சனி, 28 பிப்ரவரி, 2009

பொய்ப்புலம்பல்

"அடச்சே இதுதானா?
இது எனக்குத் தெரியுமே.
இதப்போயி சொல்லையே.
இதப்பத்தி என் வலைப்பூவெல்லாம்
மணக்குதே. ஆனா
அப்ப மறந்துட்டேனே."

பொய்யாப் புலம்பினான்
நேர்காணலில் தோற்ற
மென்பொறி நிறைஞன்.

மெய்யான முத்தாய்ப்பு

ஒன்றின் கீழொன்றாய்
ஏதேதோ எழுதி
கழித்தேன் பொழுதினை
பணியில்லா இருப்பினை ஆற்ற‌;
எழுதி முடித்துப்
பார்த்தால் பிறந்தது
முத்தாய்ப்பில்லாத
முக்கால் கவிதை.

க‌விதைக்கு அணியே
முத்தாய்ப்புத்தான்
அஃதே இல்லையே
என் செய்வேன் யான்?
எழுதினேன் உன் பெய‌ரை.
"அம்மா"

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

நான் கடவுள் இரண்டாம் பகுதிக்கு ஆயத்தம் - இயக்குனர் பேரரசு


கோடம்பாக்கத்தில் ஒருபடம் வெற்றி பெற்று விட்டால் போதும், அதே நடையில் கதை செய்து காசு பார்க்க நினைப்பார்கள். அவ்வகையில் அண்மையில் "வில்லு"வில் கையைச் சுட்டுக்கொண்ட கதையுடைத்தலைவனும், "திருவண்ணாமலை" சரிவர செல்லாததில் இயக்குனர் பேரரசுவும் இணைந்து நான் கடவுளை தலைகீழ் செய்து ஒரு கதை செய்ய நினைக்கிறார்கள். இது நகைச்சுவைக்காக பின்னப்பட்ட கற்பனையே. பிறர் சிந்தை நோகச் செய்ய அல்ல.

நான் கடவுள் படத்தின் கதையினைச் சுட்டு[1] தன் நடையில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார் பேரரசு. படத்தின் கதையுடைத்தலைவன்[2] அமர்ந்து இயக்குனரை கண்ணுங்கருத்துமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

"தலைவரே இதுல அஞ்சு பாட்டு; எல்லாமே நான் தான் எழுதறேன். படத்துக்குப்பேரு வாரணாசி. சிவகாசி, திருப்பாச்சி வரிசையில இதுவும் கலக்கீடும்.”

"ஒங்களுக்கு இணையா[3] மூன்றெழுத்து நடிகை[4]யக் கேட்டிருக்கிறோம். இந்தப்படத்தோட முதல் பகுதி ஏற்கனவே எடுத்துட்டதால இத நாம நகைச்சுவையா பண்றோம்.”

"எடுத்த ஒடனே நீங்க ஒத்தக்கால்ல நடனம் ஆடுறீங்க. நீங்க மட்டும் தான் ஆடுறீங்க.

'நாந்தாண்டா கடவுள்

எல்லாமே பொதுவில்,

உருளுங்கடா தெருவில்'

அப்டீன்னு, எல்லாரும் தெருவுல உருள்றாங்க. நீங்க மிதிச்சு மிதிச்சு அருள் தர்றீங்க. எப்டீ?”

"ம். நல்லாயிருக்கு.", கதையுடைத்தலைவர் தலையசைக்கிறார்.

"இசை நம்ம இசையமைப்பாளர்[5]தான். அவரும் இசைக்கருவிகள் மேல் உருண்டே எல்லா இசையும் இந்தப் படத்துக்கு அமைக்கிறார்.”
"அப்றம், இந்தப்படத்துல நீங்க ஒப்பனையில்லாம நடிக்கிறீங்க. எல்லாரும் ஒங்களப்பாத்து மிரள்றாங்க. தாடி, மீசையெல்லாம் ஒட்டுத்தான். நீங்கதான் வேற மாதிரி செய்யமாட்டீங்கள்ல‌.”

"கதையெல்லாம் முதல் பகுதி நான் கடவுள் மாதிரிதான். ஒங்கப்பன் ஆத்தாவயெல்லாம் போட்டு அடியடின்னு அடிக்கிறீங்க. எடைல கெட்ட வார்த்த பேசுறீங்க. அதுவும் வடமொழில[6]தான். எல்லாத்துக்கும் நீங்க பயிற்சி எடுத்துட்டு வரணும்.” பேரரசு அள்ளி விடுகிறார்.

"இதெல்லாம் எனக்கு ஒத்து வருமா? எதாச்சும் குத்துப்பாட்டு இருக்கா?” கதையுடை கனைக்கிறது.

"உச்சக்காட்சில சண்டைக்கு மாறா நாம குத்துப்பாட்டு வைக்கிறோம். குருட்டுப்பெண்ணான தலைவிக்கு நீங்க வாழ்வு தர்றீங்க. எதிர் நாயகனை ஒழிச்சுக்கட்டுறீங்க. அப்றம் ஒரு சாமியார் தலைவிக்கு பார்வை கொடுக்கறார். அப்றம் என்ன குத்துப்பாட்டுதான். வாரணாசிலயே எடுக்கறோம். அப்பப்ப சென்னயத் தொட்டுக்கறோம்."

"அந்த சாமியாரா நானே வர்றேன்; எம்பேரு மருதகாசி." பேரரசு தொடர்கிறார். "நீள நீளமா உரையாடல்[7] பேசப்போறேன்."

குத்துப்பாட்ட மறந்துட்டேனே.

"நீ கண்ணு கொடுத்த சாமி - ஒன்ன

கட்டிக்கிட்டேன் மாமி

ஒன்னோட எதயம் காமி - அதுல

நான் மட்டுந்தான் சாமி”

"யோவ் புதுசா எதாச்சும் சொல்லுயா நானே வில்லு ஓடாத கடுப்புல இருக்கேன்." கதையுடை மீண்டும் கனைக்கிறது.

இதே மாதிரி கோப்பப்படுங்க. எடைல ஓம். ஸம்பவாமி.. அப்டீயிப்டீன்னு கெட்ட வார்த்தை பேசுங்க. படம் பிச்சிக்கும். பேரரசுவின் பிதற்றல் தொடர்ந்தது.
"இதுல 'பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே...' பாட்ட நம்ம இசையமைப்பாளர் கலவை[8] செய்வார். அத வேண்ணா நீங்களே ஒங்க குரல்ல பாடுங்க.

"போடாங்... நீ இப்டீயே பேசிக்கிட்டு இருந்தேன்னா இந்தப்பாட்ட அப்றம் நம்ம தயாரிப்பாளர்தான் பாடணும்.” கோபமாகச் செல்கிறார் கதையுடை.
"அப்பாடா ஒரு வழியா நம்ம தலைவர படத்தோட பாத்திரத்துக்கு ஏத்த மாதிரி மாத்திட்டேன்.” பேரரசு பெருமூச்சு விடுகிறார்.



[1] வட்டார வழக்கு, திருடுதல் என்பது பொருள்

[2] விஜய்தான் வேறுயார்?

[3] Pair

[4] த்ரிஷா

[5] இற்றீகாந்த் தேவா

[6] சமற்கிருதம்

[7] Dialouge

[8] re- mix


ஏன் திரைத்துறை கட்டுரைகள் அதிகம் வருகின்றன?

திரைப்படத்துறையினைப்பற்றி கட்டுரைகள் எல்லா வலைப்பூக்களிலுமே அதிகமாகத்தான் தெரிகின்றன. ஏனெனில் முழுக்க முழுக்க திரையினைப் பார்த்து வாழ்வினை வாழக் கற்றுக் கொண்ட தலைமுறையினர்தாம் நாம்.

அதிகம் திரைப்படம் பார்த்த தலைமுறை:

ஒருதலைமுறை என்பது முப்பது ஆண்டுகள். இந்த முப்பது ஆண்டுகளாகத்தான் திரைத்துறை பொதுமக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. ஏனெனில் திரைப்படங்களை திரையில் மட்டும் பாராமல் தொலைக்காட்சிகளிலும், குறுவட்டுக்களிலும் அதிகம் பார்த்தது இத்தலைமுறைதான்.

திரைப்படத்துறை மெதுமெதுவாக அழிந்து வந்த போதிலும், அதைப்பற்றிய கட்டுரைகள், துணுக்குகள், செய்திகளுக்குப் பஞ்சமில்லை.

நான் ஏன் திரைத்துறை பற்றி அதிகம் எழுதுகிறேன்?

நானும் கூட தமிழ் எக்காளம் தொடங்கும் பொழுது திரைப்படத்துறையினைப்பற்றி குறைவாகவே எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் என்னையும் அறியாமல நானும் இத்தலைமுறையிலேயே இருப்பதால் நானும் இவ்வாறு அதிகமாக எழுத வேண்டியதாயிற்று.

திரைத்துறை பிறந்து நூறாண்டுகளுக்கு மேலாகி விட்ட பொழுதும், சென்ற தலைமுறையினர் இத்துணை அதிகமாக திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் காலத்தில் குறுவட்டு கிடையாது. உண்மையான திரைப்பட ஒலி நாடா வர மூன்றாண்டுகள் வரை பிடிக்கும். தொலைகாட்சிகள் பெரும்பாலும் கிடையாது. இருந்தாலும் அதில் ஒன்றிரண்டு படங்கள்தாம் வாரத்திற்கொரு முறை ஒளிபரப்பி வந்தார்கள்.
இதழ்கள்:

தங்களைத்தாங்களே முதலிடம் என்று பீற்றிக்கொண்டிருக்கும் வார[1], நாளிதழ்களும்[2] திரைத்துறையினை விடவில்லை. அவர்களைச் சிரமேற்கொண்டுதான் செயல்படுகின்றன. அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல.

திரைத்துறைக்கென தனியே இருக்கும் இதழ்களைக் காட்டிலும், இன்ன பிற வார இதழ்கள்தாம் திரைச் செய்திகளை முன்னர் கொடுப்பதில் தனியார்வம் காட்டி வருகின்றன.

எழுத்தாளர்கள்:

திரைத்துறைக்கு வரவே மாட்டேன் என்று கூறிவரும் எழுத்தாளர் ஞாநி கூட தனது கட்டுரைகளாக ஓ..பக்கங்களில் திரைத்துறையில் அண்மையில் வந்த சில திரைப்படங்கள் வன்முறையினைத் தூண்டுவதாக எழுதியிருந்தார். அவர் அத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தாலொழிய அந்தக் கட்டுரைகளை எழுதியிருக்க மாட்டார். பெரும் எழுதாளர்கள்[3] பகுதி நேரமாக திரைத்துறையில் பணியாற்றி பொருளீட்டுகின்றனர்.

தமிழ் எக்காளத்தில் ஏன்?

எல்லோருக்கும் திரைத்துறை என்பது வாழ்வளிக்கும் துறையாக இருக்கின்றது. நல்ல பாடல் குரல்வளமுடையவர், ஒரு முறையாவது திரையில் பாட மாட்டோமா? என்று நினைக்கிறார். அது போலவே ஒவ்வொருவரும் நினைப்பதால் இத்துறையில் கட்டுரைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் இத்துறை மெதுமெதுவாக அழிந்து வருகின்றது என்பது மட்டும் உண்மை. எதிர்காலத்தில் இத்திரைத்துறை இப்போது இருக்கும் நிலையிலிருந்து மாறுபட்டு வேறு வடிவம் பெரும் என்பது மறுக்க முடியாத உண்மை.எல்லோரையும் கவரும் இத்துறை இக்காரணங்களால் எம்முழக்கத்திலும் வருகின்றது.
விளைவுகள்:

திரைப்படம் பார்த்து வாழ்வினைக் கற்றுக்கொள்பவர்கள் நெகிழ்தன்மையுடைவராக இருப்பர். இவர்கள் அதிகம் உணர்ச்சி வயப்படுபவராகவோ, அல்லது ஞாநிபோல பிதற்றிக்கொண்டோ இருப்பர். வாழ்வின் ஒவ்வொரு பகுதியினையும் இவர்கள் திரைப்படத்தோடு ஒப்பிட்டுக்கொண்டே இருப்பர். இவர்களை விலை கொடுத்து வாங்குவது எளிது. இவர்களால் தன்னால் சிந்தனை செய்ய இயலாமல் பிறர் ஏற்கனவே செய்தவற்றை மெருகேற்றும் வேலையிலேயே இருப்பர். தன்னலமிக்கவர்களாக வாழும் இவர்களது வாழ்வு குமுகாயத்தோடு[4] பொருத்தமுற அமையாது.

நமக்கு முந்தைய தலைமுறையினர் தங்கள் செயல்களைத் தாமாகவே செய்தார்கள், சிரித்தார்கள். ஆனால் நாம் இன்று பொதுவாழ்வில் கூறிச்சிரிக்கும் சின்னச்சின்ன சிரிப்புகள் கூட ஏதோ ஒரு சிரிப்பு நடிகர் ஏற்கனவே ஏதோ ஒரு திரைப்படத்தில் செய்ததாகத்தான் இருக்கின்றது.

இப்படிப்பட்ட தலைமுறையினை ஏமாற்றுவதோ, விலை கொடுத்து வாங்குவதோ, மிதித்து நசுக்குவதோ நாடாள்வோருக்கு மிக எளிது. தமிழினமே தன்மானத்தோடு சிந்திப்போம்.



[1] குமுதம், ஆனந்த விகடன்

[2] தினகரன், தினத்தந்தி

[3] சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர்,பாலகுமாரன்

[4] Society