திங்கள், 3 ஆகஸ்ட், 2009

இன்னா செய்தாரை குறள்படி ஒறுத்தல் இந்நாட்களில் இயலுமா????

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."
அருமையான குறள். கி.முவிலேயே திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.

இதற்கொப்ப வாழ்ந்தவர் என்று சொன்னால் இயேசு பெருமானை மட்டுமே சொல்ல இயலும். தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக ஆண்டவரிடம் இறைஞ்சியவர் அந்த மாபெருமான்.

பின்னாளில் வந்தவர்கள், நமது நாட்டுத்தந்தையினைச் எடுத்துக்காட்டாகச் சுட்டுகையில், "உண்மையுடன் தமக்கு நேர்ந்த தேர்வுகளை நூலில் மறைக்காமல் எழுதியுள்ள ஒரே தலைவர். "என்றே இன்றும் பறைசாற்றிவருகின்றார்கள்.

அவரும் ஓரளவு எதிரிகளை ஒறுத்துவிட்டார் என்றே தோன்றுகிறது. அறப்போர் முறையில் விடுதலை பெற்றுத்தந்தவர் தமக்கென ஒரு சமயத்தைத் தோன்றுவிக்காதது பேராறுதல்.

அதையெல்லாம் விடுங்கள். இன்னா செய்தாரை குறள் படி ஒறுப்பவரின் (யாராவது உள்ளனரா?) இன்றைய உடனடி நிலை என்ன‌ என்பது எல்லோருக்கும் தெரியும். பின்னாளைய நிலையினை வரலாறுதான் கூறவேண்டும்.

உவத்தல் என்றால் கெட்ட வார்த்தையா?

கெட்ட வார்த்தைகள் பொதுவாக இரண்டு தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று சினம், வெறுப்பு, மனக்கசப்பு. இரண்டாவது, கிண்டல், விளையாட்டு, நகைச்சுவை. ஆனால் கெட்டவார்த்தைகள் பேசுதல் குமுகாயத்தில் ஒரு எதிர்மறை விளைவாகவே கருதப்படுகின்றன.
பற்பல கெட்டவார்த்தைகள் புழக்கத்தில் இருப்பினும், அவை தொன்று தொட்டு பொதுவார்த்தைகளாகப் பயன்படுத்தப்பட்டு,காலம் மாறமாற கெட்ட வார்த்தைகளாக மாறிவிட்டன‌.

இவைகள் எல்லாம் வழக்கின் திரிபே. பொதுவாக மொழியில் இயல்பாகவே கெட்ட வார்த்தையாக இருப்பவை எவையுமில்லை என்றே சான்றோர்கள் கூறுகின்றார்கள்.

உவத்தல் என்றால் மகிழ்தல் என்று தமிழில் பொருள். உவகை என்றால் மகிழ்ச்சி என்று தமிழ் வழிக்கற்றலில் வரும் மக்கள் நன்கு உணர்வர். "உ" வுக்கு ஒலியில் வரும் இணை "ஒ" என்ற எழுத்தாகும்.எனவே அதுவே திரிந்து ஒவத்தல் என்றானது.

"உன்னை", "உனக்கு" என்பவைகள் "ஒன்னை", "ஒனக்கு" என்று மாறியிருப்பது ஒலியின் திரிபே என்பதை சொல்ல சொல்லாராய்ச்சியாளர்கள் தேவையில்லை.

"உவத்தல்"தான் சென்னை வழக்கில் "...த்தா.."என்றாகி எழுத்து வடிவம் பெறாமல் ஒலி வடிவோடு நின்று விட்டது இக்கட்டுரையில்.

பார்த்தீர்களா.. மகிழ்தல் என்னும் வார்த்தை எவ்வள்ளவு இழிவாக ஒலிக்கிறது.!!! இதுபோலத்தான் கெட்டவார்த்தைகள் உருவாகின்றன. வரம்பு மீறிய பாலுறவுகளை வெளிப்படுத்தும் சொற்களும்,கெட்ட வார்த்தைகளாக மாறிவிட்டன.

"தக்காளி"க்கு எதுகைச்சொல் எது என்றால் எல்லாருக்கும் தெரியும். தெருவிலிருந்து திரைவரை இச்சொற்கள் விரவிக்கிடக்கின்றன.

இது போன்றகெட்ட வார்த்தைகள் பற்றி செயமோகன் எழுதிய கட்டுரையினைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

"கெட்ட வார்த்தைகள் தவிர்த்து நல்ல வார்த்தைகளை நாடோறும் பேசிவர அகமும் புறமும் தூய்மையாகும்." என்பதை உள்ளத்துப்பள்ளத்தில் நினைக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான அறிவுரை.