புதன், 22 பிப்ரவரி, 2017

தருணக்கவிதை

இணையத்தில் உலாவரும் ஒரு தருணக்கவிதை. படைப்பு யாருடையதோ தெரியவில்லை. கண்டதில் கவர்ந்தது; பகிர்கிறேன்.

செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது..
 
உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!
 
வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!
 
ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!
 
அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!
 
நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!
 
காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!
 
காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!

திங்கள், 13 பிப்ரவரி, 2017

புலனச்செய்தி



ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

தமிழறிவோம் - 2

தமிழறிவோம் -- (வளர்ச்சி இரண்டு)
இந்த இதழில் அடுத்த கட்டமாக சில வடசொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைக் காண்போம். இச்சொற்கள் தொடர்ந்து இத்தொடரில் பயன்படுத்தப்படும். அவைகளைத் தொடர்ந்து படித்து வந்தால் தமிழ் பேசுதல் எளிமையாய்க் கையகப்படும். முதற்சொல்: அநுபவம்.
பலர் இதனை தமிழ்சொல் என எண்ணி வருகின்றனர். ஆனால் இது வடசொல். இது எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது, என்னென்ன பொருளிலெல்லாம் வருகின்றது என்பதைக் குறித்துக் காணலாம்.
  1. முதலில் விளம்பரத்தில் இச்சொல் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காணலாம். "இரண்டாண்டுகள் அநுபவம் இந்த வேலைக்குத் தேவை" என்பது போன்ற விளம்பரங்கள் நாள் தோறும் நாளிதழ்களில் வரும். இச்சொல்லினை பட்டறிவு என தமிழில் எழுதலாம். ஆக முதல் பொருள் பட்டறிவு.
  2. இது ஒரு நல்ல அநுபவம் என்று கூறும் பொழுது, படுதல் என்று பொருள் வருகிறது. எனவே "இது எனக்கு ஒரு நல்ல படுதலைத் தந்தது" என்று கூறுதல் சிறப்பு. இச்சொல்லை மறைமலையடிகள் தமது "தொலைவிலுணர்தல்" நூலில் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார். அவருக்குப் பிறகு இச்சொல் சற்றேறக்குறைய வழக்கொழிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் எவரும் இது ஒரு நல்ல படுதல் என்று சொல்வதே இல்லை. அநுபவம் புதுமை அவனிடம் கண்டேன் என்று கூறுவதைத் தவிர்த்து படுதல் புதுமை அவனிடம் கண்டேன் என்றே கூறுதல் தமிழ் வளரும் வழி.
  3. மூன்றாவது அநுபவித்துப்பார்த்தால்தான் தெரியும் என்பது. இதற்குப் பொருள் பட்டுப்பார்த்தால்தான் தெரியும் என்பது. இது பெரும்பாலும் அழிந்து விடாமல் இன்றும் நம்மூர்களில் "பட்டாத்தான் தெரியும்." என்று பயன்படுத்தப்படுகிறது.
  4. அவனுடன் படு. அவளுடன் படு. என்பது முறையே அவனை அநுபவி. அவளை அநுபவி. என்பதற்கு மாற்றாக நாம் பயன்படுத்தலாம். இது ஒரு வழக்குத்தான். இழிவழக்கு (கெட்ட வார்த்தை) அல்ல. ஆனால் தமிழைப் பயன்படுத்த நாம் தவறியதால் இதை நாம் இழிவழக்கு போல பார்க்கிறோம். அதனால்தான் திரைப்படங்களில் கூட இது போன்ற உரையாடல்களை தணிக்கைக் குழுவினர் தணிக்கை செய்துவிடுகிறார்கள்.
படுதல் பற்றி படித்தது நல்லதொரு படுதலே என்ற நம்பிக்கை கொண்டு அடுத்த சொல்லுக்குப் பயணிக்கலாம்.
இரண்டாஞ்சொல்: தினம்
தினம் என்று ஒரு சொல். இது மணிப்பிரவாள நடையால் நம் தமிழுக்குள் புகுந்து விட்டது. இச்சொல் எல்லா வானொலி நிலையங்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள், நாளிதழ்களில் மூலம் தமிழுக்குள் இரண்டற கலந்துக் விட்டது. இதற்கு பல பொருட்கள் உண்டு. அவை
தினம் ‍‍‍_ நாள்,
இன்றைய தினம்_ இன்றையநாள், இன்று
தினம் தோறும் _ ஒவ்வொருநாளும், நாடொறும் (நாள் தோறும்)
தினம் தினம் _ அன்றாடம்
நேற்று முன்தினம்_ முந்தாநாள்
நாளை மறுதினம்_ நாளை மறுநாள்
சுதந்திர தினம் _ விடுதலை நாள்
குடியரசு தினம் _ குடியரசு நாள் என்பதில் தொடங்கி அன்னையர் தினம் வரையில் நாம் அன்னையர் நாள் என்று கூறாமல் இருக்கிறோம். இதில் முந்தாநாள், அன்றாடம் (அன்னாடு) என்னும் சில சொற்கள் இன்றும் சிற்றூர் மக்களால் சொல்லப்பட்டு வருகிறது. இக்கட்டுரைக்குப் பின்பு கூறுவோம் என்ற நம்பிக்கையோடு அடுத்த சொல்லினைக் காண்போம்.
மூன்றாஞ்சொல்: ஜாஸ்தி
இது உருது மொழி பேசும் உடன்பிறப்புக்களால் தமிழுக்குள் நுழைந்து விட்டது. இதன் பொருள் மிகுதி, அதிகம் ஆகியவையாகும்.
வழக்கு: வெல ரொம்ப ஜாஸ்தி.
சரியான இலக்கண வழக்கு: விலை மிகவும் அதிகம். (அல்லது) விலை மிகுதி.
இச்சொல் பெரும்பாலும் வேறு பொருளில் தமிழில் நாம் பயன்படுத்துவதில்லை.
நான்கு ஐந்தாம் சொற்களை வழக்கம் போல் பார்க்காமல் சற்றே வரலாற்று நிகழ்வுகளோடு கலந்து பார்த்தால் ஒரு நூலினைப் படித்த நிறைவு கிடைக்கும்.
தமிழுக்கு "கதி" என்று கருதப்படும் கம்பரும் திருவள்ளுவருங்கூட மிகுதியாக வடமொழிச் சொற்களைப் பயன் படுத்தியிருக்கிறார்கள். எனவே தான் எது தமிழ் என்று நாம் இன்னும் ஒருவரையொருவர் அடித்து கொள்ளாத குறையாக ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். கி.மு.விலேயே தமிழோடு சமற்கிருதம் இன்னபிற வடமொழி வட்டார வழக்குகள் இரண்டக் கலந்து விட்டன. ஒரு வரி எழுதப்பட்டால் இரண்டு தமிழ் சொற்கள், இரண்டு வட சொற்கள் கலந்து எழுதப்பட்டன. அதை சரி என்றும் கலந்தாடினார்கள் அக்கால அந்தணர்கள்.
முதல் குறளான
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
இதில் அசை, சீர், தளை, அடி, தொடை பார்த்த வள்ளுவப் பெருந்தகை எழுத்தினைப் பார்க்காமல் விட்டு விட்டனர் போலும்.
இதில் வரும் ஆதி, பகவன் இரண்டுமே வடசொற்கள். ஆதி என்பதற்கு தொடக்கம், முதன்மை என்பது பொருள். "துவக்கம்" என்பது சோர்வுற்ற தமிழ். அவ்வாறான வழக்கு இலக்கணம் தெரியாமல் இலக்கணம் மீறியவர்களால் வந்து நம் தமிழோடு ஒட்டிக்கொண்டது. இது தமிழ் போலத் தோன்றினும் தமிழன்று.
கிறித்தவர்களின் புனிதநூலான திருவிவிலியத்திலே(பைபிள் என்பது ஆங்கிலம் போன்று தோன்றினாலும், அதன் வேர்ச்சொல் இலத்தீனிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.) வந்த ஆதி ஆகமம் தற்போது தான் தமிழ் படுத்தப்பட்டு தொடக்க நூலாகியிருக்கிறது.
பகவன் என்பதற்கு இணையாக சொற்கள் கொட்டிக்கிடக்கின்றன தமிழில். கடவுள், இறைவன், இறை, கோ, ஆண்டவன், தலைவன், பெருமான் என ஏழு சொற்கள். இது தவிர, பரமன், மேலவன், வீட்டவன் போன்ற சொற்களும் தமிழ் கூறும் நல்லுலகோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே. இதை விடுத்து ஆதி, பகவன் என்ற சொற்களை பயன்படுத்தியதற்கு காரணம், திருவள்ளுவரின் தாய் தந்தை பெயர்கள்தாம் ஆதி, பகவன் என்பவை என்பன போன்ற கிளைக் கதைகளும் சொல்லாராய்ச்சி நூல்களில் மிகுதியாயுள்ளன.
ஏராளம், ஏகப்பட்டது போன்ற சொற்கள் தமிழ் போன்று தோன்றிடினும் அவை தமிழ் ஆகா;வடமொழியே. இதற்குச் சான்று ஆ.கி.பரந்தாமனார் எழுதிய "நல்ல தமிழில் எழுதுவது எப்படி? என்னும் நூலில் கிடைக்கிறது. இதற்கு இணையான சொல்லும், மிகுதி, அதிகம் என்பவையே. ஏராளம் என்ற சொல் எழுதுமிடங்களிலெல்லாம்,மிகுதியாக, அதிகமாக என்ற சொற்களைக் கண்டிப்பாக மறுபதிவு செய்யலாம்.
கம்பரைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவரது பாக்களில் வடமொழி மிகுதியாய் விளையாடும். முதலாவதாக அவர் கதையின் நாயகனே வடக்கே வாழ்பவன் தான். எனவே தமிழ் கற்க நினைப்பவர்கள் கதி என்று சொல்லும் ம்பர், திருவள்ளுவரை கற்றால் மட்டும் போறாது.
வடமொழியில் சிக்கிக் கொண்ட தமிழினை மெள்ள மெள்ளத்தான் எடுக்க முடியும். குறிப்பாக இவ்வழியினை (தமிழ் வழக்கினை) இலங்கை நாட்டவர் நன்கு கடைப்பிடிக்கிறார்கள். ஆனாலும் அங்கும் பிரசித்தம், அபிமானம், பிரபலம், கூட்டுத்தாபனம் போன்ற வடசொற்களும், பிறமொழியும் காலத்தின் கட்டாயத்தால் விரவிக் கிடக்கின்றன. இவ்வாறு சிதறிக்கிடக்கும் தமிழைத் தான் ஒன்று திரட்டி நாங்கள் தமிழறிவோம் தொடரில் தர முனைகிறோம்.
பிரசித்தம் - பெயர் பெற்றது, பேறு பெற்றது, பெரும் பெயர் பெற்றது, நற்பெயர் பெற்றது, நற் பேறு பெற்றது.
பிரபலம் - பெயர் பெற்றவர், பெரும் பெயர் பெற்றவர், பேறு பெற்றவர்
அபிமானம் - விருப்பம்,வேட்கை,ஆசை,வாஞ்சை,ஆவல்
ஸ்தாபனம் - நிறுவனம், நிலையம்
இவ்வளர்ச்சியில் தமிழில் புதிதாக சொற்கள் ஏதெனும் கற்றுக்கொள்ள முனைவோம். நிரவல்: இது கர்நாடக இசையில் வரும் ஒரு வழக்கு. பாடகர்/பாடகி பாடும் பொழுது பாடும் பாட்டில் உள்ள வார்த்தைகள் சில நேரம் புரிபடாமல் போகும். அதற்காக பாடிய வரிகளையே திரும்பத் திரும்பப் பாடுவார்கள். (மேயாத மான்... போன்ற வகையறா) அதுவே அவர் பாடும் பாடலுக்கு அழகு சேர்க்கும். இச்சொல்லினை வேறெந்த வழக்கிலும் நாம் பயன்படுத்துவதில்லை.
கல்லுளி மங்கன்: சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டு வீதிகளில் காசு வாங்க வரும் மனிதன். இவ்வழக்கு இம்மனிதனுக்கு பயன்படுகிறதோ இல்லையோ, எல்லாம் தெரிந்து கொண்டு ஒன்றுந் தெரியாமல் இருப்பது போல் பாசாங்கு செய்பவர்கள், நாராக உரித்தாலும் நகராதவர்கள், என்னதான் திட்டினாலும் அசையாதவர்கள் போன்றவர்களை அழைக்கப் பயன்படுகிறது. தமிழ் தெரிந்த மனைவிகள் தங்கள் கணவரை இவ்வாறுதான் செல்லமாக அழைக்கிறார்கள், கணவர் இது போன்ற பண்புடையவராயிருந்தால் மட்டும். இவ்வழக்கிற்கு பெண்பால் எமக்குத் தெரிந்த வகையில் வழக்கில் இல்லை.
"கல்லுளி மங்கனுக்கு காடு மேடேல்லாம் தவிடுபொடி"
- அறிஞர் அண்ணாதுரை.
அதாவது கல்லுளி மங்கன் போன்று இருப்பவனுக்கு காடு மேடுகளெல்லாம் சிறு துரும்புகள்தாம். அவைகள் அவனை ஒன்றுஞ்செய்யாது.
பிற வடமொழி விரவல்களை அடுத்த இதழில் காணலாம்.

நாப்பழக்க செழுங்கவிதை படிக்கும் முறை:
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற சொலவடை கீழ்வரும் நாப்பழக்கச் செழுங்கவிதைக்குச் செம்பொருத்தம். தனியறையில் அமர்ந்து கொண்டு கவிதையினை மீண்டும் மீண்டும் பொருளுணரும் வண்ணம் மெதுவாகவோ, உரக்கவோ நாடோறும் படித்து வர நாவில் தமிழ் மிளிரும்.
நாப்பழக்கச் செழுங்கவிதை
எக்காலமும் எக்காளம் முழங்கிடும்
எங்கள் தமிழ் கொண்டு
முக்காலமும் மங்காத‌ வண்ணம்
படைக்கின்றோம் நாப்பழக்க செழுங்கவிதை.

,,ள வரும் எங்கவி
பிறழாமல் படிக்க
குரல் வரும், குறள் வரும்.
நா வரும், நற்றமிழ் வரும்.
இனி மெல்லத் தமிழ் வாழும்.
பொருள்:
எக்காளம் - ஒரு வகை இசைக்கருவி. அக்கால மன்னர்கள் வரும் பொழுது இசைக்கப்படக்கூடியது.
முக்காலம் - நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம்.

தமிழ் வளர்ப்போம்.