ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

ஆறு திரைப்படத் திறனாய்வுக‌ள்

பொக்கிசம்:

சேரன் எப்பொழுது மற்றவர்களிடமிருந்து வேறுபட நினைப்பவர். வேறுபட்டிருக்கிறார். எனினும் அவரது முந்தைய படங்களில் சாயல் ஒட்டிக்கொண்டுள்ளது இப்பொக்கிசத்தின் இழப்பு.

இணைய உலகம் கோலோச்சும் இக்காலத்தில் கடிதக்கதையா என்று நாம் என்னும் வேளையில் விளக்காய் விரிகிறது 1970களின் எடுத்துக்காட்டு. அச்சூழலைக் கொணர்ந்தது மகிழ்ச்சி. பாடல்களும், ஒளிப்பதிவும் நேர்த்தி.

கப்பற் பொறியாளனாக வரும் சேரன் முகமதியப்பெண்ணை விரும்புகிறார். அக்காலத்தில் கடிதத் தொடர்பு மட்டுமே. பின்னாளில் இருவரும் பிரிகின்றனர். அதற்கு பிறகு அவர் எழுதிய கடிதங்களை அவரது மகன் தனது தந்தையின் காதலியிடம் சேர்க்கும் கதை.

கதையுடைத்தலைவி கண்களை மட்டுமே காட்டி நடித்திருக்கிறார். தொப்புள் நடனம், குத்துப்பாட்டு இல்லாத இப்படம், இந்நாட்களில் ஓடாததில் வியப்பொன்றுமில்லை.

வெற்றி தோல்வி பற்றிக் கவலை கொள்ளாத கலைஞனின் மற்றொரு படைப்பு. சில சறுக்கல்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இப்படத்தை ஒரு வெகுமதி எனலாம். காதலுக்கு மட்டுமே முதன்மை தந்து எடுத்திருக்கிறார் சேரன்.

இதைவிடச் சிறப்பான பின்னணி இசையுடன் இது போன்ற காதல் படங்கள் தமிழ்த்திரையில் வந்துவிட்டதால் நமக்குச்சில இடங்களில் கொட்டாவி வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வாமனன்:
கதையுடைத்தலைவன் சந்தானம் தான் என்பது குழந்தை கூட சொல்லிவிடும். மற்றபடி, பாட, ஆட, காவல்துறையிடம் மாட்டிக்கொள்ள ஓர் ஆள் தேவை அதற்காக செய் நடித்திருக்கிறார். நடிப்பில் இன்னும் நல்ல தேர்ச்சி தேவை.

கதையுடைத்தலைவி ஊருவசி அல்லது இலக்குமி என்பது என்பது ஊரறிந்த அறிந்த உண்மை. பாட, ஆட செய்யுடன் ஒருத்தி வருகிறாள். என்ன செய்ய பார்த்துத்தான் ஆக வேண்டும்.
ஒரு அரசியல் கொலையில் மாட்டிக்கொண்ட கதையுடைத்தலைவன் எப்படி பிடியிலிருந்து தப்பிக்கிறான் என்பதே கதை என்கிறார்கள். திரைக்கதைத் தொய்வால் எல்லாம் சரிந்து விடுகிறது. ஒளிப்பதிவும்,பின்னணி இசையும் மற்றவற்றைச் சரி செய்து விடுகின்றன.

ஏதோ செய்கிறாய்.., யாரைக்கேட்பது போன்ற பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. மொத்தத்தில் வாமனன் ஒரு சிறப்பும் இல்லாதவன்.

மலையன்:
கரண் நடித்து அடுத்து வெளிவந்திருக்கும் படம். கதையுடைத்தலைவி அழகில் மட்டுமல்ல நடிப்பிலும் பரிமளிக்கிறார். சிற்றூர் வீரம், காதல், பகைமை, அன்புடைமை ஆகியவற்றைக் காட்டும் மற்றொரு படம். தலைவன் தலைவி மோதல் பின்பு காதல் என‌ ஏற்கனவே பழக்கப்பட்ட காட்சிகளிலிருப்பினும் நகைச்சுவை அதைச் சிறிதே மறைத்து விடுகிறது.

கதையுடைத்தலைவனின் நடிப்பு ஏற்கனவே சில படங்களில் அவர் நடித்ததின் கலவையே. பதினேழு முடிந்து பதினெட்டுத் தொடங்கிய கதையுடைத்தலைவியின் நடிப்பு மெச்சும் வகையில் உள்ளது.

"தெரிஞ்சாச் சொல்லுங்க..." பாடல் அருமை. மற்றபடி பின்னணி இசை சராசரியே. மொத்தத்தில் மலையன் ஒரு சராசரிச் சிற்றூர்க்கதை என நினைக்கும் நேரத்தில் தலைவி இறக்கிறார். இயக்குநர் நிமிர்ந்து நிற்கிறார். கூடவே நாமும்தாம்.

தலைவியின் இறப்பு தமிழ்த் திரையுலகில் புதிது. தலைவியின் இறப்பு என்ற மரபு மீறல்தான் நிமிர்வுக்குக் காரணம். தவிர, ஒரு தலைவி இறந்தால் மற்றொருத்தி என்ற வகையில் இருக்கும். நாம் நினைத்தது போன்றே மற்றொரு தலைவியும் வருகின்றாள்.

பிறகு எதிர்கூட்டத் தலைவனைக் கண்டறிந்து அவனக்கு தனது முதலாளியே துணை என்பதை அறிகிறான் தலைவன். எதிரிகளைப் பந்தாடி இறுதியில் வெல்கிறான் தலைவன். சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை, அதன் பின்னணியில் வெடிமருந்து தவறாகக் கடத்தப்படுதல் என்பதன் அடிப்படையில் கதை பின்னப்பட்டிருப்பது புதிது. மலையன் பழிவாங்குதலின் மற்றொரு கட்டம்.

காதல் கதை:
திரைப்படம் தொடங்கி சில மணித்துளிகளுக்கு இசை மட்டுமே பேசுகிறது. பிறகு இயக்குநர் பேசிக்கொண்டே இருக்கிறார். திரைக்கதை சரியான விரிவுரை. பேசாமல் ஒரு நேர்காணலில் தனது கருத்துக்களைக் கொட்டியிருக்கலாம் இயக்குநர். இதற்காக இப்படியொரு படமெடுக்க வேண்டுமா?

சிற்சில இடங்களில் இயல்பான தமிழ் உரையாடல்கள் காதை வருடுகின்றன. மற்றபடி எல்லாம் பழகிய காட்சிகள்தாம்.

பெண்களை இழிவு படுத்தக்கூடாது என்பதற்காக பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளா! என்னே கொடுமை!! படவெளியீட்டினைத் தணிக்கைக் குழு தள்ளிப்போட்டதற்கு இதுதான் காரணம் போலும்.

இவ்வளவு முரண்பாடுகள் இருப்பினும் படத்தை நம்மைப் பொறுமையாகப் பார்க்க வைப்பது படத்தின் பின்னணி இசை மட்டுமே என்பதில் துளியும் ஐயமில்லை.

பெருமாள்:
வன்முறைக்காட்சிகள், சிலபாடல்கள், நகைச்சுவைகள் நிறைந்த கதையுடைத்தலைவனின் அடுத்த படம். இரண்டு தலைவிகள். பிறகென்ன ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம்தான். உருப்படியான செய்தி ஏதாவது உலகுக்கு? ஒன்றுமேயில்லை. படத்தில் உருப்படியான ஒரே ஒரு கலை ஒளிஓவியமே. வேறொன்றும் மெச்சத்தக்கதாக இல்லை. நேரம் வீண்.

படம் தொடங்கி ப‌ல நேரங்களுக்கு தேவையற்ற காட்சிகள் இப்பொழுதெல்லாம் வருவது தமிழ்த்திரையுலகில் பொதுவாகிவிட்டது. கதை தொடங்கவே சில நேரம் பிடிப்பது ஏன் என்றே புரியவில்லை. இதைப்படிக்கும் இயக்குநர்கள் இனிமேலாவது கதை நகராக் காட்சிகளை விடுத்து நல்ல காட்சிகளைப் பிடிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.

மலை மலை:

இயக்குனருக்கு இது அடுத்த படம். பாசமான அண்ணன் தம்பி, பழிவாங்கல்கள், நடனம் மட்டுமே ஆடத்தெரிந்த‌ கதையுடைத்தலைவி என‌ எல்லாமே பழையவை. தலைவனின் அண்ணனும், எதிரி தலைவனும் பள்ளி நண்பர்கள் என்பது புதிது என்று படத்தில் அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்.

பொதுவான நிகழ்வுக்கோர்வைகளை நகைச்சுவை புகுத்தி வணிக நோக்குடன் எடுத்திருக்கும் படத்தில் வேறு சுவைகளை எதிர்பார்ப்பது நம் தவறுதான்.
இறப்பதை மறைத்து திருமணம் செய்வது ஏற்கனவே செந்தூரப்பாண்டி, ஆகா போன்ற படங்களில் வந்துவிட்டதால் உச்சகாட்சியினையும் சுவைக்க முடியவில்லை. அடுத்து நடப்பது என்ன என்பது முன்கூட்டியே தெரிவதால் எல்லாம் ஏமாற்றமே. நகைச்சுவையும் சற்றுதான் கைகொடுத்திருக்கிறது.

1 Comment:

Rajesh said...

மலையன் தலைவி நன்கு நடித்திருப்பதன் காரணம், அவள் தசாவதாரத்தில் கமலுடன் நடித்ததினால்தானோ என்னவோ!

பொக்கிஷம் திரைப்படத்தில் புதுமை என்று ஒன்றுமே இல்லை.

மற்ற திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதே தவறு!

ஈரம் திரைப்படம் பாருங்கள்! நம்ப இயலாத
கதையை எப்படி நம்பும் வகையில் கையாள வேண்டும் என்பதற்கு ஒர் உதாரணம்.