வெள்ளி, 14 நவம்பர், 2014

என்னைக் கவர்ந்த பாடல்

பாடல்/பாடியவர் : 'கானா' உலகனாதன், வியாசர்பாடி
படம் : சித்திரம் பேசுதடி.

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
...
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
வார மீனு நடத்திவர பார்ட்டியும்
நம்ப வார மீனு நடத்தி வர பார்ட்டியும்
அங்க தேர்போல போகுதய்யா ஊர்கோல காட்சியும்..ஊர்கோல காட்சியும்..
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோ
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோ
அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ
மாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார
அந்த சங்கர மீனு வவ்வாலு மீன வழவழப்பா தருகுது..வழவழப்பா தருகுது.
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோ
மாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ
..
..
..
தலைவரு திமிங்கிலம் தானுங்கோ
தலைவரு திமிங்கிலம் தானுங்கோ
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்

புதன், 5 நவம்பர், 2014

சிரிப்பா -1

தூற்றுவார் என்னைத் தூற்றல் கண்டு
பொழுதும் என்னகம் பொறுமை கொண்டு
இருக்க மாட்டேன் என்பத றிகுவாய்
மூளை யில்லா முட்டாப் பயலே.
சிரிப்பா-1

திங்கள், 6 அக்டோபர், 2014

தக்காளி - எம்பேரு கோயில் மணி

கவுண்டமணி செந்திலை திரையில் சேர்ந்து பார்த்து கொள்ள நாளாச்சு. இருவரும் சேர்ந்து பேசினால் எப்டியிருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை.
வாங்க பெல்லு
என்ன அண்ணே நீங்க எவ்ளோ பெரிய ஆளு, நீங்க போயி என்னய வாங்கன்னு கூப்டுக்கிட்டு.”
அது ஒனக்குத் தெரியுதாடா வண்டுருட்டாந் தலையா
அது ஊருக்கே தெரியுமே. ஆமாண்ணே நீங்க இப்ப எங்க ஆணி புடுங்கிட்டு இருக்கிங்க.”
நானாவது எங்கயாவது ஆணி புடுங்கிட்டு இருக்கேன். நீ புடுங்கறது எல்லாமே தேவயில்லாத ஆணிதானடா.”
அதுக்கில்லண்ண,..”
டேய் இந்த டக்கால்டி வேலயெல்லாம் வச்சுக்காத. சும்மா வெட்டி ஒட்டற வேலயில்ல இருக்க நீயே இப்டி பேசுனா, சொந்தமா வேல செய்யற நாங்க எப்டியிருப்போம். அதென்னமோ pdf எல்லாம் ஏத்துக்க மாட்டிங்களாமே, Document தான் வெட்டி ஒட்டறதுக்கு தோதுப்படுதோ.
அண்ணே எதப்பத்தி வேண்ணாலும் பேசுங்க. ஆனா வேலையப் பத்தி மட்டும் பேசாதீங்க.”
அடுத்தவன் கக்குறத நக்குறீங்க. காலக்கழுவிக் குடுத்தாக்கூட குடிப்பிங்க. பத்து பதினைஞ்சு வீடு பிச்சயடுத்து  (document வெட்டி ஒட்டி) திங்கற நாய்க்கு எகத்தாளத்தப் பாரு. லோலாய்த்தனத்தப் பாரு.”
டேய் பெல்லு கோவணம் இல்லனாலும், மீசைக்கு முறுக்கு கேக்குதாக்கும்.”
அண்ணே சொந்தப் பேர் சொல்லி கூட்டுங்க.”
பெல்லுன்னு சொன்னா நான் மட்டுந்தான் அடிப்பேன். தக்காளி, ஒன் சொந்தப்பேர் கோயில் மணின்னு சொன்னா, அவன் அவன் வந்து அடிப்பான். பத்தாதக்கு கோயில் மணிய யாரு ஆடிச்சா ஒனக்கென்னம்பான்.”
எல்லாம் சரிதான். தக்காளின்னா என்னண்ணே?”

ம். அத அடுத்த வாரம் சொல்றேன்.”

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

ஜிகர்தண்டா திரைப்படத் திறனாய்வு

ஜிகர்தண்டா பார்க்க நேர்ந்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு திறனாய்வு எழுத வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. ஏற்கனவே இணையத்தில், இதழ்களில் படத்தை அலசி ஆராய்ந்து விட்டமையால், நான் சுவைத்த சில வரிகளை மட்டும் எழுத விழைகிறேன். இது டர்ட்டி கார்னிவல் என்ற கொரியப்படத்தின் தழுவல் என்கிறது தொழிற்நுட்ப சுவைஞ உலகம்.
நேற்று சனிக்கிழமை எதேச்சையாக ஃபோரம் பேரங்காடி சென்ற பொழுது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை தொலைவிலிருந்து பார்க்க நேர்ந்தது. நான் திருட்டு இணையப்பட சுவைஞன் என்பதால் அவருக்கு கைகொடுக்கவில்லை. அவரது நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆரத்தழுவிக்கொண்டார்கள். அவர் அருகில் சென்ற பொழுது அவர் மெலிதாக புன்னகைத்தார். எல்லா படைப்பாளிகளும் பொதுமக்களைப் பார்த்துப் புன்னகைப்பது இயல்புதான்.
படத்தில் நான் உற்று நோக்கியவைகள்
1.       கதையுடைத்தலைவி[1] பின்னணிக்குரல் கலைஞர் மகாலட்சுமியின் இரவல் குரலில் பேசுகிறார். இப்படத்திற்கு ஏதேனும் ஒரு துணை நடிகையைக்கூட போட்டிருக்கலாம் என்பது என்கருத்து. இயக்குநரின் முந்தைய படம் பீட்சாவிலும் கதையுடைத்தலைவிக்கு[2] குரல் கொடுத்தவர் இதே பின்னணிக்குரல் கலைஞர்தான்.
2.       லகர, ளகர, ழகர, னகர, ணகர துப்புரவாக உரையாடும் கதையுடைத் தலைவன்[3] இதில் மதுரை வழக்குப் பேசியிருப்பதால் பலனி (பழனி), கலுவி (கழுவி) என்று பேசியிருக்கிறார். (மதுரையில் பட்டிமன்றம் பாப்பையா தவிர வேறு யாரும் உரையாடும் பொழுது தமிழைச் சரிவர உச்சரிப்பதில்லை.) மற்றபடி வர்றாய்ங்க போறாய்ங்க வழக்கை கருணாகரனும், சிம்ஹாவும் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.
3.       கதையுடைத் தலைவனுக்கு தனது பெயரையே இயக்குநர் சூட்டியுள்ளார். படத்தில் வரும் சில காட்சிகள் அவரது வாழ்க்கையில் நடந்தது போலும்.
4.       இசையமைப்பாளர்[4] இசையில் எந்தப்பாடலையும் யாரும் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் பாட முடியாது. பாடினாலும் யாரும் தீர்ப்புச் சொல்ல முடியாது. பாடல்களில் சற்று மெனக்கெட்டிருந்தால் எதாவது ஒரு பாடலை முணுமுணுக்க வைத்திருக்கலாம். பின்னணி இசையும் மிகச்சுமார்தான்.
5.       சிம்ஹா என்ற கலைஞன் தான் முக்கால் படம் வரை கதையுடைத்தலைவன். சித்தார்த் சும்மாதான். சிம்ஹாவிடம் நிறையவே சூர்யாவின் உடல்மொழிகள் தெரிகின்றன.
6.       படத்திலிருந்து பிரிக்க முடியாமல் இழைந்தோடியிருக்கிறது நகைச்சுவை.
7.       அழுகுணி குமார் என்பதே சரி. படத்தில் தலைப்பு அழுகுனி குமார் என்று தவறாக‌ வருகிறது. எழுத்துத்தவறு இருக்கிறது.

8.       படத்தை சாதாரணமாகப் பார்த்தால் சில பெண் சுவைஞர்களுக்கு மட்டுமல்ல‌ ஆண்களுக்கும் குழப்பம் நேரலாம். உற்று நோக்குதல் இன்றியமையாதது.
9.       கருணாகரனின் அச்சமுற்ற நடிப்பு அருமை.
10.   எது எப்படியோ எல்லாரையும் ஒரு முறை பார்க்க வைத்துவிடும் இப்படம்.
11.   படம் ஏறக்குறைய மூன்றுமணி நேரம் ஓடுகிறது. எனினும், படம் பார்க்கும் நினைப்பே சுவைஞருக்கு வராமல் படத்தோடு படமாக ஒன்ற வைத்துவிடுவதுதான் இயக்குநரின் திறமை. அதை இயக்குநர் நகைச்சுவையோடு கூடிய உச்சக்காட்சி வைத்து செவ்வனே செய்திருக்கிறார். இல்லையில்லை அசத்தியிருக்கிறார்.



[1] லட்சுமி மேனன்
[2] ரம்யா நம்பீசன்
[3] சித்தார்த் சூர்ய நாரயணா
[4] சந்தோஷ் நாரயணன்

வியாழன், 17 ஜூலை, 2014

என்றும் இனியது எங்கள் எக்ஸ்பி - கணினிக்கதை

(தமிழ் கம்ப்யூட்டர் சூலை 16-31, 2014, இதழில் வெளியான எனது படைப்பு பக்கம் 18)

கோனகம் அடுக்குமாடிக்குடியிருப்பின் பன்னிரெண்டாவது தளத்தின் உப்பரிகையில் (balcony) நின்று கொண்டு எலுமிச்சை தேநீர் அருந்திக் கொண்டிருந்தான் நெடிலன். முன்னிரு நாட்களில் பெய்திருந்த கோடை மழையில் நனைந்திருந்த நெடுஞ்சாலையின் ஓரத்திலிருந்த உப்பினிவிளக்கின் (halogen lamp) ஒளி சீராக ஊர்திகளில் விழுவதை, தனது உப்பரிகைத்  தேநீரோடு சேர்த்து உறிஞ்சினான்.


தொலைவிலிருந்து தனக்குத் தெரிந்த ஓர் ஊர்தி வருவதை உணர்ந்தவன், தனது பார்வையைக் கூராக்கி, தொலை ஊர்தியை உற்று நோக்கினான் தேநீர் கோப்பையை கைமாற்றியபடி. “இது நுட்பாவோட ஊர்தியாச்சே” மனதில் நினைத்தபடி தேநீரில் அடுத்த மிடறு விழுங்கினான்.

அவன் நினைத்தவாறே நுட்பா தனது ஊர்தியை ஓரங்கட்டிவிட்டு தூக்குக்கூட்டில் (lift) ஏறினாள். ஏறியவள் எண் பன்னிரெண்டினை அழுத்தி விட்டு, தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொண்டாள்.

"என்ன நுட்பா, படபடப்பாய் இருக்கற, எலுமிச்சை தேநீர் குடி, அமைதியா என்ன சேதின்னு சொல்லு." அவளுக்குத் தேநீர் தந்து தேற்றினான் நெடிலன்.

"பழைய கல்லூரியிலர்ந்து கூப்ட்ருக்காங்க. ஒரு கருத்தரங்கு நடத்தணுமாம். என்ன செய்றதுன்னே தெரியல?” தேநீரை வாங்கியும் வாங்காமலும் பேசினாள் நுட்பா.

"தலைப்பு என்ன?" இது நெடிலன்.

"என்றும் இனிய‌து எங்கள் எக்ஸ்பி" இது நுட்பா.

"இது ரொம்ப எளிமையான தலைப்பு. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எக்ஸ்பியோட மேம்படுத்துதல்கள நிறுத்திட்டாலும், ஏற்கனவே அத உரிமையோட வாங்கனவங்க அத பயன்படுத்தறத தடுக்கப்போறதில்லை. இன்னும் எத்தனையோ இணைய மையங்கள் எக்ஸ்பியைப் பயன்படுத்திக்கிட்டுத்தான் இருக்கறாங்க.” நேர்த்தியாப் பேசினான் நெடிலன்.

கொஞ்சம் நிம்மதியுடன் அவன் பேசுவதைக் கேட்டாள் நுட்பா.

"எக்ஸ்பியை நாம காசு கொடுத்து வாங்கினதா வச்சுக்கிட்டு, நம்ம இத்தத் தலைப்புல கல்லூரி கருத்தரங்க நடத்தலாம். ஏறத்தாழ முப்பது வகையான மென்பொருட்கள போர்ட்டபிளாக நிறுவிப் பயன்படுத்தலாம். அதுக்கு இந்த  http://portableapps.com/apps தளம் வழிவகுக்கறது.”தேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு தனது புருவமுயர்த்திப் பேசினான் நெடிலன்.

"நாம ஏற்கனவே வாங்கியிருக்கற எக்ஸ்பியை நிறுவின பிறகு, மொதல்ல விண்டோஸ் அப்டேட் அப்டீங்கற மேம்படுத்துதல் சேவைய நிறுத்தணும். அதுக்கப்பறமா, நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருள (anti-virus software) நிறுவணும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தோட நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருள் நாம நிறுவப்போறதில்ல. அதுக்கு ஏற்கனவே இருக்கற எக்ஸ்பியின் எச்சரிக்கை செய்திகள நாம அமைதிப்படுத்தணும்.  அதனால இந்த சாளரத்துல இருக்கறத தேர்ந்தெடுக்கணும்.” சொன்னதோடு மட்டுமின்றி தனது மடிக்கணினியில் இருந்து தான் மெய்நிகர் (virtual box) நிலையில் நிறுவியிருந்த எக்ஸ்பியில் காட்டத் தொடங்கினான் நெடிலன்.

"சரி செய்தாய்ச்சு. அப்றம் என்ன பண்றது?" ஆர்வமிகுதியில் கேட்டாள் நுட்பா.
“Portableapps.com/appsல இருந்து Mcafee Stinger Portable Antivirus பதிவிறக்கம் செஞ்சு நிறுவணும். நிறுவறதோட நிறுத்தாம ஒரு மொற முழுக்க கணினியச் சோதன செஞ்சுக்கணும்.

இப்போ நாம் வேற நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருள் நிறுவிட்டதால, விண்டோஸ் எந்தவொரு பிழைச் செய்தியையும் காட்டாது.”தனது மடிக்கணினியைச் சுட்டிக்காட்டித் தொடர்ந்தான் நெடிலன்.

"எக்ஸ்பியை மெம்படுத்த (update)முயற்சிக்கக் கூடாது.”

"சரி நல்ல உபாயம் (suggestion) சொன்னிங்க நெடில். அடுத்த கட்டம் என்ன?"

"வேற என்ன? நமக்கு என்னென்ன மென்பொருட்கள் தேவையோ, 
எல்லாத்தையும் போர்ட்டபிளாகவே நிறுவிக்கலாம்.” அடுத்த கட்டத்தை விளக்கினான் நெடிலன்.

"போர்ட்டபிள் மென்பொருள்ன்னா என்ன? கருத்தரங்குக்கு ஏத்த மாதிரி விளக்கமாச் சொல்லுங்க.” தனது கேள்வியில் முனைப்பாய் இருந்தாள் நுட்பா.

“Install it once, use it anywhere அப்டீங்கறதுதான் போர்ட்டெபிள் மென்பொருட்களோட தத்துவம். ஒரு மொற நிறுவிட்டா, அதுக்குத் தேவையான அனைத்து கோப்புக்களையும் (dll files), ஒரே அடைவுக்குள்ள (folder) கொண்டுவந்துடும். அதுக்குப்பிறகு, நாம எங்க வேணும்னாலும், எந்த கணினிக்கு வேணுமினாலும் அந்தக் குறிப்பிட்ட போர்ட்டபிள் கோப்புக்களப் படியெடுத்தாலே போதும். அந்த மென்பொருள் தங்குதடையில்லாம இயங்கத் தொடங்கும்.” portableapps.com தளம் ஆங்கிலத்தில் கூறியதை தமிழில் விளக்கினான் நெடிலன். நா ஏறத்தாழ இருப்பதியேழு மென்பொருட்கள் போர்ட்டபிளா நிறுவித்தான் பயன்படுத்திக்கிட்டிருக்கேன்.” தனது மடிக்கணினி குறித்து விளக்கம் கொடுத்தான் அந்த எக்ஸ்பி தலைவன்.

"என்ன நீங்க இன்னும் எக்ஸ்பி பயன்படுத்துறீங்களா?" அடுத்த கேள்வி கேட்டாள் அணங்கு.

“எக்ஸ்பியும் பயன்படுத்தறேன்.” எளிமையாய்ச் சொன்னான் நெடிலன்.

"என்னென்ன மென்பொருள் நிறுவியிருக்கீங்க. அதெல்லாம் மெம்படுத்த முடியுமா?” கருத்தரங்கிற்கான தயாரிப்பில் கேட்டாள் நுட்பா.

"கண்டிப்பா பெரும்பாலான போர்ட்டெபிள் மென்பொருட்கள மேம்படுத்த முடியும். சில மேம்படுத்த முடியாத மென்பொருட்கள திரும்பவும் இலவசமாவே நிறுவிப் பயன்படுத்தலாம். இது எல்லாத்துக்குமே நாம சொல்ற பழைய எக்ஸ்பி ஆதரவு கொடுக்கறது. இதப்பத்தி மைக்ரோசாஃப்ட்டும் ஒன்னும் சொல்லாது. நாம நம்மளோட எளிமையான அன்றாடத் தேவையான மென்பொருட்கள அருமையாப் பயன்படுத்தலாம்.” விளக்கமாய்ப் பேசினான் நெடிலன்.

பேசியவன் தொடர்ந்தான். “நாம கண்டிப்பா மைக்ரோசாப்டோட எந்த மென்பொருளையும் இதுல புதுசா நிறுவிப் பயன்படுத்தக்கூடாது. ஃப்யர்ஃபாக்ஸ்(firefox30), குரோம்(chrome35) உலவிகள இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்க்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். ஃப்யர்ஃபாக்ஸ எளிமையா மேம்படுத்திக்கலாம். குரோமிற்கு இயக்கமுறை மேம்படுத்துதல் இன்னும் இதுல சேக்கப்படல. எல்லாவகையான நீட்சிகளையும் (extensions, add-ons)நிறுவிக்கலாம். கண்டிப்பா எம்எஸ்ஆபிஸ் தொகுப்பை நிறுவக்கூடாது. அது முறையானது அல்ல. காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது. அதுக்கு மாற்றா லிபேர் ஆபிஸ் போர்ட்டபிள் நிறுவலாம், மேம்படுத்தலாம். எல்லாவகையான ஆபிஸ் கோப்புக்களையும் அணுகலாம். ம். அப்றமா, வின்சிப்புக்கு மாற்றா 7சிப் நிறுவிப் பயன்படுத்தலாம். இது எல்லா வகையான சுருக்கப்பட்ட கோப்புக்களையும் திறக்கும் ஆற்றல் கொண்டது. வின்ரேர், டார், போன்ற இலினக்சு கோப்புக்களையும் எளிமையாகக் கையாள்கிறது. அடுத்து,அர்த்தா போர்ட்டெபிள் என்பது ஒரு எளியவகை ஆஃப்லைன் அகரமுதலியாகும். அதுவும் எளிமையா இயங்கறது.” நாற்காலியின் நுனியில் மெல்லத் தாளமிட்டவாறே பேசினான் நெடிலன்.

"வேறென்ன மென்பொருளெல்லாம் நாம கருத்தரங்கில சொல்லலாம்?”மனதில் கருத்தரங்கிற்கான எண்ணத்துடன் அடுத்த கேள்வி கேட்டாள் நுட்பா.

“ஆடியோ தொகுப்பிற்கு ஆடாசிட்டி இருக்கு, முப்பரிமாண படங்கள வரைஞ்சு பாக்கறதுக்கு ப்ளண்டர் 3டி இருக்கு, நாம கணினியில செய்யறதெல்லாம் படமா எடுக்கறதுக்கு பயன்படற் கேம் ஸ்டூடியோ இருக்கு, பிடிஎஃப் கோப்புக்கள அணுகறதுக்கு ஃபாக்ஸ் இட் ரீடர் இருக்கு, வேறென்ன வேணும், ப்ரி டவுண்லோட் மேனேஜர், யுடோரண்ட் எல்லாமே போர்ட்டெபிளாவே இருக்கு.” இதெல்லாம் நாம சாதாரணமா பயன்படுத்தற மென்பொருட்கள்.

“இன்னும் சிறப்பான மென்பொருட்களான, PDFTKBuilder – pdf editor, Teamviewer, Wise Data Recovery, Gimp, WinSCP, Portable putty, FileZilla அப்டீன்ற மென்பொருட்களும் இருக்கு. எம் எஸ் ஆபிஸ் நிறுவாததால, நமக்கு அவுட்லுக்கிற்கு மாற்றா, தண்டர் பேர்ட்டு நிறுவிக்கலாம். வேறென்ன வேணும் சொல்லு?” விடை சொல்லியவன் கேள்வி கேட்டான்.

"வேற எதாவது சிறப்பான மென்பொருட்கள் இருக்கறதா நெடில்?” வேண்டுமென்றே கேட்டாள் நுட்பா.

“Balabolka word to mp3, வேர்டிலிருந்து எம்பி3 ஆக மாற்றும் மென்பொருள், Brutal Chess உள்ளிட்ட மிகுதியான விளையாட்டுக்கள், KeePass எனப்படும்  Password Protector, Teracopy என்னும் விரைவு படியெடுப்பான், Mp3 split என்னும் பாடலை வெட்டி ஒட்டும் மென்பொருள், Type faster–typing test தட்டச்சுப் பயிலும் மென்பொருள், World clock, Zint barcode studio மேலும் அன்றாடம் நாம் பயன்படுத்தற  Notepad++, VLC Player எல்லாமே இலவசமாக் கெடைக்கறது. இதெல்லாம் நாம போர்ட்டபிளா நிறுவறதால டிஎல் எல் கோப்புக்களெல்லாம் தனித்தனியா நிறுவப்பட்டு இயங்குதளத்தை சாதாரணமாகவே இயங்க வைக்கறது. வீணாக இயங்குதளம் (Hang)தொங்குவதில்லை. வீணாக .நெட்பிரேம்வொர்க் போன்றவைகள் நிறுவப்படாததால் இயங்குதளம் இயல்பாகவே இருக்கிறது. அவ்வப்போது நாம் நிறுவிய நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருளை மட்டும் மேம்படுத்தி வந்தால் அருமையாக அனைவரும் எக்ஸ்பியைப் பயன்படுத்தி இன்புறலாம். எல்லாதோட முக்கியமானது. இப்டீ நாம பயன்படுத்தற எக்ஸ்பியை மைக்ரோசாஃப்ட் கண்டுக்காது.”

“ம்.. அப்பா. நானே கருத்தரங்கு நடத்தி முடிச்சுட்டேன்.” நெடிலன் பேசினான்.

“நிரம்ப நன்றி நெடில். பல கொழப்பத்தோட வந்த என்ன தெளிவாக மாத்திட்டீங்க. நான் இனிமே அருமையா கருத்தரங்கிற்கு போயி கல்லூரியையே கலக்குவேன்."மகிழ்ச்சியுடன் பேசினாள் நுட்பா.

“கலக்குறப்ப என்னையும் மறந்துடாத நுட்பா..." கண்களால் சிரித்தான் நெடிலன்.

"என்றும் இனிய‌து எங்கள் எக்ஸ்பி.” மறுமொழியாகச் சிரித்தாள் நுட்பா.