
திருவண்ணாமலை
அடங்கவே அடங்காத பேரரசு எடுத்திருக்கும் அடுத்த படம். இதிலும் அடங்கவேயில்லை. நாம்தான் படம் பார்த்து அடங்க வேண்டியிருக்கிறது.
என்ன நினைத்துத்தான் படம் எடுத்தார்களோ தெரியவில்லை. இயக்குனர் சிகரத்தின் நிறுவனத்திலிருந்து இப்படியொரு படமா தலைவலிதான். நாயகனின் தாய்மொழி கன்னடம். எனவே கன்னட ஒட்டாக நாயகி. ஆடுகிறார். வாயசைக்கிறார். ஆனால் நடிப்பு. ?? நாயகன் இருவழிகளில் வருகிறார். இருவர் என்றால் எப்போதும் வரும் மறுகாட்டுதலை இப்படத்தில் வைக்கவில்லை. அதற்கு பாராட்ட நினைத்தாலும், அடுத்தடுத்து வரும் கிறுக்குத்தனங்களைப் பார்க்கும் பொழுது அவ்வாறு செய்யத் தோன்றவில்லை.
எல்லாப்படத்திலும் வருவது போலும் இதிலும் வந்து படுத்துகிறார் பேரரசு. ஒரு நாயகன் அமைதியாயிருப்பார் என்று நினைத்தால், அவரும் அடிக்கிறார். என்னதான் சொல்ல வருகிறார்களோ?? இசையமைப்பாளர் எப்பொழுதும் போல் இசைபழகி வருகிறார்.
சிரிப்பு நடிகரை அடித்தே கொல்கிறார்கள். அவரை அடிக்கும்பொழுது வரும் கூட்டம் நாயகனையோ, எதிர் நாயகனையோ அடிக்கும் பொழுது வருவதில்லை. ஒவ்வொருவராக வந்து அடி வாங்கிச் செல்கின்றனர். எல்லாரும் உரக்க ஒரு முறை சிரியுங்கள். பேரரசு படம் எடுத்திருக்கிறார்.
கவிதாலயா

திண்டுக்கல் சாரதி:
இதுவரை நகைச்சுவையாளனாக இருந்தவர் நாயகனாகி இருக்கும் முதல் படம். இவரது நடிப்பு பரவாயில்லை வகை. அவரது குரலில் இன்னும் தேர்ச்சி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றெண்ணத்தோன்றுகிறது.
மலையாளத்தில் எப்பொழுதோ வந்த கதையினை தட்டி எடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி விளம்பர முலாம் பூசித்தந்திருக்கிறார்கள். நாயகி நல்ல குண்டாக இருக்கிறார். நாயகனைத் தூக்கி ஆடுகிறார்.
பல நகைச்சுவையாளர்களைத் திரையில் சந்தித்தவர்கள் நாம். ஆகவே இப்படம் அப்படியொன்றும் பெரிய சிரிப்பினை வரவழைக்கவில்லை என்பது சற்று கவலைக்குரிய செய்திதான். ஒரு குடும்பப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.
தாழ்வு மனப்பான்மையில் வாடும் ஒரு மனிதனின் கதையினை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள். அதுவும் ஓரளவு எடுபட்டிருக்கிறது. மொத்தத்தில் திண்டுக்கல் சாரதி சற்றே சுணக்கத்தோடு நகைச்சுவை தருபவன்.