வெள்ளி, 19 அக்டோபர், 2012

தொல்லை கொடுத்த நண்பரும், தொலைந்து போன கடவுச்சொல்லும்


எனக்கு நண்பர் ஒருவர் உண்டு. அவரிடம் தொழிற்நுட்பம் தொடர்பாகச் சில மாறுபட்ட வழக்கங்கள் உண்டு.
1.       எது எதற்காகப் பயன்படுகிறது என்பது கூடத் தெரியாமல், நிறைய இலவச இணையக் கணக்குகளைத் தொடங்குவது.
2.       அனைத்திற்கும் எளிய கடவுச்சொல் கொடுப்பது. .கா: xyz789
3.       அனைத்திற்கும் ஒரே கடவுச்சொல் கொடுப்பது.
4.       கடவுச்சொல்லை யாருக்கும் சொல்லாமல் இருப்பது. ஆனால் அனைத்துக் கணக்குகளுக்கும், ஒரே கடவுச்சொல் கொடுத்துள்ளேன் என்பதை அனைவருக்கும் சொல்வது.
இதையெல்லாம் நண்பரிடம் கண்ட நான், இது போன்றெல்லாம் செய்யாதீர்கள். சில இணையதளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியினைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் கொடுத்த அந்தக் கணக்கிற்குரிய கடவுச்சொல்லை, உங்கள் மின்னஞ்சலை உடைக்கப் பயன்படுத்திக் (crack) கொள்வார்கள். என்று சொல்லிய பின், நண்பர் என்னைப்பார்த்து குறுநகை செய்வார். நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா? எனது கணக்கை யார் பயன்படுத்துவார்கள்? என்று வினவுவார்.
“ஒங்களுக்குப் பட்டாத்தான் தெரியுமையா...” என்று சொல்லிவிட்டு அதற்குப் பிறகு அதைப்பற்றிய பேச்சையே நிறுத்திவிட்டேன்.
திடீரென்று ஒரு நாள் அவரது ஜிமெயில் கணக்கு உடைக்கப்பட்டது. கடவுச்சொல்லும் மாற்றப்பட்டு விட்டதுநண்பருக்கு நான் இது பற்றியெல்லாம் நான் சொன்னமையால், நான் தான் அவரது கணக்கினை உடைத்து கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன் என்று நினைத்துக்கொண்டு என்னிடம் வந்து நிலைமையை விளக்கினார்.
ஐயா எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அதையெல்லாம் விடுத்து நான் இதைச் செய்வேனா என்றதும், நண்பர் என்னை நம்ப மறுத்துவிட்டார்.  எல்லாவற்றிற்கும் ஒரே கடவுச்சொல் கொடுத்திருந்ததை உடனே மாற்றுங்கள் அல்லது அதையும் இணையக்கயவர்கள் உடைத்து விடுவார்கள் என்றதும், அச்சம் மேலிட்டவராய், இணையத்தில் உலாவச் சென்றார். மற்ற கணக்குகளை எல்லாம் மாற்றியமைத்தவர், மீண்டும் மீண்டும் முயற்சித்தும், ஜிமெயில் கணக்கினை மட்டும் திரும்பப் பெற இயலவில்லை என்று அழாத குறையாக என்னிடம் வந்து சொன்னார்.
இதற்கு ஜிமெயிலே வழிவகை செய்கிறது. நீங்கள் தொலைத்த கணக்கின் பயனர் பெயரைக் கொடுத்தால் அது உங்கள் கடவுச்சொல்லை மாற்றியமைக்க உதவுகிறது என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், அவரது கடவுச்சொல்லை எங்கள் அலுவலக இணைய இணைப்பிலேயே மாற்றிக் கொடுத்தேன்.
எனினும், அவரது முந்தைய மின்னஞ்சல்கள் இணையக் கயவர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. இதையறிந்ததும் நண்பர் முகம் பேயறைந்தது போல் ஆகிவிட்டது.
இப்பொழுதேல்லாம் நண்பர் வேவ்வேறு கடவுச்சொற்கள் கொடுக்கிறார். தேவையற்ற இணையக் கணக்குகளைத் தொடங்குவதை நிறுத்திவிட்டார்.
கடவுச்சொல் முதன்மை (importance) கருதி நண்பர் அமைதிகாக்கிறார். எங்கள் குழுவிலே, கடவுச்சொல் பற்றி பேச்சு எழுந்தாலே, காதத் தொலைவு சென்று விடுகிறார்.
என்ன செய்வது? கண் கெட்டபின் கதிரவன் வணக்கம் கிட்டுமா?

0 Comments: