திங்கள், 24 நவம்பர், 2008

பென்ஹர் (Benhur)

பென்ஹர்

பென்-ஹர் திரைப்படம் பல ஆண்டுகளுக்கு(1959) முன்பு எடுக்கப்பட்டிருப்பினும் அதன் நேர்த்தி நம்மை இன்னும் வியக்க வைக்கிறது. பதினொரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற முதல் திரைப்படம் என்பது படத்தின் மற்றொரு சிறப்பு. மூன்று மணிநேரம் இருபத்து ஆறு மணித்துளிகள் ஓடும் இப்படத்தினை மென்பொருள் உதவி கொண்டு எளிமையாகக் காணமுடிகிறது. படத்தில் ஒவ்வொருவரின் உழைப்பும் தென்றென விளங்குகிறது. இசை அக்கால தொழிற்நுட்பத்துடன் ஒலிக்கிறது. ஒவ்வொரு காட்சியும் தெள்ளிய நீரோடை போன்று பதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு அல்லது மூன்று ஒளிக்கருவிகள் (பெரும்பாலும் இரண்டுதான்) ஒரு காட்சியினை பதிவது இந்நாட்கள் சுவைஞர்களால் எளிதில் உணரப்படுகிறது.

---

படம் மெதுவாகத் தொடங்கி சிறிது சிறிதாக விரைவாகிறது பின்பு மெதுவாகிறது பின்பு விரைவாகிறது. குறிப்பிட்ட சில காட்சிகளை மென்பொருள் வரைகலை இல்லாத அக்காலத்தில் வெறும் கலை மட்டும் கொண்டு எடுத்திருப்பதுதான் படத்தின் மேன்மை பொருந்திய தன்மையாகும். எடுத்துக்காட்டாக இரண்டு காட்சிகள். அடிமைகள் கப்பல் இழுப்பது, குதிரைப்பந்தயம். இனிமேல் இதுபோன்ற காட்சிகளை வெறும் கலை மட்டும் வைத்துக்கொண்டு மென்பொருள் வரைகலையின்றிச் செய்வது சாத்தியமேயன்று என்று சொல்லவைக்கிறது. படம் கி.பி.26ல் தொடங்கி இயேசுநாதர் காலத்தில் நடக்கிறது. இயேசுநாதர் பென்-ஹருக்குத் தண்ணீர் கொடுக்கிறார். மலைபொழிவு நடத்துகிறார். எல்லாம் தொலைவிலேயேதான் நடக்கிறது.

---

இறுதியில் சிலுவை சுமக்கும் பொழுது பென்-ஹர் அவருக்குத் தண்ணீர் கொடுக்கிறது போல் வரலாற்று நிகழ்வினையும் கற்பனையையும் கலந்தாற் போன்று செல்கிறது கதை. (தசாவதாரம் தமிழில் வரலாற்று நிகழ்வோடு கோர்த்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்பதறிக.) இயேசு செல்லும் வழியில் இருக்கும் தொழுநோயால் இன்னலுறும் பென்ஹரின் தாய், தங்கை இருவரும் குணமடைவது கிறித்தவர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை.

---

இது போன்ற படங்களைப் பார்த்து அவ்வப்போது தங்கள் அறிவினையும் நடிப்புத்திறனையும் இக்கால நடிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். அக்கால‌ நடிகர்கள் அவ்வளவு தேர்ந்த நடிப்பினைக் காட்டுகிறார்கள்.

---

இத்தனை நாட்கள் தாண்டியும் இதைப்பற்றி திறனாய்வு செய்யத்தூண்டும் வண்ணம் எடுத்திருப்பதுதான் கலையின் விலை. கலையின் வெகுமானம். பின்னாளில் எடுக்கப்பட்ட டைட்டானிக், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள் கூட இந்த பதினொரு ஆஸ்கர் விருதுகள் வாங்கி நிகரடைய நிறைய மெனக்கெட்டிருக்கின்றன. ஆனாலும் மென்பொருள் வரைகலையின்றி அக்காலத் தொழிற்நுட்பத்தில் செய்யப்பட்ட இப்படம் காலத்தால் அழிக்க இயலாதது என்பதில் ஐயமில்லை.

---

படுக்கயறைக் காட்சிகள் இல்லை. கெட்ட வார்த்தைகள் இல்லை. நாயகன் இயற்கை இறந்த நிகழ்வுகள் எதுவும் செய்யாமல் நாயகனாக விளங்குகிறார். சற்று மேம்பட்ட நிகழ்வுகள் அவரால் செய்யப்படினும் அதற்கு அவர் தகுதியானவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. நல்லபடம் பார்த்த நிறைவு கிடைக்கிறது. குதிரைப்பந்தய காட்சிக்காக இப்படத்தினை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.

0 Comments: