தொழிற்நுட்பம் மிக விரைவாக தனது அடுத்த வளர்ச்சியில் அடியெடுத்து வைக்கின்றது. அடுத்த இரண்டாண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
1. இப்பொழுது பயன்பாட்டிலிருக்கும் குறுவட்டுக்கள் வழக்கொழிந்து போகும்.
இப்பொழுதே இதனைப் பயன்படுத்துபவர்கள் குறைந்து விட்டார்கள். கணினி மாத இதழோடுகூட இப்பொழுதெல்லாம் சாதாரண குறுவட்டு கொடுப்பதில்லை. எல்லோரும் டிவிடி கொடுக்கிறார்கள். இப்பொழுது பயன்படுத்தப்படும் குறுவட்டு, டிவிடிகளுக்கு மாற்றாக நீலஉயர்குறுவட்டு(Blu-ray Disk)பெருமளவு பயன்படுத்தப்படும்.
2. ஐபி முகவரி பதிப்பு 4 வழக்கொழிந்து போகும். ஏற்கனவே ஐபி முகவரி பதிப்பு நான்கினை ஆறாக புதுப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள் பல நிறுவனத்தார். ஆனாலும் இரண்டுமே பயன்பாட்டில் இருக்கின்றது. எனினும் ஐபி4 லிருந்து ஐபி6 க்குச் செல்ல பல வரம்பெல்லைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதற்கேற்ப தடுப்புச்சுவரினையும் சரிவர அமைக்க வேண்டும் இல்லையேல், வைரஸ்கள் பரவுதலைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
விண்டோஸ் 2008 சர்வர் பதிப்பு, விண்டோஸ் 7 பதிப்புகளில் நாம் மிகுதியாக ஐபி6னைப் பயன்படுத்தலாம். எனவே ஐபி4 ஆனது வழக்கொழிந்து போய்விடும்.
3. மெய்நிகர் விசைப்பலகைகள் (Virtual Keyboards)
இப்பொழுது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் விசைப்பலகைகளுக்கு மாற்றாக விர்ச்சுவல் கீபோர்டு என்றழைக்கப்படும், மெய்நிகர் விசைப்பலகைகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இப்பொழுதே இது போன்ற விசைப்பலகைகள் உள்ளதென்றாலும், அவை அனைவராலும் பயன்படுத்தப்படுவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட கம்பியில்லா கருவிகளை இப்பலகைகள் கொண்டு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும்.
இப்பொழுதே சில பயன்பாடுகள் மட்டும் இது போன்ற தொழிற்நுட்பத்தின் கீழ் கிடைக்கின்றன. முழுமையான மெய்நிகர் விசைப்பலகைகள் கிடைக்கிறதென்றாலும் அதன் விலை அதிகம். இது கொண்டு நாம் கணினி, மடிக்கணினி, கைபேசி, இன்னபிற கருவிகள் என அனைத்தையும் கம்பியின்றி இயக்கலாம். இதில் வெறும் கதிர்கள் மட்டும் பயன்படுத்தப்படும். மேலும் தொடு செயல்கள் மூலம் இதனை அணுகுவதால், தட்டச்சுச் செய்யும் உணர்வேயின்றி தட்டச்சுச் செய்து பயன்படுத்தலாம்.
4. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்கும்.
அனைவரும் இணைய இதழ் நடத்துபவர்களாகவோ அல்லது குழு நடத்துபவர்களாகவோ இருப்பார்கள். அதிவிரைவாக இணையப்பகிர்தல்கள் அமையும். பணத்திற்கு இருக்கும் மதிப்பினை விட ஒவ்வொருவரும் வைத்திருக்கும் செய்திகளுக்கு மதிப்பு அதிகமாக இருக்கும். இதில் தரவினங்களும் அமையும்.
5. தொலை இயக்கிகளில் ப்ளூடூத் பயன்பாடு:
இப்பொழுது நமது தொலை இயக்கிகளில் அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்குகின்றன. எனவேதான் நாம் அந்த குறிப்பிட்ட உணரிக்கு நேராக நமது தொலை இயக்கியினை வைத்து இயக்க வேண்டும். அதற்கு மாற்றாக ப்ளூடூத் பயன்படுத்த நமது தொலை இயக்கியினை எங்கிருந்து வேண்டுமானதும் குறிப்பிட்ட தொலைவிற்குள் பயன்படுத்தலாம்.
இப்பொழுதே சில கைபேசிகளில் உள்ள இந்த பயன்பாட்டின் மூலம் மடிக்கணினி, கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றை இயக்க முடிகிறது என்றாலும், நிறுவனத்தார் தரும் தொலை இயக்கிகளில் இவ்வகை நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இந்நுட்பம் பயன்படுத்தப்பட்டால் நாம் ஒவ்வொரு கருவிக்கும் தனித்தனியாக தொலை இயக்கி வாங்கத்தேவையில்ல்லை. ஒரே இயக்கி மூலம் அனைத்தையும் செயல்படுத்தலாம்.
6. இணையவாசகர்கள் தங்களுக்கான திரட்டிகளைத் தாமே செய்துகொள்வர்:
ஒவ்வொரு செய்திகளுக்காக ஒவ்வொரு தளம் சென்று பாராமல் தங்களுக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ள இணையத்திலிருந்து செய்திகளைத் திரட்ட அவர்களுக்கான மென்பொருட்களை அவர்களே செய்து கொள்வார்கள். செய்தித்திரட்டி, தொழிற்நுட்பத்திரட்டி, பாடற்திரட்டி, திரைத்துறைதிரட்டி, கவிதைத்திரட்டி, கதைத்திரட்டி, புதியமேம்பாடுகள் திரட்டி என பெயரிட்டு அவர்களுக்கான செய்திகளை தெரிந்து கொள்வர்.
இதற்கான அறிகுறிகள் இன்றைய நாட்களிலேயே தென்படுகின்றன. அதற்கான rss, atom களை மட்டும் குறிப்பிட்டாலே போதும், தானியங்கி முறையில் வலைப்பக்கம் கிடைத்து விடும். பின்பென்ன நீங்களும் வலைமனையின் பிதாமகன்தான். இப்பொழுது இணைய உலகையே கலக்கி வரும் கூகுள் இயங்குவது இந்த முறையிலேயேதான்.
இந்த மாற்றங்கள் பெருநகரங்களைக் குறிவைத்தே எழுதப்பட்டிருக்கின்றன. இவை சிற்றூர்களைச் சேர இன்னும் நாட்களாகும்.