வெள்ளி, 19 அக்டோபர், 2012

ஒரு செய்தியினைச் சொல்வதனால் ஒன்றுமில்லை - கணினிப் பட்டறிவு


பொதுவாக ஒரு தொழிற்நுட்பச் செய்தியினைச்  சொல்வதற்கு சிலர் அச்சுறுகின்றனர். இது இந்நாட்களில் மட்டுமல்ல, தொன்று தொட்டே இருந்துவருகிறது. அதற்குக் காரணம் எங்கே நாம் சொல்லிவிட்டால் அடுத்தவர் முன்னேறி விடுவாரோ என்ற எண்ணம் தான். இது மிகவும் பழமையான எண்ணம். தொழிற்நுட்பத்துறை மிகவும் விரைவாக முன்னேறி வரும் இந்நாட்களில் இத்தகைய மனப்போக்குத் தேவையில்லை.
எனக்கு நேர்ந்த படுதல்க‌ள் (அனுபவம்) மூலம் இதனைக் கூற விழைகிறேன்.
Start பொத்தான் பட்ட‌ பாடு:
சரியாக பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு (2001) நான் முதுகலை கணினி அறிவியல் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது வகுப்புத் தோழன், Start பட்டனின் பெயரை Hello என்று மாற்றி வைத்திருந்தான். அதை ஒரு பெருமையாக அனைவரிடமும் கூறிக்கொண்டிருந்தான். ஆனால் அதை மாற்றும் வழி முறையினைக் கூறவில்லை. அதை அவனே கண்டறிந்தது போல் பொத்திப்பொத்தி வைத்திருந்தான்.
அந்த வழிமுறையினை வேறு சில நண்பர்கள் மூலம் நான் ஒரு மாதத்திற்குள்ளாகத் தெரிந்து கொண்டேன். அப்பொழுதெல்லாம் start பட்டனை மாற்றுவதற்கு மென்பொருட்கள் இல்லை. Edit கட்டளை மூலமே explorer.exe கோப்பினை ஹெக்ஸா டெசிமல் எடிட் செய்து மாற்ற வேண்டும். நான் அவனை விட ஒரு படி மேலே போய் Prasanna’sStuff (15 எழுத்துக்கள்) கொண்டு Start பட்டனை வடிவமைத்திருந்தேன். அப்பொழுது அது அவ்வளவு பெரிய செய்தி. அதன் பிறகு தமிழ் கம்ப்யூட்டர் இதழில் Start பட்டனை மாற்றும் முறை வெளியானது. பிறகு சில ஆண்டுகளிலேயே விசுவல் பேசிக் கொண்டு Start பட்டனை எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளும் நிரல் கிடைத்தது.
அதன் பிறகு ஏன் Start பட்டனை மாற்ற வேண்டும், அது அப்படியே இருந்து விட்டுப் போகிறது என்று Start பட்டனை பலமுறை மாற்றியவர்கள் தெரிவித்தார்கள். விண்டோஸ் 7ல் Start பட்டனுக்கு மாற்றாக ஐக்கான் மட்டுமே இருக்கிறது. விண்டோஸ் 8 பீட்டா பதிப்பில் Start பட்டனே இல்லை. இன்று யூடியுபில் Start பொத்தானை மாற்றுவது எப்படி என்ற காணொளி மூலம் எளிதில் கற்று Start பொத்தானை மாற்றலாம். அப்படியிருந்தும், இன்று யாரும் பட்டனை மாற்ற விரும்புவதில்லை.
பதினொரு ஆண்டுகளுக்கு முன் என் வகுப்புத் தோழன் செய்ததை நினைத்தால், இபோது எனக்கு நகைப்புத்தான் வருகிறது.

குப்பைத் தொட்டி (ரீசைக்கிள் பின்) பட்ட‌ பாடு:
அதே வகுப்புத் தோழன் சில நாட்கள் கழித்து எப்படி குப்பைத் தொட்டியின் (Recyle Bin) பெயரை மாற்றுவது என்று கூறினான். அது Start பொத்தானை மாற்றுவதை விட எளியதுதான். Regedit செய்து மாற்ற வேண்டும். மாற்றம் செய்யும் பொழுது வேறு ஏதேனும் தவறாக நிகழ்ந்தால் regedit ஐ இழக்க நேரிடும். ஆக மிகவும் கண்ணுங்கருத்துமாகச் செயல்பட வேண்டும். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கும் மூன்றாம் நிலை மென்பொருள் (Third-Party tool) இலவசமாக இணையத்தில் கிடைத்ததாக நினைவு.
விண்டோஸ் ஏழில் வலது சொடுக்கில் எளிமையாக குப்பைத் தொட்டியின் (Recyle Bin) பெயரை மாற்றுவது கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொது யாருமே குப்பைத் தொட்டியின் பெயரினை மாற்ற விரும்புவதில்லை. அது அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள்.

HTML (Hyper Text Markup Language):

                முன்பு இந்த நிரல் மொழிக்கும் பல டேகுகளை (Tag) மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டும். ஒரு சிறிய இணையப்பக்கம் தயாரிக்க மணிக்கணக்கில் HTML நிரல் எழுத வேண்டும்.  இதனையும் எனது வகுப்புத் தோழன் எனக்குச் சொல்லிக்கொடுக்க மறுத்தான். பிறகு விரைவாகக் நான் பிற வகுப்புத் தோழர்களின் உதவியோடு இரண்டே நாட்களில் HTML நிரல் மொழியினைக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு, Microsoft Frontpage editor மூலம் தானாகவே நிரல் செய்யும் முறையினையும் (automatic html page creation) கற்றுக் கொண்டேன். இன்று HTML நிரல் மொழி ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடமாக பல மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் இருக்கிறது. இணையம் மிக விரைவாக இயங்கும் வகையில், HTML5.0, AJAX நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
இந்தப் பட்டறிவின் மூலம் அறியப்படுவது, ஒரு தொழிற்நுட்பச் செய்தியினைச் சொல்வதனால் ஒன்றுமில்லை. ஏனெனில் நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது. ஒன்றைச் சொல்லாமலே வைத்திருப்பதனால் நாமோ, அல்லது  நமது கண்டுபிடிப்போ தான் காலாவதியாகி (out-dated) விடும்.
எது எப்படியிருப்பினும், எனக்குச் சொல்லித்தர மறுத்ததனால் நானே முயற்சி செய்து நுட்பங்களைத் தெரிந்து கொண்டதற்கு எனது நண்பனுக்கு நன்றி கூறவே விரும்புகிறேன். அவன் இப்பொழுது ஃபின்லாந்தில் வசித்து வருகிறான். அக்சென்ஷரில் (Accenture) பணிபுரிகிறான்.

0 Comments: