திங்கள், 16 மார்ச், 2020

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து - பழமொழி விளக்கம்

"பந்திக்கு முந்து படைக்குப் பிந்து" என்று ஒரு பழமொழி உண்டு. அதன் விளக்கமாக, பந்தியில் சென்று சீக்கிரம் சாப்பிட வேண்டும். படை என்றால் பின்னால் நின்று ஒளிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு விளையாட்டாக விளக்கத்தைச் சொல்வதுண்டு. ஆனால் அதன் பொருள் அஃதன்று.

அதன் பொருளை கீழே காண்போம். அதைக் கீழேயுள்ளது போன்று திருத்தி வாசிக்க வேண்டும்.

"பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்." அனைவரும் நினைப்பது போன்று இது ஒரு பழமொழியன்று. இது ஒரு விடுகதை. அதை "பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும். அது என்ன ?" என்று கேட்க வேண்டும்.

அதற்கான விடை கட்டை விரல் அல்லது பெருவிரல். 

பந்தியில் கட்டை விரல் முந்திச் சென்று தேவையானதை எடுத்து வாய்க்குள் உணவாகத் தள்ளுகிறது அதனால் பந்திக்கும் முந்தும் என்றும், படையில் முதன்மையான போர்க்கருவி வில்லும் அம்பும் ஆகும். வில்லில் கட்டைவிரலானது பின்புறமாக நாணை (வில்லின் கயிற்றை) இழுக்க உதவும. எவ்வளவு பின்னால் நாணானது இழுக்கப்படுகிறதோ அவ்வளது தொலைவு முன்னால் அம்பானது சென்று எதிராளியைத் தாக்குகிறது. ஆகையால் படைக்கும் பிந்தும் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆதலால்,

"பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்." - அது என்ன? "கட்டைவிரல்"