ஜிகர்தண்டா பார்க்க நேர்ந்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு திறனாய்வு எழுத
வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. ஏற்கனவே
இணையத்தில், இதழ்களில் படத்தை அலசி ஆராய்ந்து விட்டமையால், நான் சுவைத்த சில வரிகளை மட்டும் எழுத விழைகிறேன். இது ‘டர்ட்டி கார்னிவல்’ என்ற கொரியப்படத்தின் தழுவல் என்கிறது
தொழிற்நுட்ப சுவைஞ உலகம்.
நேற்று சனிக்கிழமை எதேச்சையாக
ஃபோரம் பேரங்காடி சென்ற பொழுது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை தொலைவிலிருந்து
பார்க்க நேர்ந்தது. நான் திருட்டு
இணையப்பட சுவைஞன் என்பதால் அவருக்கு கைகொடுக்கவில்லை. அவரது நண்பர்கள் அல்லது
தெரிந்தவர்கள் ஆரத்தழுவிக்கொண்டார்கள். அவர் அருகில்
சென்ற பொழுது அவர் மெலிதாக புன்னகைத்தார். எல்லா படைப்பாளிகளும் பொதுமக்களைப் பார்த்துப்
புன்னகைப்பது இயல்புதான்.
படத்தில் நான் உற்று நோக்கியவைகள்
1. கதையுடைத்தலைவி[1]
பின்னணிக்குரல் கலைஞர் மகாலட்சுமியின் இரவல் குரலில் பேசுகிறார். இப்படத்திற்கு ஏதேனும் ஒரு துணை நடிகையைக்கூட
போட்டிருக்கலாம் என்பது என்கருத்து. இயக்குநரின்
முந்தைய படம் பீட்சாவிலும் கதையுடைத்தலைவிக்கு[2] குரல்
கொடுத்தவர் இதே பின்னணிக்குரல் கலைஞர்தான்.
2. லகர, ளகர, ழகர, னகர, ணகர துப்புரவாக உரையாடும் கதையுடைத் தலைவன்[3] இதில் மதுரை
வழக்குப் பேசியிருப்பதால் பலனி (பழனி), கலுவி (கழுவி) என்று
பேசியிருக்கிறார். (மதுரையில் பட்டிமன்றம்
பாப்பையா தவிர வேறு யாரும் உரையாடும் பொழுது தமிழைச் சரிவர உச்சரிப்பதில்லை.) மற்றபடி வர்றாய்ங்க போறாய்ங்க வழக்கை
கருணாகரனும், சிம்ஹாவும் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.
3. கதையுடைத் தலைவனுக்கு தனது பெயரையே இயக்குநர்
சூட்டியுள்ளார். படத்தில் வரும் சில காட்சிகள் அவரது வாழ்க்கையில் நடந்தது போலும்.
4. இசையமைப்பாளர்[4] இசையில்
எந்தப்பாடலையும் யாரும் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் பாட முடியாது. பாடினாலும்
யாரும் தீர்ப்புச் சொல்ல முடியாது. பாடல்களில் சற்று
மெனக்கெட்டிருந்தால் எதாவது ஒரு பாடலை முணுமுணுக்க வைத்திருக்கலாம். பின்னணி இசையும் மிகச்சுமார்தான்.
5. சிம்ஹா என்ற கலைஞன் தான் முக்கால் படம் வரை
கதையுடைத்தலைவன். சித்தார்த்
சும்மாதான். சிம்ஹாவிடம் நிறையவே சூர்யாவின் உடல்மொழிகள் தெரிகின்றன.
6. படத்திலிருந்து பிரிக்க முடியாமல்
இழைந்தோடியிருக்கிறது நகைச்சுவை.
7. அழுகுணி குமார் என்பதே சரி. படத்தில் தலைப்பு அழுகுனி குமார் என்று தவறாக வருகிறது. எழுத்துத்தவறு இருக்கிறது.
8. படத்தை சாதாரணமாகப் பார்த்தால் சில பெண்
சுவைஞர்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் குழப்பம் நேரலாம். உற்று நோக்குதல்
இன்றியமையாதது.
9. கருணாகரனின் அச்சமுற்ற நடிப்பு அருமை.
10. எது எப்படியோ எல்லாரையும் ஒரு முறை பார்க்க வைத்துவிடும்
இப்படம்.
11. படம் ஏறக்குறைய மூன்றுமணி நேரம் ஓடுகிறது. எனினும், படம் பார்க்கும்
நினைப்பே சுவைஞருக்கு வராமல் படத்தோடு படமாக ஒன்ற வைத்துவிடுவதுதான் இயக்குநரின்
திறமை. அதை இயக்குநர் நகைச்சுவையோடு கூடிய உச்சக்காட்சி வைத்து செவ்வனே
செய்திருக்கிறார். இல்லையில்லை அசத்தியிருக்கிறார்.