திங்கள், 3 செப்டம்பர், 2012

அறிவுக்குக் கேள்விகள் ஏழு-நேர்காணல்


பா.அறிவு ஆரோக்கிய இராஜேஷ்
அறிவு - பெயருக்கேற்ப சிறந்த அறிவாளி. அண்மையில் மென்பொருள் சோதனைக்  குழுத்தலைவராக (software test lead) ஆகி இருக்கும் இவருடன் ஒரு நேர்காணல்.
இவரைப் பற்றிய ஓர் எளியஅறிமுகம். திருச்சி புனித வளனார் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் படித்து, பிலானி பிட்ஸில் முதுகலை படித்துத் தேறியவர்.  இவர் தமிழ் கம்ப்யூட்டர் இதழ் வாசகர்களுக்காக அவ்வப்போது கணினிக்கதைகளையும், தொழிற்நுட்பச் செய்திகளையும் எழுதிவரும் பா.நி..பிரசன்னாவின் இளவல்.
முதலாவது கேள்வி: நீங்கள் தமிழ்வழிக் கல்வி கற்றவராயிற்றே, எப்படி மென்பொருள் நிறுவன நேர்காணலை எதிர்கொண்டீர்கள்?
“நல்லது. பொதுவான மாணவர்களைப் போல் நானும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழிலேயே கல்வி கற்றேன். இளநிலைப் பாடம் படிக்கும் பொழுது சில சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் என்னுடன் படித்த வேறு மாநில மாணவர்களோடு தப்புத்தப்பாக ஆங்கிலம் பேசியே கற்றுக்கொண்டேன். இதைச் சொல்வதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. நேர்காணலின் போது எனது கணினி அறிவினையும் (computer knowledge), அலசல் திறமைகளையுமே (analytical skills) நிறுவனத்தினர் சோதித்தனர். ஆக நேர்காணல் எளிமையாகவே அமைந்தது. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் தமிழ்வழிக்கல்வி கற்றவர்களும் வெற்றியடையலாம். முன்னாள் குடியரத்தலைவர் அப்துல் கலாம் அவர்களும் கூட தமிழ்வழிக் கல்வி கற்றவர்தான்.”
கேள்வி 2: தொழில் மறைசெயல் என்று சொல்லக்கூடிய Job Secret பற்றிச் சொல்லுங்கள்.
“பொதுவாக எந்த ஒரு நிறுவனத்திலும் சமநிலை வேலை அமைவு (balanced work) இருக்காது. அதுவும் இந்தியாவில் அது இருக்கவே இருக்காது. எனவே சில நாட்கள் வேலை அதிகமாகவும், சில நேரங்களில் வேலையே இல்லாமலும் இருக்கும். பன்னாட்டு கணினி நிறுவனங்கள், கடின உழைப்பை (hardwork) விட புதுமை உழைப்பினையே (smart work) விரும்பி ஏற்றுக் கொள்கின்றன. நீங்கள் எப்போதும் புதுமையாக‌ (ஸ்மார்ட்டாக) இருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் (team members) உங்களை மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் நீங்கள் வேலையை இழக்க நேரிடும். எனக்குத் தெரிந்த வகையில் இதுதான் தொழில் மறைசெயல்.”
“மேலும் நிறுவனங்களில் தொடர்பாடல் திறன் (proper commuincation) மிகவும் இன்றியமையாதது. உங்களுக்கு ஒன்று தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லிவிட வேண்டும். "தெரியும், தெரியும்” என்று சொல்லிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கக் கூடாது. கொடுத்த வேலையை குறிப்பிட்ட நாளுக்குள் (target date) செய்து கொடுக்க வேண்டும். Escalation என்று சொல்லக்கூடிய மேல்முறையீடுகளை கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும்.”
கேள்வி 3: நீங்கள் அயல் நாடு சென்று வந்துள்ளீர்களே அதைப்பற்றி சொல்லுங்கள். நம் நாடு வல்லரசு ஆகும் வாய்ப்புள்ளதா?
“நான் கனடா நாட்டிற்கு மட்டுமே சென்றுள்ளேன். அங்கே மக்கள் தொகை குறைவு. பரப்பளவு அதிகம். அவர்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாமோ வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.”
“தொழில் முறையிலும், நுட்பங்களை அறிந்து கொண்டு செயல்படுத்துவதிலும் நம்மவர்கள் சளைத்தவர்கள் அல்லர். அங்கு வரும் நுட்பம் விரைவிலேயே இங்கும் வந்து விடுகிறது. அப்படி இருப்பினும் நாம் நாணயத்தின் மறுபக்கமும் பார்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.”
“நான் எதிர்மறையாகப் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். அவர்கள் நம்மைவிட நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கூடுதலாக இருக்கிறார்கள். ஒருவரின் அகவையை மற்றவர் எப்படிச் சென்று பிடிக்க முடியாதோ அது போல அவர்களைப் பிடிப்பது என்பது முயற்கொம்பே.”
“அங்கே எல்லாமே திட்டப்படி நடக்கிறது. போக்குவரத்து, வங்கிக் கணக்குத் தொடங்குதல், பேருந்தில் வரிசையில் நின்று ஏறுதல். இங்கே எல்லாமே திட்டத்தினை மீறி நடக்கிறது. அங்கு திட்டத்தை மீறினால் திட்டுக் கிடைக்கும். இங்கு திட்டத்தை மீறாவிட்டால் திட்டுக் கிடைக்கும்.”
“நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 32 முதல் 35 இலட்சம் கோடிகள் கறுப்புப் பணமாக மாறிக் கொண்டிருப்பதாக புள்ளியியல்  தெரிவிக்கிறது. அங்கு அவ்வாறு இல்லாததால் பணத்திற்கு மதிப்பு இருக்கிறது.”
“அவர்கள் திட்டத்தில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்தால் நம்நாடு வல்லரசாகும் என்பது திண்ணம். எடுத்துக்காட்டிற்கு அனைவரும் பேருந்தில் வரிசையில் நின்று ஏற வேண்டும். இது சாத்தியமெனில் வல்லரசும் சாத்தியமே.”
கேள்வி  4: புதியதாய் குழுத்தலைவர் ஆகியுள்ளீர்கள். பணி எப்படியுள்ளது?
                “இது ஆறு ஆண்டுகள் நான் உழைத்த உழைப்பிற்குக் கிடைத்த பரிசுப்பணி. குழுவில் உறுப்பினராக இருந்த போது மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுச் செயற்பட வேண்டும். நல்ல குழு உறுப்பினராக இருந்தால் குழுத்தலைவராக ஆவது எளிது.”
“நாம் சொல்வதைக் கேட்பதற்கும், அதன்படி செயற்படுவதற்கும் நமக்கும் கீழே ஆட்கள் இருக்கிறார்கள் என எண்ணும் போது மகிழ்ச்சியும், குழுவில் நடக்கும் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் போது பொறுப்புணர்வும், கலந்துரையாடல்களில் (meetings, discussions etc) ஈடுபடும் போது ஆளுமைப் பண்பும் அதிகரிக்கிறது.”
கேள்வி 5: ஊதியம் அதிகம் கிடைப்பதற்காக அடிக்கடி நிறுவனத்தை மாற்றும் ஆட்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
“அடிக்கடி நிறுவனம் மாறுவது அவ்வளவாக சரியல்ல. இது என் பட்டறிவில் நான் கற்றுக்கொண்டது. ஒரு நிறுவனத்தில் நம்மை உறுதிப் படுத்தவே ஆறு முதல் எட்டு மாதங்கள் பிடிக்கும். அப்படியிருக்க வெவ்வேறு நிறுவனங்களை மாற்றிக் கோண்டே இருப்பது நல்லதன்று. ஒரு நிறுவனத்தில் குறைந்த பட்சம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பணிபுரிவது அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தை மனதில் ஒரு உறவு போல் புரிந்து கொள்வது நலம் பயக்கும்.” என்றே நான் நினைக்கிறேன்.
“நான் விப்ரோ (Wipro) அக்சென்சர் (Accenture) நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறேன். உளமாறச் சொல்கிறேன். விப்ரோ எனது தாய் நாடு. அக்சென்சர் எனது சின்னம்மா.”
கேள்வி 6: சோதனைக்கு (testing software) எந்த மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்?
“பொதுவாகக் கல்வி நிலையங்களில் (Education Institutions) winrunner, loadrunner பற்றிச் சொல்லிக் கொடுப்பார்கள். அவற்றைத் திறம்படக் கற்றுக் கொண்டு, அவ்வப்போது வரும் புதிய சோதனை செய்யக்கூடிய மென்பொருட்கள் பற்றியும் தெரிந்து கொள்வது தேவையாகும். அனைத்து மென்பொருட்கள் குறித்துத் தெரியவில்லையானாலும் குறிப்பிட்ட சிலவற்றை ஆழம் வரை சென்று கற்பதே சிறந்ததாகும்.”
கேள்வி  7: புதிதாய் வருபவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
“கூற விரும்புவது என்றால் அறிவுரை அல்ல; எனது கருத்து என்றே எடுத்துக் கொள்ளலாம். பணிநேரத்தில் பணியையும், ஓய்வு நேரத்தில் ஓய்வையும் செய்யுங்கள். உங்களால் முடிந்த தொழிற்நுட்பஉதவியினை உங்கள் குழு உறுப்பினர்களுக்குச் செய்யுங்கள். அது உங்கள் மேலான மதிப்பினை அவர்களுக்குள் அதிகரிக்கும். எந்த வகை வெற்றியானாலும் நான் செய்தேன் என்று சொல்லாமல், எனது குழு செய்தது என்று சொல்லிப் பழகுங்கள். அது உங்களை உயரத்தில் கொண்டு போய் உட்கார வைக்கும்.”

0 Comments: