ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

கூகுளுக்கு இன்று அகவை பதினொன்று

எதைத் தட்டினாலும் விடை கிடைக்கும் கூகுள் தேடுபொறிக்கு இன்று அகவை பதினொன்று. 1998 ஆம் ஆண்டு செப்தம்பர் திங்கள் 27 ஆம் நாளில் தான் இது சந்தைக்கு வந்தது. அன்று சில கோடி பக்கங்களை மட்டுமே தன்னகத்தே வைத்திருந்த இது தனது தொடக்க நிலை பொறியாக பென்டியம் 2 கணினியினையும், 512 எம்பி நினைவகத்தையுமே பயன்படுத்தியது.

இன்று கோடிக்கணக்கில் இதன் சேவைக்குழுக்கள் இயங்குகின்றன. இது ஒரு இணைய இயங்குதளமாக விளங்குகிறது. இதன் அடையாளச்சின்னங்களை திறம்பட ஆயத்தம் செய்யும் பள்ளிச்சிறுவர்களுக்கு பரிசிலும் தந்து ஊக்குவிக்கிறது. அதனால்தான் புத்தம்புது சின்னங்கள் அவ்வப்போது மிளிர்கின்றன.

தனது தேடுதுளிநிரல்கள் மூலம் செய்திகள் பெற்று பக்க சேகரிப்பு நிரல்களை கொண்டு கூகுளில் செய்திகள் அன்வயப்படுத்தப்படுகின்றன. முழு இணையத்தின் மூன்று படிகள் கூகுளில் உண்டு.

1. ஒன்று நமக்குக் காண்பிக்கப்படும் குறிப்பிட்ட செய்திகள் கொண்ட தரவுத்தளம். இது தற்காலிகமானது.
2. இரண்டாவது நிலையான செய்திகளிருக்கும் தரவுத்தளம். இதிலிருந்தே தேடப்பட்டு ஒன்றாவதற்கு செய்திகள் தற்காலிகமாக அனுப்பப்படுகின்றன.
3.தேடுதுளிகள் கொண்டு தேடப்பட்ட செய்திகளில் உறுதியாக மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே இருக்கும். ஏனெனில் உரியவர்கள், இணையதள உரிமையாளர்கள் எப்பொழுதும் இணையத்தில் ஏற்கனவே உள்ள தங்கள் செய்திகளை மாற்றம் செய்து கொண்டே இருப்பார்கள் அல்லது மேம்படுத்துவார்கள். அவையெல்லாம் இங்கேதான் ஒருங்கிணைக்கப் படுகின்றன.புத்தம்புது செய்திகள் இணையத்தில் வந்தவுடன் இங்கேதான் வந்தடைகின்றன. ஆக ஒட்டுமொத்த மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த இணையமே இந்த தரவுத்தளத்தில் உண்டு.

மேற்காணும் படம் தேடுதல் முறைமைகளை எளிதில் காட்டுகிறது.

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சில திரைப்படத் திறனாய்வுகள்

நினைத்தாலே இனிக்கும்:

கல்லூரி நட்பு, காதல், பகைமை ஆகியன காட்டும் இக்கால பாடல் நடனங்களுடன் அமைந்த ஒரு படம். புதிதான என்ற செய்தி ஒன்றுமே படத்தில் இல்லாதிருந்தும், நம்மை அமர்ந்து பார்க்க வைப்பது திரைக்கதையும், சில நகைச்சுவைகளுமே. மிகப்பெரிய செய்திகள் இல்லையெனினும், சில நிகழ்வுக்கோர்வைகளே படத்தைத் தாங்கியிருக்கின்றன. விளம்பரம் வேறு அதிகம்.

படத்தில் நம்பமுடியாதது, உடனிருக்கும் நண்பனைக் கொன்று விட்டு, அவன் தான் என்று தெரியாது என்று தலைவன் சொல்வதுதான். இங்கேதான் இயக்குநர் சறுக்கிவிட்டார்.

சில நெருடல்களைத் தவிர்த்து விட்டு வேறு ஏதேனும் புதிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்த்தால் படம் நன்றாக இருப்பதாகவே தோன்றும்.
சர்வம்:
இதேந்திரனின் இதய கொடையினை பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்ட படம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இருப்பினும் இதயக் கொடை என்னும் சாரம் சரிவர அமைவுராமல், திரைக்கதையானது பொதுவாக அமைந்த அடிப்படை இயல்பூக்கங்களான வன்முறை, பழிவாங்கல்கள் என்பவற்றிலேயே சுழல்வது சராசரிக்கு மேல் உள்ள என் போன்ற சுவைஞர்களுக்கு வருத்தமளிப்பதாகவே அமைகிறது.

பிறகென்ன, தந்தையின் பழம்பாடல்களைச் சுட்டு இசையமைக்க மகன், ஒளிஓவியம் தீட்ட, படத்தொகுப்புச் செய்ய இந்தியாவின் உயரிய கலைஞர்கள் பணியாற்றியிருக்கின்றார்கள்.

காதலிக்க நடனமாட தலைவி,ம்ம்.. அவர் மருத்துவராம். நம்பமுடியவில்லை. பழிவாங்க சண்டையிட‌ தலைவன் என செல்கிறது திரைக்கதை. தலைவன் உச்சரிப்பைத் திருத்தி குரலினை உயர்த்தியிருக்க வேண்டும். செய்யவில்லை.

என்னைக் கவர்ந்தவை இசையரசரின் பழைய இழுவைக்கருவி இசையும், ஒளிஓவியமுமே. பானைச் சோற்றுக்குப் பதமான சிலவற்றை அறிய தொடுப்புக்கள் கீழே.

http://pnapenglish.blogspot.com/2009/09/sarvam-tamil-movie-stills-iii.html
http://pnapenglish.blogspot.com/2009/09/sarvam-movie-stills-ii.html
http://pnapenglish.blogspot.com/2009/09/sarvam-tamil-movie-stills.html

விரைவுத் துப்பாக்கி முருகன் (குயிக்கன் முருகன்):

நகைச்சுவை என்ற பெயரில எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், சில இடங்களில் மட்டுமே சிரிப்பினை வரவழைப்பது சற்று ஏமாற்றமே. அதற்குக்காரணம் இதைவிட நகைச்சுவையான படங்கள் ஏற்கனவே தமிழில் வந்துவிட்டன. வடிவேலுவை விடவா வேறு ஒருவர் இந்நாட்களில் உரையாடல் நகைச்சுவை செய்து விட முடியும்.

ஒரு பாத்திரங்களின் பெயர்கள் மட்டுமே நகைச்சுவை தருவதாக அமைகிறது. அதுவும் சில நேரங்களுக்கு மட்டும்தான். தண்டச்சோறு தின்ன குண்டராமன் என்று சொன்னால் குழந்தைகள் மட்டுமே சிரிப்பார்கள் என்பதை ஊரே அறியுமல்லவா? அது போலத்தான் எல்லா உரையாடல்களும்.

திரைப்படத்தை கிண்டல் செய்து எடுத்த படங்கள் மிகச்சில மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வகையில் திரையரங்கு சென்று பார்க்கும் வகையில் இப்படம் கிடையாது. ஏதேனும் இலவசமாகக் கிடைத்தால் வேண்டுமானல் பார்க்கலாம்.

மதுரை நிகழ்வு: (மதுரைச்சம்பவம்)
பின்னணியில் இருக்கும் தலைவன் முன்னணி ஆக மிகவும் முயற்சி செய்து எடுத்திருக்கும் படம். பயன் வேறென்ன வீண்தான்.

சண்டையிட தலைவன். முத்தமிட, நடனமிட தலைவிகள், இரட்டைப் பொருள் தரும் வார்த்தைகள் பேச துணை நடிகர்கள். இதுதான் மதுரை நிகழ்வு.

படம் தொடங்கி சில நேரத்திற்கெல்லாம் தன்னாலே சிரிப்பு வருவதை அடக்கவே முடியவில்லை. அவ்வளவு சிரிப்பு; அரைகுறையான படத்தைப்பார்த்தால் சிரிப்புத்தானே வரும். மதுரை வழக்கை தலைவன் சரிவரப் பேசியிருந்தால் சிறப்பாயிருந்திருக்கக்கூடும். திறனாய்வில் நிழற்படம் அமைத்தாயிற்று. திறனாய்வு முற்றிற்று.

மாதவி:
ஏதோ ஒரு குழு படமெடுத்துப்பழகிக் கொண்டிருக்கிறது. அடுத்த படம் சிறப்பாக எடுக்க வாழ்த்துக்கள். அடுத்த படம் வேறு எடுக்க வேண்டுமா என்கிறீர்களா? சரி. ஒரு வழியாக மாதவி படத்தை திறனாய்வு செய்தாயிற்று.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

ஆறு திரைப்படத் திறனாய்வுக‌ள்

பொக்கிசம்:

சேரன் எப்பொழுது மற்றவர்களிடமிருந்து வேறுபட நினைப்பவர். வேறுபட்டிருக்கிறார். எனினும் அவரது முந்தைய படங்களில் சாயல் ஒட்டிக்கொண்டுள்ளது இப்பொக்கிசத்தின் இழப்பு.

இணைய உலகம் கோலோச்சும் இக்காலத்தில் கடிதக்கதையா என்று நாம் என்னும் வேளையில் விளக்காய் விரிகிறது 1970களின் எடுத்துக்காட்டு. அச்சூழலைக் கொணர்ந்தது மகிழ்ச்சி. பாடல்களும், ஒளிப்பதிவும் நேர்த்தி.

கப்பற் பொறியாளனாக வரும் சேரன் முகமதியப்பெண்ணை விரும்புகிறார். அக்காலத்தில் கடிதத் தொடர்பு மட்டுமே. பின்னாளில் இருவரும் பிரிகின்றனர். அதற்கு பிறகு அவர் எழுதிய கடிதங்களை அவரது மகன் தனது தந்தையின் காதலியிடம் சேர்க்கும் கதை.

கதையுடைத்தலைவி கண்களை மட்டுமே காட்டி நடித்திருக்கிறார். தொப்புள் நடனம், குத்துப்பாட்டு இல்லாத இப்படம், இந்நாட்களில் ஓடாததில் வியப்பொன்றுமில்லை.

வெற்றி தோல்வி பற்றிக் கவலை கொள்ளாத கலைஞனின் மற்றொரு படைப்பு. சில சறுக்கல்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இப்படத்தை ஒரு வெகுமதி எனலாம். காதலுக்கு மட்டுமே முதன்மை தந்து எடுத்திருக்கிறார் சேரன்.

இதைவிடச் சிறப்பான பின்னணி இசையுடன் இது போன்ற காதல் படங்கள் தமிழ்த்திரையில் வந்துவிட்டதால் நமக்குச்சில இடங்களில் கொட்டாவி வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வாமனன்:
கதையுடைத்தலைவன் சந்தானம் தான் என்பது குழந்தை கூட சொல்லிவிடும். மற்றபடி, பாட, ஆட, காவல்துறையிடம் மாட்டிக்கொள்ள ஓர் ஆள் தேவை அதற்காக செய் நடித்திருக்கிறார். நடிப்பில் இன்னும் நல்ல தேர்ச்சி தேவை.

கதையுடைத்தலைவி ஊருவசி அல்லது இலக்குமி என்பது என்பது ஊரறிந்த அறிந்த உண்மை. பாட, ஆட செய்யுடன் ஒருத்தி வருகிறாள். என்ன செய்ய பார்த்துத்தான் ஆக வேண்டும்.
ஒரு அரசியல் கொலையில் மாட்டிக்கொண்ட கதையுடைத்தலைவன் எப்படி பிடியிலிருந்து தப்பிக்கிறான் என்பதே கதை என்கிறார்கள். திரைக்கதைத் தொய்வால் எல்லாம் சரிந்து விடுகிறது. ஒளிப்பதிவும்,பின்னணி இசையும் மற்றவற்றைச் சரி செய்து விடுகின்றன.

ஏதோ செய்கிறாய்.., யாரைக்கேட்பது போன்ற பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. மொத்தத்தில் வாமனன் ஒரு சிறப்பும் இல்லாதவன்.

மலையன்:
கரண் நடித்து அடுத்து வெளிவந்திருக்கும் படம். கதையுடைத்தலைவி அழகில் மட்டுமல்ல நடிப்பிலும் பரிமளிக்கிறார். சிற்றூர் வீரம், காதல், பகைமை, அன்புடைமை ஆகியவற்றைக் காட்டும் மற்றொரு படம். தலைவன் தலைவி மோதல் பின்பு காதல் என‌ ஏற்கனவே பழக்கப்பட்ட காட்சிகளிலிருப்பினும் நகைச்சுவை அதைச் சிறிதே மறைத்து விடுகிறது.

கதையுடைத்தலைவனின் நடிப்பு ஏற்கனவே சில படங்களில் அவர் நடித்ததின் கலவையே. பதினேழு முடிந்து பதினெட்டுத் தொடங்கிய கதையுடைத்தலைவியின் நடிப்பு மெச்சும் வகையில் உள்ளது.

"தெரிஞ்சாச் சொல்லுங்க..." பாடல் அருமை. மற்றபடி பின்னணி இசை சராசரியே. மொத்தத்தில் மலையன் ஒரு சராசரிச் சிற்றூர்க்கதை என நினைக்கும் நேரத்தில் தலைவி இறக்கிறார். இயக்குநர் நிமிர்ந்து நிற்கிறார். கூடவே நாமும்தாம்.

தலைவியின் இறப்பு தமிழ்த் திரையுலகில் புதிது. தலைவியின் இறப்பு என்ற மரபு மீறல்தான் நிமிர்வுக்குக் காரணம். தவிர, ஒரு தலைவி இறந்தால் மற்றொருத்தி என்ற வகையில் இருக்கும். நாம் நினைத்தது போன்றே மற்றொரு தலைவியும் வருகின்றாள்.

பிறகு எதிர்கூட்டத் தலைவனைக் கண்டறிந்து அவனக்கு தனது முதலாளியே துணை என்பதை அறிகிறான் தலைவன். எதிரிகளைப் பந்தாடி இறுதியில் வெல்கிறான் தலைவன். சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை, அதன் பின்னணியில் வெடிமருந்து தவறாகக் கடத்தப்படுதல் என்பதன் அடிப்படையில் கதை பின்னப்பட்டிருப்பது புதிது. மலையன் பழிவாங்குதலின் மற்றொரு கட்டம்.

காதல் கதை:
திரைப்படம் தொடங்கி சில மணித்துளிகளுக்கு இசை மட்டுமே பேசுகிறது. பிறகு இயக்குநர் பேசிக்கொண்டே இருக்கிறார். திரைக்கதை சரியான விரிவுரை. பேசாமல் ஒரு நேர்காணலில் தனது கருத்துக்களைக் கொட்டியிருக்கலாம் இயக்குநர். இதற்காக இப்படியொரு படமெடுக்க வேண்டுமா?

சிற்சில இடங்களில் இயல்பான தமிழ் உரையாடல்கள் காதை வருடுகின்றன. மற்றபடி எல்லாம் பழகிய காட்சிகள்தாம்.

பெண்களை இழிவு படுத்தக்கூடாது என்பதற்காக பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளா! என்னே கொடுமை!! படவெளியீட்டினைத் தணிக்கைக் குழு தள்ளிப்போட்டதற்கு இதுதான் காரணம் போலும்.

இவ்வளவு முரண்பாடுகள் இருப்பினும் படத்தை நம்மைப் பொறுமையாகப் பார்க்க வைப்பது படத்தின் பின்னணி இசை மட்டுமே என்பதில் துளியும் ஐயமில்லை.

பெருமாள்:
வன்முறைக்காட்சிகள், சிலபாடல்கள், நகைச்சுவைகள் நிறைந்த கதையுடைத்தலைவனின் அடுத்த படம். இரண்டு தலைவிகள். பிறகென்ன ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம்தான். உருப்படியான செய்தி ஏதாவது உலகுக்கு? ஒன்றுமேயில்லை. படத்தில் உருப்படியான ஒரே ஒரு கலை ஒளிஓவியமே. வேறொன்றும் மெச்சத்தக்கதாக இல்லை. நேரம் வீண்.

படம் தொடங்கி ப‌ல நேரங்களுக்கு தேவையற்ற காட்சிகள் இப்பொழுதெல்லாம் வருவது தமிழ்த்திரையுலகில் பொதுவாகிவிட்டது. கதை தொடங்கவே சில நேரம் பிடிப்பது ஏன் என்றே புரியவில்லை. இதைப்படிக்கும் இயக்குநர்கள் இனிமேலாவது கதை நகராக் காட்சிகளை விடுத்து நல்ல காட்சிகளைப் பிடிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.

மலை மலை:

இயக்குனருக்கு இது அடுத்த படம். பாசமான அண்ணன் தம்பி, பழிவாங்கல்கள், நடனம் மட்டுமே ஆடத்தெரிந்த‌ கதையுடைத்தலைவி என‌ எல்லாமே பழையவை. தலைவனின் அண்ணனும், எதிரி தலைவனும் பள்ளி நண்பர்கள் என்பது புதிது என்று படத்தில் அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்.

பொதுவான நிகழ்வுக்கோர்வைகளை நகைச்சுவை புகுத்தி வணிக நோக்குடன் எடுத்திருக்கும் படத்தில் வேறு சுவைகளை எதிர்பார்ப்பது நம் தவறுதான்.
இறப்பதை மறைத்து திருமணம் செய்வது ஏற்கனவே செந்தூரப்பாண்டி, ஆகா போன்ற படங்களில் வந்துவிட்டதால் உச்சகாட்சியினையும் சுவைக்க முடியவில்லை. அடுத்து நடப்பது என்ன என்பது முன்கூட்டியே தெரிவதால் எல்லாம் ஏமாற்றமே. நகைச்சுவையும் சற்றுதான் கைகொடுத்திருக்கிறது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

திகம்பர சாமியார் 1950 - அரிய செய்தி தமிழில் முதன்முறையாக‌


1950ல் வெளிவந்த திகம்பர சாமியார் என்னும் இப்படத்தில் எம்.என்.நம்பியார் ஒன்பது தோற்றங்களில் வந்திருக்கிறார். இது வி.சி.கணேசன் ஒன்பது தோற்றங்களில் நடித்து வெளிவந்த நவராத்திரி திரைப்படத்திற்கு முன்பே வந்தபடம்.

அரிதான இப்படம் இப்பொழுது எங்கும் காணக்கிடைக்காதது பெருவியப்பே. இப்படம் அந்நாட்களில் பெரும் பெயர் பெற்றிருக்கிறது.

இணையத்திலும் கூட காணக்கிடைக்காத இதைப்பற்றி அண்மையில் நடிகை மனோரமா கூறுகையில்தான் சில செய்திகள் தெரியவந்தன.

எழுத்தாளர் இராண்டார் கை இந்து நாளிதழில் இதைப்பற்றி எழுதியிருந்த கட்டுரை தேடுபொறி உதவியுடன் சிக்கியது. அதைத்தழுவி எழுதப்பட்டதே இக்கட்டுரை. அதைத்தவிர பிற செய்திகளையும் எடுத்தாண்டிருக்கிறேன்.

இந்தப்படம் வெளிவந்த ஆண்டில் (1950) 13 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய புதினம் இது அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற துப்பறியும் கதையாகும்.

இப்பொழுது பலராலும் பார்க்க விரும்பும் ஒருபடமாக இது விளங்கினாலும், அரிதான இப்படம் இப்பொழுது எங்குமே கிடைக்கவில்லை. யாரிடமாவது இருப்பின் மின்மடலனுப்பவும்.

தமிழில் வெளிவந்த இப்படத்தினைப் பற்றி செய்திகள் அனைத்து இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைப்பது அடுத்து எழும் விந்தை.

இதில் ஒரு நம்பியார் மட்டுமே வந்தாலும் அவர் வெவ்வேறு தோற்றங்களில் வந்து கடத்தப்பட்ட கதையுடைத்தலைவியினை தேடுவார். அண்மையில் இதைப்பற்றிப் பேசிய மனோரமா இதில் நம்பியார் 15 தோற்றங்களில் வந்திருக்கிறார் என்ற செய்தினைச் சொல்லியிருக்கிறார்.

மார்டன் தியேட்டர்சில் எடுக்கப்பட்ட இப்படம் கும்பகோணம், தஞ்சாவூர்,மன்னார்குடி ஆகிய இடங்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் நம்பியார் காவல்துறை மறைவு உளவாளியாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பொதிகைத் தொலைக்காட்சியில் மட்டுமே உள்ள இத்திரைப்படம் எப்பொழுதாவது ஒளிபரப்புச் செய்யப்படும். பழங்காலத்தில் வந்த படமாதலால் சிலர் இதில் நம்பியார் பதினொரு தோற்றங்களில் வந்திருக்கிறார் என்றும் புதுச்செய்தி சொல்லிவருகின்றனர் இக்காலத் தலைமுறையினருக்கு.

மனோரமா அக்கால நடிகை என்பதால் அவர் சொல்வதை மட்டும் வைத்துப்பார்த்தால் எம்.என்.நம்பியார் 15 தோற்றங்களில் வந்தார் என்பதை நம்பலாம்.

பல தோற்றங்களில் வந்தாலும், இத்தோற்றங்கள் பெரிதும் பெயர் பெற்றவையாம்.
காதுகேளாத சித்துவேலை செய்பவன், அரபுநாட்டு வணிகன், தொழிலதிபன், நாதசுர கலைஞன், நிலமுள்ள பெருஞ்செல்வந்தன், அஞ்சல்காரன்.

குமாரி கமலா நடமாடும் புகழ்பெற்ற "நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே..." பாடல் இப்படத்தில் இடம்பெற்றதே. அந்நாளைய வடமொழிப்பாடல்களிலிருந்து மூன்று பாடல்கள் சுடப்பட்டு இதில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது துணைச்செய்தி.

இராமநாதன், சுப்பையா நாயுடு இசையமைத்துள்ள இப்படத்தில் நடித்த இன்னபிற கலைஞர்கள்:

எம்.சி.சக்கரபாணி, ஏ.கருணாநிதி, சி.கே.சரசுவதி,லட்சுமி பிரபா, டி.பாலசுப்ரமண்யம், தனலட்சுமி, டி.கே.இராமசந்திரன், ஏழுமலை.

இப்படத்தை இக்காலத்தலைமுறையினர் வெகுசிலரே பார்த்திருக்கின்றனர். பார்த்தவர்களும் எத்தனை தோற்றம் என்று சரிவர கூறவில்லை. T.R.சுந்தரம் இயக்கிய இப்படத்தினை, நான் நம்பியாரின் தோற்றங்களை எண்ணும் வண்ணம் பார்க்க விரும்புகிறேன். 15 தோற்றங்கள் எனில் அதுதான் உலக சாதனை. உலகநாயகன் செய்தது அல்ல.

ஃபனா வடமொழிப்படத் திறனாய்வு


இந்த வடமொழிப்படம் ஒரு அச்சுறுத்தற்காரனின் காதல், பாச குடும்ப‌ உணர்வுகளை வெளிப்படுத்துவதாக உணர்த்துகிறது.

சில காட்சிகளில் மட்டும் கண் தெரியாத காதலியாக வரும் தலைவியை இவ்வளவு அழகாகக் காட்டுகிறார்கள். கண் தெரியாத பெண்கள் இயல்பில் இவ்வளவு அழகாக இருப்பதில்லை என்ற உணர்வு நம்முள் திரைப்பட உணர்வினை ஊட்டிவிடுகிறது.

தலைவன் தலைவி பிரிவு, உள்ளக்கசப்புக்கள், பிறகு இணைவு என்ற கட்டுக்குள்ளேயே படம் இயங்குகிறது.நல்லது. தேவையற்ற குத்துப்பாடல்கள் இல்லை. இசை காதை வருடுகிறது. பின்னணி இசையும் அருமை.

அச்சுறுத்தற்காரனாக வந்த போதும் தன் காதலியினை சுடமுடியாமல் தவிக்கும் தவிப்பு, அவளது கையாலேயே இறக்கும் உச்சகாட்சி ஆகியவைகளில் தலைவன் மதிப்பெண் பெற்றுவிடுகிறார்.

தலைவனைச் சிறு தொடு உணர்வு மூலம் அறிந்தாலும் அதைக்காட்டாமல் இருந்து தவிப்பது, மகனுக்கு பழைய கதைகள் தெரியாமல் வளர்ப்பது சரியாகச் செய்திருக்கிறாள் தலைவி.

குறிப்பிட்ட சில பாத்திரங்களுக்குள்ளேயே நிகழும் கதை ஒரு நல்ல படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை.

சனி, 5 செப்டம்பர், 2009

சில திரைப்படத் திறனாய்வுகள்


இக்கட்டுரையில் சில திங்கட்களுக்கு முன் வந்த சில திரைப்படங்களைப் பற்றிக்காணலாம்.

முத்திரை:

இரண்டு திருடர்கள்தாம் படத்தின் தலைவர்கள். ஒரு தலைவி ஆட்டக்காரி. இன்னொரு தலைவி உயர்தரக் கல்லூரி மாணவி. பிறகென்ன திருட்டுக்கள், துரத்தல்கள் என படம் சூடு பிடிக்கிறது. 1993ல் வந்த திருடா திருடாவைத்தான் துப்புரவாக்கியிருக்கிறார்கள்.

ஒட்டாக அரசியல் கலவை வேறு. படத்தின் முதன்மை அணிகள் இசையும்,ஒளிப்பதிவும் தாம். இசையமைப்பாளரும், ஒளிக்கருவியாளரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள். தலைவிகள் நன்றாக ஆடுகிறார்கள். மற்றபடி நடிப்பு கேள்விக்குறிதான்.

படத்திற்கு ஏன் இப்படித் தலைப்பு வைத்தார்களோ தெரியவில்லை.

வக்ரம்:


வடமொழியிலிருந்து ஒலிமாற்று செய்யப்பட்டு தமிழுக்கு வந்திருக்கும் இப்படம் இசை மூலமும் காட்சிகள் மூலமும் ஓரளவு சுவைஞர்களுக்கு அச்சம் தருவது உண்மைதான்.

படத்தில் கலைஞர்கள் பேசுவதைவிட பின்னணி இசையும், ஒளிப்பதிவுக்கருவியும் பேசுவதுதான் அதிகம்.

எல்லாம் சரிதான். என்னதான் சொல்ல வருகின்றார்கள் என்று பார்த்தால்....
தனிக்காட்டில் ஒரே ஒரு வீடு. அதில் தலைவி தன் இரண்டு குழந்தைகள், ஒரு தம்பியுடன் வசிக்கிறார். கணவனான தலைவனுடன் பூசல். அவன் அவளுடன் வசிக்கவில்லை.ஒரு ஊர்தி மட்டுமே ஒரு நேரத்தில் செல்லக்கூடிய குறுகலான பாலம் மூலமே வீட்டிற்குச் செல்ல முடியும்.

எதிர்பாராத அச்சங்கள் தலைவிக்கு மட்டும் அவ்வீட்டில் நிகழ்கின்றன.மற்றெல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்.

தானாகவே வந்து ஒரு கிழவி கொடுக்கும் திருமொழி வில்லையை வேறொருவருக்கு விற்று பணமாக்கி விடுகிறாள் தலைவி. சற்று நேரத்திற்கெல்லாம், அக்கிழவி ஒரு காட்டில் இறந்துகிடப்பதைப் பார்த்து அச்சுறுகிறாள் தலைவி. யாரோ (ஆவி) வந்து தன்னை வன்புணர்ந்ததாக தோழியிடம் கூற, அவள் கூறும் மருத்துவரை அணுகுகிறாள் தலைவி.

மருத்துவர் தலைவிக்கு இரட்டை ஆளுமை நோய் இருக்கிறது என்று கூறுகிறார். அதை தலைவி நம்ப மறுக்கிறாள்.

ஒருநாள் அந்தத்திருமொழி வில்லையை வாங்கியபெண் அதைத்திரும்ப தலைவியிடம் கொடுத்து விடுகிறாள். அவள் ஒரு திபெத்திய கிழவியால் துன்புறுத்தப்பட்டதாகவும், அக்கிழவி வந்து அவ்வில்லையைத் திரும்பக் கொடுக்க வேண்டுமென்று சொன்னதாகவும் தலைவியிடம் சொல்கிறாள்.

பிறகு வில்லையை எடுத்துக்கொள்ள ஆவி அவளை விடுத்து அவளது பிள்ளைகளுக்குத் தொல்லை கொடுக்கிறது. பிறகு எப்படி தலைவி தன் குழந்தைகளை மீட்கிறாள் என்பதே கதை. ஒலியுடனும், ஒளியுடனும் அச்சுற விரும்பினால் படம் பார்க்கலாம். மற்றபடி பாடல்கள் இல்லாதது ஒரு குறை. காதில் பூ சுற்றும் இக்கதை ஆமை விரைவில் செல்வது மற்றொரு குறை.

ஊர்தி தானாக ஓடுதல், கட்டில் தானாக அசைதல், ஆவி வன்புணர்ச்சி என பற்பல காட்சிகள் படத்தில். கணினி வரைகலைக்கு நன்றி.

மோதி விளையாடு:


உயரிய நிறுவனங்களின் பின்னணியில் நடக்கும் க‌தை தமிழுக்கு புதிதே. அதை எடுத்த விதமும் கூட சராசரிக்கு சற்றே மேல் எனலாம். ஆனால் அதற்குரிய கலைஞர்கள் சரிவர தேர்வு செய்யப்படவில்லை.

எடுத்துக்காட்டாக வெளிநாடு வாழ் இந்தியராக கலாபவன் மணி; தாங்கமுடியவில்லை. விரைவாகச் செல்ல வேண்டிய காட்சிகளில் சந்தானம் நுழைந்து சிரிப்பு மூட்டிவிடுகிறார். கன்னடம் தோய்ந்த தமிழில் பேசுகிறார் படத்தின் தலைவர்.

இசை நல்ல வகை. பின்னணி இசையிலும் அருமையாக புத்திசையமைப்பாளர்கள் வலம் வருகிறார்கள். இது பற்றி தனியாகவே திறனாயலாம்.

வைரமுத்து வரிகளில் "புலி பாலுத்தி டீப்போடடா..." சுவைபட இருக்கிறது.

வேறென்ன இயக்குனர் சுவைஞர்களோடு மோதிவிளையாடுகிறார்.

அச்சமுண்டு அச்சமுண்டு:


திரைக்கதையின் போக்கில் குழந்தைக்குக் கூட அச்சமுள்ள காட்சி ஒன்றுமில்லை. ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல் என்று அப்பட்டமாகத் தெரிகிறது.

நல்ல திறமையான கலைஞர்களை வைத்துக்கொண்டு இதுபோன்ற ஒரு படம் என்று நினைக்கும் பொழுது இன்னும் ஏதேனும் படக்குழுவினர் மெனக்கெட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

அயல் நாட்டினை சராசரியாக படமெடுத்திருக்கிறது ஒளிப்பதிவுக்கருவி. பாடல்கள் அரிதான இலங்கை வானொலியில் மட்டுமே ஒலிக்க நேரலாம்.


இந்த குறைந்த முதலீட்டுப்படத்தில் அச்சமேயில்லை.

ஐந்தாம்படை:



ஒரு வேறுபாட்டிற்காக கதையினைப்பற்றித் திறனாயாமல் தொழிற்நுட்பங்களைப் பற்றி திறனாய விழைகிறேன். ஏனெனில் கதை என்ற ஒன்று சரிவர கையாளப்படவில்லை. இருந்தாலும் மருத்துக்கென்று கதையையும் தொட்டுக்கொள்கிறேன்.

தலைவனுக்கும் தலைவிக்கும் நடக்கும் உறவுப்போராட்டமே இந்த ஐந்தாம்படை. ஒற்றன் என்ற சொல்லுக்கு பெண்பால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இங்கே ஒற்றன் இல்லை. பெண் ஒற்றர் இருக்கிறார். அவர்தான் கதையுடைத்தலைவி. அவர் தலைவனின் திட்டங்களை எதிரிகளுக்குச் சொல்ல அதை தலைவன் தெரிந்து முறியடிப்பதே கதை.

வேறு புதிய நுட்பங்கள் எதுவும் கையாளப்படவில்லை. சில இடங்களில் கற்றுக்குட்டி கணினி வல்லுநர்களின் வரைகலை வெறுமையாய் வருகிறது.

கதையுடைத்தலைவன் நடித்த அடுத்தபடம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கருத்தினைச் செலுத்தியிருக்கலாம். நகைச்சுவை நடிகரே பல இடங்களில் கோலோச்சுகிறார்.

கதை திருநெல்வேலியில் நடக்கிறதாம்.குறித்த நகைச்சுவைக்கலைஞர் தவிர வேறுமுன்னணி கலைஞர்கள் யாரும் அந்த வட்டார வழக்கு பேசவில்லை.

இசை,ஒளிப்பதிவு எல்லாம் ஏனோ தானோ. உச்சக்காட்சியில் சற்றே நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். ஏதேனும் புதிது என்று பார்த்தால், அதே நகைச்சுவை வர வணக்கம் வருகிறது.

இயக்குனர் சுந்தர்.சி, நடிகர் சரத்குமார் இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்துவிட்டதாக திரைவிரும்பிகள் கூறுகிறார்கள்.

வெடிகுண்டு முருகேசன்:


"தப தப" வென்று பேசும் பாத்திரம் தலைவனுக்கு. அவரும் பேசிக்கொண்டே இருக்கிறார். நடனத்தில் நல்ல தேர்ச்சி. தலைவி வருகிறார், அழுகிறார், சிரிக்கிறார். நடிப்பு இப்போதுதான் கற்றுக்கொண்டிருக்கிறார்.

எந்தப் புதிய‌ தொழிற்நுட்பமும், கதை சொல்லும் விதமும் இல்லாத மற்றொரு படம். இயக்குனருக்கு இது இன்னொரு படமாம்.

பெண் நடுவராக வந்து பசுபதியைக் காப்பாற்றும் செய்திவாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி சிற்சில காட்சிகளில் வந்து போகிறார்.

சராசரிக்கும் சற்றுக் கீழான ஒளிப்பதிவு கருவிக் கோணங்களில் ஒரே ஆறுதல் மூன்றே பாடல்கள் மட்டும்தாம்.

"நீண்ட தூரம் போகும் பாதை..."
"சாரலே சாரலே...."
முணுமுணுக்கும் வகை. நீண்ட இடைவெளிக்குப்பின் K.J.Yesudas தமிழில் பாடியிருக்கிறார்.

பார்த்திபன் இடத்தை பசுபதி பிடித்து விட்டதாக அவர் வடிவேலுவிடம் பேசும் உரையாடல்களை வைத்துச் சொல்கின்றனர் திரைவிரும்பிகள்.