செவ்வாய், 27 நவம்பர், 2012

மணிப்புறாவும் மென்பொருளும் - கணினிக்கதை


பல நாட்களுக்குப் பின் தன் பள்ளித் தோழன் பொற்கோவைச் சந்திக்க வந்திருந்தாள் காண்பதற்கினியா.
அத்த, கோ எங்க?” பொற்கோவின் அம்மா குமுதினியிடம் கேட்டாள் இனியா.
அவன் மாடில புறா வளக்கிறாம்மா. அதப் பாக்கத்தான் போயிருக்கான். மேல போயிப் பாரு.” வரவேற்பு முறுவலுடன் சொன்னாள் குமுதினி.
“சரிங்கத்த...” குமுதினி கொடுத்த தேநீரைப் பெற்றுக் கொண்டு மேலே சென்றாள் காண்பதற்கினியா.
தான் ஆசையாசையாய் வளர்த்து வரும் மணிப்புறாவினை எடுத்து அன்புருகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான் பொற்கோ.
என்ன கோ திடீர்னு புறாவெல்லாம் வளக்கறீங்க.” தேநீரை உறிஞ்சியபடி கேட்டாள் இனியா.
“எப்பப் பாத்தாலும், கணினிச்செய்திகள், நிரல்கள் எல்லாம் தலைக்குள்ள இருக்குதா.. அதனால ஒரு சின்ன மாற்றம் தேவப்பட்டுச்சு, அதனாலதான் புறா வளக்கத் தொடங்கிட்டேன்.” தடவிக்கொண்டிருந்த புறாவை மெல்லப் பறக்க விட்டான் பொற்கோ.
“புறாவ நா.. பாக்கலாமா..?” தான் குடித்து முடித்த தேநீர் குவளையை வைத்து விட்டுக் கேட்டாள் அந்த மென்பொருள் மங்கை.
“நிச்சயமா..” கூண்டிலிருந்த மற்றொரு மணிப்புறாவை எடுத்துத் தன் தோழிக்குக் கொடுத்தான் பொற்கோ.
"கொத்துமா..?" ஐயத்துடன் வினவினாள் அந்த அணங்கு.
“அமைதிக்கான தூதுதான் புறா. அது கொத்துமா என்ன?” சிரித்துக் கொண்டே அவளின் தலையில் மெல்லத் தட்டினான் பொற்கோ.
எனக்கு தொழில் நுட்பச் செய்தி சொல்லுங்க கோ. இப்ப கைபேசிலஎல்லாம் பேச்சுமூலமே கட்டளைகள் கொடுக்கறோம். அது மாதிரி கணினில செய்ய மென்பொருள் இருக்கா..?” அவன் கொடுத்த புறாவினைத் தடவிக்கொண்டே கேட்டாள் இனியா.
“நீ சாம்சங் கைபேசி வச்சிருக்க.. நா.. ஆப்பிள் கைபேசி வச்சிருக்கேன். இதுல ஏற்கனவே குரல் அறியும் மென்பொருள் இருக்கறது. ஆனா விண்டோஸ் 7 பதிப்புல அதுக்கான மென்பொருள் உள்ளிருப்பா (Default) இல்ல. அத நாம தனியா நிறுவணும். அத என்னோட மடிக்கணினியில பாக்கலாம்.” என்றவன் அவளைத் தன் மடிக்கணினி அறைக்கு அழைத்து வந்தான்.
“அப்பா. அருமையா அறைய வச்சிருக்கிங்க..” புறாவைக் கையில் வைத்த படியே பேசினாள் இனியா.
“இதெல்லாம் ஒங்க அத்ததான் பாத்துக்கறாங்க. நா..இல்ல.” சிரித்தபடியே தன் எச்.பி மடிக்கணினியை உயிர்ப்பித்தான் பொற்கோ.
கூகுள் குரோமைச் சொடுக்கி, http://www.e-speaking.com/index.htm என்று தட்டச்சு செய்தான் அந்த மடிக்கணினி மன்னன். தொடர்ந்து Download தொடுப்பைச் சொடுக்கி பின்கண்ட மென்பொருளைப் பதிவிறக்கினான்.
அதன் பிறகு, சில கட்டளைகளை தன் சிறிய ஒலிவாங்கி (microphone) மூலம் செப்பிச் சோதனை செய்து கொண்டான்.
அருகே இருந்த சிறிய சாளரம் வழியே மணிப்புறாவினைப் பறக்க விட்டுவிட்டு, அவன் மென்பொருளைக் கையாளும் அழகைப் பருகிக் கொண்டிருந்தாள் காண்பதற்கினியா.
“இனி, இது ஒரு குரலறிவான் மென்பொருள் (voice recognition software). 30 நாளுக்கு இலவசமா பயன்படுத்தலாம். அதுக்கப்பறம் பதினாலு டாலர் கொடுத்து செயற்படுத்தணும் (activation). இதுல நூறு கட்டளைகள ஏற்கனவே உள்ளீடு (100 built-in commands) செய்யப்பட்டிருக்கு. விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, எழு பதிப்புகள்ல செயல்படுது. Speech Application Programming Interface (SAPI) மூலமா செயல்படறது. .NET க்கு ஆதரவளிக்கக்கூடியது. ஆன்லைன்லயே இதுக்குரிய ஆதரவும் (online support) குடுக்கப்பட்டிருக்கு.” தான் இணையத்தில் பார்த்தவற்றை எளிமையாக விளக்கினான் அந்த மென்பொருள் தலைவன்.
“easy youtube log on and off and easy upload videos using e speaking voice recognition system”
“அப்டீன்னு தட்டச்சுச் செஞ்சு யூடியுப்லயும் பாக்கலாம். இது சீனம், ஜெர்மன், ஸ்பேனிஷ் மொழிகள்லயும் சிறப்பாகச் செயல்படறது.” தொடர்ந்து சொன்னான் பொற்கோ. அவன் சொல்வதை ஏதோ காணொளி காண்பது போல் கண்டுகளித்துக் கொண்டிருந்தாள் காண்பதற்கினியா.
“இதுல எதாவது ஐயம் இருந்துச்சுன்னா support@e-Speaking.com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பித் தெரிஞ்சுக்கலாம்.” கூடுதல் செய்தி தந்தான் பொற்கோ.
Open Word
Open Excel
Open Email
Open Powerpoint
Open Internet
Open Notepad
Start Word
Start Excel
Start Email
Start Powerpoint
Start Internet
Start Notepad
மேலும் எந்தெந்தக் கட்டளைகள் கொடுத்தால் என்னென்ன நிகழும் என்பதையும் தனது மடிக்கணினியில் செய்து காண்பித்தான் பொற்கோ.
“நான் இப்பெல்லாம் எந்த bookக்குமே படிக்கறதில்ல. எல்லாமே online தான். சீக்கிரமே கண்ணாடி போட்டுருவேன்னு நெனக்கிறேன்.” தலைப்பினை மாற்றினாள் காண்பதற்கினியா.
“ஒன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் ஒரு புதிய செய்தியக் கொடுத்துருக்காங்க‌  ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவங்க‌..” மாற்றிய தலைப்புக்கு விடை பகன்றான் பொற்கோ.
              “அது என்ன சேதி?” வியப்புற்றாள் இனியா.
“நியுரோபயலாஜிஸ்ட்கள் பலர் வாசிப்புத் திறன் உள்ளவங்களஆராய்ச்சி செஞ்சாங்க. அந்த ஆராய்ச்சில மூளைக்குச் செல்லும் blood அளவுக்கும், வாசிப்புத்திறனுக்கும் தொடர்பு இருக்குதான்னு பாத்தாங்க. ஆய்வுல இருந்த நெறயப்பேர் ஜேன் ஆஸ்டினின் மேன்ஸ்ஃபீல்ட் பார்க் அப்டீங்கற book ஐ வாசிச்சாங்க. அவர்கள் வாசிக்கும் போது அவங்க‌ MRI (Magnetic Resonance Imaging) பொறிக்குள்ள வைக்கப்பட்டு இருந்தாங்க. ஆய்வின் முடிவுல எல்லாருக்கும் குருதி ஓட்டம் (Blood circulation) மூளைல அதிகமா இருந்தது தெரிஞ்சது. அதனால வாசிக்கற பழக்கத்த நாம விட்றவே கூடாது.தான் படித்த நாளேட்டுச் செய்தியை (http://news.stanford.edu/news/2012/september/austen-reading-fmri-090712.html) வளமுடன் சொன்னான் பொற்கோ.
Researcher Natalie Phillips positions an eye-tracking device on Matt Langione.
“ம்.. சரிதான். தமிழ் கம்ப்யூட்டர படுத்துக்கிட்டுப் படிக்க முடியும். ஆனா. இணையத்த படுத்துக்கிட்டு படிக்க முடியுமா? எப்படியிருந்தாலும் இனிமே books வாசிக்கறத அதிகப்படுத்திகறேன்.” ஒரு முடிவுடன் சொன்னான் காண்பதற்கினியா.
“ஒங்க கூகுள் பத்தி எதாவது புது சேதி சொல்லுங்க. கோ.” இயல்பாகக் கேட்டாள் இனியா.
“இதுவரைக்கும் நிலப்பரப்பில் வரைபடங்களைப் (maps) புகுத்தின‌ கூகுள், இனி கடல் பரப்பிலும் தனது Street View புகுத்தியிருக்கு. அதைப் பாக்க, http://maps.google.com/help/maps/streetview/gallery.html#!/ocean செல்லலாம். கடல் ஆமைகள், மீன்கள் இப்டி எல்லாத்தோட நாமும் நீந்திச் செல்ல முடியும்.” கூகுள் வரைபடங்கள் ட்வீட்டரில் வெளியிட்ட சேதியினைச் சுட்டிக்காட்டினான் பொற்கோ.
சுட்டியவன் தொடர்ந்தான் “அடுத்து வலியில்லா ஊசி பத்தினது. இது மென்பொருள் தொடர்புடையது இல்லைன்னாலும், இதுவும் ஒரு அறிவியல் சேதிதான். இததென்கொரிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க. தோல் சிகிச்சைக்கு பயன்படுத்தற லேசர் கற்றையால இதைச் செய்யலாம். இது சவ்வூடு பரவல் (Osmosis) எனப்படும் அறிவியல் முறை மூலமா நடக்கறது. இத நம்ம சந்தைக்கு ஏத்தா மாதிரி தயார்ப்பண்ண ஒரு பன்னாட்டு நிறுவனத்தோட பேச்சு வார்த்த நடந்து வர்றது. (http://www.indianexpress.com/news/now-a-laserpowered-needle-to-give-painfree-injections/1002599/0) தான் பதிவிறக்கிய ஆங்கில நாளேட்டுச் சேதியினை தன் தோழியிடம் காண்பித்தான் பொற்கோ.
"ரெண்டு பேரும் பேசினா நேரம் போறதே தெரியதே. நேரமாச்சு. வாங்கப்பா சாப்டலாம்..." சமையலறையிலிருந்து குமுதினியின் குரல் ஒலித்தது.
“அத்த கையால சாப்ட்டு நெறய நாளாகுது. இன்னைக்கு கண்டிப்பா ஒரு புடி புடிக்கணும்.” செவிக்குக் கிடைத்த உணவு வயிற்றுக்கும் கிடைக்க வேண்டுன்று விரைந்தாள் இனியா.
மடிக்கணினியினை மடித்து விட்டு அவளைத் தொடர்ந்தான் பொற்கோ.

0 Comments: