தமிழ் கம்ப்யூட்டரில் இந்த இதழில் (பிப்ரவரி 16-28, 2014 பக்கம் 36) எனது படைப்பு வெளியாகியுள்ளது.
கற்போம்.காம் மூலம் கற்றறிந்த youtubeன் பாம்பு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தாள் நுட்பா தனது கவலையைப் போக்க. கவலைக்குக் காரணம் அவள் பதிவேற்றியிருந்த யூட்யூப் காணொளியை யூட்யூப் நீக்கியதோடு மட்டுமல்லாமல் மீண்டும் அதே யூட்யூப் கணக்கிற்கு வரவேண்டுமெனில் குறிப்பிட்ட காணொளியைக் கண்டு கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் என்று கூறியதே.
ஆகையால், அவள் வேறொரு யூட்யூப் கணக்கினைத் தொடங்கி விட்டாள். மாத இறுதியாதலால், அனைத்துப் பதிவிறக்கங்களும் தீர்ந்து இணைய இணைப்பு மெதுவாய்ப் போனது. மெதுவான இணைய இணைப்பில் காணொளி தோன்றுவதற்கு முன் வரும் ஏற்று (loading) வட்டத்தில் அம்புக்குறி விசைகளைத் தட்ட வரும் பாம்பு விளையாட்டுத்தான் அது.
அம்புக்குறி விசைகளைத் தட்டிக் கொண்டே, தனது தோழன் நெடிலனுக்கு கைபேசி அழைப்புவிடுத்தாள் அந்த யூட்யூப் நங்கை.
"சொல்லு நுட்பா..." சரியாக பதினொரு நொடிகளில் பேசியை எடுத்தான் நெடிலன்.
“நெடில். என்னோட யூட்யூப் கணக்கு முடங்கிப் போச்சு. எதாவது செஞ்சு சரி பண்ணிக் குடுங்க.” அச்சம் கலந்த கெஞ்சலில் கேட்டாள் நுட்பா.
“ஏன் என்னாச்சு...?” இது நெடிலன்.
“என்னன்னு தெரியல.. நீங்கதான் கண்டுபிடிக்கணும்.” மீண்டும் கெஞ்சினாள்.
“சரியா.. மாலை அஞ்சு மணிக்கு ஒங்க வீட்டுக்கு வர்றேன். அப்போ சரி பண்ணிடலாம்.” அலுவலகத்தில் தனது வேலையைப் பார்த்துக் கொண்டே கைபேசினான் அந்த மென்பொருளன்.
மாலை அஞ்சு மணி.
நுட்பாவின் வீட்டிற்குள் தனது வெஸ்பாவை முடுக்கி நுழைந்தான் நெடிலன்.
“வாங்க நெடில்…”அவனது கரம் பற்றிக் கூட்டிச் சென்றாள் நுட்பா.
"இத மொதல்ல பாருங்க.." தனது ஆப்பிள் மடிக்கணினியைக் கொடுத்து விட்டு கட்டளையிட்டாள் நுட்பா தன்சிறுமுறுவலோடு.
"யே.. என்ன.. வந்தவங்களுக்கு தேநீர் ஏதும் குடுக்காம.. ஒடனே வேல பாக்கச் சொல்றீங்களேப்பா?" தனது முழுக்கைச் சட்டையை மடக்கி விட்டுக்கொண்டே அவளது ஆப்பிளை வாங்கினான்நெடிலன்.
"இதோ...தேநீர் சூடா கொண்டு வர்றேன். என்னோட யூட்யூப் கணக்கு திரும்ப வரணும் அவ்ளோதான்." அவனது மறுமொழிக்குக் காத்திராமல், தேநீர் செய்யச் சென்றாள் நுட்பா.
சிரித்துக் கொண்டே, அவனுக்குத் தெரிந்த அவளது கடவுச்சொல் கொடுத்து யூட்யூப் கணக்கினுள் நுழைத்தான் நெடிலன். அவள் சொன்னது போலவே வந்த காணொளியைப் பார்த்து கேள்விகளுக்கு விடையளித்தான்.
ஐந்து மணித்துளிகளில் தேநீர் கொணர்ந்தாள் அந்தக் கெஞ்சலழகி.
தேநீரும், ஆப்பிள் கணினியும் கைகள் மாறின.
"அபாரம்... என்னோட யூட்யூப் கணக்கு திரும்ப வந்திருச்சே..." மகிழ்ச்சியில் கொஞ்சினாள் கெஞ்சலழகி.
மீண்டும் சிரித்துக் கொண்டே, தனது மீசையில் படாமல் தேநீர் அருந்தத் தொடங்கினான் நெடிலன்.
"என்ன பண்ணிங்க நெடில், ம்ம்... சொல்லுங்க." மீண்டும் கெஞ்சல் செய்தாள் நுட்பா.
“யூட்யூப்ல காணொளி பதிவேத்தம் செய்யணும்னா அதுக்கு சில விதிமுறைகள் உண்டு.” தேநீர் உறிஞ்சியபடியே பேசினான் நெடிலன்.
“என்னென்ன?” ஆர்வமுடன் கேட்டாள் நுட்பா.
“நீ பதிவேத்தினது ஒரு திரைப்படம்; அது தனியார் தொலைக்காணொளியோட காப்புரிமைச் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டது. அத அந்த காணொளியோட water mark logo வச்சு தானாகவே யூட்யூப் கண்டுபிடிச்சுடும்.சில காப்புரிமைச் சட்டங்கள் நெகிழ்தன்மையோட(flexibility) இருக்கும். அப்டி இருந்துச்சுன்னா நம்ம மின்னஞ்சலுக்கு ஒரு செய்தி வரும். அவ்வளவே. அந்த காணொளி நம்ம கணக்குலர்ந்து நீக்கப்படாது.” தேநீர்க் குவளையை முன்னால் இருந்த கண்ணாடி மேசையில் வைத்தவாறே செப்பினான்.
“ஆனா ஒங்கணக்குல இருந்தது காப்புரிமைய மீறின செயல். அதுமில்லாம மூனு காணொளியும் ஒரே தனியார் அலைவரிசயோடது. அதுனால காணொளி நீக்கப்பட்ட ஒடனே நீ சரியா யூட்யூப் காப்புரிமைச் சட்டத்த தெரிஞ்சுக்கிட்டியான்னு பாக்கறதுக்கு ஒரு காணொளியப்பாத்து அதுக்குக் கீழ அவங்க கேக்கற கேள்விக்கெல்லாம் விட சொல்லணும். நீ 80 விழுக்காடு மதிப்பெண் எடுத்தாத்தான் ஒன்னோட யூட்யூப் கணக்கு திரும்பக் கெடைக்கும். இது யூட்யூபின் விதி. நீ தப்புத்தப்பா விட சொன்னா, அது மறுபடியும் மறுபடியும் கேள்வி கேக்கும். இதுதான் ஒங்கணக்குல நடந்தது.” புருவமுயர்த்திப் பேசினான் அந்த யூட்யூப் மன்னன்.
“"ம்..." தனது உதடுகளைக் கீழேயிறக்கி வியப்பிலாழ்ந்தாள் நுட்பா.
“இன்னோரு முக்கியமான சேதி. கணக்கு திரும்ப வந்துட்டதுன்னு மறுபடியும் எதாவது நமது காப்புரிமை இல்லாத காணொளிய ஏத்துனா, நம்ம கணக்கையே யூட்யூப் நீக்கிடும்.” அவளுக்கு வந்த மின்னஞ்சலைக் காட்டி விளக்கினான் நெடிலன்.
"இப்ப என்னாச்சு?" நுட்பா மையமாக விழித்தபடி கேட்டாள்.
“ஒன்னுமில்ல. அந்த குறிப்பிட்ட காணொளி மட்டும் ஒங்கணக்கிலருந்து யூட்யூப் நீக்கிடுச்சு. அப்பறம். ஒன்ன எச்சரிக்க பண்ணியிருக்கு.” விடை பகன்றான் தேநீர் அருந்தியவன்.
“அப்ப எதத்தான் நா பதிவேத்தறது. ஏற்கனவே என்னோட 1டிபி வன்வட்டு தீரப்போகுது.” அடுத்த கேள்வி கேட்டாள்.
“ஒன்னோட சொந்த காணொளியெல்லாம் பதிவேத்தம் செஞ்சு வைக்கறதுக்கு, நீ எதாவது cloud service பயன்படுத்தலாம். 4shared.com, skydrive அந்த மாதிரி. அவை ஒரு தனி ஆளின் சொந்தத் தரவுகளின் காப்புரிமைய பெறல.” விளக்கினான் நெடிலன்.
“அப்ப நா.. யூட்யூப்ல எதுவுமே பதிவேத்தம் செய்ய முடியாதா?” தனது ஆப்பிள் கணினியைப் பார்த்தவாறே கேட்டாள் நுட்பா.
ம்.. சிரித்துக் கொண்டே தொடர்ந்தான் நெடிலன். “யூட்யூப் காணொளிகள் தனித்தன்மை வாய்ந்ததா இருக்கணும். காப்புரிமை இல்லாத பழைய காணொளிகளா இருக்கலாம். காப்புரிமை பெற்ற புதிய காணொளிகளா இருக்கலாம். பயனரோட சொந்தச் சரக்காகவும் இருக்கலாம். இங்க சொந்தச் சரக்குங்கறது நம்மோட வன்வட்ல இருக்கறது இல்ல. நாமளே தயாரிச்ச காணொளி. http://www.youtube.com/t/community_guidelines தளத்தில் வந்த செய்திகளைத் தொகுத்து விளக்கினான் தன் தோழியிடம்.
“அப்பாடா.. என்னோட கணக்கை எப்படியோ திருப்பிக் குடுத்துட்டிங்க. நன்றி நெடில்..”
“நம்மளோட சொந்தச் சரக்குக்கும் எதாவது காப்புரிமை இருக்கா?” நன்றி சொன்னவள் திரும்பக் கேட்டாள்.
“ஆமா. நம்மளோட காணொளி தனிப்பயனாக (private viewing) இருந்தால் அதை யாரும் சுட்டுவிட (copy) முடியாது. பொதுப்பயனாக இருந்துச்சுன்னா (public viewing),அதை வேறுயாரவது பயன்படுத்தினால் அது காப்புரிமைச் சட்டப்படி குற்றம். சில காணொளி சொந்தக்காரர்கள் காப்புரிமை பற்றி கவலைப்படுவது கெடயாது. அதனால அவங்க காணொளிய நாம வணிக நோக்கில்லாம பதிவிறக்கிப் பயன்படுத்தலாம். பொதுவா, காணொளி சுட்டு (copy) பதிவேத்தறது தப்பு.” தன் பட்டறிவிலிருந்து சொன்னான் அந்த யூட்யூப் வேந்தன்.
“இன்னும் சேதி வேணும்னா. இதையும் பாரு.. http://www.youtube.com/t/terms, http://www.youtube.com/yt/policyandsafety/en-GB/”, http://money.howstuffworks.com/youtube6.htm மேலும் சில தளங்களை பரிந்துரைத்தான்.
“ஒனக்கு இதெல்லாம், நல்லாப் புரிஞ்சிருச்சுன்னா, நீயும்கூட யூட்யூப்க்கு வேலைக்குப் போகலாம்.” http://www.youtube.com/yt/jobs/teams-roles.html தளம் காட்டிச் செப்பினான்.
யூட்யூப் பற்றி புதுப்புது செய்திகளை அறிந்தும், தனது யூட்யூப் கணக்கினைத் திரும்பப் பெற்றும், பெருமகிழ்ச்சி கொண்ட நுட்பா தனது தோழன் நெடிலனுக்கு விடை கொடுத்தாள்.