ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

பாடும் நிலா ஒரு நேர்த்தியாளர் - கையறு நிலைக் கட்டுரை

 
பாட்டுத் தலைவன் குறித்து எழுத வேண்டுமென்றால், எழுதிக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு செய்திகள். அவ்வளவும் வியப்பான செய்திகளே. அவர் பெற்றிறாத பிள்ளை நான். எனது பெரியப்பா என்றும் சொல்லலாம். பெற்றால்தான் பிள்ளையா என்ன? அவரது பாடல்களால் கட்டப்பட்டு ஈர்க்கப்பட்டபின் நான் அவரது பிள்ளை என சொல்வதில் பிழையில்லை. உண்மையில் அவரை நான் பாராமல் ஓர் ஆசிரியர் போல ஏற்றுக் கொண்டே பாடல் பயின்றனன். "ல, ள, ழ" உச்சரிப்புக்களை அவரது பாடல்களே, சிற்றூரில் பிறந்த எனக்கு உணர்த்தின. பிறவியில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரே மனிதர். ஆனால் நேரில் அவரைப் பார்க்காமலேயே என் பிறவி முடிந்து விட்டது. 
1. எல்லாக் கால கட்டத்திற்கும் இவரது பாடல்கள் உண்டு. 
2. பாடல் பாடுவதில் இவர் ஒரு நேர்த்தியாளர். பாடுவதாலேயே அவர் குரல் பயிற்சி பெற்று அவர் பாடும் பாடல்களுக்கு உதவியது. தவிர, அவர் பாடுவதற்கு தனியாகப் பயிற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை.
3. இவர் பாடும் பாடலில் அவர் செய்யும் தவறுகள் கூட அழகே.
4. தவறுகளை அவரே ஒப்புக்கொண்டு, அதைத் தவறு என்று சொல்பவர். அதைத் தவறென்று அறியாமல் பிறர் ஏதோ பாடலின் அணிக்கூறு (சங்கதி) என்றெண்ணிப் பாடுவதையும் அவரே செல்லச் சீற்றத்துடன் கூறுவார். அப்போதுதான் அது தவறு என்றே அனைவருக்கும் புலப்படும்.
5. எவ்வளவு உரக்க அல்லது தாழப் பாடினாலும் குரல் கட்டுப்பாட்டை இழக்காதவர். பாடும் பொழுது முகம் கோணாமல் இயல்பான சிரித்த முகத்தோடே இருப்பவர்.
6. புகழின் உச்சத்திலிருந்து இறங்காமல் இருப்பினும் அகம் பிடிக்காதவர். அதனாலேயே எல்லோர் அகத்திலும் இடம் பிடித்தவர்.
7. கலையில் அரசியல் செய்யாதவர். நிறைகுடம்.
8. நடிகர்களுக்கேற்ற குரல் மாற்றம், கதையின் சூழ்நிலை மாற்றம் பொறுத்து குரல் வேறுபடுத்துதலில் மன்னன்.
9. விருதுகள் இவருக்குக் கிடைத்தது, அந்த விருதுகளுக்குத்தான் பெருமை.
10. எனது சிற்றூர் மொழியில் சுருங்கச் சொன்னால் அவர் ஒரு பாட்டுச்சாமி. ஒரே ஒரு பாட்டுச்சாமிதான். இன்னொன்று வர இயலாது.

யானை தடவும் குருடன் போல் எனக்குத் தெரிந்த பத்தே வியப்புகளை இங்கு அடுக்கியுள்ளேன். இவர் இல்லாத உலகில் நாம் இருக்கிறோமே என்று உள்ளம் தவிக்கிறது.

"வீசிச் சென்று விந்தை செய்ய
பாச வலையில் பாடற் கொண்டு 
பாடிப் பறந்த பகலவப்  பாட்டுத்
தலைவரின் குரலில் தவறும் அழகே !!!"
                                                    - கையறுநிலைப்பா.

"நா.. பெத்தெடுத்திடாத முத்துமணித் தேரே
நா.. தத்தெடுத்திடாத தங்கமணிச் சீரே
ஒரு சொந்தமிருந்தும் பந்தமிருமிருந்தும் சொல்லவில்லையே..."

என்று என் பெரியப்பா என்னை "ஒரு பாட்டாலே..." சொல்லியழைக்கிறார். 
- கண்ணீருடன்...