான் போர்ட்டெபிள் மென்பொருட்களோட தத்துவம். ஒரு மொற நிறுவிட்டா, அதுக்குத் தேவையான அனைத்து கோப்புக்களையும் (dll files), ஒரே அடைவுக்குள்ள (folder) கொண்டுவந்துடும். அதுக்குப்பிறகு, நாம எங்க வேணும்னாலும், எந்த கணினிக்கு வேணுமினாலும் அந்தக் குறிப்பிட்ட போர்ட்டபிள் கோப்புக்களப் படியெடுத்தாலே போதும். அந்த மென்பொருள் தங்குதடையில்லாம இயங்கத் தொடங்கும்.” portableapps.com தளம் ஆங்கிலத்தில் கூறியதை தமிழில் விளக்கினான் நெடிலன். நா ஏறத்தாழ இருப்பதியேழு மென்பொருட்கள் போர்ட்டபிளா நிறுவித்தான் பயன்படுத்திக்கிட்டிருக்கேன்.” தனது மடிக்கணினி குறித்து விளக்கம் கொடுத்தான் அந்த எக்ஸ்பி தலைவன்.

"என்ன நீங்க இன்னும் எக்ஸ்பி பயன்படுத்துறீங்களா?" அடுத்த கேள்வி கேட்டாள் அணங்கு.

“எக்ஸ்பியும் பயன்படுத்தறேன்.” எளிமையாய்ச் சொன்னான் நெடிலன்.

"என்னென்ன மென்பொருள் நிறுவியிருக்கீங்க. அதெல்லாம் மெம்படுத்த முடியுமா?” கருத்தரங்கிற்கான தயாரிப்பில் கேட்டாள் நுட்பா.

"கண்டிப்பா பெரும்பாலான போர்ட்டெபிள் மென்பொருட்கள மேம்படுத்த முடியும். சில மேம்படுத்த முடியாத மென்பொருட்கள திரும்பவும் இலவசமாவே நிறுவிப் பயன்படுத்தலாம். இது எல்லாத்துக்குமே நாம சொல்ற பழைய எக்ஸ்பி ஆதரவு கொடுக்கறது. இதப்பத்தி மைக்ரோசாஃப்ட்டும் ஒன்னும் சொல்லாது. நாம நம்மளோட எளிமையான அன்றாடத் தேவையான மென்பொருட்கள அருமையாப் பயன்படுத்தலாம்.” விளக்கமாய்ப் பேசினான் நெடிலன்.

பேசியவன் தொடர்ந்தான். “நாம கண்டிப்பா மைக்ரோசாப்டோட எந்த மென்பொருளையும் இதுல புதுசா நிறுவிப் பயன்படுத்தக்கூடாது. ஃப்யர்ஃபாக்ஸ்(firefox30), குரோம்(chrome35) உலவிகள இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்க்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். ஃப்யர்ஃபாக்ஸ எளிமையா மேம்படுத்திக்கலாம். குரோமிற்கு இயக்கமுறை மேம்படுத்துதல் இன்னும் இதுல சேக்கப்படல. எல்லாவகையான நீட்சிகளையும் (extensions, add-ons)நிறுவிக்கலாம். கண்டிப்பா எம்எஸ்ஆபிஸ் தொகுப்பை நிறுவக்கூடாது. அது முறையானது அல்ல. காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது. அதுக்கு மாற்றா லிபேர் ஆபிஸ் போர்ட்டபிள் நிறுவலாம், மேம்படுத்தலாம். எல்லாவகையான ஆபிஸ் கோப்புக்களையும் அணுகலாம். ம். அப்றமா, வின்சிப்புக்கு மாற்றா 7சிப் நிறுவிப் பயன்படுத்தலாம். இது எல்லா வகையான சுருக்கப்பட்ட கோப்புக்களையும் திறக்கும் ஆற்றல் கொண்டது. வின்ரேர், டார், போன்ற இலினக்சு கோப்புக்களையும் எளிமையாகக் கையாள்கிறது. அடுத்து,அர்த்தா போர்ட்டெபிள் என்பது ஒரு எளியவகை ஆஃப்லைன் அகரமுதலியாகும். அதுவும் எளிமையா இயங்கறது.” நாற்காலியின் நுனியில் மெல்லத் தாளமிட்டவாறே பேசினான் நெடிலன்.

"வேறென்ன மென்பொருளெல்லாம் நாம கருத்தரங்கில சொல்லலாம்?”மனதில் கருத்தரங்கிற்கான எண்ணத்துடன் அடுத்த கேள்வி கேட்டாள் நுட்பா.

“ஆடியோ தொகுப்பிற்கு ஆடாசிட்டி இருக்கு, முப்பரிமாண படங்கள வரைஞ்சு பாக்கறதுக்கு ப்ளண்டர் 3டி இருக்கு, நாம கணினியில செய்யறதெல்லாம் படமா எடுக்கறதுக்கு பயன்படற் கேம் ஸ்டூடியோ இருக்கு, பிடிஎஃப் கோப்புக்கள அணுகறதுக்கு ஃபாக்ஸ் இட் ரீடர் இருக்கு, வேறென்ன வேணும், ப்ரி டவுண்லோட் மேனேஜர், யுடோரண்ட் எல்லாமே போர்ட்டெபிளாவே இருக்கு.” இதெல்லாம் நாம சாதாரணமா பயன்படுத்தற மென்பொருட்கள்.

“இன்னும் சிறப்பான மென்பொருட்களான, PDFTKBuilder – pdf editor, Teamviewer, Wise Data Recovery, Gimp, WinSCP, Portable putty, FileZilla அப்டீன்ற மென்பொருட்களும் இருக்கு. எம் எஸ் ஆபிஸ் நிறுவாததால, நமக்கு அவுட்லுக்கிற்கு மாற்றா, தண்டர் பேர்ட்டு நிறுவிக்கலாம். வேறென்ன வேணும் சொல்லு?” விடை சொல்லியவன் கேள்வி கேட்டான்.

"வேற எதாவது சிறப்பான மென்பொருட்கள் இருக்கறதா நெடில்?” வேண்டுமென்றே கேட்டாள் நுட்பா.

“Balabolka word to mp3, வேர்டிலிருந்து எம்பி3 ஆக மாற்றும் மென்பொருள், Brutal Chess உள்ளிட்ட மிகுதியான விளையாட்டுக்கள், KeePass எனப்படும்  Password Protector, Teracopy என்னும் விரைவு படியெடுப்பான், Mp3 split என்னும் பாடலை வெட்டி ஒட்டும் மென்பொருள், Type faster–typing test தட்டச்சுப் பயிலும் மென்பொருள், World clock, Zint barcode studio மேலும் அன்றாடம் நாம் பயன்படுத்தற  Notepad++, VLC Player எல்லாமே இலவசமாக் கெடைக்கறது. இதெல்லாம் நாம போர்ட்டபிளா நிறுவறதால டிஎல் எல் கோப்புக்களெல்லாம் தனித்தனியா நிறுவப்பட்டு இயங்குதளத்தை சாதாரணமாகவே இயங்க வைக்கறது. வீணாக இயங்குதளம் (Hang)தொங்குவதில்லை. வீணாக .நெட்பிரேம்வொர்க் போன்றவைகள் நிறுவப்படாததால் இயங்குதளம் இயல்பாகவே இருக்கிறது. அவ்வப்போது நாம் நிறுவிய நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருளை மட்டும் மேம்படுத்தி வந்தால் அருமையாக அனைவரும் எக்ஸ்பியைப் பயன்படுத்தி இன்புறலாம். எல்லாதோட முக்கியமானது. இப்டீ நாம பயன்படுத்தற எக்ஸ்பியை மைக்ரோசாஃப்ட் கண்டுக்காது.”

“ம்.. அப்பா. நானே கருத்தரங்கு நடத்தி முடிச்சுட்டேன்.” நெடிலன் பேசினான்.

“நிரம்ப நன்றி நெடில். பல கொழப்பத்தோட வந்த என்ன தெளிவாக மாத்திட்டீங்க. நான் இனிமே அருமையா கருத்தரங்கிற்கு போயி கல்லூரியையே கலக்குவேன்."மகிழ்ச்சியுடன் பேசினாள் நுட்பா.

“கலக்குறப்ப என்னையும் மறந்துடாத நுட்பா..." கண்களால் சிரித்தான் நெடிலன்.

"என்றும் இனிய‌து எங்கள் எக்ஸ்பி.” மறுமொழியாகச் சிரித்தாள் நுட்பா.

சனி, 7 ஜூன், 2014

உபுன்டு உலகம் - கணினிக்கதை

(தமிழ் கம்ப்யூட்டர் மே 16‍‍-31, 2014, பக்கம்-22 இதழில் வெளியான எனது படைப்பு)
வார இறுதியாதலால் (weekend) நுட்பா, நெடிலன் இருவரும் பேரங்காடிக்குச் (shopping mall) சென்று பனிக்கூழ் (ice-cream) பருகிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். தான் புதிதாய் வாங்கியிருந்த மஞ்சள் நிற நேனோ பற்றிப் பெருமையாய்ப் பேசிக் கொண்டிருந்தாள் நுட்பா தன் கணினித் தோழன் நெடிலனிடம். ஒரு சின்ன ஊர்தியைப் பற்றி இப்படி அளந்து கொண்டிருக்கிறாளே என்று நினைத்துக் கொண்டே அவள் பேசும் அழகை யும் பனிக்கூழையும் சுவைத்துக் கொண்டிருந்தான் நெடிலன்.


அப்றம் என்ன புதுத் தொழிற்நுட்பச் செய்தி சொல்லுங்க நெடில்?” முதல் கேள்வி கேட்டாள் பனிக்கூழ் பதுமை நுட்பா.
மொதல்ல புதுசா வந்திருக்கற தொழிற்நுட்பக் கருவிகளக் கேட்டுக்க. எல்லாமே பலகைக் கணினிகள்தாம்.  இதைச் சுருக்கமாக பலனி அப்டீன்னு சொல்றாங்க. சாம்சங் கேலக்ஸி நோட் 10.1 (2014 ஆண்டுப்பதிப்பு) வந்திருக்கு. இதுல 3ஜி ஆதரவு இருக்கு. கணினி வரைகலையாளர்களுக்கும் (artists), வடிவமைப்பாளர்களுக்கும்(designers) உகந்ததாக இருக்கும்ன்னு சந்தையில பேச்சு இருக்கறது. வெல  49,470/-. இதுல Scribble notes, polaris office 5, பதிப்பு இருக்கு. முழுக்க உயர் அடர் தொழிற்நுட்ப திரை (Full HD screen) உண்டு. Autodesk Sketchbook வடிவமைப்பாளர்களுக்காகவே சிறப்பா அமைக்கப்பட்டிருக்கு. குரல் அடிப்படை ஏவலனும் உண்டு (Voice based assistant) எஸ் மொழிபெயர்ப்பான்(S translator), நாக்ஸ் தரவுப் பாதுகாப்பானும்(knox datasecurity) உண்டு.ஒரு நாளிதழில் பார்த்ததை ஒப்பித்தான் நெடிலன்.
ஒப்பித்தவன், பனிக்கூழைச் சுவைத்துக் கொண்டே அடுத்த செய்திக்குத் தாவினான். அடுத்து, லெனோவா ஐடியாபேட் A10, இது தட்டச்சுப்பலகையுடன் கூடிய ஒரு பலகைக்கணினி ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன், வைஃபை, 1ஜிபி நினைவகம், 16 ஜிபி உள்ளிணைந்த வன்வட்டு. 10.1 அங்குலத்திரை. தட்டச்சுப்பலகை கண்டிப்பாக வேணுங்கறவங்களுக்கு இது ஏத்தது. வெல 19,990/-.”
பனிக்கூழ்க் குவளையை கீழே வைத்துவிட்டு அவன் பேசும் அழகைப் பருகினாள் நுட்பா.
என்ன நுட்பா இன்னொரு பனிக்கூழ் பருகலாமா?” அவளது குவளை காலியானதால் கேட்டான் நெடிலன்.
ம்.. எனக்கு இன்னொரு வெனிலா சொல்லுங்க. அதோடு சேத்து ஆப்பிள் சேதி ஏதாவது இருந்தா சொல்லுங்க.உரிமையுடன் கேட்டாள் நுட்பா.
ஆப்பிளும் ஐபேட் ஏர் வெளியிட்டிருக்கு. வெல 35,900க்கும் மேல‌.  9.7 அங்குலத்திரை ஐஓஎஸ் ஏழு இயங்குதள பதிப்புல இருக்கு. ஆப்பிள் மீது கிறுக்குப்பிடித்த (apple crazy people) மேல்தட்டு மக்களுக்கு ஏத்தது. எனக்கொரு சாக்லெட் பனிக்கூழ் சொல்லிக்கறேன். அவளது மறுமொழிக்குக் காத்திராமல் விரைவாய்ப் பேசினான் நெடிலன்.
ம்..லினக்ஸ் சேதி?” பனிக்கூழை விழுங்கியும் விழுங்காமலும் கேட்டாள் நுட்பா.
ஆமா. லினக்ஸ் பயனாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த உபுன்டு 14.04 LTS 17ம் தேதி வெளியாகியிருக்கு. Trusty Tahr அப்டீன்னு பேர் வச்சிருக்காங்க. 2019 ஏப்ரல் வரைக்கும் இதுக்கு ஆதரவு தர்றாங்க. 64 பிட்ட பயன்படுத்த உபுன்டு தளம் கேட்டுக்கறது. 2GB க்கு கொறச்சலா இருக்கற பொறிகளுக்கு 32பிட் பரிந்துரைக்கப்படறது. மேக்(mac) கணினிகளுக்குத் தனியாக ஒரு புதிய பதிப்பையும் வெளியிட்டிருக்கு. வழங்கிகளுக்கு 64பிட் மட்டும் தான் பரிந்துரைக்கப்படறது. ஏற்கனவே உபுன்டு 12.04 எல்டிஎஸ் பயன்படுத்தறவங்க அதையே தொடர்ந்து பயன்படுத்திக்கலாம். இத மேம்படுத்தணும்ன்னு தேவ இல்லை. புதுசா எதாவது சோதன பண்ணிப்பாக்கணும்ன்னு நெனைக்கறவங்க மட்டும் இத பயன்படுத்திக்கலாம். இதுக்கு முன்னாடி பதிப்புல எல்லாம் குடுத்த மாதிரி இதுலயும் உலாவிவர இணையத்துல அருமையான Tour குடுத்துருக்காங்க.இணையத்தில் தான் பார்த்த செய்தியினை பனிக்கூழைப்போல் பகிர்ந்து கொண்டான் நெடிலன்.
பகிர்ந்தவன் தொடர்ந்தான், “இப்ப எல்லாரும் மெதுவா, ரெட் ஹாட்டிலர்ந்து உபுன்டுவுக்கு மாறிக்கிட்டிருக்காங்க. ஏன்னா, அது இலவசம், எல்டிஎஸ்க்கு அஞ்சு ஆண்டுவரைக்கும் ஆதரவு தர்றாங்க. அமைவுகளை (configurations) இலவசமாவே இணையத்தில படிச்சு பயன்படுத்தலாம். பெரும்பாலும் எல்லா வகையான கருவிகளுக்கு ஆதரவு இருக்கு. இதே ரெட் ஹாட் ஆக இருந்தா நெறய அமைவுகள நாமளே அமைக்கணும். இல்லாட்டி கர்னல மாத்தி அமைக்கணும். இப்ப வந்திருக்கற உபுன்டு High resolution displaysக்கெல்லாம் ஆதர்வு தர்றது. பலகைக் கணினிக்கும், கைபேசிகளுக்கும் தொலைக்காட்சிக்கும் ஆதரவு கெடைக்கறது.
உபுன்டு புதுப்பதிப்பு வந்திருக்கு சரி. அதோட வசதிகளப் பத்தி சொல்லுங்க நெடில்." வெனிலாவைச் சுவைத்தபடி கேட்டாள் நுட்பா.
ஏழு முதன்மையான வசதிகள இந்த உபுன்டு தர்றதுன்னு இணையம் பட்டியலிடுது. ஒவ்வொன்னா இப்பப் பாக்கலாம்.
  1. சிறிய யூனிட்டி லான்சர் (Small Unity Launcher)
இதனால சுட்டிக்கு ஏத்த மாதிரி சின்னதா சின்னங்கள வச்சுக்க முடியும்.
  1. ரெண்டாவது உபுன்டுல நாம ஒலியளவ 100 விழுக்காட்டுக்கும் மேல வச்சுக்கலாம். மறுபடியும் 100 விழுக்காடு மட்டுமெ போதும் அப்டீன்னு விரும்பினா அதுக்கும் ஒற்றைச் சொடுக்கில் வழி வகுத்து இருக்கு. (Raise Volume Past 100%)
  1. முன்னால பட்டைகள் (menu bars) மொத்தமா மேல இருக்கறதுல ஒருங்கிணைக்கப் பட்டிருக்கும். இப்ப தனித்தனியான சாளரத்துல (windows) இணைக்கப்பட்டிருக்கு. (Locally Integrated Menus)
  1. நன்றாக அடையாளங் காணப்படக்கூடிய முழு பட்டைகள் (Full menus) இருக்கு.
  1. GTK3 க்கு ஆதரவளிக்கக்கூடிய CSS themed decorated windows அமைஞ்சிருக்கு.
  1. விரைவாக இயங்குதளத்தைப் பூட்டக்கூடிய குறுக்குவிசை அமைஞ்சிருக்கு. (Faster Lock Screen Shortcut) அதாவது முன்பு ஆல்ட்+கன்ட்ரோல் எல் (alt+ctrl+L) விசையினை இயக்கி பூட்டப்பட்ட இயங்குதளம், இப்போது விண்டோஸ்+எல் (win+L) விசைகளை இயக்கியே பூட்டப்படுவது போல் செய்யப்பட்டிருக்கு.


  1. ஒரு சாளரத்தில் உள்ளிட்டுக் கொண்டிருக்கும் போதே லைவ் ரீசைஸ் (Live window resize) உத்தி பயன்படுத்தி, விரைவாக சாளரத்தை நீட்ட குறைக்க முடிகிறது.

தான் இணையத்தில் கண்ட சேதியினை, எளிமையாகத் தமிங்கிலத்தில் விளக்கினான் நெடிலன்.
நான் நேத்துத்தான் புதுப்பதிப்ப பதவிறக்கம் செஞ்சு பயன்படுத்தத் தொடங்கினேன். ஒனக்கும் தர்றேன், தனது மெல்லிய மீசையினை வருடியபடி பேசினான் அந்த உபுன்டு தலைவன்.
ம்.. ஒங்களுக்கு எல்லாம் தெரியறதுல ஒன்னும் வியப்பில்ல. நான் வியக்கற மாதிரி எதாவது சொல்லுங்க.பனிக்கூழ் இன்னும் தீராததால் மறுகேள்வி கேட்டாள் நுட்பா.
அலுவலகத்துல எல்லாரும் முகநூல் செயலி (Face book) பயன்படுத்தறது இப்ப பொதுவான செய்திதான். நாம முகநூல்லதான் விளையாடிகிட்டு இருக்கறோம்ன்னு யாராவது தொலைவிலர்ந்து பாத்தாக்கூட தெரியும். அப்டி தெரியாம நாம எக்செல்ல பாத்துக்கிட்டு இருக்கற மாதிரி தெரியணும்னா, இந்தத் தொடுப்புல (http://hardlywork.in) பயனர் பெயர், கடவுச்சொல் குடுத்து நுழையணும். இது, நம்ம முகநூல் கணக்கயே ஒரு அழகான எக்செல் திரை போல காட்டும். நம்மளத் தவிர வேற யாருக்கும், நாம முகநூல்ல இருக்கறது தெரியாது. யாராவது பக்கத்துல வந்தா, நாம ஸ்பேஸ்பாரத் தட்டினா போறும். எக்ஸெல் திரை வெறும் எண்களாக காட்சியளிக்கும். இதுல மூனு வகையான தீம்கள் இருக்கறது. இதுல ட்விட்டர் அப்டீங்கற கீச்சு புகுபதிவினையும் (twitter handler) உள்ளிட்டுப் பயன்படுத்தலாம்.ஓய்வு நேரத்துல பொன்மலர் (http://ponmalars.blogspot.com/2014/03/hardlywork-app-use-facebook-in-excel-sheet.html) பக்கத்துல படித்த செய்தியினைப் பேசினான் நெடிலன்.
"சரி. நீங்க சொன்னதெல்லாம் நா, சோதிச்சுப்பாத்துட்டு வர்றேன். பனிக்கூழ் நல்லாயிருந்துச்சு. அப்பறம் பாக்கலாம்." அழகான மென்முறுவலுடன் பேசி தனது புதிய நேனோவில் ஏறி விடைபெற்றாள் நுட்பா.