வெள்ளி, 12 ஜூன், 2009

ஈழம் இலங்கைச் சிக்கலுக்கான இறுதித்தீர்வு

சென்ற பதிவு ஈழம் பற்றியமையமையால் கூடுதல் பெயர் கிடைத்தது. இணைய நண்பர் செயபாலும், சவுக்கடி என்ற பெயரில் பெயர் தெரிவிக்க விரும்பாதவரும் (மறுமொழி தெரிவிக்க மட்டுமே, புதிய பதிவு தொடங்கினார் போலும்... பதிவுகள், மின்னஞ்சல் முகவரி எதுவுமில்லை.) பதிவினைச் சற்றே சாடியிருந்தனர். மற்றவர் பாராட்டியிருந்தனர்.

செயபால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழீழம் இருந்ததற்கு பொன்னியின் செல்வனை உதவிக்கு அழைத்து மிக்க மரியாதையுடன் மின்னஞ்சல் செய்திருந்தார். நன்றிகள். நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போன்று எனது பதிவானது ஒரு சாளரவழிப் பார்வையே. பூசலுக்குரியதன்று.

ஏன் தனி ஈழம் கிடைக்கவில்லை?

1.   ஈழத்திலிருந்து அதற்காக போரிடுபவர்களின் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தன்னலமிக்கவர்கள்தாம்.

2.   மற்றவர்கள் வெளிநாட்டில் முன்பு அகதிகளாகக் குடியேறி இன்று செயற்கைக் கோள்களில் தொப்புள் நடனம் பார்க்கும் அளவுக்கு முன்னேறியிருப்பவர்கள். இவர்களால் இணையத்தில் அலுவலக ஓய்வு நேரத்தில் பதிவுகள் எழுத முடியுமே தவிர வேறொன்றும் பயனில்லை. இவர்களில் பெரும்பாலும், வல்லரசிலும், ஆசுத்திரேலியாவிலும், வளைகுடா நாடுகளிலும் இருப்பவர்கள்.

3.   மீதியிருப்பவர்கள் இச்சிக்கலைவைத்து அரசியல் செய்யும் சராசரி அரசியல் தலைவர்கள்.

தமிழீழத்தின் வரைபடத்தினைக் கூட இன்று நாம் தேடுபொறிகளில்தாம் பார்க்க வேண்டியிருக்கிறது. பிறகு எப்படி தமிழீழம் மலரும்?

ஏன் தனிநாடு வேண்டாம்?

காரணம் சிறியதுதான். நாட்டினை உடைப்பதும், சேர்ப்பதும் ஏறக்குறைய இயற்கை இறந்த நிகழ்வுகளுக்கு இணையானதுதாம். இதற்கு செக், சுலொவோக்கியா பிரிந்தது. கிழக்கு, மேற்கு செருமனிகள் இணைந்ததை மேற்கோள் காட்டலாம்.

இந்திய வரைபடத்தில் கூட இன்றும் இருக்கும் சில கசுமீரின் வரம்பெல்லைகளில் பல‌ பாக்கித்தானுக்கு உரியவைகள்தாம். பண்டித நேருவின் உத்தரவுக்கு ஏற்ப இன்றும் நாம் விடுதலை இந்தியாவின் பழைய வரைபடத்தினையே பள்ளிகள் முதல் பயன்படுத்தி வருகின்றோம்.

கசுமீரில் இன்றும் விடுதலை இந்தியா (15.08.1947) விலைக்கே அரிசி, பருப்பு, நிலம் எல்லாம் கொடுத்து வருகின்றது இந்தியா. இந்தியாவிலிருந்து யாரும் கசுமீரில் சென்று நிலம் வாங்க முடியாது. ஆனால் அங்கிருந்து இந்தியா வந்தால் எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் வாங்கலாம்.

இந்த வசதிகளெல்லாம் நேரு இந்தியாவின் செல்லப்பிள்ளை கசுமீருக்கு, அது பிரிந்து போய்விடாமல் இருக்க கொடுத்தவைகள்தாம்.

மாநிலங்களில் நிலவரம்பு எடுத்துக்காட்டு:

திருப்பதியினை ஆந்திராவுக்கு கொடுத்துவிட்டு சென்னையை தன்னகத்தே வைத்துக்கொண்ட தமிழ்நாடு, உதகமண்டலத்தை கருநாட்டிலிருந்து[1] எடுத்துக்கொண்டது.

இவையெல்லாம், கால மாற்றத்திற்கு ஏற்ப மேலாண்மைக்காக ஏற்படுத்திக் கொண்ட வரம்பெல்லைப் பிரிவுகளே தவிர வேறொன்றுமில்லை.

"பழையன கழிதலும், புதியன புகுதலும்,

வழுவல கால வகையினானே."

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பவனந்தி முனிவர் சொன்னது நிகழ்ந்ததென கருதலாம்.

தமிழனும், சிங்களனும் இணைந்து வாழாமல், நாட்டைப் பிரித்தல் மென்மேலும் பூசல் வளர்க்கும். வேலுப்பிள்ளையின் பிள்ளை[2], நாட்டின் தேர்தலைப் புறக்கணித்தார். எனவே தமிழன் யாரும் தேர்தலில் நிற்காமல் அவனது உரிமை செத்தது.

இலங்கை‍ ஈழ உரிமை வளர்த்து, உறவை வளர்ப்பதே சிறந்தது. இல்லையேல் இது தீர்வறிய இயலா நிலையிலேயே இருக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பொன்னியின் செல்வன் கதையினை எழுதிய கல்கியே வடக்கேயிருந்து கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர் வழி அந்தணர் ஆவார்.

தனியீழம் என்று எண்ணாமல், சிங்களன், தமிழன் நல்லுறவு என எண்ண இச்சிக்கல் தீருமென்பது என் தாழ்மையான‌ கருத்து.


[1] உயர்ந்த மலைப்பகுதி என்று பொருள். அதுவே பின்னாளில் கர்நாடகா என்றானது.

[2] பிரபாகரன்

திங்கள், 8 ஜூன், 2009

ஈழம் இலங்கைச் சிக்கலுக்கான இறுதித்தீர்வு

ஈழம் இலங்கைச் சிக்கல் பற்றி எழுதலாமே என்று நண்பர் இற்றி கலியாண இராமன் மின்னஞ்சலில் இயம்பியமையால் இஃதினை எழுத விழைகின்றேன். இஃதினை என் சாளரவழிப்பார்வையாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, பூசலுக்காக எடுத்துக் கொள்ளக்கூடாது.

சிக்கலுக்கான தீர்வு நாட்டின் பெயரிலேயே இருக்கின்றது. அங்கே இராமன் காலத்திலிருந்து இலங்கை மட்டும்தான் இருக்கின்றது. ஈழம் கிடையாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக வேலுப்பிள்ளையின் பிள்ளை[1] போர் செய்து மட்டுமே தனி நாடு வாங்கி விட முடியாது.

எப்பொழுதுமே ஒரு செயற்பாடு காலந்தாழ்த்தியும் நிகழ்ந்து கொண்டிருந்தால் அஃது தன்னிலை திரிந்து பிறழ்ந்து விடுவது இயற்கையே. அவ்வகையில் இலங்கை ஈழ நிகழ்வு பல்லாண்டுகளாக நிகழ்வதால், நிலை பிறழ்ந்து அரசியலாயிற்று. அஃதினை இருந்திருந்தாற்போன்று கழகம் தொடங்கியவர்களெல்லாம் பயன்படுத்திக் கொண்டது உள்ளங்கை நெல்லிக்கனி.

அவ்வாறு அரசியலாக்கியவர்களெல்லாம், அதற்கான தீர்வறிவதில் ஈடுபாடு காட்டாமல், அதன் மூலம் அவர்களுக்கான வாக்கினைச் சேர்ப்பதிலேயே குறிக்கோளாயிருந்தார்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட போதும், அஃதினை பலர் சிரமேற்கொண்டார்கள். வேலுப்பிள்ளையின் பிள்ளையும், தனிநாடான ஈழம் பிரிப்பதிலிருந்து பிறழ்ந்து, தன்னைக் காத்துக்கொள்ள அப்பாவித் தமிழர்களைப் பயன்படுத்திக் கொண்டார்.

சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்ற முதனிலைக் குறிக்கோள் மறைந்து, தன்னுயிர்காக்க வேண்டும் என்ற இரண்டாந்நிலை குறிக்கோள் குறித்தவரின் உள்ளத்தில் நிலை கொண்டது. பிறகென்ன, உயிர்நீந்தது. முதனிலைக் குறிக்கோள் தகர்ந்தது.

ஒரு சிக்கலுக்கான தீர்வினை அங்கிருந்து ஓடிவிடாமல் காணவேண்டும். அதைச் சரியாக குறிப்பிட்டவர் செய்திருக்கிறார். அவ்வகையில் அவர் ஒரு சிறந்த தலைவரே. ஆனால் தீர்வானது இன்னும் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே.

தனிநாடு என்னும் கருத்தினையொழித்து, அங்கிருந்தே உரிமை பெறுதல் சிறப்பு. அதற்கு எடுத்துக்காட்டாக நம் இந்தியாவினைச் சொல்லலாம். எவ்வளவு பேரிடர்கள் வந்தாலும், தமிழ்நாடு இன்னும் இந்தியாவுடனேயே இருக்கின்றது.

பஞ்சாபில் சீக்கியர்கள் தனிநாடு கேட்கிறார்கள்; கசுமீரில் அச்சுறுதல்காரர்கள் தனிநாடு கேட்கிறார்கள். தமிழ்நாடு தவிர எங்கு சென்றாலும் தமிழன் ஒடுக்கப்படுகின்றான்; ஏமாற்றப்படுகின்றான். அதற்காக அவன் தனிநாடு கேட்டால் என்னாவது? சர்தார் வல்லபாய் படேல் என்ற இரும்பு மனிதர் இணைந்த இந்தியா உடைந்து விடும். அது முறையா?

இலங்கை ஈழம் சிக்கலுக்குத் தீர்வு தன்னலமில்லாத ஒரு தலைவர் இரும்பு மனிதராய்ப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தமிழனின் உரிமைகளை முறையாகப் பெற வேண்டும். அவ்வாறு பெற்று விட்டால் சிங்களனும் தமிழனும் கூடி வாழலாம்.

நாடுகளை இணைப்பது மிகவும் கடினம்தான். கிழக்கு மேற்கு செருமனிகள் 1990ல் இணைந்தன. அளப்பரிய நிகழ்வுதான். அஃது போல சிங்களமும் தமிழும் உறவாட, ஏதேனும் ஒரு தன்னலமில்லா இரும்பு மனிதர்[2] உதவ‌ உள்ளத்தில் நாடொறும் நினைப்போம். நினைவு ஒருநாள் நிகழ்வாகும். போலி அரசியலர் ஒழிய புதுவாழ்வு புலரும்.


[1] பிரபாகரன்

[2] அது நீங்களாகக் கூட இருக்கலாம்.