வியாழன், 10 ஆகஸ்ட், 2023

சார்பட்டா பரம்பரை - எழுத மறந்த ஒரு பதிவு

சார்பட்டா பரம்பரை எழுத மறந்த ஒரு பதிவு :)  எழுதிய குறிப்புகளை வளர்ந்து திறனாய்வினை வாசிக்க

செம்மையான படம்
ரோசமான ஆங்கிலக் குத்துச்சண்டை
ஒளிக்கருவியின் கோணம்
மென்பொருள் இசை
இதுதான் உண்மையான வாழ்வியல்.
தொழிற்நுட்பச் செம்மை சிறப்பு.
நீலச்சட்டை மாறன் வலையொளியில் சொன்னாற் போன்று திரையரங்கில் வந்திருந்தால் வேறு வண்ணம் இருந்திருக்கும்.
காலா, கபாலி என்ற வீண் படங்களை இயக்கியவரா இப்படத்தின் இயக்குனர் என்று திறனாய்வர்களையே புருவமுயர்த்த வைக்கும்.
பசுபதி - பொழிச்சலூரார்
ஆர்யா
கலையரசன்
ஜான்விஜய்
காளி வெங்கட்
கைப்பாடம் கால்பாடம்
1:40 அருமை. அதன்பின் அரசியல் DTS ஒலிச்செறிவில் விருமாண்டி வாசம்.
புகைப்பூஞ்சுருள் (பீடி) தாத்தா வந்து பயிற்சி கொடுத்து வாகை சூட வைக்கிறார்.
தோல்வியிலிருந்து திரும்பி வர தன்னம்பிக்கை பாடம் தருகிறது படம்.
உனக்குன்னு காலம் ஒன்னும் வராது. நீதான் உனக்கான காலத்த உருவாக்கிக்கணும்.
தங்கதுரையில் ஒலியாடல்.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

ரஜினிமுருகன் - திறனாய்வு

பட்டையை மட்டுமல்ல, இலவங்கத்தையும் சேர்த்து கிளப்பியிருக்கிறார்கள் ரஜினிமுருகனில். "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்ன? அதையும் தூக்கிச்சாப்பிட்ருக்கிறார்கள். இந்த‌ச் சிரிப்பு மூட்டும் திருவிழா யானையை சென்னை வெள்ளம் வந்து ஈரச்சாக்குப் போர்த்தியமையால், படம் தாமதமாக வெளியாகியிருக்கிறது. கதையுடைத்தலைவி கீர்த்தி சுரேஷ், இற்றிதிவ்யாவை ஓரங்கட்டுவாரா எனப்பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். நகைச்சுவை சூரி, நாறோடு சேர்ந்த பூவாய் நாறியிருக்கிறார். இனி கண்டிப்பாக ஒரு பெரிய வட்டம் வருவார். ஏற்கனவே குறுவட்டில் வந்த பாடல்கள் இணையத்தில் பிய்த்து எறிய‌, இன்னும் புதிதாக இரண்டு பாடல்களையும் தந்து அசத்தியிருக்கிறார் இமான். அதுவும் கதையுடைத்தலைவி வரும் இடத்தில் வரும் பாடல் "இசைஞானியையே" நினைவு படுத்துகிறது. உங்களை தலைக்குவிப்பு தூக்கி பாரட்டுகிறோம் இமான். பொன்ராம் இயக்கத்தில், மதுரை வழக்கில் உள்ள இப்படம், அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. அப்புறம் என்ன, படம் பார்த்த அனைவரும், நம்ம மதுரை சாலமன் பாப்பையா குரலில் சொல்கிறார்கள், "அரும ஐயா, படம் நல்லாயிருக்குல்ல".

வியாழன், 2 ஏப்ரல், 2015

சண்டமாருதம் - சிலவரிகள்

சண்டமாருதம் என்ற சமற்கிருதச் சொல்லுக்கு ஊழிப்பெருங்காற்று என்று பொருள். படத்தில் ஓவியா வழக்கம் போல் உமா மகேசுவரி இரவல் குரலில் பேசுகிறார். சிரிக்கிறார். பாட்டிற்கு வந்து ஆடுகிறார். மற்றபடி நடிப்பு, அதெல்லாம் யாரு கேட்டா? கதைத் தலைவன், எதிர் தலைவன் இரண்டுமே சரத்குமார்தான். எதிர் தலைவன் தான் நன்றாக நடித்திருக்கிறார். தம்பி இராமையா அவ்வப்போது வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார். வழக்கம் போல் சமுத்ரகனி நன்றாக நடித்திருக்கிறார். படத்தில் மீரா நந்தனும் இருக்கிறார். இசை ஜேம்ஸ் வசந்தனாம். அவரது இசையமைப்பு வேலையில் இன்னுமொரு படம் சேர்ந்து விட்டது.
தனது மகளை விடச் சிறிய பெண்ணான ஓவியாவுடன் ஆட்டம் போட சரத்குமாருக்கு எப்படித்தான் மனம் வந்ததோ? ஓவியா(23), வரலட்சுமி சரத்குமார்(30), சரத்குமார்(60)
அவ்வளவுதான். வேறென்ன சொல்ல.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

ஜிகர்தண்டா திரைப்படத் திறனாய்வு

ஜிகர்தண்டா பார்க்க நேர்ந்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு திறனாய்வு எழுத வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. ஏற்கனவே இணையத்தில், இதழ்களில் படத்தை அலசி ஆராய்ந்து விட்டமையால், நான் சுவைத்த சில வரிகளை மட்டும் எழுத விழைகிறேன். இது ‘டர்ட்டி கார்னிவல்’ என்ற கொரியப்படத்தின் தழுவல் என்கிறது தொழிற்நுட்ப சுவைஞ உலகம்.
நேற்று சனிக்கிழமை எதேச்சையாக ஃபோரம் பேரங்காடி சென்ற பொழுது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை தொலைவிலிருந்து பார்க்க நேர்ந்தது. நான் திருட்டு இணையப்பட சுவைஞன் என்பதால் அவருக்கு கைகொடுக்கவில்லை. அவரது நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆரத்தழுவிக்கொண்டார்கள். அவர் அருகில் சென்ற பொழுது அவர் மெலிதாக புன்னகைத்தார். எல்லா படைப்பாளிகளும் பொதுமக்களைப் பார்த்துப் புன்னகைப்பது இயல்புதான்.
படத்தில் நான் உற்று நோக்கியவைகள்
1.       கதையுடைத்தலைவி[1] பின்னணிக்குரல் கலைஞர் மகாலட்சுமியின் இரவல் குரலில் பேசுகிறார். இப்படத்திற்கு ஏதேனும் ஒரு துணை நடிகையைக்கூட போட்டிருக்கலாம் என்பது என்கருத்து. இயக்குநரின் முந்தைய படம் பீட்சாவிலும் கதையுடைத்தலைவிக்கு[2] குரல் கொடுத்தவர் இதே பின்னணிக்குரல் கலைஞர்தான்.
2.       லகர, ளகர, ழகர, னகர, ணகர துப்புரவாக உரையாடும் கதையுடைத் தலைவன்[3] இதில் மதுரை வழக்குப் பேசியிருப்பதால் பலனி (பழனி), கலுவி (கழுவி) என்று பேசியிருக்கிறார். (மதுரையில் பட்டிமன்றம் பாப்பையா தவிர வேறு யாரும் உரையாடும் பொழுது தமிழைச் சரிவர உச்சரிப்பதில்லை.) மற்றபடி வர்றாய்ங்க போறாய்ங்க வழக்கை கருணாகரனும், சிம்ஹாவும் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.
3.       கதையுடைத் தலைவனுக்கு தனது பெயரையே இயக்குநர் சூட்டியுள்ளார். படத்தில் வரும் சில காட்சிகள் அவரது வாழ்க்கையில் நடந்தது போலும்.
4.       இசையமைப்பாளர்[4] இசையில் எந்தப்பாடலையும் யாரும் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் பாட முடியாது. பாடினாலும் யாரும் தீர்ப்புச் சொல்ல முடியாது. பாடல்களில் சற்று மெனக்கெட்டிருந்தால் எதாவது ஒரு பாடலை முணுமுணுக்க வைத்திருக்கலாம். பின்னணி இசையும் மிகச்சுமார்தான்.
5.       சிம்ஹா என்ற கலைஞன் தான் முக்கால் படம் வரை கதையுடைத்தலைவன். சித்தார்த் சும்மாதான். சிம்ஹாவிடம் நிறையவே சூர்யாவின் உடல்மொழிகள் தெரிகின்றன.
6.       படத்திலிருந்து பிரிக்க முடியாமல் இழைந்தோடியிருக்கிறது நகைச்சுவை.
7.       அழுகுணி குமார் என்பதே சரி. படத்தில் தலைப்பு அழுகுனி குமார் என்று தவறாக‌ வருகிறது. எழுத்துத்தவறு இருக்கிறது.

8.       படத்தை சாதாரணமாகப் பார்த்தால் சில பெண் சுவைஞர்களுக்கு மட்டுமல்ல‌ ஆண்களுக்கும் குழப்பம் நேரலாம். உற்று நோக்குதல் இன்றியமையாதது.
9.       கருணாகரனின் அச்சமுற்ற நடிப்பு அருமை.
10.   எது எப்படியோ எல்லாரையும் ஒரு முறை பார்க்க வைத்துவிடும் இப்படம்.
11.   படம் ஏறக்குறைய மூன்றுமணி நேரம் ஓடுகிறது. எனினும், படம் பார்க்கும் நினைப்பே சுவைஞருக்கு வராமல் படத்தோடு படமாக ஒன்ற வைத்துவிடுவதுதான் இயக்குநரின் திறமை. அதை இயக்குநர் நகைச்சுவையோடு கூடிய உச்சக்காட்சி வைத்து செவ்வனே செய்திருக்கிறார். இல்லையில்லை அசத்தியிருக்கிறார்.



[1] லட்சுமி மேனன்
[2] ரம்யா நம்பீசன்
[3] சித்தார்த் சூர்ய நாரயணா
[4] சந்தோஷ் நாரயணன்

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சில திரைப்படத் திறனாய்வுகள்

நினைத்தாலே இனிக்கும்:

கல்லூரி நட்பு, காதல், பகைமை ஆகியன காட்டும் இக்கால பாடல் நடனங்களுடன் அமைந்த ஒரு படம். புதிதான என்ற செய்தி ஒன்றுமே படத்தில் இல்லாதிருந்தும், நம்மை அமர்ந்து பார்க்க வைப்பது திரைக்கதையும், சில நகைச்சுவைகளுமே. மிகப்பெரிய செய்திகள் இல்லையெனினும், சில நிகழ்வுக்கோர்வைகளே படத்தைத் தாங்கியிருக்கின்றன. விளம்பரம் வேறு அதிகம்.

படத்தில் நம்பமுடியாதது, உடனிருக்கும் நண்பனைக் கொன்று விட்டு, அவன் தான் என்று தெரியாது என்று தலைவன் சொல்வதுதான். இங்கேதான் இயக்குநர் சறுக்கிவிட்டார்.

சில நெருடல்களைத் தவிர்த்து விட்டு வேறு ஏதேனும் புதிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்த்தால் படம் நன்றாக இருப்பதாகவே தோன்றும்.
சர்வம்:
இதேந்திரனின் இதய கொடையினை பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்ட படம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இருப்பினும் இதயக் கொடை என்னும் சாரம் சரிவர அமைவுராமல், திரைக்கதையானது பொதுவாக அமைந்த அடிப்படை இயல்பூக்கங்களான வன்முறை, பழிவாங்கல்கள் என்பவற்றிலேயே சுழல்வது சராசரிக்கு மேல் உள்ள என் போன்ற சுவைஞர்களுக்கு வருத்தமளிப்பதாகவே அமைகிறது.

பிறகென்ன, தந்தையின் பழம்பாடல்களைச் சுட்டு இசையமைக்க மகன், ஒளிஓவியம் தீட்ட, படத்தொகுப்புச் செய்ய இந்தியாவின் உயரிய கலைஞர்கள் பணியாற்றியிருக்கின்றார்கள்.

காதலிக்க நடனமாட தலைவி,ம்ம்.. அவர் மருத்துவராம். நம்பமுடியவில்லை. பழிவாங்க சண்டையிட‌ தலைவன் என செல்கிறது திரைக்கதை. தலைவன் உச்சரிப்பைத் திருத்தி குரலினை உயர்த்தியிருக்க வேண்டும். செய்யவில்லை.

என்னைக் கவர்ந்தவை இசையரசரின் பழைய இழுவைக்கருவி இசையும், ஒளிஓவியமுமே. பானைச் சோற்றுக்குப் பதமான சிலவற்றை அறிய தொடுப்புக்கள் கீழே.

http://pnapenglish.blogspot.com/2009/09/sarvam-tamil-movie-stills-iii.html
http://pnapenglish.blogspot.com/2009/09/sarvam-movie-stills-ii.html
http://pnapenglish.blogspot.com/2009/09/sarvam-tamil-movie-stills.html

விரைவுத் துப்பாக்கி முருகன் (குயிக்கன் முருகன்):

நகைச்சுவை என்ற பெயரில எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், சில இடங்களில் மட்டுமே சிரிப்பினை வரவழைப்பது சற்று ஏமாற்றமே. அதற்குக்காரணம் இதைவிட நகைச்சுவையான படங்கள் ஏற்கனவே தமிழில் வந்துவிட்டன. வடிவேலுவை விடவா வேறு ஒருவர் இந்நாட்களில் உரையாடல் நகைச்சுவை செய்து விட முடியும்.

ஒரு பாத்திரங்களின் பெயர்கள் மட்டுமே நகைச்சுவை தருவதாக அமைகிறது. அதுவும் சில நேரங்களுக்கு மட்டும்தான். தண்டச்சோறு தின்ன குண்டராமன் என்று சொன்னால் குழந்தைகள் மட்டுமே சிரிப்பார்கள் என்பதை ஊரே அறியுமல்லவா? அது போலத்தான் எல்லா உரையாடல்களும்.

திரைப்படத்தை கிண்டல் செய்து எடுத்த படங்கள் மிகச்சில மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வகையில் திரையரங்கு சென்று பார்க்கும் வகையில் இப்படம் கிடையாது. ஏதேனும் இலவசமாகக் கிடைத்தால் வேண்டுமானல் பார்க்கலாம்.

மதுரை நிகழ்வு: (மதுரைச்சம்பவம்)
பின்னணியில் இருக்கும் தலைவன் முன்னணி ஆக மிகவும் முயற்சி செய்து எடுத்திருக்கும் படம். பயன் வேறென்ன வீண்தான்.

சண்டையிட தலைவன். முத்தமிட, நடனமிட தலைவிகள், இரட்டைப் பொருள் தரும் வார்த்தைகள் பேச துணை நடிகர்கள். இதுதான் மதுரை நிகழ்வு.

படம் தொடங்கி சில நேரத்திற்கெல்லாம் தன்னாலே சிரிப்பு வருவதை அடக்கவே முடியவில்லை. அவ்வளவு சிரிப்பு; அரைகுறையான படத்தைப்பார்த்தால் சிரிப்புத்தானே வரும். மதுரை வழக்கை தலைவன் சரிவரப் பேசியிருந்தால் சிறப்பாயிருந்திருக்கக்கூடும். திறனாய்வில் நிழற்படம் அமைத்தாயிற்று. திறனாய்வு முற்றிற்று.

மாதவி:
ஏதோ ஒரு குழு படமெடுத்துப்பழகிக் கொண்டிருக்கிறது. அடுத்த படம் சிறப்பாக எடுக்க வாழ்த்துக்கள். அடுத்த படம் வேறு எடுக்க வேண்டுமா என்கிறீர்களா? சரி. ஒரு வழியாக மாதவி படத்தை திறனாய்வு செய்தாயிற்று.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

ஆறு திரைப்படத் திறனாய்வுக‌ள்

பொக்கிசம்:

சேரன் எப்பொழுது மற்றவர்களிடமிருந்து வேறுபட நினைப்பவர். வேறுபட்டிருக்கிறார். எனினும் அவரது முந்தைய படங்களில் சாயல் ஒட்டிக்கொண்டுள்ளது இப்பொக்கிசத்தின் இழப்பு.

இணைய உலகம் கோலோச்சும் இக்காலத்தில் கடிதக்கதையா என்று நாம் என்னும் வேளையில் விளக்காய் விரிகிறது 1970களின் எடுத்துக்காட்டு. அச்சூழலைக் கொணர்ந்தது மகிழ்ச்சி. பாடல்களும், ஒளிப்பதிவும் நேர்த்தி.

கப்பற் பொறியாளனாக வரும் சேரன் முகமதியப்பெண்ணை விரும்புகிறார். அக்காலத்தில் கடிதத் தொடர்பு மட்டுமே. பின்னாளில் இருவரும் பிரிகின்றனர். அதற்கு பிறகு அவர் எழுதிய கடிதங்களை அவரது மகன் தனது தந்தையின் காதலியிடம் சேர்க்கும் கதை.

கதையுடைத்தலைவி கண்களை மட்டுமே காட்டி நடித்திருக்கிறார். தொப்புள் நடனம், குத்துப்பாட்டு இல்லாத இப்படம், இந்நாட்களில் ஓடாததில் வியப்பொன்றுமில்லை.

வெற்றி தோல்வி பற்றிக் கவலை கொள்ளாத கலைஞனின் மற்றொரு படைப்பு. சில சறுக்கல்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இப்படத்தை ஒரு வெகுமதி எனலாம். காதலுக்கு மட்டுமே முதன்மை தந்து எடுத்திருக்கிறார் சேரன்.

இதைவிடச் சிறப்பான பின்னணி இசையுடன் இது போன்ற காதல் படங்கள் தமிழ்த்திரையில் வந்துவிட்டதால் நமக்குச்சில இடங்களில் கொட்டாவி வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வாமனன்:
கதையுடைத்தலைவன் சந்தானம் தான் என்பது குழந்தை கூட சொல்லிவிடும். மற்றபடி, பாட, ஆட, காவல்துறையிடம் மாட்டிக்கொள்ள ஓர் ஆள் தேவை அதற்காக செய் நடித்திருக்கிறார். நடிப்பில் இன்னும் நல்ல தேர்ச்சி தேவை.

கதையுடைத்தலைவி ஊருவசி அல்லது இலக்குமி என்பது என்பது ஊரறிந்த அறிந்த உண்மை. பாட, ஆட செய்யுடன் ஒருத்தி வருகிறாள். என்ன செய்ய பார்த்துத்தான் ஆக வேண்டும்.
ஒரு அரசியல் கொலையில் மாட்டிக்கொண்ட கதையுடைத்தலைவன் எப்படி பிடியிலிருந்து தப்பிக்கிறான் என்பதே கதை என்கிறார்கள். திரைக்கதைத் தொய்வால் எல்லாம் சரிந்து விடுகிறது. ஒளிப்பதிவும்,பின்னணி இசையும் மற்றவற்றைச் சரி செய்து விடுகின்றன.

ஏதோ செய்கிறாய்.., யாரைக்கேட்பது போன்ற பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. மொத்தத்தில் வாமனன் ஒரு சிறப்பும் இல்லாதவன்.

மலையன்:
கரண் நடித்து அடுத்து வெளிவந்திருக்கும் படம். கதையுடைத்தலைவி அழகில் மட்டுமல்ல நடிப்பிலும் பரிமளிக்கிறார். சிற்றூர் வீரம், காதல், பகைமை, அன்புடைமை ஆகியவற்றைக் காட்டும் மற்றொரு படம். தலைவன் தலைவி மோதல் பின்பு காதல் என‌ ஏற்கனவே பழக்கப்பட்ட காட்சிகளிலிருப்பினும் நகைச்சுவை அதைச் சிறிதே மறைத்து விடுகிறது.

கதையுடைத்தலைவனின் நடிப்பு ஏற்கனவே சில படங்களில் அவர் நடித்ததின் கலவையே. பதினேழு முடிந்து பதினெட்டுத் தொடங்கிய கதையுடைத்தலைவியின் நடிப்பு மெச்சும் வகையில் உள்ளது.

"தெரிஞ்சாச் சொல்லுங்க..." பாடல் அருமை. மற்றபடி பின்னணி இசை சராசரியே. மொத்தத்தில் மலையன் ஒரு சராசரிச் சிற்றூர்க்கதை என நினைக்கும் நேரத்தில் தலைவி இறக்கிறார். இயக்குநர் நிமிர்ந்து நிற்கிறார். கூடவே நாமும்தாம்.

தலைவியின் இறப்பு தமிழ்த் திரையுலகில் புதிது. தலைவியின் இறப்பு என்ற மரபு மீறல்தான் நிமிர்வுக்குக் காரணம். தவிர, ஒரு தலைவி இறந்தால் மற்றொருத்தி என்ற வகையில் இருக்கும். நாம் நினைத்தது போன்றே மற்றொரு தலைவியும் வருகின்றாள்.

பிறகு எதிர்கூட்டத் தலைவனைக் கண்டறிந்து அவனக்கு தனது முதலாளியே துணை என்பதை அறிகிறான் தலைவன். எதிரிகளைப் பந்தாடி இறுதியில் வெல்கிறான் தலைவன். சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை, அதன் பின்னணியில் வெடிமருந்து தவறாகக் கடத்தப்படுதல் என்பதன் அடிப்படையில் கதை பின்னப்பட்டிருப்பது புதிது. மலையன் பழிவாங்குதலின் மற்றொரு கட்டம்.

காதல் கதை:
திரைப்படம் தொடங்கி சில மணித்துளிகளுக்கு இசை மட்டுமே பேசுகிறது. பிறகு இயக்குநர் பேசிக்கொண்டே இருக்கிறார். திரைக்கதை சரியான விரிவுரை. பேசாமல் ஒரு நேர்காணலில் தனது கருத்துக்களைக் கொட்டியிருக்கலாம் இயக்குநர். இதற்காக இப்படியொரு படமெடுக்க வேண்டுமா?

சிற்சில இடங்களில் இயல்பான தமிழ் உரையாடல்கள் காதை வருடுகின்றன. மற்றபடி எல்லாம் பழகிய காட்சிகள்தாம்.

பெண்களை இழிவு படுத்தக்கூடாது என்பதற்காக பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளா! என்னே கொடுமை!! படவெளியீட்டினைத் தணிக்கைக் குழு தள்ளிப்போட்டதற்கு இதுதான் காரணம் போலும்.

இவ்வளவு முரண்பாடுகள் இருப்பினும் படத்தை நம்மைப் பொறுமையாகப் பார்க்க வைப்பது படத்தின் பின்னணி இசை மட்டுமே என்பதில் துளியும் ஐயமில்லை.

பெருமாள்:
வன்முறைக்காட்சிகள், சிலபாடல்கள், நகைச்சுவைகள் நிறைந்த கதையுடைத்தலைவனின் அடுத்த படம். இரண்டு தலைவிகள். பிறகென்ன ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம்தான். உருப்படியான செய்தி ஏதாவது உலகுக்கு? ஒன்றுமேயில்லை. படத்தில் உருப்படியான ஒரே ஒரு கலை ஒளிஓவியமே. வேறொன்றும் மெச்சத்தக்கதாக இல்லை. நேரம் வீண்.

படம் தொடங்கி ப‌ல நேரங்களுக்கு தேவையற்ற காட்சிகள் இப்பொழுதெல்லாம் வருவது தமிழ்த்திரையுலகில் பொதுவாகிவிட்டது. கதை தொடங்கவே சில நேரம் பிடிப்பது ஏன் என்றே புரியவில்லை. இதைப்படிக்கும் இயக்குநர்கள் இனிமேலாவது கதை நகராக் காட்சிகளை விடுத்து நல்ல காட்சிகளைப் பிடிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.

மலை மலை:

இயக்குனருக்கு இது அடுத்த படம். பாசமான அண்ணன் தம்பி, பழிவாங்கல்கள், நடனம் மட்டுமே ஆடத்தெரிந்த‌ கதையுடைத்தலைவி என‌ எல்லாமே பழையவை. தலைவனின் அண்ணனும், எதிரி தலைவனும் பள்ளி நண்பர்கள் என்பது புதிது என்று படத்தில் அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்.

பொதுவான நிகழ்வுக்கோர்வைகளை நகைச்சுவை புகுத்தி வணிக நோக்குடன் எடுத்திருக்கும் படத்தில் வேறு சுவைகளை எதிர்பார்ப்பது நம் தவறுதான்.
இறப்பதை மறைத்து திருமணம் செய்வது ஏற்கனவே செந்தூரப்பாண்டி, ஆகா போன்ற படங்களில் வந்துவிட்டதால் உச்சகாட்சியினையும் சுவைக்க முடியவில்லை. அடுத்து நடப்பது என்ன என்பது முன்கூட்டியே தெரிவதால் எல்லாம் ஏமாற்றமே. நகைச்சுவையும் சற்றுதான் கைகொடுத்திருக்கிறது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

ஃபனா வடமொழிப்படத் திறனாய்வு


இந்த வடமொழிப்படம் ஒரு அச்சுறுத்தற்காரனின் காதல், பாச குடும்ப‌ உணர்வுகளை வெளிப்படுத்துவதாக உணர்த்துகிறது.

சில காட்சிகளில் மட்டும் கண் தெரியாத காதலியாக வரும் தலைவியை இவ்வளவு அழகாகக் காட்டுகிறார்கள். கண் தெரியாத பெண்கள் இயல்பில் இவ்வளவு அழகாக இருப்பதில்லை என்ற உணர்வு நம்முள் திரைப்பட உணர்வினை ஊட்டிவிடுகிறது.

தலைவன் தலைவி பிரிவு, உள்ளக்கசப்புக்கள், பிறகு இணைவு என்ற கட்டுக்குள்ளேயே படம் இயங்குகிறது.நல்லது. தேவையற்ற குத்துப்பாடல்கள் இல்லை. இசை காதை வருடுகிறது. பின்னணி இசையும் அருமை.

அச்சுறுத்தற்காரனாக வந்த போதும் தன் காதலியினை சுடமுடியாமல் தவிக்கும் தவிப்பு, அவளது கையாலேயே இறக்கும் உச்சகாட்சி ஆகியவைகளில் தலைவன் மதிப்பெண் பெற்றுவிடுகிறார்.

தலைவனைச் சிறு தொடு உணர்வு மூலம் அறிந்தாலும் அதைக்காட்டாமல் இருந்து தவிப்பது, மகனுக்கு பழைய கதைகள் தெரியாமல் வளர்ப்பது சரியாகச் செய்திருக்கிறாள் தலைவி.

குறிப்பிட்ட சில பாத்திரங்களுக்குள்ளேயே நிகழும் கதை ஒரு நல்ல படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை.

சனி, 5 செப்டம்பர், 2009

சில திரைப்படத் திறனாய்வுகள்


இக்கட்டுரையில் சில திங்கட்களுக்கு முன் வந்த சில திரைப்படங்களைப் பற்றிக்காணலாம்.

முத்திரை:

இரண்டு திருடர்கள்தாம் படத்தின் தலைவர்கள். ஒரு தலைவி ஆட்டக்காரி. இன்னொரு தலைவி உயர்தரக் கல்லூரி மாணவி. பிறகென்ன திருட்டுக்கள், துரத்தல்கள் என படம் சூடு பிடிக்கிறது. 1993ல் வந்த திருடா திருடாவைத்தான் துப்புரவாக்கியிருக்கிறார்கள்.

ஒட்டாக அரசியல் கலவை வேறு. படத்தின் முதன்மை அணிகள் இசையும்,ஒளிப்பதிவும் தாம். இசையமைப்பாளரும், ஒளிக்கருவியாளரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள். தலைவிகள் நன்றாக ஆடுகிறார்கள். மற்றபடி நடிப்பு கேள்விக்குறிதான்.

படத்திற்கு ஏன் இப்படித் தலைப்பு வைத்தார்களோ தெரியவில்லை.

வக்ரம்:


வடமொழியிலிருந்து ஒலிமாற்று செய்யப்பட்டு தமிழுக்கு வந்திருக்கும் இப்படம் இசை மூலமும் காட்சிகள் மூலமும் ஓரளவு சுவைஞர்களுக்கு அச்சம் தருவது உண்மைதான்.

படத்தில் கலைஞர்கள் பேசுவதைவிட பின்னணி இசையும், ஒளிப்பதிவுக்கருவியும் பேசுவதுதான் அதிகம்.

எல்லாம் சரிதான். என்னதான் சொல்ல வருகின்றார்கள் என்று பார்த்தால்....
தனிக்காட்டில் ஒரே ஒரு வீடு. அதில் தலைவி தன் இரண்டு குழந்தைகள், ஒரு தம்பியுடன் வசிக்கிறார். கணவனான தலைவனுடன் பூசல். அவன் அவளுடன் வசிக்கவில்லை.ஒரு ஊர்தி மட்டுமே ஒரு நேரத்தில் செல்லக்கூடிய குறுகலான பாலம் மூலமே வீட்டிற்குச் செல்ல முடியும்.

எதிர்பாராத அச்சங்கள் தலைவிக்கு மட்டும் அவ்வீட்டில் நிகழ்கின்றன.மற்றெல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்.

தானாகவே வந்து ஒரு கிழவி கொடுக்கும் திருமொழி வில்லையை வேறொருவருக்கு விற்று பணமாக்கி விடுகிறாள் தலைவி. சற்று நேரத்திற்கெல்லாம், அக்கிழவி ஒரு காட்டில் இறந்துகிடப்பதைப் பார்த்து அச்சுறுகிறாள் தலைவி. யாரோ (ஆவி) வந்து தன்னை வன்புணர்ந்ததாக தோழியிடம் கூற, அவள் கூறும் மருத்துவரை அணுகுகிறாள் தலைவி.

மருத்துவர் தலைவிக்கு இரட்டை ஆளுமை நோய் இருக்கிறது என்று கூறுகிறார். அதை தலைவி நம்ப மறுக்கிறாள்.

ஒருநாள் அந்தத்திருமொழி வில்லையை வாங்கியபெண் அதைத்திரும்ப தலைவியிடம் கொடுத்து விடுகிறாள். அவள் ஒரு திபெத்திய கிழவியால் துன்புறுத்தப்பட்டதாகவும், அக்கிழவி வந்து அவ்வில்லையைத் திரும்பக் கொடுக்க வேண்டுமென்று சொன்னதாகவும் தலைவியிடம் சொல்கிறாள்.

பிறகு வில்லையை எடுத்துக்கொள்ள ஆவி அவளை விடுத்து அவளது பிள்ளைகளுக்குத் தொல்லை கொடுக்கிறது. பிறகு எப்படி தலைவி தன் குழந்தைகளை மீட்கிறாள் என்பதே கதை. ஒலியுடனும், ஒளியுடனும் அச்சுற விரும்பினால் படம் பார்க்கலாம். மற்றபடி பாடல்கள் இல்லாதது ஒரு குறை. காதில் பூ சுற்றும் இக்கதை ஆமை விரைவில் செல்வது மற்றொரு குறை.

ஊர்தி தானாக ஓடுதல், கட்டில் தானாக அசைதல், ஆவி வன்புணர்ச்சி என பற்பல காட்சிகள் படத்தில். கணினி வரைகலைக்கு நன்றி.

மோதி விளையாடு:


உயரிய நிறுவனங்களின் பின்னணியில் நடக்கும் க‌தை தமிழுக்கு புதிதே. அதை எடுத்த விதமும் கூட சராசரிக்கு சற்றே மேல் எனலாம். ஆனால் அதற்குரிய கலைஞர்கள் சரிவர தேர்வு செய்யப்படவில்லை.

எடுத்துக்காட்டாக வெளிநாடு வாழ் இந்தியராக கலாபவன் மணி; தாங்கமுடியவில்லை. விரைவாகச் செல்ல வேண்டிய காட்சிகளில் சந்தானம் நுழைந்து சிரிப்பு மூட்டிவிடுகிறார். கன்னடம் தோய்ந்த தமிழில் பேசுகிறார் படத்தின் தலைவர்.

இசை நல்ல வகை. பின்னணி இசையிலும் அருமையாக புத்திசையமைப்பாளர்கள் வலம் வருகிறார்கள். இது பற்றி தனியாகவே திறனாயலாம்.

வைரமுத்து வரிகளில் "புலி பாலுத்தி டீப்போடடா..." சுவைபட இருக்கிறது.

வேறென்ன இயக்குனர் சுவைஞர்களோடு மோதிவிளையாடுகிறார்.

அச்சமுண்டு அச்சமுண்டு:


திரைக்கதையின் போக்கில் குழந்தைக்குக் கூட அச்சமுள்ள காட்சி ஒன்றுமில்லை. ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல் என்று அப்பட்டமாகத் தெரிகிறது.

நல்ல திறமையான கலைஞர்களை வைத்துக்கொண்டு இதுபோன்ற ஒரு படம் என்று நினைக்கும் பொழுது இன்னும் ஏதேனும் படக்குழுவினர் மெனக்கெட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

அயல் நாட்டினை சராசரியாக படமெடுத்திருக்கிறது ஒளிப்பதிவுக்கருவி. பாடல்கள் அரிதான இலங்கை வானொலியில் மட்டுமே ஒலிக்க நேரலாம்.


இந்த குறைந்த முதலீட்டுப்படத்தில் அச்சமேயில்லை.

ஐந்தாம்படை:



ஒரு வேறுபாட்டிற்காக கதையினைப்பற்றித் திறனாயாமல் தொழிற்நுட்பங்களைப் பற்றி திறனாய விழைகிறேன். ஏனெனில் கதை என்ற ஒன்று சரிவர கையாளப்படவில்லை. இருந்தாலும் மருத்துக்கென்று கதையையும் தொட்டுக்கொள்கிறேன்.

தலைவனுக்கும் தலைவிக்கும் நடக்கும் உறவுப்போராட்டமே இந்த ஐந்தாம்படை. ஒற்றன் என்ற சொல்லுக்கு பெண்பால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இங்கே ஒற்றன் இல்லை. பெண் ஒற்றர் இருக்கிறார். அவர்தான் கதையுடைத்தலைவி. அவர் தலைவனின் திட்டங்களை எதிரிகளுக்குச் சொல்ல அதை தலைவன் தெரிந்து முறியடிப்பதே கதை.

வேறு புதிய நுட்பங்கள் எதுவும் கையாளப்படவில்லை. சில இடங்களில் கற்றுக்குட்டி கணினி வல்லுநர்களின் வரைகலை வெறுமையாய் வருகிறது.

கதையுடைத்தலைவன் நடித்த அடுத்தபடம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கருத்தினைச் செலுத்தியிருக்கலாம். நகைச்சுவை நடிகரே பல இடங்களில் கோலோச்சுகிறார்.

கதை திருநெல்வேலியில் நடக்கிறதாம்.குறித்த நகைச்சுவைக்கலைஞர் தவிர வேறுமுன்னணி கலைஞர்கள் யாரும் அந்த வட்டார வழக்கு பேசவில்லை.

இசை,ஒளிப்பதிவு எல்லாம் ஏனோ தானோ. உச்சக்காட்சியில் சற்றே நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். ஏதேனும் புதிது என்று பார்த்தால், அதே நகைச்சுவை வர வணக்கம் வருகிறது.

இயக்குனர் சுந்தர்.சி, நடிகர் சரத்குமார் இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்துவிட்டதாக திரைவிரும்பிகள் கூறுகிறார்கள்.

வெடிகுண்டு முருகேசன்:


"தப தப" வென்று பேசும் பாத்திரம் தலைவனுக்கு. அவரும் பேசிக்கொண்டே இருக்கிறார். நடனத்தில் நல்ல தேர்ச்சி. தலைவி வருகிறார், அழுகிறார், சிரிக்கிறார். நடிப்பு இப்போதுதான் கற்றுக்கொண்டிருக்கிறார்.

எந்தப் புதிய‌ தொழிற்நுட்பமும், கதை சொல்லும் விதமும் இல்லாத மற்றொரு படம். இயக்குனருக்கு இது இன்னொரு படமாம்.

பெண் நடுவராக வந்து பசுபதியைக் காப்பாற்றும் செய்திவாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி சிற்சில காட்சிகளில் வந்து போகிறார்.

சராசரிக்கும் சற்றுக் கீழான ஒளிப்பதிவு கருவிக் கோணங்களில் ஒரே ஆறுதல் மூன்றே பாடல்கள் மட்டும்தாம்.

"நீண்ட தூரம் போகும் பாதை..."
"சாரலே சாரலே...."
முணுமுணுக்கும் வகை. நீண்ட இடைவெளிக்குப்பின் K.J.Yesudas தமிழில் பாடியிருக்கிறார்.

பார்த்திபன் இடத்தை பசுபதி பிடித்து விட்டதாக அவர் வடிவேலுவிடம் பேசும் உரையாடல்களை வைத்துச் சொல்கின்றனர் திரைவிரும்பிகள்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

முத்திரைப்படத் திறனாய்வு

யாவரும் நலம்

பல நாட்களுக்குப்பின் குடும்பத்தோடு பார்க்க வந்திருக்கும் ஒரு படம்.குடும்பத்தோடு பார்க்க விழைவதானால் சில பிழைகளைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். எடுத்துக்காட்டுகள்: தொலைகாட்சிக்கு பேய் பிடிப்பது,தொலைக்காட்சி திட்டுவது போன்றவை.

கதையுடைத்தலைவன்1 நன்றாக நடித்திருக்கிறார். பாடல் இசையினைவிட பின்னணி இசை படத்திற்கு மெருகளிக்கிறது. இருமொழிகளில்2 வந்திருக்கும் இப்படம், மக்களை அச்சுறுத்தி மகிழ்விக்கும் திரைக்கதையுடையது.

பலதிருப்பங்களோடு வரும் திரைக்கதை மூளையுடைய சுவைஞர்களையும் நிமிர்ந்து அமரவைக்கும். படத்தின் முதன்மை ஊக்கிகள்: திரைக்கதை,கதையுடைத்தலைவன் நடிப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை. நல்ல படம்;குடும்பத்தாரோடு சேர்ந்து அச்சுரலாம்.

தலைவன் தவிர மற்றவர்களுக்கு3 நடிக்கும் வாய்ப்புக் குறைவே.

வாரணம் ஆயிரம்

படத்தின் இயக்குனர்4 தனது தொடர்புடைய இசையமைப்பாளரோடு5 பூசல் கொண்டு எடுத்திருக்கும் படம். அவரது முந்தைய படங்களோடு6ஒப்பிடும்பொழுது சரியான இழுவைதான் இப்படம். இசையமைப்பாளர் பூசல்கொண்டிருப்பினும், இசையில் அதைக்காட்டவில்லை.

படத்தைத் தூக்கி நிறுத்துபவை கதையுடைத்தலைவரின்7 நடிப்பு, இசை, பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவை. தள்ளிவிடுபவை இயக்குனரின் திரைக்கதை,நெறியாள்கை, ஆங்கில உரையாடல்கள். இயக்குனர் தான் படித்த கல்லூரியினையே8 கதையில் கதையுடைத்தலைவன் படித்ததாகக் கூற பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ்ப்பெயர்களயே இதுவரை தன் கதைமாந்தர்களுக்குச்9 சூட்டிவந்த இயக்குனர் ஆங்கில வெறியுடன் செயற்பட்டிருப்பது என் போன்ற தமிழ் விரும்பிகளுக்கு வருந்தமளிக்கிறது.

மூன்று கதையுடைத்தலைவிகளில்10 இறந்து போபவர்11 பதுமை போல வந்து இரவல் குரலில்12 உரையாடுகிறார். நடனம் செய்கிறார். ஆனால் நடிப்பு, அது மட்டும் கேள்விக்குறியாகி விடுகிறது. இவர் அகவையிலும், உயரத்திலும் கதையுடைத்தலைவனைவிட அதிகமாகவே இருப்பதால், இவர்களிடையேயான வேதியியல்13 பரிமளிக்கவில்லை.

தலைவனின் அம்மாவாக முன்னாள் தலைவி14 இவரும் சற்று நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். மற்றபடி தலைவனுக்கு முதன்மைதரும் இக்கதையில் இவருக்கு அவ்வளவாக வேலையில்லை. படம் முழுக்க ஆங்கில உரையாடலை பரப்பிவிட்டு, படத்தின் இறுதியில் தலைப்புக்கு விளக்கம் தருவது தமிழன்னைக்கு இழுக்கு.


சக்கரக்கட்டி

இரஃமான் இந்தியாவின் முதன்மை இசையமைப்பாளர். உலகின் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். எவ்வளவு நொந்து கொண்டு இப்படத்திற்கு இசையமைத்திருப்பாரோ தெரியவில்லை. குறுவட்டிலேயே இப்படத்தினைப் பார்க்க இயலவில்லை. பழையகாலத்து முக்கோணக்காதல் கதைதான்.தயாரிப்பாளரின் பணத்தினை வீணாக்க வந்திருக்கும் படம். படத்தின் இயக்குனர்15படம் எடுத்துப்பழகிக் கொண்டிருக்கிறார்.

கதையுடைத்தலைவனாகக் காட்டப்படுபவர்16 ஆங்கில வழி17 கல்வி கற்றவர் போலும். தமிழே பேசத் தெரியவில்லை. படம் முழுக்க ஆங்கில வெறி இழையோடிக் காணப்படுகிறது. ஒருதலையாகக் காதலிக்கும் தலைவிக்கு18இரவல் குரல் கொடுத்திருப்பவர் குரல்19 அவ்வளவு சரிவர பொருந்தவில்லை.படத்தின் உருப்படியான ஒரேசெய்தி இசையமைப்பாளர் இரஃகுமான் மட்டுமே.


1மாதவன்

2தமிழ், வடமொழி

3தலைவி நீது சந்திரா(பின்னணிக்குரல் சின்மயி)

4கௌதம் வாசுதேவ் மேனன்

5ஹாரிஸ் ஜெயராஜ்

6காக்க காக்க, வேட்டையாடு விளையாடு

7சூர்யா

8திருச்சி மூகாம்பிகை கல்லூரி, மெக்கானிகல் இன்ஞினியரிங்

9காக்க காக்க - அன்புச்செல்வன், பாண்டியா, வேட்டையாடு விளையாடு-கயல்விழி

10சிம்ரன்,சமீரா ரெட்டி,திவ்ய ஸ்பந்தனா

11சமீரா ரெட்டி

12பின்னணிப்பாடகி சின்மயி

13Chemistry

14சிம்ரன் (குரல் தீபா வெங்கட்)

15கலாபிரபு

16சாந்தனு பாக்யராஜ்

17English Medium

18வேதிகா

19பின்னணிப்பாடகி சின்மயி

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

யுவராஜ் - வடமொழிப் படத்திறனாய்வு

படத்தில் மூன்று கதையுடைத்தலைவர்கள். ஒன்று இசையமைப்பாளர் இரஃமான்; இரண்டு கலை இயக்குனர்; மூன்று ஒளிப்பதிவாளர். இவர்கள்தாம் படத்தினைத் தூக்கி நிறுத்துகின்றார்கள். கதை என்ன? அதுபற்றிக் கேட்கக்கூடாது. திரைக்கதை? கதை பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம் ஆனால், இதைப்பற்றிக் கேட்கவே கூடாது.

காதல், உரிமைநிலம் பணம் விரிசல்கள், இசைப்பயணம் என முப்புரவிகளில் படம் பயணிக்கிறது. முதலிரு புரவிகளுக்கு கால்கள் கிடையாது. மூன்றாவது புரவியினை மட்டும் நம்பிப் படம் எடுத்ததால், படம் சில நாட்களுக்குள்ளேயே பெட்டிக்குள் புகுந்துவிட்டது.

தனது இசைப்பேரரசினை இப்படத்திலும் திறம்பட நிறுவியிருக்கிறார் இரஃமான். காதல் பாடல்கள்1 தேன். பிறபாடல்கள்2 வெயிலுக்கு இதமான மோர்.

அனில்கப்பூர் இசைக்கிறுக்கனாக வருகிறார். கொடுத்த பணத்திற்கு மேல் நடித்திருக்கிறார்3. படத்தில் அதிகமாக வரும் சல்மான், காத்ரீனா போன்றவர்கள் நல்ல நடிப்புப்பள்ளியில் நடிப்பு கற்றுக்கொண்டால் நல்லது. குறிப்பாக சல்மானின் நடிப்பு ஒத்திகை4 பார்ப்பது போன்றே இருக்கின்றது. பாடல்களுக்கும் நல்ல முறையில் வாயசைக்கவில்லை. குறிப்பாக உச்சக்காட்சியில் வரும் பாடல்.

படத்தில் வரும் இடங்கள், ஒளிப்பதிவு, இசை அனைத்துமே புதுமை. ஆனால் படம் எடுத்த விதம், நடிகர்கள் நடிப்பு எல்லாமே பழமை. பாடல்களை மட்டும் காணொளியாக5 குறுவட்டு வாங்கியோ, இணையிறக்கம் செய்தோ காணலாம். தயவுசெய்து படம் பார்த்துவிடாதீர்கள்.

1 Aja meri, Muskura

2 Mustam, Shano

3 Overacting

4 Rehaushal

5 Video DVD

புதன், 4 பிப்ரவரி, 2009

திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை - ஒரு பார்வை

திருவண்ணாமலை

அடங்கவே அடங்காத பேரரசு எடுத்திருக்கும் அடுத்த படம். இதிலும் அடங்கவேயில்லை. நாம்தான் படம் பார்த்து அடங்க வேண்டியிருக்கிறது.

என்ன நினைத்துத்தான் படம் எடுத்தார்களோ தெரியவில்லை. இயக்குனர் சிகரத்தின்1 நிறுவனத்திலிருந்து இப்படியொரு படமா தலைவலிதான். நாயகனின்2 தாய்மொழி கன்னடம். எனவே கன்னட ஒட்டாக நாயகி3. ஆடுகிறார். வாயசைக்கிறார். ஆனால் நடிப்பு. ?? நாயகன் இருவழிகளில்4 வருகிறார். இருவர் என்றால் எப்போதும் வரும் மறுகாட்டுதலை5 இப்படத்தில் வைக்கவில்லை. அதற்கு பாராட்ட நினைத்தாலும், அடுத்தடுத்து வரும் கிறுக்குத்தனங்களைப் பார்க்கும் பொழுது அவ்வாறு செய்யத் தோன்றவில்லை.

எல்லாப்படத்திலும் வருவது போலும் இதிலும் வந்து படுத்துகிறார் பேரரசு6. ஒரு நாயகன்7 அமைதியாயிருப்பார் என்று நினைத்தால், அவரும் அடிக்கிறார். என்னதான் சொல்ல வருகிறார்களோ?? இசையமைப்பாளர்8 எப்பொழுதும் போல் இசைபழகி வருகிறார்.

சிரிப்பு நடிகரை9 அடித்தே கொல்கிறார்கள். அவரை அடிக்கும்பொழுது வரும் கூட்டம் நாயகனையோ, எதிர் நாயகனையோ அடிக்கும் பொழுது வருவதில்லை. ஒவ்வொருவராக வந்து அடி வாங்கிச் செல்கின்றனர். எல்லாரும் உரக்க ஒரு முறை சிரியுங்கள். பேரரசு படம் எடுத்திருக்கிறார்.

1கவிதாலயா

2அர்ஜீன்

3பூஜா காந்தி

4Dual role

5Flash back

6சுவாமி மலை என்னும் மருத்துவர்

7இறைய‌டியவர்

8இற்றீகாந்த் தேவா என சொல்லவும் வேண்டுமோ

9கருணாசு

திண்டுக்கல் சாரதி:

இதுவரை நகைச்சுவையாளனாக இருந்தவர்1 நாயகனாகி இருக்கும் முதல் படம். இவரது நடிப்பு பரவாயில்லை வகை. அவரது குரலில் இன்னும் தேர்ச்சி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றெண்ணத்தோன்றுகிறது.
மலையாளத்தில் எப்பொழுதோ வந்த கதையினை தட்டி எடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி2 விளம்பர முலாம் பூசித்தந்திருக்கிறார்கள். நாயகி3 நல்ல குண்டாக இருக்கிறார். நாயகனைத் தூக்கி ஆடுகிறார்.

பல நகைச்சுவையாளர்களை4த் திரையில் சந்தித்தவர்கள் நாம். ஆகவே இப்படம் அப்படியொன்றும் பெரிய சிரிப்பினை வரவழைக்கவில்லை என்பது சற்று கவலைக்குரிய செய்திதான். ஒரு குடும்பப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

தாழ்வு மனப்பான்மையில் வாடும் ஒரு மனிதனின் கதையினை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள். அதுவும் ஓரளவு எடுபட்டிருக்கிறது. மொத்தத்தில் திண்டுக்கல் சாரதி சற்றே சுணக்கத்தோடு நகைச்சுவை தருபவன்.

1கருணாசு

2Sun TV

3கார்த்திகா

4என்.எஸ்.கே,கிரேசிமோகன், கமலஹாசன்,நாகேசு,கௌண்டமணி,வடிவேலு

பதிவிறக்கம் செய்ய: http://pnaprasanna.blog.co.in/files/2009/02/thiruvanna.pdf