வியாழன், 23 செப்டம்பர், 2010

வேந்தனும், வீரையும்

"எங்களுக்குத் தெரியும்டா" நூலினை ஏழாவது முறையாகப் படித்துக் கொண்டிருந்தான் வேந்தன்.
நூலினைப் படிக்கும் பொழுதே நூலினூள் நுழைந்துவிடும் நடை அந்நூலினுடையது.
எண்ணியல் மயமாக்கப்பட்ட வேந்தனின் இல்லம் பெரும்பாலும் அயல்நாட்டு கண்ணாடிகளாலும்,
அலங்காரச் சிலைகளாலும் வேயப்பட்டிருந்தது. அத்தனையும் மறந்து நூலினுள் மூழ்கலானான் வேந்தன்.
நூலின் வனப்பு அதன் ஆசிரியரின் பெயரைக்கூட பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை மறக்கடிக்கச் செய்தது.

அவள் அழகிமட்டுமல்ல, வீரமிக்க பெண்ணுங்கூட. தனியாகச் செயல்களைச் செய்வதில் வல்லவள்.பெயர் வீரை.

இனி இவளைப்பற்றிச் சில வரிகள் பார்ப்போம்.
புதினம் எழுதும் புதுமை விழிகள்
வில்லொத்த புருவம்.
தொழில் திருட்டு.
நுனி போல் குத்தும் நாசி.
ஆரஞ்சுப்பழ சுளை உதடுகள்.

இன்னும் எழுத முடியாத அழகு மிகுதியாக இருந்தது வீரையிடம்.

நூலிலிருந்து வெளியேறிய வேந்தன் தண்ணீர் குடிக்கச் சென்றான்.
குளிர்பதனப் பெட்டியிலிருந்து ஒரு குவளை நீருடன் வந்தவன் மீண்டும் நுழைந்தான் நூலினுள்.
வீடு முழுதும் எண்ணியல் மயமாக்கப் பட்டிருந்தாலும் பழைய நூலினைப் படிப்பது வியப்பே.

ஒவ்வொரு வார்த்தைகளும் சேர்ந்திருந்த விதம் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றியது வேந்தனுக்கு.
கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் அவன் அருகில் இருப்பது போல் எண்ணிக்கொண்டே நூலினுள் மூழ்கலானான்.

வீரை உடும்பு கொண்டு வந்திருந்தாள். எண்ணியல் அறையைத் திருடுவதற்காக.
உடும்புப் பிடி பிடிக்க தூக்கி கட்டிடத்தின் மேற்கூரையில் எறிந்தாள் வீரை.

எதோ அரவம் கேட்டவன் போல் எழுந்த வேந்தன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
ஒன்றுமில்லை என்ற உடன் மீண்டும் நூலினுள் நுழைந்தான்.

வீரை கட்டிய கயிறு அவ்வளவு தடிமனாக இல்லை. ஆதலால் வீரையின் கயிறு அறுந்த‌து பாதி தொலைவு வந்தவுடன்.

கதை முடிந்திருந்தது.

நூலின் மேல் உள்ள காதலால் "எங்களுக்குத் தெரியும்டா" நூலினை எட்டாவது முறையாகப் படிக்கத் தொடங்கினான் வேந்தன்.

எதிலோ எங்கெயோ படித்தது.

நீல வண்ண என் வான் வீட்டை
வெள்ளைக் காரச் சிறுக்கிக்கு
வாடகைக்கு விட்டால்,
அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக‌
இத்தனை ஆணிகளா
அடித்துத் தொலைப்பது.

இது வைரக்கல்
இது கோமேதகக் கல்
என்று காட்டியவனிடம் கேட்டேன்
"உன் தொழில் என்ன?"
பதறாமல் வந்தது பதில்
"பதுக்கல்."

புதன், 8 செப்டம்பர், 2010

குறும்பாக்கள்

ஒழுங்கின்மையுடன் கூடிய‌
ஒழுங்கு
இசைப்புயலின் இசை.

ஒரே பக்கமுள்ள நாணயம்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

எங்கோ படித்தது.

மழையில் நனைய
மௌன அழைப்பு
மண் வாசனை.

காதுகளைப் பிடித்துத்
தூக்கியும் கதறவில்லை
கைப்பை.

மென்பொருள் உரிமை நாள்.

செப்டம்பர் 18 மென்பொருள் உரிமை நாள்.

மென்பொருள் உரிமை நாள் வரும் பதினெட்டாம் தேதி நடக்க உள்ளது.
இது ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் சனிக்கிழமை உலகெங்கிலும் கொண்டாடப் படுகின்றது.

குறிக்கோள்கள்

1. மென்பொருள் உரிமையையும் அதற்காக உழைப்பவர்களையும் கொண்டாடுவது.
2. மென்பொருள் உரிமை பற்றிய பொதுவான புரிதலை உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களையும்,
பொதுவான தகுதரங்களையும் பயன்படுத்த மக்களை ஊக்குவித்தல்.
3. எல்லாருக்கும் கிடைக்கக் கூடிய எல்லோரும் பங்கெடுக்கக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்துவது.
4. உருவாகி வரும் தகவல் சார்ந்த சமூகத்தில் பொறுப்புக்களையும் கடமைகளையும் பற்றிய விவாதங்களையும்
ஊக்குவித்தல்.
5. இதே நோக்கத்தை கொண்டுள்ள நிறுவனங்களுடனும், தனி ஆட்களுடனும் இணைந்து செயல்படுதல்.

மேலும் செய்தியறிய கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்.
www.softwarefreedomday.org

நன்றி தமிழ் கம்ப்யூட்டர்.

திங்கள், 6 செப்டம்பர், 2010

மனநல காப்பகத்தில் ஒரு நாள்

மனநல காப்பகத்தில் இருந்த போது எழுதிய கவிதை.

உண்டு உண்டு
காப்பகம் உண்டு
காண்பதற்கினிய
செவிலிகள் உண்டு.
பாசம் காட்ட
பண்புடை அம்மை உண்டு
எல்லாம் தெரிந்தது எனக்கு
ஏனோ விடவில்லை சீக்கு.