திங்கள், 4 பிப்ரவரி, 2019

திருமணத்திருமொழி -

மணமகள் வேட்கை:
மாமழை உருமின் பல்லியம் கறங்கப்
பூமழை பொழிய வெண்நறை பொங்கத்
தூமொழி மாந்தர் ஓராங்கு வாழ்த்தத்
தூர்பெழு துகளது விண்ணுற எய்து
ஆர்ப்புடன் பாயும் பொதுவர் அன்னதோர்
வீரமே தலையாக் கொண்டுஎந் நாளும்
இன்னல் உற்றுழி முன்னின் றகற்றிக்
கன்னல் அன்னதோர் கனிமொழி பயிற்றி
அண்ணாந் தேந்திடும் ஒண்ணுதல் தளரினும்
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
என்னகம் பிரியா உயிர்ப்பிணிக் காதலின்
பெண்ணியம் போற்றிட வேண்டுவென் யானே.
பொருள் விளக்கம்:
கார்மேகங்கள் எழுப்பும் இடியோசை போல பல இசைக்கருவிகள் டும்டும் டுடும்டும் என்று பேரொலியுடன் முழங்க, பூவிதழ்கள் மழைபோலச் சொரிய, வெண்ணிற நறுமணப் புகைப் பொங்கி எழ, தூய உள்ளம் கொண்ட மனிதர்கள் பலரும் ஒன்றுகூடி வாழ்த்த, நிறைந்து எழுகின்ற புழுதியானது விண்ணை முட்டும் வண்ணமாகப் பேரொலியுடன் பாய்கின்ற மாடுபிடி வீரர்களைப் போல வீரத்தையே எந்நாளும் தலைமேற்கொண்டு, எனக்குத் துன்பம் வந்தபோது முன்னின்று அதனை நீக்கியும், கரும்பினைப் போல இனிமையான மொழிகளை என்னிடத்தில் பேசியும், தலைநிமிர்த்திப் பார்த்து நீர் புகழும் எனது கண்கள் சோர்வடைய, நீண்ட எனது கூந்தல் நரைத்துப் போகின்ற முதுமையிலும் என்னைவிட்டுப் பிரியாமல், என் உயிருடன் கலந்த காதலைக் கொண்டவனாக, எனது பெண்மையைப் போற்றவேண்டும் என்று நான் உம்மை வேண்டுகிறேன்.
மணமகன் பூட்கை:
மண்ணகம் பிறழினும் மாதிரம் பொய்ப்பினும்
கண்ணிமை போலநம் காதலைக் காக்குவென்
பொம்மல் விசும்பின் பெயல்கலந் தேற்ற
செம்புலப் பெயல்நீர் போலஎந் நாளும்
அன்புடை நெஞ்சினில் வீரமும் கொண்டே
உன்னகம் விழைந்ததை உறுத்துவென் யானே. 
பொருள் விளக்கம்:
இந்தப் பூமியின் சுழற்சியே தறிகெட்டுப் போனாலும் திசைகள் அனைத்தும் தடம்மாறிப் போனாலும் கண்ணிமையைப் போல நான் நமது காதலை நெறிகெடாமல் காப்பாற்றுவேன். திரண்ட மேகங்கள் பொழிந்த மழைநீர் கலந்ததால் குழைந்த செம்மண் நிலம்போல எந்நாளும் உன்மேல் கொண்ட அன்பினால் குழைந்த என் நெஞ்சில் வீரமும் மிக்கவனாக உன் உள்ளம் விரும்பும் அனைத்தையும் நான் ஈடேற்றுவேன்.
நன்றி:
https://thiruththam.blogspot.com/2019/02/blog-post.html?fbclid=IwAR2TpxmPJyZ4k0UYSHmZaGimC1A7Tctv3CAoFnXrH7CUUab-94KPdGH-vf8

0 Comments: