ஞாயிறு, 11 ஜூன், 2017

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
பாடல்: யுகபாரதி
குரல்: பிரதீப் குமார்
இசை: டி.இமான்

திரும்பத் திரும்ப இந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
பிரதீப் குமார், இமான் இசையில் பாடும் இரண்டாவது பாடல் இது.
இமான் இசையில் முதல் பாடல் மாவீரன் கிட்டு படத்தில் ‍- உயிரெல்லாம் ஒன்றே. (https://www.youtube.com/watch?v=Y2no5nz4tdU)
திரையில் முதல் பாடல் எந்திரன் படத்தில் அடுக்கிசையும் (Rap), கரைநாட்டு இசையும் சேர்ந்து வரும் எந்திரன் பூம் பூம் ரோபோ... இசை. (https://www.youtube.com/watch?v=75MVKtnOLlQ)  இதில் கரை நாட்டு இசையை மட்டும் பாடியவர்.
ஐந்து அகவை முதலே இசை கற்று வரும் பிரதீப் குமார், தன் கரைநாட்டு இசைக் குரலில் அருமையாகப் பாடியுள்ளார்.
கண்ணியில் (சரணத்தில்) வெளிச்சம் படத்தில் மனோஜ் கியான் இசையில் வரும் துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே பாட்டில் வரும் அதே சாயலில் வந்தாலும்,(பூமி என்னும் பெண்ணும்...) இமான் தன் இசையால் தூக்கி நிறுத்துகிறார். (https://www.youtube.com/watch?v=GyJlJXiS8u4)
கேட்க எளிமையாக இருப்பினும், எளிமையாக இப்பாடலைப் பாட முடியது. அதற்குக் காரணம் பிரதீபின் குரல் மிகுதியான அணுக்கங்களை பாடல் முழுக்க அள்ளி இரைத்திருப்பதுதான்.
கண்ணி முடிந்து, எடுப்பு (பல்லவி) தொடங்கும் இடத்தில், இணைப்புக்காக கலவை  (mix) செய்திருப்பது இமானின் நடை. அங்கு மட்டும் பிரதீப் குரலோடு சேர்த்து இமானின் குரலும் ஒலிக்கிறது. முதல் கண்ணிக்கு முன்னால் வரும், இமானின் குரல் இன்னொரு சிறப்பு. பிரதீப்பின் தனிக்குரலுக்காக இனி வரும் இசை நிகழ்ச்சிகளில் மேடைகளில் பாடப்படக்கூடிய பாடலாகவும் இஃது இருக்கலாம்.

சனி, 3 ஜூன், 2017

கண்ணீர் அஞ்சலி

கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் மறைவிற்கு தமிழ் எக்காளத்தின் இரங்கல்.

உருது என் தாய். தமிழ் என் காதலி என்று முழங்கியவர்.

காலம் யாரையும் விட்டு வைப்பதில்லை. கவிக்கோவை அகவை எணபதில் அழைத்துக் கொண்டது.

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

தமிழறிவோம்

புதன், 22 பிப்ரவரி, 2017

தருணக்கவிதை

இணையத்தில் உலாவரும் ஒரு தருணக்கவிதை. படைப்பு யாருடையதோ தெரியவில்லை. கண்டதில் கவர்ந்தது; பகிர்கிறேன்.

செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது..
 
உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!
 
வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!
 
ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!
 
அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!
 
நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!
 
காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!
 
காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!