வெள்ளி, 12 ஜூன், 2009

ஈழம் இலங்கைச் சிக்கலுக்கான இறுதித்தீர்வு

சென்ற பதிவு ஈழம் பற்றியமையமையால் கூடுதல் பெயர் கிடைத்தது. இணைய நண்பர் செயபாலும், சவுக்கடி என்ற பெயரில் பெயர் தெரிவிக்க விரும்பாதவரும் (மறுமொழி தெரிவிக்க மட்டுமே, புதிய பதிவு தொடங்கினார் போலும்... பதிவுகள், மின்னஞ்சல் முகவரி எதுவுமில்லை.) பதிவினைச் சற்றே சாடியிருந்தனர். மற்றவர் பாராட்டியிருந்தனர்.

செயபால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழீழம் இருந்ததற்கு பொன்னியின் செல்வனை உதவிக்கு அழைத்து மிக்க மரியாதையுடன் மின்னஞ்சல் செய்திருந்தார். நன்றிகள். நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போன்று எனது பதிவானது ஒரு சாளரவழிப் பார்வையே. பூசலுக்குரியதன்று.

ஏன் தனி ஈழம் கிடைக்கவில்லை?

1.   ஈழத்திலிருந்து அதற்காக போரிடுபவர்களின் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தன்னலமிக்கவர்கள்தாம்.

2.   மற்றவர்கள் வெளிநாட்டில் முன்பு அகதிகளாகக் குடியேறி இன்று செயற்கைக் கோள்களில் தொப்புள் நடனம் பார்க்கும் அளவுக்கு முன்னேறியிருப்பவர்கள். இவர்களால் இணையத்தில் அலுவலக ஓய்வு நேரத்தில் பதிவுகள் எழுத முடியுமே தவிர வேறொன்றும் பயனில்லை. இவர்களில் பெரும்பாலும், வல்லரசிலும், ஆசுத்திரேலியாவிலும், வளைகுடா நாடுகளிலும் இருப்பவர்கள்.

3.   மீதியிருப்பவர்கள் இச்சிக்கலைவைத்து அரசியல் செய்யும் சராசரி அரசியல் தலைவர்கள்.

தமிழீழத்தின் வரைபடத்தினைக் கூட இன்று நாம் தேடுபொறிகளில்தாம் பார்க்க வேண்டியிருக்கிறது. பிறகு எப்படி தமிழீழம் மலரும்?

ஏன் தனிநாடு வேண்டாம்?

காரணம் சிறியதுதான். நாட்டினை உடைப்பதும், சேர்ப்பதும் ஏறக்குறைய இயற்கை இறந்த நிகழ்வுகளுக்கு இணையானதுதாம். இதற்கு செக், சுலொவோக்கியா பிரிந்தது. கிழக்கு, மேற்கு செருமனிகள் இணைந்ததை மேற்கோள் காட்டலாம்.

இந்திய வரைபடத்தில் கூட இன்றும் இருக்கும் சில கசுமீரின் வரம்பெல்லைகளில் பல பாக்கித்தானுக்கு உரியவைகள்தாம். பண்டித நேருவின் உத்தரவுக்கு ஏற்ப இன்றும் நாம் விடுதலை இந்தியாவின் பழைய வரைபடத்தினையே பள்ளிகள் முதல் பயன்படுத்தி வருகின்றோம்.

கசுமீரில் இன்றும் விடுதலை இந்தியா (15.08.1947) விலைக்கே அரிசி, பருப்பு, நிலம் எல்லாம் கொடுத்து வருகின்றது இந்தியா. இந்தியாவிலிருந்து யாரும் கசுமீரில் சென்று நிலம் வாங்க முடியாது. ஆனால் அங்கிருந்து இந்தியா வந்தால் எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் வாங்கலாம்.

இந்த வசதிகளெல்லாம் நேரு இந்தியாவின் செல்லப்பிள்ளை கசுமீருக்கு, அது பிரிந்து போய்விடாமல் இருக்க கொடுத்தவைகள்தாம்.

மாநிலங்களில் நிலவரம்பு எடுத்துக்காட்டு:

திருப்பதியினை ஆந்திராவுக்கு கொடுத்துவிட்டு சென்னையை தன்னகத்தே வைத்துக்கொண்ட தமிழ்நாடு, உதகமண்டலத்தை கருநாட்டிலிருந்து[1] எடுத்துக்கொண்டது.

இவையெல்லாம், கால மாற்றத்திற்கு ஏற்ப மேலாண்மைக்காக ஏற்படுத்திக் கொண்ட வரம்பெல்லைப் பிரிவுகளே தவிர வேறொன்றுமில்லை.

"பழையன கழிதலும், புதியன புகுதலும்,

வழுவல கால வகையினானே."

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பவனந்தி முனிவர் சொன்னது நிகழ்ந்ததென கருதலாம்.

தமிழனும், சிங்களனும் இணைந்து வாழாமல், நாட்டைப் பிரித்தல் மென்மேலும் பூசல் வளர்க்கும். வேலுப்பிள்ளையின் பிள்ளை[2], நாட்டின் தேர்தலைப் புறக்கணித்தார். எனவே தமிழன் யாரும் தேர்தலில் நிற்காமல் அவனது உரிமை செத்தது.

இலங்கைஈழ உரிமை வளர்த்து, உறவை வளர்ப்பதே சிறந்தது. இல்லையேல் இது தீர்வறிய இயலா நிலையிலேயே இருக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பொன்னியின் செல்வன் கதையினை எழுதிய கல்கியே வடக்கேயிருந்து கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர் வழி அந்தணர் ஆவார்.

தனியீழம் என்று எண்ணாமல், சிங்களன், தமிழன் நல்லுறவு என எண்ண இச்சிக்கல் தீருமென்பது என் தாழ்மையானகருத்து.


[1] உயர்ந்த மலைப்பகுதி என்று பொருள். அதுவே பின்னாளில் கர்நாடகா என்றானது.

[2] பிரபாகரன்