சனி, 12 மார்ச், 2016

வாகை சூடிய வாமணி - எழுத்தாளர் வா.மணிகண்டனுடன் ஒரு நேர்காணல்



எழுத்தால் ஈட்டிய இன்பொருள் கொண்டு
ஏழை மாணவர் இதயம் பயில‌
ஆறுதல் தந்து அறப்பணி செய்யும்
வண்ணம் மிகுந்த வாமணி நீயே.



கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் சுஜாதா எழுத்தில் வரும் ஓர் உரையாடல்,
ஒர் எழுத்தாளனைப் பேசச்சொல்வது முதல் தவறு"
மாதவனின் இந்த உரையாடல் கேட்டு அவையே படத்தில் கைதட்டும். நாமும் அது போலத்தான் பூனை போல் இருக்கும் ஓர் எழுத்தாளர் என்ன பேசுவார் என்ற நோக்கில் வா.மணிகண்டன் இல்லம் சேர்ந்தோம். அமைதியாக வரவேற்பறையில் அமர வைத்து, “வாங்க.. போங்க..” கொங்குத் தமிழில் இனிமையாகப் பேசினார்.
இவரைப்பற்றி “ஈரோடு மாவட்டம் கரட்டடிபாளையம்” என்று தட்டினால் இணையம் காண்பிக்கிறது. சுருங்கக்கூறினால், இவரது பிள்ளையை, குடும்பத்தை இவரது பெற்றோர் பார்த்துக் கொள்வதால் இவரால் எழுத்துலகில் பரிமளிக்க முடிகிறது. வலைப்பூ எழுத்தாளர்”, “நிசப்தம் அறக்கடளை நிறுவனர்”, “கடலூர் வெள்ளத்திற்கு அறுபது இலகரங்கள் உதவியவர்”, “2016 ஆம் ஆண்டுக்கான டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவ ராக ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்”. என்று இவரது பேர், புகழ் கூடிக்கொண்டே போனாலும் துளியளவும் செருக்கின்றி இனிதாய் அளவளாவுகிறார். அவரது உரையாட்டிலிருந்து நாம் தொகுத்தவை.
எழுதத் தூண்டு கோலாக இருந்தது?
எழுத்தாளர் சுஜாதாதான். அவர் எழுத்தைப் படித்தது, அவர் ஒரு வாரத்தில் ஏழு நாட்களில், ஏழு கதைகள், எழு இதழ்களில் எழுதியிருக்கிறார். எந்தக் குழப்பமுமில்லை. எழுத்தில் யாருமே செய்யாத ஒன்று இது.”
அதோடு மூன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழிக்கல்வி கற்றதுதான். எழுத்தாளர் மனுஷ்யபுத்ரனின் அறிமுகம் கிடைத்தது. அவர் புதிய இலக்கியங்களின் பக்கம் எனது ஆர்வத்தைத் திருப்பி விட்டார்.”
அறக்கட்டளை எண்ணம் எப்படி வந்தது?
குடும்பப் பொறுப்புமில்லாமல் இந்த வயதில் வாழ்க்கை வாய்ப்பது வரம் என்று புரிந்து கொண்ட போதுதான் நிசப்தம் அறக்கட்டளையைத் தொடங்கும் எண்ணம் உதித்தது. எழுத்துல கெடைக்கற பணத்த என்ன செய்யறது அப்டீன்னு நெனைக்கறப்பத்தான் இந்த மாதிரி எண்ணம் வந்தது. அறங்காவலர், பொறுப்பாளி (trustee) அப்டீன்னு நா. யாரையும் சேக்கல. அலுவலகமும் இல்ல. என்னோட வீடுதான் அலுவலகம். என்னப்பத்தி தெரிஞ்சவங்க. நண்பர்கள். எல்லாரும் உதவுறாங்க. ஏழை மாணவர்களுக்கு என்னால முடிஞ்சதைச் செய்யறேன்.”
நிசப்தம் அறக்கட்டளைக்கு வெள்ள நிவாரண நிதி அறுபது இலகரங்கள் வந்திருக்கே. ஆனந்த விகடன் நம்பிக்கை மனிதர்கள் வரிசையில வந்திருக்கிங்க‌ எப்படி இருக்கு இந்த சேதி?
எல்லாமே தானா நடக்கறதுதான். நா. கடலூர்ல வெள்ள நிவாரணத்துக்கு ஒதவுறதப் பாத்துட்டுதான், அறக்கட்டளைக்கு பணம் நெறைய வரத் தொடங்கிச்சு. 2015ல ஆனந்த விகடன்ல என்னோட கலந்துரையாடல் நடத்தினாங்க. இப்ப 2016ல தேர்ந்தெடுத்திருக்காங்க. நாம செய்யறத நாம செய்யறோம் அவ்வளவுதான்.”
எப்படி எழுதுகிறீர்கள்?
தமது வரவேற்பறையில் அகன்று இருக்கும், ஒளி உமிழ் இருமுனையத் தொலைக்காட்சியைக் (LED-Light Emitting Diode TV) காட்டிப் பேசுகிறார். “நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. பத்து மணிக்கு எல்லோரும் உறங்கப் போய் விடுவார்கள். நமக்கு பத்துலர்ந்து ரெண்டு மணிவரைக்கும் நேரம் இருக்குது. இந்த நேரத்துல நான் எழுதறதுதான் இதழ்கள்ல நாளேடுகள்ல‌ வர்றது.”
தொலைக்காட்சி பாக்கறதில்லைங்கறீங்க, ஆனா ஒங்க செல்லுலாய்ட் சிறகுகள் அயல் நாட்டுப்படங்கள் பத்தி பேசுதே” இது நாம்.
சிரிப்புடன் தொடர்கிறார். “நா.. பாக்கறதேல்லாம் அடர் குறுவட்டுத்தான் (DVD). வாரத்துக்கு இரண்டு படம் அயல் மொழில பாத்துருவேன். அதப்பத்திதான் செல்லுலாய்ட் சிறகுகள்ல எழுதிக்கிட்டு வர்றேன். சில உதவி இயக்குநர்கள் கூட அவங்க படத்து எதாவது உதவி கேக்கறாங்க. ஆனா இன்னும் என் பேர போடத் தொடங்கல.”
எழுத்தின் எதிர்காலம் எப்படி?
எழுத்திற்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது. என்ன எழுத வேண்டும் என்று மட்டும் மனதில் கொண்டு எழுதத் தொடங்குங்கள். ‘எல்லோரும் புகழ வேண்டும்’, ‘நிறைய பணம் ஈட்ட வேண்டும்’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எழுதினால் மக்கள் உங்கள் எழுத்தைப் புறக்கணிக்கக்கூடும். நீங்கள் எழுதுவதை ஈடுபாட்டுடன் செய்து வந்தால் அதற்குரிய சன்மானம் உங்களை வந்து சேரும். தொடக்கத்தில் நான் வலைப்பூவில் எழுதத் தொடங்கிய நேரம், முகந்தெரியாத ஆட்களின் வசைமொழி காரணமாக கருத்துரைப் பெட்டியையே, எடுத்து விட்டேன். இப்போது என் தளத்தில் கருத்துரை இருக்கிறது. இன்று என்னை எழுத்தாளன் என்று கொண்டாடுகிறார்கள்.” சிரிக்கிறார்.
இன்று எல்லாமே கணினியுகம். நாமும் அதோடு சேர்ந்து போராட வேண்டும். நாம் எதேனும் ஒன்று எழுதினால் அதைப்படித்துப் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் செயல்பட வேண்டும். நான் கூட, ‘அறிவில் அம்மணமாக இருக்க வேண்டும்.’ என்று எழுதியிருக்கிறேன். தெரியாததைப் பற்றி எழுதி வாங்கிக்கட்டிக் கொள்ளக்கூடாது. இன்று தொழிற்நுட்பத்தில் எதுவும் தெரியவில்லை என்றால், எல்லாரும் கூகுளில் தேடுகிறார்கள். யாரும் நூலினை எடுத்துப் படிப்பதில்லை. சுவையாரத்தோடு எழுதினால், கண்டிப்பாக நமது எழுத்து மக்களைச் சென்று சேரும்.
தமிழ் கம்ப்யூட்டர் போன்ற தொழிற்நுட்ப இதழ்கள் படிப்பதுண்டா?
தொடர்ந்து வாசிப்பதில்லை. நேரம் கிடைக்கும்பொழுது வாசிப்பதுண்டு. தமிழ் கம்ப்யூட்டர் நன்றாக செய்கிறார்கள். இருப்பினும், தொழிற்நுட்ப உலகில் போட்டி போட‌ இன்னும் தகவல்களை அள்ளித்தர வேண்டும். இல்லையெனில் தொழிற்நுட்ப இதழ்களை இணையம் விழுங்கிவிடும். இது எதிர்மறையானது அல்ல. நாணயத்தின் மறுபக்கம். (Other side of the coin)” நாம் கொடுத்த தமிழ் கம்ப்யூட்டர் இதழினை பெற்றுக்கொண்டே தெளிவுபட பேசினார் வா.ம‌.