(தமிழ் கம்ப்யூட்டர் மே 16-31, 2014, பக்கம்-22 இதழில் வெளியான எனது படைப்பு)
வார இறுதியாதலால் (weekend) நுட்பா, நெடிலன் இருவரும் பேரங்காடிக்குச் (shopping mall) சென்று பனிக்கூழ் (ice-cream) பருகிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். தான் புதிதாய் வாங்கியிருந்த மஞ்சள் நிற நேனோ பற்றிப் பெருமையாய்ப் பேசிக் கொண்டிருந்தாள் நுட்பா தன் கணினித் தோழன் நெடிலனிடம். ஒரு சின்ன ஊர்தியைப் பற்றி இப்படி அளந்து கொண்டிருக்கிறாளே என்று நினைத்துக் கொண்டே அவள் பேசும் அழகை யும் பனிக்கூழையும் சுவைத்துக் கொண்டிருந்தான் நெடிலன்.
“அப்றம் என்ன புதுத் தொழிற்நுட்பச் செய்தி சொல்லுங்க நெடில்?” முதல் கேள்வி கேட்டாள் பனிக்கூழ் பதுமை நுட்பா.
“மொதல்ல புதுசா வந்திருக்கற தொழிற்நுட்பக் கருவிகளக் கேட்டுக்க. எல்லாமே பலகைக் கணினிகள்தாம். இதைச் சுருக்கமாக பலனி அப்டீன்னு சொல்றாங்க. சாம்சங் கேலக்ஸி நோட் 10.1 (2014 ஆண்டுப்பதிப்பு) வந்திருக்கு. இதுல 3ஜி ஆதரவு இருக்கு. கணினி வரைகலையாளர்களுக்கும் (artists), வடிவமைப்பாளர்களுக்கும்(designers) உகந்ததாக இருக்கும்ன்னு சந்தையில பேச்சு இருக்கறது. வெல 49,470/-. இதுல Scribble notes, polaris office 5, பதிப்பு இருக்கு. முழுக்க உயர் அடர் தொழிற்நுட்ப திரை (Full HD screen) உண்டு. Autodesk Sketchbook வடிவமைப்பாளர்களுக்காகவே சிறப்பா அமைக்கப்பட்டிருக்கு. குரல் அடிப்படை ஏவலனும் உண்டு (Voice based assistant) எஸ் மொழிபெயர்ப்பான்(S translator), நாக்ஸ் தரவுப் பாதுகாப்பானும்(knox datasecurity) உண்டு.” ஒரு நாளிதழில் பார்த்ததை ஒப்பித்தான் நெடிலன்.
ஒப்பித்தவன், பனிக்கூழைச் சுவைத்துக் கொண்டே அடுத்த செய்திக்குத் தாவினான். “அடுத்து, லெனோவா ஐடியாபேட் A10, இது தட்டச்சுப்பலகையுடன் கூடிய ஒரு பலகைக்கணினி ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன், வைஃபை, 1ஜிபி நினைவகம், 16 ஜிபி உள்ளிணைந்த வன்வட்டு. 10.1 அங்குலத்திரை. தட்டச்சுப்பலகை கண்டிப்பாக வேணுங்கறவங்களுக்கு இது ஏத்தது. வெல 19,990/-.”
பனிக்கூழ்க் குவளையை கீழே வைத்துவிட்டு அவன் பேசும் அழகைப் பருகினாள் நுட்பா.
“என்ன நுட்பா இன்னொரு பனிக்கூழ் பருகலாமா?” அவளது குவளை காலியானதால் கேட்டான் நெடிலன்.
“ம்.. எனக்கு இன்னொரு வெனிலா சொல்லுங்க. அதோடு சேத்து ஆப்பிள் சேதி ஏதாவது இருந்தா சொல்லுங்க.” உரிமையுடன் கேட்டாள் நுட்பா.
“ஆப்பிளும் ஐபேட் ஏர் வெளியிட்டிருக்கு. வெல 35,900க்கும் மேல. 9.7 அங்குலத்திரை ஐஓஎஸ் ஏழு இயங்குதள பதிப்புல இருக்கு. ஆப்பிள் மீது கிறுக்குப்பிடித்த (apple crazy people) மேல்தட்டு மக்களுக்கு ஏத்தது. எனக்கொரு சாக்லெட் பனிக்கூழ் சொல்லிக்கறேன்.” அவளது மறுமொழிக்குக் காத்திராமல் விரைவாய்ப் பேசினான் நெடிலன்.
“ம்..லினக்ஸ் சேதி?” பனிக்கூழை விழுங்கியும் விழுங்காமலும் கேட்டாள் நுட்பா.
“ஆமா. லினக்ஸ் பயனாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த உபுன்டு 14.04 LTS 17ம் தேதி வெளியாகியிருக்கு. Trusty Tahr அப்டீன்னு பேர் வச்சிருக்காங்க. 2019 ஏப்ரல் வரைக்கும் இதுக்கு ஆதரவு தர்றாங்க. 64 பிட்ட பயன்படுத்த உபுன்டு தளம் கேட்டுக்கறது. 2GB க்கு கொறச்சலா இருக்கற பொறிகளுக்கு 32பிட் பரிந்துரைக்கப்படறது. மேக்(mac) கணினிகளுக்குத் தனியாக ஒரு புதிய பதிப்பையும் வெளியிட்டிருக்கு. வழங்கிகளுக்கு 64பிட் மட்டும் தான் பரிந்துரைக்கப்படறது. ஏற்கனவே உபுன்டு 12.04 எல்டிஎஸ் பயன்படுத்தறவங்க அதையே தொடர்ந்து பயன்படுத்திக்கலாம். இத மேம்படுத்தணும்ன்னு தேவ இல்லை. புதுசா எதாவது சோதன பண்ணிப்பாக்கணும்ன்னு நெனைக்கறவங்க மட்டும் இத பயன்படுத்திக்கலாம். இதுக்கு முன்னாடி பதிப்புல எல்லாம் குடுத்த மாதிரி இதுலயும் உலாவிவர இணையத்துல அருமையான Tour குடுத்துருக்காங்க.” இணையத்தில் தான் பார்த்த செய்தியினை பனிக்கூழைப்போல் பகிர்ந்து கொண்டான் நெடிலன்.
பகிர்ந்தவன் தொடர்ந்தான், “இப்ப எல்லாரும் மெதுவா, ரெட் ஹாட்டிலர்ந்து உபுன்டுவுக்கு மாறிக்கிட்டிருக்காங்க. ஏன்னா, அது இலவசம், எல்டிஎஸ்க்கு அஞ்சு ஆண்டுவரைக்கும் ஆதரவு தர்றாங்க. அமைவுகளை (configurations) இலவசமாவே இணையத்தில படிச்சு பயன்படுத்தலாம். பெரும்பாலும் எல்லா வகையான கருவிகளுக்கு ஆதரவு இருக்கு. இதே ரெட் ஹாட் ஆக இருந்தா நெறய அமைவுகள நாமளே அமைக்கணும். இல்லாட்டி கர்னல மாத்தி அமைக்கணும். இப்ப வந்திருக்கற உபுன்டு High resolution displaysக்கெல்லாம் ஆதர்வு தர்றது. பலகைக் கணினிக்கும், கைபேசிகளுக்கும் தொலைக்காட்சிக்கும் ஆதரவு கெடைக்கறது. ”
“உபுன்டு புதுப்பதிப்பு வந்திருக்கு சரி. அதோட வசதிகளப் பத்தி சொல்லுங்க நெடில்." வெனிலாவைச் சுவைத்தபடி கேட்டாள் நுட்பா.
“ஏழு முதன்மையான வசதிகள இந்த உபுன்டு தர்றதுன்னு இணையம் பட்டியலிடுது. ஒவ்வொன்னா இப்பப் பாக்கலாம்.
- சிறிய யூனிட்டி லான்சர் (Small Unity Launcher)
- ரெண்டாவது உபுன்டுல நாம ஒலியளவ 100 விழுக்காட்டுக்கும் மேல வச்சுக்கலாம். மறுபடியும் 100 விழுக்காடு மட்டுமெ போதும் அப்டீன்னு விரும்பினா அதுக்கும் ஒற்றைச் சொடுக்கில் வழி வகுத்து இருக்கு. (Raise Volume Past 100%)
- முன்னால பட்டைகள் (menu bars) மொத்தமா மேல இருக்கறதுல ஒருங்கிணைக்கப் பட்டிருக்கும். இப்ப தனித்தனியான சாளரத்துல (windows) இணைக்கப்பட்டிருக்கு. (Locally Integrated Menus)
- நன்றாக அடையாளங் காணப்படக்கூடிய முழு பட்டைகள் (Full menus) இருக்கு.
- GTK3 க்கு ஆதரவளிக்கக்கூடிய CSS themed decorated windows அமைஞ்சிருக்கு.
- விரைவாக இயங்குதளத்தைப் பூட்டக்கூடிய குறுக்குவிசை அமைஞ்சிருக்கு. (Faster Lock Screen Shortcut) அதாவது முன்பு ஆல்ட்+கன்ட்ரோல் எல் (alt+ctrl+L) விசையினை இயக்கி பூட்டப்பட்ட இயங்குதளம், இப்போது விண்டோஸ்+எல் (win+L) விசைகளை இயக்கியே பூட்டப்படுவது போல் செய்யப்பட்டிருக்கு.
- ஒரு சாளரத்தில் உள்ளிட்டுக் கொண்டிருக்கும் போதே லைவ் ரீசைஸ் (Live window resize) உத்தி பயன்படுத்தி, விரைவாக சாளரத்தை நீட்ட குறைக்க முடிகிறது.”
தான் இணையத்தில் கண்ட சேதியினை, எளிமையாகத் தமிங்கிலத்தில் விளக்கினான் நெடிலன்.
நான் நேத்துத்தான் புதுப்பதிப்ப பதவிறக்கம் செஞ்சு பயன்படுத்தத் தொடங்கினேன். ஒனக்கும் தர்றேன், தனது மெல்லிய மீசையினை வருடியபடி பேசினான் அந்த உபுன்டு தலைவன்.
“ம்.. ஒங்களுக்கு எல்லாம் தெரியறதுல ஒன்னும் வியப்பில்ல. நான் வியக்கற மாதிரி எதாவது சொல்லுங்க.” பனிக்கூழ் இன்னும் தீராததால் மறுகேள்வி கேட்டாள் நுட்பா.
“அலுவலகத்துல எல்லாரும் முகநூல் செயலி (Face book) பயன்படுத்தறது இப்ப பொதுவான செய்திதான். நாம முகநூல்லதான் விளையாடிகிட்டு இருக்கறோம்ன்னு யாராவது தொலைவிலர்ந்து பாத்தாக்கூட தெரியும். அப்டி தெரியாம நாம எக்செல்ல பாத்துக்கிட்டு இருக்கற மாதிரி தெரியணும்னா, இந்தத் தொடுப்புல (http://hardlywork.in) பயனர் பெயர், கடவுச்சொல் குடுத்து நுழையணும். இது, நம்ம முகநூல் கணக்கயே ஒரு அழகான எக்செல் திரை போல காட்டும். நம்மளத் தவிர வேற யாருக்கும், நாம முகநூல்ல இருக்கறது தெரியாது. யாராவது பக்கத்துல வந்தா, நாம ஸ்பேஸ்பாரத் தட்டினா போறும். எக்ஸெல் திரை வெறும் எண்களாக காட்சியளிக்கும். இதுல மூனு வகையான தீம்கள் இருக்கறது. இதுல ட்விட்டர் அப்டீங்கற கீச்சு புகுபதிவினையும் (twitter handler) உள்ளிட்டுப் பயன்படுத்தலாம்.” ஓய்வு நேரத்துல பொன்மலர் (http://ponmalars.blogspot.com/2014/03/hardlywork-app-use-facebook-in-excel-sheet.html) பக்கத்துல படித்த செய்தியினைப் பேசினான் நெடிலன்.
"சரி. நீங்க சொன்னதெல்லாம் நா, சோதிச்சுப்பாத்துட்டு வர்றேன். பனிக்கூழ் நல்லாயிருந்துச்சு. அப்பறம் பாக்கலாம்." அழகான மென்முறுவலுடன் பேசி தனது புதிய நேனோவில் ஏறி விடைபெற்றாள் நுட்பா.
0 Comments:
Post a Comment