திங்கள், 17 செப்டம்பர், 2012

தேனினும் இனியது இந்த இசை


   ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தூக்கத்தைக் கெடுத்த அருமையான நிகழ்ச்சிவிடுமுறை நாளாதலால், வழக்கமாகத் தூங்கலாம் என்று நினைத்த பொழுது செயா தொலைக்காட்சியில் நீதானே என் பொன் வசந்தம் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாகியது. படத்தின் பாடல்களை ஏற்கனவே கேட்டும், பலவகையான திறனாய்வுகளை[1] வலைப்பூக்களில் படித்தும், பட்டும் கொண்டிருந்தாலும், இசைஞானியின்[2] நிகழ்ச்சியாதலால் பார்க்கவே மனதிற்குத் தோன்றியது. சரியாக பிற்பகல் 2:30க்கு தொடங்கிய நிகழ்ச்சி முடிய மாலை 7:30 மணி ஆகிவிட்டது. நிகழ்ச்சியில் பல இயக்குநர்களின் படுதல்கள்[3] பகிரப்பட்டன. எல்லாரும் பொறாமைப்படும் மனிதராக படத்தின் இயக்குநர்[4] பேசப்பட்டார்படத்தின் பாடல்கள் அனைத்தும் நிகழ்நேர இசையுடன்[5] பாடப்பட்டன. சரியாக எண்பதுகளிலேயே ‌தமிழ் திரையிசையில் மறக்கப்பட்ட‌ நிகழ்நேர இசை மீண்டும் வந்தது இனிமை.
   நிகழ்நேர இசையில் வறட்டு இழுவைக் கருவிகளிலும்[6], நீண்ட ஊதி[7] கருவிகளிலும் வாசிக்கப்பட்ட இசைஞானியின் சில திரை இசைப்பாடல்களின் பகுதி[8] நிகழ்ச்சியில் முதலில் வாசிக்கப்பட்டது.
அவையானவை பின்வருமாறு:
 1. எந்தப்பூவிலும் வாசமுண்டு (முரட்டுக்காளை)
 2. தென்பாண்டி சீமையிலே (நாயகன்)
 3. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் (நானே ராஜா நானே மந்திரி)
 4. ராஜா கையவச்சா (அபூர்வ சகோதரர்கள்)
 5. கண்மணி அன்போடு (குணா)
 6. சுந்தரி கண்ணால் ஒரு சேதி (தளபதி)
 இந்தப்பாடல்களை இதுவரை வார்த்தைகளோடு கேட்ட நாம், வார்த்தைகள் இல்லாமல் கேட்ட பொழுது கிடைத்த இனிமையே தனி.
 இந்தப்பாடல் இசையினை வாசித்த ஆங்கிலக்கலைஞர்[9] இசைஞானிக்கென்று ஒரு தனி மொழி இருக்கிறது என்று கூறிய விதம் நம்மை மகிழவும், பெருமிதம் கொள்ளவும் வைத்தது.
  படத்தின் இயக்குநர், நான் விரும்பிய ஐந்து பாடல்களைப் நீங்கள் பாட வேண்டுமென்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே கூறியவுடன் "அதுசரி" என்று தொடங்கிய ஞானி, பின்வரும் பாடல்களைப் பாடியதோடு மட்டுமல்லாமல், சில நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார்.
 1. கோடைகால காற்றே... (மறைந்த மலேசியா வாசுதேவன் பாடியது)
 2. கண்மணியே காதல் என்பது... - ஆறிலிருந்து அறுபது வரை (எஸ்.பி.பாலசுப்ரமண்யம், எஸ்.ஜானகிஇந்தப்பாடல் அந்தக்காலத்திலேயே வெட்டி ஒட்டப்பட்டது.
 3. அடி ஆத்தாடி... - கடலோரக்கவிதைகள் (இளையராஜா, எஸ். ஜானகி)
 4. ஒரு பூங்காவனம்... - அக்னி நட்சத்திரம் (எஸ். ஜானகி) நீச்சல் குளத்தில் பாடப்படும் பாடல் என்று சொன்னவுடன் தான் செய்த மெட்டையும், அதற்கு பொருத்தமான சரணம் வர தான் பட்ட பாட்டையும் அவர் கூறியது சிறப்பு.
 5. தென்றல் வந்து... - அவதாரம் (இளையராஜா, எஸ். ஜானகி)
   இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இப்படத்திற்கு நாட்டின் மிக உயரிய விருது[10] கிடைக்கும் என்று கூறியவுடன், அது தனக்குத் தேவையில்லை என்று கையசைத்தது, அவர் ஞானிதான் என்பதை இன்னொரு முறை உறுதிப்படுத்தியது.
   படத்தின் இயக்குநருக்கு இருக்கும் பல பெண் துணை இயக்குநர்கள்[11] போல, இசைக்கலைஞர்களிலும் பல பெண்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
   இசைக்கருவிகளின் ஆதிக்கம் அதிகமாகவும், உரத்த குரலில் கத்துவதை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தலைமுறை, இது போன்றதொரு இசையும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இது போன்ற இசையினை இசைஞானியால் மட்டுமே கொடுக்க இயலும். படத்தின் பாடல்கள் கேட்கக்கேட்க அனைவருக்கும் பிடிக்கலாம்.
   இது போன்ற முயற்சிகள் தொடர வாழ்த்துவோம்.

[1]  விமர்சனங்கள்
[2] இளையராஜா
[3] அனுபவங்கள்
[4] கௌதம் வாசுதேவ் மேனன்
[5]  Live Concert
[6]  Violion, Bow
[7]  Trumpet, Clarinet
[8]  Part of the music
[9]  Conductor Nick
[10] National Award
[11] Anjana, Janet

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: சிவாஜி
இசை: ஏ.ஆர். இரகுமான்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம், ரெஹைனா, கார்த்திக் குழுவினர்.

தொகையறா

சூரியனோ சந்திரனோ யாரிவனோ
சட்டென சொல்லு
சேரப்பாண்டிய சூரனுமிவனா சொல்லு சொல்லு
சட்டென சொல்லு (2)

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கெட்டதைப் பட்டென சுட்டிடும் சிவனோ

பல்லவி

ஏ பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா
மெட்ராஸுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லேலக்கா பல்லேலக்கா ஒட்டுமொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா
ஓஹோ தாவணி பெண்களும்
தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா
நம்ம களத்துமேடு கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு

சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி
படுபடுபடுவென போர்த்திய புல்வெளி
தொடத்தொடத்தொடத்தொட உடைகிற பனித்துளி
சுடச்சுடச்சுடச்சுட கிடைக்கிற இட்டிலி
தடதடதடவென அதிர்கிற ரயிலடி
கடகடகடவென கடக்கிற காவிரி
விறுவிறுவிறுவென மடிக்கிற வெற்றிலை
முறுமுறுமுறுவென முறுக்கிய மீசைகள்
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
(சூரியனோ) (2)
(ஏ பல்லேலக்கா)

சட்டென சொல்லு சட்டென சொல்லு

சரணம் 1

ஏலேலே கிராமத்துக் குடிசையிலே
கொஞ்ச காலம் தங்கிப் பாருலே
கூரையின் ஓட்டை விரிசல்வழி
நட்சத்திரம் எண்ணிப் பாருலே
கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அணைத்து
கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்
ஆலமரத்துக்கு ஜடையை பின்னித்தான்
பூக்கள் வைக்கலாமே
ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்
பென்சில் சீவலாமே
(ஏ பல்லேலக்கா)
(காவிரி ஆறும்)

சட்டென சொல்லு சட்டென சொல்லு

சரணம் 2

ஏலேலே அஞ்சறைப் பெட்டியிலே
ஆத்தாவோட ருசியிருக்கும்
அம்மியில் அரைச்சு ஆக்கி வச்ச
நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்
ஆடுமாடு மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லிக் கேட்கும்
வெறும்தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்
வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணு எங்கும் வீசும்
பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு
பேயும் ஓடிப்போகும்
பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்
(ஏ பல்லேலக்கா)
(காவிரி ஆறும்)

திங்கள், 3 செப்டம்பர், 2012

அறிவுக்குக் கேள்விகள் ஏழு-நேர்காணல்


பா.அறிவு ஆரோக்கிய இராஜேஷ்
அறிவு - பெயருக்கேற்ப சிறந்த அறிவாளி. அண்மையில் மென்பொருள் சோதனைக்  குழுத்தலைவராக (software test lead) ஆகி இருக்கும் இவருடன் ஒரு நேர்காணல்.
இவரைப் பற்றிய ஓர் எளியஅறிமுகம். திருச்சி புனித வளனார் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் படித்து, பிலானி பிட்ஸில் முதுகலை படித்துத் தேறியவர்.  இவர் தமிழ் கம்ப்யூட்டர் இதழ் வாசகர்களுக்காக அவ்வப்போது கணினிக்கதைகளையும், தொழிற்நுட்பச் செய்திகளையும் எழுதிவரும் பா.நி..பிரசன்னாவின் இளவல்.
முதலாவது கேள்வி: நீங்கள் தமிழ்வழிக் கல்வி கற்றவராயிற்றே, எப்படி மென்பொருள் நிறுவன நேர்காணலை எதிர்கொண்டீர்கள்?
“நல்லது. பொதுவான மாணவர்களைப் போல் நானும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழிலேயே கல்வி கற்றேன். இளநிலைப் பாடம் படிக்கும் பொழுது சில சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் என்னுடன் படித்த வேறு மாநில மாணவர்களோடு தப்புத்தப்பாக ஆங்கிலம் பேசியே கற்றுக்கொண்டேன். இதைச் சொல்வதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. நேர்காணலின் போது எனது கணினி அறிவினையும் (computer knowledge), அலசல் திறமைகளையுமே (analytical skills) நிறுவனத்தினர் சோதித்தனர். ஆக நேர்காணல் எளிமையாகவே அமைந்தது. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் தமிழ்வழிக்கல்வி கற்றவர்களும் வெற்றியடையலாம். முன்னாள் குடியரத்தலைவர் அப்துல் கலாம் அவர்களும் கூட தமிழ்வழிக் கல்வி கற்றவர்தான்.”
கேள்வி 2: தொழில் மறைசெயல் என்று சொல்லக்கூடிய Job Secret பற்றிச் சொல்லுங்கள்.
“பொதுவாக எந்த ஒரு நிறுவனத்திலும் சமநிலை வேலை அமைவு (balanced work) இருக்காது. அதுவும் இந்தியாவில் அது இருக்கவே இருக்காது. எனவே சில நாட்கள் வேலை அதிகமாகவும், சில நேரங்களில் வேலையே இல்லாமலும் இருக்கும். பன்னாட்டு கணினி நிறுவனங்கள், கடின உழைப்பை (hardwork) விட புதுமை உழைப்பினையே (smart work) விரும்பி ஏற்றுக் கொள்கின்றன. நீங்கள் எப்போதும் புதுமையாக‌ (ஸ்மார்ட்டாக) இருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் (team members) உங்களை மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் நீங்கள் வேலையை இழக்க நேரிடும். எனக்குத் தெரிந்த வகையில் இதுதான் தொழில் மறைசெயல்.”
“மேலும் நிறுவனங்களில் தொடர்பாடல் திறன் (proper commuincation) மிகவும் இன்றியமையாதது. உங்களுக்கு ஒன்று தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லிவிட வேண்டும். "தெரியும், தெரியும்” என்று சொல்லிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கக் கூடாது. கொடுத்த வேலையை குறிப்பிட்ட நாளுக்குள் (target date) செய்து கொடுக்க வேண்டும். Escalation என்று சொல்லக்கூடிய மேல்முறையீடுகளை கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும்.”
கேள்வி 3: நீங்கள் அயல் நாடு சென்று வந்துள்ளீர்களே அதைப்பற்றி சொல்லுங்கள். நம் நாடு வல்லரசு ஆகும் வாய்ப்புள்ளதா?
“நான் கனடா நாட்டிற்கு மட்டுமே சென்றுள்ளேன். அங்கே மக்கள் தொகை குறைவு. பரப்பளவு அதிகம். அவர்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாமோ வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.”
“தொழில் முறையிலும், நுட்பங்களை அறிந்து கொண்டு செயல்படுத்துவதிலும் நம்மவர்கள் சளைத்தவர்கள் அல்லர். அங்கு வரும் நுட்பம் விரைவிலேயே இங்கும் வந்து விடுகிறது. அப்படி இருப்பினும் நாம் நாணயத்தின் மறுபக்கமும் பார்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.”
“நான் எதிர்மறையாகப் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். அவர்கள் நம்மைவிட நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கூடுதலாக இருக்கிறார்கள். ஒருவரின் அகவையை மற்றவர் எப்படிச் சென்று பிடிக்க முடியாதோ அது போல அவர்களைப் பிடிப்பது என்பது முயற்கொம்பே.”
“அங்கே எல்லாமே திட்டப்படி நடக்கிறது. போக்குவரத்து, வங்கிக் கணக்குத் தொடங்குதல், பேருந்தில் வரிசையில் நின்று ஏறுதல். இங்கே எல்லாமே திட்டத்தினை மீறி நடக்கிறது. அங்கு திட்டத்தை மீறினால் திட்டுக் கிடைக்கும். இங்கு திட்டத்தை மீறாவிட்டால் திட்டுக் கிடைக்கும்.”
“நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 32 முதல் 35 இலட்சம் கோடிகள் கறுப்புப் பணமாக மாறிக் கொண்டிருப்பதாக புள்ளியியல்  தெரிவிக்கிறது. அங்கு அவ்வாறு இல்லாததால் பணத்திற்கு மதிப்பு இருக்கிறது.”
“அவர்கள் திட்டத்தில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்தால் நம்நாடு வல்லரசாகும் என்பது திண்ணம். எடுத்துக்காட்டிற்கு அனைவரும் பேருந்தில் வரிசையில் நின்று ஏற வேண்டும். இது சாத்தியமெனில் வல்லரசும் சாத்தியமே.”
கேள்வி  4: புதியதாய் குழுத்தலைவர் ஆகியுள்ளீர்கள். பணி எப்படியுள்ளது?
                “இது ஆறு ஆண்டுகள் நான் உழைத்த உழைப்பிற்குக் கிடைத்த பரிசுப்பணி. குழுவில் உறுப்பினராக இருந்த போது மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுச் செயற்பட வேண்டும். நல்ல குழு உறுப்பினராக இருந்தால் குழுத்தலைவராக ஆவது எளிது.”
“நாம் சொல்வதைக் கேட்பதற்கும், அதன்படி செயற்படுவதற்கும் நமக்கும் கீழே ஆட்கள் இருக்கிறார்கள் என எண்ணும் போது மகிழ்ச்சியும், குழுவில் நடக்கும் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் போது பொறுப்புணர்வும், கலந்துரையாடல்களில் (meetings, discussions etc) ஈடுபடும் போது ஆளுமைப் பண்பும் அதிகரிக்கிறது.”
கேள்வி 5: ஊதியம் அதிகம் கிடைப்பதற்காக அடிக்கடி நிறுவனத்தை மாற்றும் ஆட்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
“அடிக்கடி நிறுவனம் மாறுவது அவ்வளவாக சரியல்ல. இது என் பட்டறிவில் நான் கற்றுக்கொண்டது. ஒரு நிறுவனத்தில் நம்மை உறுதிப் படுத்தவே ஆறு முதல் எட்டு மாதங்கள் பிடிக்கும். அப்படியிருக்க வெவ்வேறு நிறுவனங்களை மாற்றிக் கோண்டே இருப்பது நல்லதன்று. ஒரு நிறுவனத்தில் குறைந்த பட்சம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பணிபுரிவது அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தை மனதில் ஒரு உறவு போல் புரிந்து கொள்வது நலம் பயக்கும்.” என்றே நான் நினைக்கிறேன்.
“நான் விப்ரோ (Wipro) அக்சென்சர் (Accenture) நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறேன். உளமாறச் சொல்கிறேன். விப்ரோ எனது தாய் நாடு. அக்சென்சர் எனது சின்னம்மா.”
கேள்வி 6: சோதனைக்கு (testing software) எந்த மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்?
“பொதுவாகக் கல்வி நிலையங்களில் (Education Institutions) winrunner, loadrunner பற்றிச் சொல்லிக் கொடுப்பார்கள். அவற்றைத் திறம்படக் கற்றுக் கொண்டு, அவ்வப்போது வரும் புதிய சோதனை செய்யக்கூடிய மென்பொருட்கள் பற்றியும் தெரிந்து கொள்வது தேவையாகும். அனைத்து மென்பொருட்கள் குறித்துத் தெரியவில்லையானாலும் குறிப்பிட்ட சிலவற்றை ஆழம் வரை சென்று கற்பதே சிறந்ததாகும்.”
கேள்வி  7: புதிதாய் வருபவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
“கூற விரும்புவது என்றால் அறிவுரை அல்ல; எனது கருத்து என்றே எடுத்துக் கொள்ளலாம். பணிநேரத்தில் பணியையும், ஓய்வு நேரத்தில் ஓய்வையும் செய்யுங்கள். உங்களால் முடிந்த தொழிற்நுட்பஉதவியினை உங்கள் குழு உறுப்பினர்களுக்குச் செய்யுங்கள். அது உங்கள் மேலான மதிப்பினை அவர்களுக்குள் அதிகரிக்கும். எந்த வகை வெற்றியானாலும் நான் செய்தேன் என்று சொல்லாமல், எனது குழு செய்தது என்று சொல்லிப் பழகுங்கள். அது உங்களை உயரத்தில் கொண்டு போய் உட்கார வைக்கும்.”