சனி, 3 மார்ச், 2012

பத்துக்கேள்விகளும், பளிச்சென கிடைத்த‌ கூகுள் வேலையும்


கணினிக்கதை:
பொற்கோ கணினிக் கதையில் வந்து நிறைய நாளாகிவிட்டபடியால் அவனைப்பற்றி ஒரு சிறு முன்னுரை. பொற்கோ எம்.பி.ஏ பட்டதாரி. கூகுளில் மென்பொருள் மேலாளர் வேலை (Software Manager). ஆறுஇலக்கத்தின் குறைவான எண்ணில் மாத‌ ஊதியம். அவனது தோழி காண்பதற்கினியா மற்றொரு மென்பொருள் நிறுவனத்தில் குழுத்தலைவி(Team Leader). இனி கதைக்கு வருவோம்.

பன்முகத்திறமை கொண்ட பொற்கோ தன் தோழி காண்பதற்கினியாவுடன் கதைக்கத் தொடங்கினான் ஒரு பொன்மாலைப் பொழுதில். 

"ம்.. எப்படியோ கூகுள்ல வேலைக்குச் சேந்துட்டீங்க. அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க கோ." மாலை நேரத்து அமைதியைக் கலைத்தாள் காண்பதற்கினியா.

"எம்.பி.ஏ படிச்சு முடிச்சேன். பத்து ஆண்டு பட்டறிவு உள்ள தகுதிகாண் படிவம் (curriculam vitea) ஆயத்தப் படுத்தினேன். அதனால வேல எளிமையா கெடச்சுச்சு." மறுமொழி தந்தான் அந்த மென்பொருள் மேலாளன்.
"என்னென்ன கேள்வி கேட்டாங்க. அதப்பத்தி சொல்லுங்க கோ.” இது காண்பதற்கினியா.

"நெறய கேள்வி கேட்டாங்க. எனக்கு ஞாபகம் இருக்கறதச் சொல்றேன். சரியா இனி. சொல்றப்ப, தொழிற்நுட்பக் கேள்வியும், மேலாண்மைக் கேள்வியும் மாறி மாறி கலந்து வரும்." இது பொற்கோ.

"கேள்வி 1: போர்ட் எண் அப்டீன்னா என்ன?”
"விடை: ஒரு கணினியில பல சேவைகள் (services) இருக்கு. ஒவ்வொரு சேவையையும் அணுகறத்துக்கு அதுக்குன்னு தனிப்பட்ட மொறைல (unique identification no.) எண் இருக்கு. அதுக்குப்பேர்தான் போர்ட் எண்.” முதல் கேள்வியினை விடையுடன் பகன்றான் பொற்கோ.

"இது எனக்கு ஏற்கனவே தெரியும் கோ.” சற்றே செருக்குடன் செப்பினாள் காண்பதற்கினியா.

"கேள்வி 2: கோப்பு மாற்றி முறைமைக்கான (File Transfer Protocol) போர்ட் எண் என்ன?” பொற்கோ அடுத்த கேள்வியை அந்தக் குழுத்தலைவியிடம் கேட்டான்.

"எண் இருபத்து ஒன்று.” அதுக்காகவே காத்திருந்தவள் போல விடைபகர்ந்தாள் குழுத்தலைவி காண்பதற்கினியா.

"அதுமட்டுமில்ல இனி. கோப்பு மாற்றி முறைமைல (File Transfer Protocol) ரெண்டு போர்ட் எண் இருக்கு. ஒன்னு தரவு போர்ட் (Data Port). இன்னொன்னு கட்டுப்பாட்டு போர்ட்.(Control Port)  தரவு போர்ட் 20. கட்டுப்பாட்டு போர்ட் 21. ரெண்டையும் சொன்னாத்தான் சரி தெரியுமா?” இயம்பினான் அந்த கூகுள் கலைஞன்.

"அடுத்த கேள்வி என்னன்னு சொல்லுங்க கோ.” ஆர்வமுடன் கேட்டாள் அந்த அணங்கு.

"அடுத்தது கேள்வி மூனு: எதுக்காக கூகுள்ல வேலைக்குச் சேர்ரீங்க?" அடுத்த கேள்விக்குத் தாவினான் பொற்கோ.

"என்ன விடை சொன்னீங்க கோ." அந்தக் கேள்விக்குரிய விடை தெரியாததால் மிகவும் ஆவலுடன் கேட்டாள் காண்பதற்கினியா.

"கூகுள் தான் இந்நாளைய இணைய உலாவிக்கருவி. புதுப்புது தொழிற்நுட்பங்கள ஒடனுக்கொடனே தர்ற நிறுவனம். கூகுள் தான் சிறந்த தேடுபொறி. ஜிமெயில்தான் சிறந்த மின்னஞ்சல் சேவை. கூகுள் குரொம்தான் சிறந்த இணைய உலாவி. யூடிப்தான் சிறந்த காணொளி அமைவு. இப்டி சொல்லிக்கிட்டே போகலாம். அது மட்டுமில்லாம கூகுள் தன்னோட வேலையாட்களுக்கு தொழில் நிறைவு (Employee Satisfacation) குடுக்கறதுல முதன்மை நிறுவனம்.”  நேர்காணலில் செப்பியவாறே திரும்பவும் செப்பினான் பொற்கோ.

"இப்ப‌ கேள்வி 4: எதுக்காக நாங்க ஒங்களுக்கு இந்த வேலையத் தரணும்?” தொடர்ந்தான் பொற்கொ.

"அதுக்கு என்ன சொல்லணும் கோ? எனக்குத் தெரியாதே." குழுத்தலைவி குரலுயர்த்தினாள்.

"இது மிகவும் தலைமையான கேள்வி. நம்மளப் பத்தி அதிக‌ உயர்வாகவும் இருக்கக்கூடாது. நிறுவனம் பத்தி அதிக‌ தாழ்வாகவும் இருக்கக்கூடாது. இந்த வேலை எனக்குக் கெடச்சுன்னா, அது என்னோட தகுதிக்கும் பட்டறிவுக்கு பொருத்தமானதாக இருக்கும். நான் நல்ல வேலை செய்யறதால நிறுவனம் மேலும் மெருகடையும். அப்டீன்னு சொல்லணும். நானும் அப்டீத்தான் சொன்னேன்.” எளிமையாய்ச் சொன்னான் பொற்கோ.

"அடுத்த கேள்வி பத்தி சீக்கரம் சொல்லுங்க கோ." ஆர்வமிகுதியில் கேட்டாள் காண்பதற்கினியா.

“அடுத்தது அஞ்சாவது கேள்வி: ஒங்களோட நிறை குறை பத்தி சொல்லுங்க.”

"நிறை: நான் எதையுமே நேர்மறையாகத்தான் (positive) எடுத்துக்குவேன். எல்லார்கிட்டேயும் (extrovert) இயல்பா பேசிப் பழகுவேன். எந்த வேலய எடுத்துக்கிட்டாலும் கடினமா ஒழச்சு (hard working nature) அத முடிக்க என்னாலான எல்லா முயற்சியும் செய்வேன். அப்றம்... மனவளக்கலைப் பயிற்சி (yoga) செஞ்சுகிட்டே வர்றேன். அதனால அவ்வளவு சீக்கிரமா யார் மேலயும் கோபப்படமாட்டேன். என்னோட குழு உறுப்பினர்களத் தட்டிக் குடுத்து வேல வாங்கறது எனக்குத் தெரியும்.” தொடர்ந்தான் அந்த மேலாளன். 

"குறைன்னு பாத்தா நான் முன்னாடி எல்லா வேலகளயும் இழுத்துப் போட்டுச் செஞ்சு எல்லாமே கொறயா இருக்கும். ஆனா இப்ப அதுக்குத் தனியா ஒரு செய்முறை படிவம் (to-do list) செஞ்சு பயன்படுத்தறேன். அதனால எல்லா வேலையையுமே சரியான நேரத்துக்குச் செய்ய முடியுது.” விளக்கினான் பொற்கோ.

"அடுத்தது தொழிற்நுட்பக் கேள்வி, (கேள்வி6) லினக்ஸிலருந்து வந்தது. Swap space அப்டீன்னா என்ன? அத எதுக்கு பயன்படுத்தறாங்க? எவ்வளவு பயன்படுத்தறாங்க? அதுக்கான விடை:  swap space அப்டீன்னா (virtual memory) நிகர்நிலை நினைவகம். ஒர் இயங்குதளம் இயங்கறப்ப அதனோடு அனைத்து செயல்பாடுகளுமே முதன்மை நினைவகத்துலதான் (Primary Memory or RAM – Random Access Memory) இருக்கும். அதுனாலத்தான் RAM அதிகமா இருந்தா செயல்பாடு விரைவா இருக்கும். இது ஒரு கண்கூடான செய்தி. பொதுவா, RAM போல இரண்டுமடங்கு நிகர்நிலை நினைவகமான Swap space கொடுக்கறது வழக்கம். அத இயங்குதள நிறுவலின் (Operating system installation) போதும் செய்யலாம். அதுக்கப்பறமும் செய்யலாம். எடுத்துக்காட்டு: 1 GB RAM க்கு 2 GB  Swap குடுக்கணும்.  முதன்மை நினைவகம் (Primary Memory - RAM) முழுசா இயங்குதளத்தால (operating system) பயன்படுத்தப் பட்டால், இயங்குதளம் சரியாக இயங்கவராது மறுக்கும். அந்நேரத்துல இயங்குதளக் கட்டுப்பாடு(OS control), நிகர்நிலை நினைவத்துக்குச் (virtual memory - space) செல்லும். அப்போ, நிகர்நிலை நினைவகம் முதன்மை நினைவகம் போல இயங்கி இயங்குதளத்த நல்லா இயங்க வைக்கும். இதுபோல, நிகர்நிலை நினைவகத்த தனி வட்டமைவாகக் (disk partition) குடுக்க Windows இயங்குதளத்துல வழி கெடையாது. ஆன லினக்சுல வழி இருக்கு. இதுக்கு விதிவிலக்கும் உண்டு. எடுத்துக்காட்டா, நாம 64 GB RAM பயன்படுத்தினால் அது பொதுவான நிரல்களுக்கு நிறையவே நிறையாது. எனவே அப்பொழுது நிகர்நிலை நினைவகம்(virtual memory) என்று எதையும் கொடுக்கத் தேவையில்லை.” நேர்காணலின் போது சொன்னதைப் போன்றா பிறழாது செப்பினான் பொற்கோ.

செப்பியவன் தொடர்ந்தான். "அடுத்தது KVM அப்டீன்னா என்ன? (கேள்வி 7)
Kernel Virtualization Machine என்பதன் சுருக்கமே KVM. இது புதுசா ரெட் ஹாட் என்டர்பிரைஸ் லினக்ஸ்6 ல (RHEL6) வந்திருக்கு. ஏற்கனவே ரெட் ஹாட் என்டர்பிரைஸ் லினக்ஸ்5 ல (RHEL5) இந்த அமைவு இல்ல. Xen kernel, Xen virtualization ஆகிய முறைகள RHEL5 ல  பயன்படுத்தி வந்தாங்க. அதிலிருந்த கொறகள களைஞ்சு இப்ப புதுசா KVM வந்திருக்கு. இது 32 பிட் இயங்குதளங்கள்ல இயங்காது. அதுக்காக நம்ம கணிப்பொறிய 64 பிட்டுக்கு மாத்தி மேம்படுத்தணும்.”

அவன் சொல்வதைக் கேட்டு தன் காதுகளெல்லாம் கமகமத்தது போன்று வியப்பின் மிகுதியில் தன்னை மறந்து கேட்டுக்கொண்டிருந்தாள் காண்பதற்கினியா.

"அடுத்தது எட்டாவது கேள்வி: Kickstart என்றால் என்ன? விடை: எடுத்துக்காட்டாக நமக்கு 100 பொறிகள் (systems) கொடுக்கப்பட்டிருக்கு. அதில் இயங்குதளம் நிறுவிப் பயன்படுத்தப்பட வேண்டும். அப்பொழுது நாம் குறுவட்டைத் (CD/DVD) தேடி 100 பொறிகளுக்கும் தனித்தனியாக இயங்குதளம் (operating system or platform) நிறுவினால் தாவு தீர்ந்துவிடும். அதுக்காக ஒரு விடைக் கோப்பினை (answer file) உருவாக்கி அதை வலைய நிறுவுதல் முறையில் (PXE Installation or Network Installation) நிறுவுவதே kickstart  எனப்படும். இதை Windowsல‌ Unattended Installation அப்டீன்னும் Solarisல‌ Jumpstart Installation  அப்டீன்னும் சொல்றாங்க. பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொறிகள் பயன்படுத்தப்படும் இடங்களில் இந்த மொறயின பயன்படுத்தற்து நல்லது;எளிமையானது.” தெளிவாக உரைத்தான் மேலாளன் பொற்கோ.

"கேள்வி எண் ஒன்பது: எம் சர்வர்  (YUM Server – Yellow Dog Updater Modified) அப்டீங்கறது என்ன? நாம பொதுவா, exe கோப்புக்கள Windows ல பயன்படுத்துவோம். ஆனா இலினக்சுல rpm பயன்படுத்த வேண்டும். குறிப்பா ஒரு ஆர்.பி.எம் (RPM – Redhat Package Management or RPM Package Manager) நிறுவலின் போது அதனோடு தொடர்புடைய (dependency or supportive) மற்ற ஆர்.பி.எம் களும் நிறுவப்பட வேண்டும். ஆனா எல்லா நேரத்திலயும் நாம எந்தெந்த தொடர்புடைய ஆர்.பி.எம் நிறுவணுங்கறத ஞாபகத்தில வச்சிருக்க முடியாது. அதுக்காக நாம எம் சர்வர் பயன்படுத்தறோம். எம் சர்வர் பயன்படுத்தினா தானாகவே தொடர்புடைய ஆர்.பி.எம்கள் நிறுவப்பட்டு விடும். நாமும் எளிமையாக rpm கோப்புக்களைக் கையாளலாம். இதைத் தமிழ்ல பழுப்பு ஞமலி மேம்பாட்டு  (Yellow Dog Updater Modified) சேவை என அழைக்கலாம்.” சின்னக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போலச் சொல்லிக்கொடுத்தான் பொற்கோ.

“அப்பப்பா... என்னமா சொல்றீங்க கோ. அருமை!” வியந்தாள் காண்பதற்கினியா.

“இது கடைசிக் கேள்வி: சாம்பா சர்வங்கறது என்ன? 

சாம்பா சர்வர் அப்டீங்கறது ஒரு cross platform சர்வர். சர்வர்ல இலினக்சும், கிளைன்ட்ல விண்டோசும் இருக்கும் போது அல்லது அதுக்கு நேர் மாறா இருக்கும் போதும் இந்த சர்வர் ஒதவறது. இது பொதுவா கோப்புப் பகிர்வ (file sharing) மையமா வச்சு அமையறது. இது எல்லா இயங்குதளங்களுக்கும் (all operating systems) ஆதரவு (support) தர்றது. ஆப்பிளோட மேக்கின்டோஷ் இயங்குதளத்து கூடவும் இது ஆதரவு தர்றது கூடுதல் சிறப்பு. அப்றம். இது நம்ம விண்டோஸ் ADS (Active Directory Service) கூடவும் இணைந்து இயங்கறது. இதோட போர்ட் எண்: 137,138,139. swat (Samba Web Administration Tool) போர்ட் எண்: 901" மொழிந்தான் பொற்கோ.

"சரி பொற்கோ. நானும் இந்தக் கேள்விக்கெல்லாம் சரியான விட சொன்னா எனக்கும் கூகுள்ல வேல கெடைக்கும் தானே?” விழிகள் விரிய வினவினாள் காண்பதற்கினியா.

"எந்தக் கேள்வி கேட்டாலும் இனி!, தன்னம்பிக்கையோட விட சொன்னா கண்டிப்பா வேல கெடைக்கும். நேர்காணல் நல்லா பண்ண என்னோட வாழ்த்துக்கள்.” வாழ்த்தினான் அந்த மென்பொருள் வேந்தன்.

1 Comment:

சிவபார்கவி said...

Best wishes... great


http://sivaparkavi.wordpress.com/
sivaparkavi