ஈழம் இலங்கைச் சிக்கல் பற்றி எழுதலாமே என்று நண்பர் இற்றி கலியாண இராமன் மின்னஞ்சலில் இயம்பியமையால் இஃதினை எழுத விழைகின்றேன். இஃதினை என் சாளரவழிப்பார்வையாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, பூசலுக்காக எடுத்துக் கொள்ளக்கூடாது.
சிக்கலுக்கான தீர்வு நாட்டின் பெயரிலேயே இருக்கின்றது. அங்கே இராமன் காலத்திலிருந்து இலங்கை மட்டும்தான் இருக்கின்றது. ஈழம் கிடையாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக வேலுப்பிள்ளையின் பிள்ளை[1] போர் செய்து மட்டுமே தனி நாடு வாங்கி விட முடியாது.
எப்பொழுதுமே ஒரு செயற்பாடு காலந்தாழ்த்தியும் நிகழ்ந்து கொண்டிருந்தால் அஃது தன்னிலை திரிந்து பிறழ்ந்து விடுவது இயற்கையே. அவ்வகையில் இலங்கை ஈழ நிகழ்வு பல்லாண்டுகளாக நிகழ்வதால், நிலை பிறழ்ந்து அரசியலாயிற்று. அஃதினை இருந்திருந்தாற்போன்று கழகம் தொடங்கியவர்களெல்லாம் பயன்படுத்திக் கொண்டது உள்ளங்கை நெல்லிக்கனி.
அவ்வாறு அரசியலாக்கியவர்களெல்லாம், அதற்கான தீர்வறிவதில் ஈடுபாடு காட்டாமல், அதன் மூலம் அவர்களுக்கான வாக்கினைச் சேர்ப்பதிலேயே குறிக்கோளாயிருந்தார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட போதும், அஃதினை பலர் சிரமேற்கொண்டார்கள். வேலுப்பிள்ளையின் பிள்ளையும், தனிநாடான ஈழம் பிரிப்பதிலிருந்து பிறழ்ந்து, தன்னைக் காத்துக்கொள்ள அப்பாவித் தமிழர்களைப் பயன்படுத்திக் கொண்டார்.
சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்ற முதனிலைக் குறிக்கோள் மறைந்து, தன்னுயிர்காக்க வேண்டும் என்ற இரண்டாந்நிலை குறிக்கோள் குறித்தவரின் உள்ளத்தில் நிலை கொண்டது. பிறகென்ன, உயிர்நீந்தது. முதனிலைக் குறிக்கோள் தகர்ந்தது.
ஒரு சிக்கலுக்கான தீர்வினை அங்கிருந்து ஓடிவிடாமல் காணவேண்டும். அதைச் சரியாக குறிப்பிட்டவர் செய்திருக்கிறார். அவ்வகையில் அவர் ஒரு சிறந்த தலைவரே. ஆனால் தீர்வானது இன்னும் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே.
தனிநாடு என்னும் கருத்தினையொழித்து, அங்கிருந்தே உரிமை பெறுதல் சிறப்பு. அதற்கு எடுத்துக்காட்டாக நம் இந்தியாவினைச் சொல்லலாம். எவ்வளவு பேரிடர்கள் வந்தாலும், தமிழ்நாடு இன்னும் இந்தியாவுடனேயே இருக்கின்றது.
பஞ்சாபில் சீக்கியர்கள் தனிநாடு கேட்கிறார்கள்; கசுமீரில் அச்சுறுதல்காரர்கள் தனிநாடு கேட்கிறார்கள். தமிழ்நாடு தவிர எங்கு சென்றாலும் தமிழன் ஒடுக்கப்படுகின்றான்; ஏமாற்றப்படுகின்றான். அதற்காக அவன் தனிநாடு கேட்டால் என்னாவது? சர்தார் வல்லபாய் படேல் என்ற இரும்பு மனிதர் இணைந்த இந்தியா உடைந்து விடும். அது முறையா?
இலங்கை ஈழம் சிக்கலுக்குத் தீர்வு தன்னலமில்லாத ஒரு தலைவர் இரும்பு மனிதராய்ப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தமிழனின் உரிமைகளை முறையாகப் பெற வேண்டும். அவ்வாறு பெற்று விட்டால் சிங்களனும் தமிழனும் கூடி வாழலாம்.
நாடுகளை இணைப்பது மிகவும் கடினம்தான். கிழக்கு மேற்கு செருமனிகள் 1990ல் இணைந்தன. அளப்பரிய நிகழ்வுதான். அஃது போல சிங்களமும் தமிழும் உறவாட, ஏதேனும் ஒரு தன்னலமில்லா இரும்பு மனிதர்[2] உதவ உள்ளத்தில் நாடொறும் நினைப்போம். நினைவு ஒருநாள் நிகழ்வாகும். போலி அரசியலர் ஒழிய புதுவாழ்வு புலரும்.



