வெள்ளி, 24 டிசம்பர், 2010

குறும்பாக்கள்

அமாவாசை அன்று
அம்புலியைத் தேடியது
அளப்பரிய இயற்கை.

ஆளிலாத் தனிமையில்
இன்பத்தேன்
கவிதைகள்.

செவ்வாய், 26 அக்டோபர், 2010

இதுவல்லவோ கவிதை.

படையே நடுங்கும்
பாம்புக்குப் பெயர்
நல்ல பாம்பு.

பேய்ப் படத்திற்குப்
பெயர்
"யாவரும் நலம்."

கறு கறு என இருக்கும்
ஆட்டிற்குப் பெயர்
வெள்ளாடு.

மரத்திலிருந்து
கொய்த பழத்திற்குப் பெயர்
கொய்யாப் பழம்.

முதலிரு வரிகளில் முரண்பாடு
மூன்றாம் வரியில் முத்தாய்ப்பு
இதுவல்லவோ கவிதை.

வியாழன், 23 செப்டம்பர், 2010

வேந்தனும், வீரையும்

"எங்களுக்குத் தெரியும்டா" நூலினை ஏழாவது முறையாகப் படித்துக் கொண்டிருந்தான் வேந்தன்.
நூலினைப் படிக்கும் பொழுதே நூலினூள் நுழைந்துவிடும் நடை அந்நூலினுடையது.
எண்ணியல் மயமாக்கப்பட்ட வேந்தனின் இல்லம் பெரும்பாலும் அயல்நாட்டு கண்ணாடிகளாலும்,
அலங்காரச் சிலைகளாலும் வேயப்பட்டிருந்தது. அத்தனையும் மறந்து நூலினுள் மூழ்கலானான் வேந்தன்.
நூலின் வனப்பு அதன் ஆசிரியரின் பெயரைக்கூட பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை மறக்கடிக்கச் செய்தது.

அவள் அழகிமட்டுமல்ல, வீரமிக்க பெண்ணுங்கூட. தனியாகச் செயல்களைச் செய்வதில் வல்லவள்.பெயர் வீரை.

இனி இவளைப்பற்றிச் சில வரிகள் பார்ப்போம்.
புதினம் எழுதும் புதுமை விழிகள்
வில்லொத்த புருவம்.
தொழில் திருட்டு.
நுனி போல் குத்தும் நாசி.
ஆரஞ்சுப்பழ சுளை உதடுகள்.

இன்னும் எழுத முடியாத அழகு மிகுதியாக இருந்தது வீரையிடம்.

நூலிலிருந்து வெளியேறிய வேந்தன் தண்ணீர் குடிக்கச் சென்றான்.
குளிர்பதனப் பெட்டியிலிருந்து ஒரு குவளை நீருடன் வந்தவன் மீண்டும் நுழைந்தான் நூலினுள்.
வீடு முழுதும் எண்ணியல் மயமாக்கப் பட்டிருந்தாலும் பழைய நூலினைப் படிப்பது வியப்பே.

ஒவ்வொரு வார்த்தைகளும் சேர்ந்திருந்த விதம் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றியது வேந்தனுக்கு.
கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் அவன் அருகில் இருப்பது போல் எண்ணிக்கொண்டே நூலினுள் மூழ்கலானான்.

வீரை உடும்பு கொண்டு வந்திருந்தாள். எண்ணியல் அறையைத் திருடுவதற்காக.
உடும்புப் பிடி பிடிக்க தூக்கி கட்டிடத்தின் மேற்கூரையில் எறிந்தாள் வீரை.

எதோ அரவம் கேட்டவன் போல் எழுந்த வேந்தன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
ஒன்றுமில்லை என்ற உடன் மீண்டும் நூலினுள் நுழைந்தான்.

வீரை கட்டிய கயிறு அவ்வளவு தடிமனாக இல்லை. ஆதலால் வீரையின் கயிறு அறுந்த‌து பாதி தொலைவு வந்தவுடன்.

கதை முடிந்திருந்தது.

நூலின் மேல் உள்ள காதலால் "எங்களுக்குத் தெரியும்டா" நூலினை எட்டாவது முறையாகப் படிக்கத் தொடங்கினான் வேந்தன்.

எதிலோ எங்கெயோ படித்தது.

நீல வண்ண என் வான் வீட்டை
வெள்ளைக் காரச் சிறுக்கிக்கு
வாடகைக்கு விட்டால்,
அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக‌
இத்தனை ஆணிகளா
அடித்துத் தொலைப்பது.

இது வைரக்கல்
இது கோமேதகக் கல்
என்று காட்டியவனிடம் கேட்டேன்
"உன் தொழில் என்ன?"
பதறாமல் வந்தது பதில்
"பதுக்கல்."

புதன், 8 செப்டம்பர், 2010

குறும்பாக்கள்

ஒழுங்கின்மையுடன் கூடிய‌
ஒழுங்கு
இசைப்புயலின் இசை.

ஒரே பக்கமுள்ள நாணயம்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

எங்கோ படித்தது.

மழையில் நனைய
மௌன அழைப்பு
மண் வாசனை.

காதுகளைப் பிடித்துத்
தூக்கியும் கதறவில்லை
கைப்பை.

மென்பொருள் உரிமை நாள்.

செப்டம்பர் 18 மென்பொருள் உரிமை நாள்.

மென்பொருள் உரிமை நாள் வரும் பதினெட்டாம் தேதி நடக்க உள்ளது.
இது ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் சனிக்கிழமை உலகெங்கிலும் கொண்டாடப் படுகின்றது.

குறிக்கோள்கள்

1. மென்பொருள் உரிமையையும் அதற்காக உழைப்பவர்களையும் கொண்டாடுவது.
2. மென்பொருள் உரிமை பற்றிய பொதுவான புரிதலை உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களையும்,
பொதுவான தகுதரங்களையும் பயன்படுத்த மக்களை ஊக்குவித்தல்.
3. எல்லாருக்கும் கிடைக்கக் கூடிய எல்லோரும் பங்கெடுக்கக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்துவது.
4. உருவாகி வரும் தகவல் சார்ந்த சமூகத்தில் பொறுப்புக்களையும் கடமைகளையும் பற்றிய விவாதங்களையும்
ஊக்குவித்தல்.
5. இதே நோக்கத்தை கொண்டுள்ள நிறுவனங்களுடனும், தனி ஆட்களுடனும் இணைந்து செயல்படுதல்.

மேலும் செய்தியறிய கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்.
www.softwarefreedomday.org

நன்றி தமிழ் கம்ப்யூட்டர்.

திங்கள், 6 செப்டம்பர், 2010

மனநல காப்பகத்தில் ஒரு நாள்

மனநல காப்பகத்தில் இருந்த போது எழுதிய கவிதை.

உண்டு உண்டு
காப்பகம் உண்டு
காண்பதற்கினிய
செவிலிகள் உண்டு.
பாசம் காட்ட
பண்புடை அம்மை உண்டு
எல்லாம் தெரிந்தது எனக்கு
ஏனோ விடவில்லை சீக்கு.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

துணுக்குகள்

இந்த உலகம் வெற்றி பெற்ற மனிதனின் தும்மலைக் கூட இசை என்கிறது. தோல்வி அடைந்த மனிதனின் இசையினைக் கூட தும்மல் என்கின்றது.

வைரமுத்து.

இந்திப் பாடலில் காதை வைத்திருந்த தமிழனின் காதுகளை தமிழ்ப் பாடல்களைக் கேட்க வைத்தவர் இசைஞானி.

இந்திப் பாடலில் காதை வைத்திருக்கும் இந்திக்காரனையும், ஆங்கிலப் பாடலில் காதை வைத்திருந்த ஆங்கிலேயனையும் தமிழ்ப் பாடலைக் கேட்க வைத்தவர் இசைப்புயல்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

பொறியன் திரைப்பாடல் திறனாய்வு

எந்திரன், இயந்திரன் என்பது எல்லாம் வடமொழி. பொறியன் என்பதே தமிழ் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

புதிய மனிதா பூமிக்கு வா என்பதில் வரும் பூ இசையணி ஆகும். அதைக் கேட்கும் பொழுதே நம்மையறியால்
பூ மிக்கு வா என்று பாடத்தோன்றுகின்றது. இருப்பினும் சாதனைப் பாடகர் எஸ்.பி.பி யின் குரலையே இசைப்படுத்தும்
பொறியால் இசையமைத்திருக்கிறது சற்றே நெருடுகின்றது. பின்னர் அவர் மனிதருக்குப் பாடவில்லை. பொறியனுக்கே
பாடியிருக்கிறார் என்றெண்ணும் பொழுது நெருடல் மறைகின்றது. சரணம் ஏற்ற இறக்கத்தோடு வருவது நம்மை புல்லரிக்கவைக்கிறது.
முதன் முறையாக இரகுமானின் மூத்த பெண் கதிஜா பாடியிருக்கிறார்.

அரிமா அரிமா வில் ஹரிஹரனின் குரல் பிளிறிவருகின்றது. படத்தில் நூறு இரஜினிகள் தோன்றுவார்கள் போலும்.

பூம் பூம் ரோபோ பாட்டில் யோகி.பி குரல் மேலோங்கி ஒலிக்கிறது. சுட்டி சுட்டி ரோபோ பட்டிதொட்டி எல்லாம் நீ பட்டுக்குட்டியோ:‍‍
பெண்குரலில் பாடலுக்கு மெருகேற்றுகின்றது.

இரகுமானும், கேஸியும் சேர்ந்து இரும்பிலே பூத்த இதயம் பாடியிருக்கிறார்கள். ஆங்கில வார்த்தைகள் வந்து போகின்றன.

காதல் அணுக்கள் பாடலை விஜய் பிரகாஷீம், ஸ்ரேயா கௌஷலும் பாடியிருக்கிறார்கள்.
பாடல் நாள் செல்லச் செல்ல மெதுவாக பேசப்படலாம்.

சின்மயி, ஜாவேத் அலியுடன் பாடும் கிளிமாஞ்சாரோவில் கின்னிக் கோழி,, ஆஹ்ஹா ஆஹ்ஹா
இனிமையாய் வந்து போகின்றது. சின்மயி தன் குரலை சற்றே மாற்றித்தான் பாடியிருக்கிறார்.

நரேஷ் ஐயரும், பென்னி தயாளும் குழுப்பாடகர்கள் ஆகி விட்டார்கள். "புதிய மனிதா...", "அரிமா அரிமா..."
ஆகிய பாடல்களில் அவர்கள் பாடியிருபபதை பாடலைப் பல முறை கேட்டால்தான் புரிகின்றது.

இரகுமானிடம் ஒரு கேள்வி: தமிழே தெரியாத பாடகர்களை வைத்து அதிகமாக பாடற் செய்கின்றீர்களே,
எப்பொழுது நமது புஷ்பவனம் குப்புசாமியினை இந்தியில் பாடவைக்கப் போகிறீர்கள்?

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

குறும்பாக்கள்

கமண்டலத்தில் அடைக்கப்பட்டுள்ள
கடல்
கூகுள்.


எழுதுகோலில்
மை தீரத்தீர ஒரு கவிதை
என்னவள் பெயர் நீளமானது.

புதன், 26 மே, 2010

திடீரென்று

திடீரென்று

என்டாப்பா..? படிச்சு முடிச்சாச்சு இனிமேல் என்ன பண்லாம்ன்னு இருக்க?
அப்பா வினவினார்.

"சிறுகதை எழுதலாம்ன்னு இருக்கேன். " இது மகன்.

"அதுக்குரிய இலக்கணம் தெரியுமாடா?" அப்பா கேட்டார்.
"திடீர்ன்னு தொடங்கி திடீர்ன்னு முடியணும். சுஜாதா சொல்லியிருக்காருப்பா."
"அப்படி என்னதான் எழுதியிருக்க பாக்கலாம்."
ஆர்வமாய்ப் பிடுங்கி இருந்த தாளில் ஒரே ஒரு வார்த்தை அமைந்திருந்தது.

திடீரென்று..

2020 ம்... அப்றம்

2020 ம்... அப்றம்

"அந்த பீட்டா பதிப்பை அப்பவே முடிச்சாசே.. இப்ப என்ன பண்றீங்க பொற்கோ?" இனியா கேட்டாள்.
"ஜீமெயிலே பீட்டாதான், அதை இன்னும் தோண்டியெடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்." இது பொற்கோ.

ம்ம்... சரி அரட்டை கச்சேரியே தொட்ங்கலாமே.

"நாம வாழறதே தமிழ்நாட்டுக்குத்தானே.." இது நீங்கள்.

"இல்லை இந்தியாவுக்குத்தான்." இது பொற்கோ.

"2020" பற்றியே பேசலாம்.இது நீங்கள்.

இரப்பர் மூலம் சாலைகள் அமைத்தல் வேண்டும்.
இது ஒரு சோதனை முயற்சிதான். சிறிதளவு மட்டும் செய்து விட்டு உந்துகளை ஓட்டிப்பார்க்க வேண்டும்.
விபத்துக்கள் நன்கு குறையும்.
பொற்கோ பேசும் அழகைக் கேட்டு இனியா வியப்பில் ஆழ்ந்தாள்.

மூலிகை எரிபொருள் கண்டறியப்பட வேண்டும்.
மூலிகை எரிபொருள் வந்தால் அண்டத்துக்கு எந்த தாக்கமும் இராது. ம். ..அப்றம் இது நீங்கள்.

லினக்ஸ் கோலோச்ச வேண்டும்.
சர்வரில் redhat இயங்குதளமும் கிளைண்டில் உபுண்டு இணையதளமும் இருக்க வேண்டும்.
ஏனெனில் வைரஸ் என்னும் பேச்சுக்கு லினக்ஸில் இடமே இல்லை.

மாறி வரும் பருவ நிலையினை கட்டுப்படுத்த வேண்டும்.
Global Warming சரி செய்யப்பட வேண்டும்.

இந்தியா இலங்கை பாலம் கட்ட வேண்டும்.
பாரதி பாடியபடி சிங்கள நாட்டிற்கோர் பாலம் அமைப்போம்.

காவிரியும் கங்கையும் இணைக்கப்பட வேண்டும்.
அதைச்சுற்றி தொடர்வண்டி, சாலைகள், பூங்காக்கள் அமைக்க வேண்டும்.
இராசஸ்தான் பாலைவனமே இருக்காது.
கங்கை நீர் இமையத்திலிருந்தே வருவதால் வற்றாத ஆறு காவிரி ஆகிவிடும்.
மக்கள் தொகை அதிகம் இருப்பது ஒரு வகையில் நல்லதுதான். நிறைய ஆற்றல் கிட்டும்.

அரட்டை முடிந்து பொற்கோ மீண்டும் பீட்டா பதிப்பினுள் நுழைந்தான் புன்முறுவலோடு.
உங்களுக்கு கையத்துவிட்டு இனியாவும் திட்ட அறிக்கை செயல்பாட்டில் இணைந்தாள்.

இதையெல்லாம் யார் செய்வது என்று எண்ணிக் கொண்டிருக்காமல் இருங்கள்..

பொற்கோ சொன்னகதையினை செயல்படுத்துபவர் நீங்களாகவும் இருக்கலாம்.

கற்க,கற்க

பாலிண்ரோம்  (திருப்பிப் போட்டாலும் அதே சொல், பொருள் வரும்.) என்ற வார்த்தை ஆங்கிலத்திலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கிணையாக தமிழிலும் வார்த்தைகள் உண்டு.

"விகடகவி"
,"தேரு வருதே".
"சிவா நீ வாசி."

போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்.
தமிழில் இவற்றைச் சரளமாக அமைக்க ஒற்றெழுத்துக்கள் தடையாக இருக்கின்றன.
தமிழில் ஒற்றெழுத்துடன் கூடிய ஒரே ஒரு பாலிண்ட்ரோம் "கற்க" மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் "காக்கா", "பாப்பா", "தாத்தா" போன்றவைகளும் பாலிண்ட்ரோம்கள்தாம் என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன்.

சனி, 8 மே, 2010

தமிழுக்கும் அமுது என்று பேர்

தமிழ் தமிழ்
எனக்கூறின்
வரும் அமிழ்து.
எனவே தான் பாரதிதாசன் குறிப்பிட்டார் தமிழுக்கும் அமுது என்று பேர்.


தமிழ் தமிழ் என்று சொல்லுங்கள் அமிழ்து என்று ஒலிக்கும் தமிழ்.

தமிழ் இனி மெல்ல வாழும்.

இயற்றமிழ்,
இசைத்தமிழ்,
நாடகத் தமிழ்,
அறிவியல் தமிழ்

என தமிழை நான்கு வகைப் படுத்திப் பார்ப்பின்


வெல்லத் தமிழ் இனி மெல்ல வாழும்.
வகைப்படுத்துங்கள்.
தமிழை வாழ வையுங்கள்.

பச்சை

இக்கரைக்கு அக்கரைப் பச்சை. அக்கறை இருந்தால் எங்கும் பச்சை. அக்கறை உண்டு. இப்போதும் எங்கும் பச்சை.

சனி, 13 மார்ச், 2010

எழுதிச் செல்லும் விதியின் கை எழுதியெழுதி மேற்செல்லும்.

நேர்மைப் புரட்சி ஏற்படுங்கால், அச்சுறுத்தும் தன்மை நீங்கி விடும். அரசாட்சி ஏற்படும். அங்கே எல்லோரும் அரசர்கள்தாம். முதல்வரும் பேருந்தில் பயணம் செய்வார் மக்களோடு மக்களாக. தமிழ் பேசுவார். நடுவண் அமைச்சரும் தூய தமிழ் கற்றுக் கொண்டு பேசுவார் எப்பொழுதுமே. நேர்மைப் புரட்சி ஏற்படின் பிணமும் தமிழ் பேசும். அச்சுறுத்தல் தன்மை வேரறும். எழுதிச் செல்லும் விதியின் கை எழுதியெழுதி மேற்செல்லும். கை யாருடையது. கை கடவுளுடையது.

வியாழன், 11 மார்ச், 2010

நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

"நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்று ஒரு சொலவடை உண்டு. 
விளக்கம்:
"கல்லில் வடிக்கப்பட்டிருந்த நாயின் சிலையினை, நாய் என்று நினைத்துப் பார்த்தால் அது நாய். கல்லென்று நினைத்துப் பார்த்தால் அது கல்." என்பது விளக்கம்.
மறுப்பு:
இதை இக்காலச் சிறார்கள், நாய் வருகின்றது, கல்லை எடுத்தால் அது ஓடிவிடும். ஆகவே நாயைக் கண்டால் கல்லைக், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பர்.
தவம்:
நாயாக வடிக்கப்பட்ட சிலையே உயிர் கொண்டு எழுந்து குரைக்கும் என்றெண்ணி தவம் செய்தால், அந்தக்கல்லும் நாயாக மாறும் தருணம் வந்தே தீரும் என்பது தவம். அவ்வாறு குரைக்கும் கால் அஃது கல் அன்று; கடவுள்.

புதன், 10 மார்ச், 2010

அமிபா கதை

பழந்தாழியிலிருந்து
புதுக்குரல் ஒன்று கேட்டது
"நான் நான்" என்று.

பின்பு அஃதே
"நாம்" என்று எதிரொலித்தது நன்று.

வியாழன், 4 மார்ச், 2010

நான்

அவரைப் பற்றித்தான் பேசுகிறார்களாம் - ஆனால்
அவருக்குத் தெரியவில்லையாம் - அவர்
குழந்தையா?
பிணமா? - இல்லை
அவர் கடவுள்.

செவ்வாய், 2 மார்ச், 2010

நானின் தற்போதைய தருணம்.

தன்மையுடையவனாயிருந்தும்
முன்னிலையில் விளிக்காமல்
படர்க்கையில்  விளிக்கிறார்கள் ப‌லர்.

என் படர் கை பார்ப்பின்
முன்னிற்காமல்
தன்மையடைவர் சிலர்.

தமிழிலக்கணப்படி
"நான்" தன்மையே.
அது படர்க்கையானது பெருவியப்பே.

தன்மையினை படர்க்கையாய்
விளித்தமையால்

தன்மையா?
முன்னிலையா?
படர்க்கையா?
என விழிக்கிறது நான்.

"நாம்" என்பதே "நான்" ஆகிய பிறகு,
நானை, "நாம்" என்று விளிப்பதே தகும்.