சனி, 3 மே, 2014

வேலையை நேசியுங்கள்; நிறுவனத்தை அல்ல‌ - கணினிக்கதை

தமிழ் கம்ப்யூட்டர் ஏப்ரல் 16 - 30,2014 இதழில் வெளியான 
கணினிக்கதை - பக்கம் 44
அலுவலகத்திலிருந்து ஒரு நாள் உல்லாசப்பயணம் சென்றிருந்தான் நெடிலன். உடன் யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம் என்று நிறுவனம் சொல்லியிருந்ததால் தனது கல்லூரித் தோழி நுட்பாவையும் அழைத்துச் சென்றிருந்தான். "என்னே இனிது இந்த இயற்கை" என மனதில் கவிதை பேசியபடி, நீச்சல் குளத்தின் கரையிலிருந்து தொடுவானத்தை சுவைத்துக் கொண்டிருந்தான் நெடிலன். "கண்ணை விட அருமையான ஒளிக்கருவி இன்னும் கண்டறியப்படவில்லை” நெடிலன் மனதில் கவிதை தொடர்ந்தது. ஐயம் கேட்பதற்கென்ற அவனது அருகில் தோழி நுட்பா.
"நெடில் இத ஏன் தொடுவானம்ன்னு சொல்றாங்க?" தனது முதல் இயற்கை ஐயத்தைக் கேட்டாள் நுட்பா.
"தொலைவிலிருந்து பார்த்தால் வானமும் வையமும் தொட்டுக்கொண்டிருப்பது போலத் தெரியும். ஆனா பக்கத்துல போனா இரண்டும் தனித்தனி என்பது புரியும்.” எளிமையாய் விளக்கினான் நெடிலன்.
"அப்ப அத தொடாவானம்ன்னுதான சொல்லணும். ஏன் தொடு வானம்ன்னு சொல்றான்ங்க?" கேள்வி கேட்பது நுட்பா என்று காட்ட க்ளுக் கென சிரித்தாள் நெடிலனிடம்.
"இரு..என்னோட முறை (my turn) வரும்.” என்று மனதில் நினைத்துக் கொண்டே முறுவலித்தான் நெடிலன்.
"வாங்க.." அருகிலிருந்த மர ஊஞ்சலுக்கு அழைத்துச் சென்றாள்.
"ஐபிஎம் இப்பத்தான் தன்னோட நூறாவது (Thomas Watson 1914) ஆண்டக் கொண்டாடிக்கிட்டு இருந்துச்சு. திடீர்ன்னு 15000 ஊழியர்கள வேலைய விட்டு நிறுத்திடுச்சு. சிஸ்கோ உலகம் முழுக்க இருக்கற 4000 ஊழியர்கள, வேலையவிட்டு நீக்கிடுச்சு. எல்லாமே தீடீர்ன்னு நடந்துச்சுன்னா, நாம என்ன பண்ணறது நெடில்.” தனது நேரிய ஐயத்தை சீரிய முறையில் வினவினாள் நுட்பா.
“ஓர் உலகப் பொதுமறையான வாக்கியம் சொல்றேன் கேட்டுக்க. ‘வேலையை நேசி; நிறுவனத்தை அல்ல.’ நா..கூகுள்ல வேல பாக்கறேன். இன்னும் மைக்ரோசாஃப்ட்ல இல்லாட்டி ஃபேஸ்புக்ல வேல பாத்தாலும் சரி இது பொதுவான வாக்கியம்தான்.” தெளிவாகச் சொன்னான் நெடிலன்.
சொன்னவன் தொடர்ந்தான். "ஆனா எல்லாருமே, நிறுவனத்துல கெடக்கற PF, Insurance வசதிகளையும், நிறுவன அமைப்பினையும் (company infrastructure), இலவச ஊர்தி (cab facilities) வசதிகளையும் மட்டுமே நேசிக்கிறோம். இதையெல்லாம் நமக்கு கொடுக்கறதே, நம்மை அடிமை போல வேல வாங்கத்தான் அப்டீங்கறதை நாம மறந்துடுறோம். பள்ளியிலர்ந்து நம்மள பயிற்றுவிக்கறது அப்டித்தான். நீ நல்லாப் படிச்சு சிஸ்கோவுக்கு போகணும், ஐபிஎம்க்குப் போகணும் அப்டீன்னு. அதனாலயே நமக்கு நம்மளோட நிறுவனத்து மேல ஆசை அதிகமாகி நம்ம செய்ய வேண்டிய வேல மேல ஆசை கொறஞ்சுடுது. நம்ம நிறுவனத்தோட பேரு வெளில சொல்றப்ப பெரிசா இருக்கணும்ன்னு நாம நெனக்கறதுதான் இதுக்கு காரணம். நிறுவனம் முக்கியம்தான். ஆனா அதவிட நாம நம்ம வேலைய முழுசா நெசிக்கணும்.”
"பணி உயர்வு, ஊதிய உயர்வு, மாத ஊக்கத்தோகை அப்டின்னு எல்லாமே நம்மைத் தொடர்ந்து அடிமைகளாக வச்சுக்கற திட்டம்தான். 'என்னிடம் ஒருவர் மேலாண்மை இயக்குநராக (Managing Director) வேலை பார்க்கிறார். நான் நாள்தோறும் அவருக்கு என் எட்டுமணி நேரத்தை ஊதியமாகத் தருகிறேன்.' இந்த மனப்பான்மையோடதான் நாம இருக்கணும்." அண்மையில் முகநூல் செயலியில் (Facebook) கண்ட மேற்கோளையும் தன் உரையாட்டில் இணைத்துக் கொண்டான் அந்த தொடுவானத் தலைவன்.
"முன்னெல்லாம் நமது வேலை முறைமை (poor performance) சரியில்லை அப்டின்னாத்தான் நம்மள வேலையிலர்ந்து எடுப்பாங்க. இல்ல நம்ம குழுவுல நம்மள யாருக்குமே புடிக்கல‌, (failure of team playing) இல்லாட்டி நம்ம மேலாலரோட சண்ட (miscommunications with superior), ஆனா இப்ப நிலமை வேற மாதிரி இருக்கே.” தனது கேள்வியின் ஆழத்தை விளக்கினாள் நுட்பா மர ஊஞ்சல் சங்கிலியைத் தடவியபடி.
"நீ சொல்றது சரிதான். முன்னைக்கு இப்ப நிலமை மாறியிருக்கு. எல்லாமே நாம மேலை நாடுகளப் பாத்துப்பாத்து கத்துக்கறதுதான். இப்பல்லாம் பயன்பாட்டு வாழ்க்கைதான் எல்லா நிறுவனங்களும் கையாளுது. நமக்குத்தான் உடல் உயிர் எல்லாமே. வேலை எனப்படும் பிசினஸீக்கு அதெல்லாம் தெரியாது. எப்படி நீர்க்குவளைய நீர் குடிச்சுட்டு குப்பைத் தொட்டில தூக்கி வீசுறமோ, (use & throw or Hire & Fire) அது போலத்தான் தொழிற்நுட்ப நிறுவனங்கள் அதோட ஊழியர்கள வச்சுருக்கறது. இது நல்ல நீர்க்குவளை, அதோட உறுதி நல்லாயிருக்கு, அப்டீன்னெல்லாம் யாருமே நினைக்கறதில்ல. தண்ணி குடிச்சாச்சு. தூக்கி போட வேண்டியதுதான். வேல முடிச்சாஞ்சு. வேலய விட்டுத் தூக்கிட வேண்டியதுதான். ஏன்னா வெளில தொழிற்நுட்பக் கனவோடு ஆயிரம் அடிமைகள் குறைந்த விலைக்கு கெடைப்பாங்க.” நிறுவனங்களின் நிலைமையைத் திறம்பட அந்த ஊஞ்சலழகியிடம் விளக்கினான் நெடிலன்.
“சிஸ்கோ, ஐபிஎம் ரெண்டு நிறுவனமுமே Device based நிறுவனங்கள் தான, அவங்களே வேலைய விட்டு நிறுத்தினா என்ன செய்யறது?” அடுத்த கேள்வி கேட்டாள் நுட்பா.
“நீ சொல்றது சரிதான். ஒரு கருவியினை (server or router) வித்தா ஏழு முதல் எட்டு இலகரங்கள் கெடைக்கும்கறது உண்மைதான். அப்டீத்தான் இத்தன நாளாப் பொழப்ப ஓட்டிக்கிட்டுருந்தது இந்த இரு நிறுவனங்களும். சிஸ்கோ ரௌட்டர் இல்லாத இடமே கிடையாது. சந்தையில் ஐபிஎம் வழங்கிகள்தாம் (IBM servers) எப்பவுமே முதலிடம்.” ஊஞ்சலாடிக்கொண்டே பேசினான் நெடிலன்.
"அப்றம் என்னாச்சு." வியப்பில் விழிகள் விரியக் கேட்டாள் நுட்பா.”
“இப்பப் பொதுவா யாருமே அதிகமா இயல்புநிலை வழங்கிகளைப் (Physical server boxes) பயன்படுத்தறது இல்லை. எல்லாருமே மெய்நிகர் நிலை வழங்கிகளைப் (Virtual Server boxes using VM) பயன்படுத்தி வருகிறார்கள். அப்றம், ஏற்கனவே இருந்த வழங்கிகளையும், மெய்நிகர் நிலை வழங்கிகளாக உருமாற்றம் (Physical to Virtual migration) செய்து விட்டார்கள். இதுக்கு எளிமையான Virtual Machine Converter Standalone பயன்படுத்துகிறார்கள். இல்லையெனில் VSpere, VMotion பயன்படுத்துறாங்க. ஒரு 2000 X 2000 அளவுல‌ இருக்கக் கூடிய பெரிய ஆய்வகத்தை சில டேட்டா சென்டர்கள்ல நிறைச்சுப் பயன்படுத்தறாங்க. அதுனால இப்ப விஎம்வேர் நிறுவனம்தான் சந்தையில முன்னணியில் இருக்கறது.” அலுவலகத்தில் தான் அன்றாடம் செய்யும் நிகழ்வுகளிலிருந்து பேசினான் நெடிலன்.
“அப்ப சிஸ்கோ ரௌட்டர் என்னாச்சு?" அடுத்த வினா எழுப்பினாள் ஊஞ்சலழகி.
“அதுவும் மெய்நிகர் ரௌட்டர்கள் (virtual routers) என்று வந்து விட்டது. கூகுள் தேடுபொறியில் மெய்நிகர் ரௌட்டர் என்று தட்டிப்பார். நிறைய விடைக‌ள் கிடைக்கும். Virtual Router, Connectify என்று மென்பொருட்கள் கொட்டிக் கிடக்கும். எல்லாம் இலவசமே. முன்பெல்லாம், சோதனை ஓட்டத்துக்கு இயல்புநிலைக் கருவிகளையே (Physical boxes) பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்பொழுது அதற்கும் கூட மாதிரி மென்பொருட்கள் வந்து விட்டன. Packet tracer, GNS3, VIRL (Virtual Internet Routing Lab) என்று மென்பொருட்கள் அதிக அளவில் கிடக்கின்றன. அதனால சிஸ்கோவோட ரௌட்டர் கருவிகளும் கூட சரிவர சந்தையில் விற்பனையாவதில்லை. அதனால் சிஸ்கோவும் மென்பொருள் முன்னேற்றத்தில் (Software development) இறங்கிவிட்டது. ஆனால் அதையும் முடிந்த வண்ணம் செய்ய முடியவில்லை. ஏனெனில் மென்பொருள் முன்னேற்றத்திற்கென்று பல நிறுவனங்கள் சந்தையில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால ஏதோ ஒரு காரணத்த சொல்லி 4000 ஊழியர்கள பணிநீக்கம் செய்தது சிஸ்கோ. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் கான்ட்ராக்ட் எனப்படும் தற்காலிக ஊழியர்கள்தாம் அதிகம். அறிவேகுரு (AriveGuru.com) போன்ற சிறிய கான்ட்ராக்ட் நிறுவனங்களை நீக்கிவிட்டது. TCS, Accentrue, Mafoi, Addecco போன்ற பெரிய கான்ட்ராக்ட் நிறுவங்களை மட்டுமெ தன்னகத்தே வைத்துக் கொண்டது சிஸ்கோ.” மென்பொருள் துறை நிலைமையை விளக்கினான் நெடிலன்.
“சரி ஆன்லைன் சான்றிதழ்களோட (online certification) நெலம எப்படி இருக்கு?” ஆர்வமாய்க் கேட்டாள் மென்பொருள் அணங்கு.
“எல்லாத் துறைய்லயும் சான்றிதழ்களுக்கு மதிப்பு இருக்கு. அதுலயும் மெம்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் (updated certifications) இருந்தா, அதத்தான் எல்லாரும் மதிக்கறாங்க. முன்ன மாதிரி இல்ல. இப்ப எல்லாத்துறைய்லயும், நிறைய பேர் சான்றிதழ் வச்சுருக்காங்க. லினக்ஸ் சான்றிதழ்களுக்கு (RHCE-Red Hat Certified Engineer) எல்லாத்தையும் விட கூட மதிப்பு இருக்கு. சிஸ்கோ பொறுத்த அளவுல, சிசிஐஇ (CCIE) சான்றிதழ்தான் மதிக்கறாங்க. CCNA, CCNP எல்லாமே தொடக்க நிலை சான்றிதழ்களா மாறிடுச்சு. அத முடிச்சவங்களும் நிறையப்பேர் களத்துல (field) இருக்காங்க. சிசிஐஇ கூட இன்னும் அஞ்சு ஆண்டுக்குத்தான் தாக்குப் புடிக்கும்ன்னு சொல்றாங்க. ஏன்னா ஆய்வகங்களெல்லாம் டேட்டா சென்டருக்கு மாறிடும். அதனால எல்லாரும் மென்பொருள் முன்னேற்ற வேலைக்கு (Software development) மாறிடுவாங்க.” தான் இணையத்தில் படித்ததை அளந்தான் நெடிலன்.
“அப்ப நாமளும் அதுக்கு மாறிட்டா?” அதற்கெனவே காத்திருந்தாற் போன்று விரைவாகக் கேட்டாள் நுட்பா.
“இப்ப இருக்கற நிரல் எழுதும் முறைகளும் இன்னும் பதினைஞ்சு ஆண்டுகள்லமாறிடும். அப்டீன்னு மென்பொருள் வல்லுநர்கள் சொல்றாங்க. நான்வல்லுநர்க‌ள்’ ன்னு சொல்றது நம்ம நாட்ல இருந்துகிட்டே அமெரிக்காவுக்கு வேல பாக்கறவங்களப் பத்தித்தான். ஏற்கனவே கூகுள் நிறுவனம் தன்னோட செய்தி வலைத்தளம் (http://google.com/news) உள்ளிட அனைத்து தளங்களுக்கும் தானியங்கி நிரல் (automatic program / automatic script) செய்து வச்சிருக்கு. இப்பொழுதே ஏறக்குறைய அனைத்து மென்பொருள் நிறுவனங்களும் நிரலாக்க நிரல் (Programmable Programs) பற்றி பேராராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்காங்க. இது செயற்கை நுண்ணறிவுடன் (Artificial Intelligence) இணைந்த செய்தியாதலால், அதோட விரைவுத்தன்மை குறைவாகவே இருக்கு. கூகுளோட தானியங்கி ஊர்தித் திட்டம் (Google’s automatic car project) போல. எப்படியிருந்தாலும் மென்பொருள் துறையோட நிலைமை முன்ன மாதிரியில்ல. இப்ப எல்லாம் மென்பொருள் துறை நெருக்கடின்னு (IT recession) சொல்றது ஒரு Style ஆக மாறிப்போச்சு. மறுபடியும் நெருக்கடியிலர்ந்து மீண்டு வந்தாலும், அதப்பத்தி நிறுவனங்கள் வாயே திறக்கறதில்ல. எது எப்டியிருந்தாலும், லினக்ஸ் அப்றம் பைத்தான் மொழி தெரிஞ்சுக்கிட்டா நமக்கு ஒரு நல்ல ஊதியத்தோட ஒரு வேலை கெடைக்கும். நாம நம்மளத் தொடர்ந்து மேம்படுத்திக்கணும் (self-equipment).” தனக்குத் தெரிந்ததையெல்லாம் இனிமையாய்ப் பேசினான் நெடிலன்.
"நீங்க ஒங்க நிறுவனத்துல பணி உயர்வு (promotion) கெடச்சு முகில் கணினி நிர்வாகி (Cloud admin) ஆகிட்டிங்க. எங்க நிறுவனத்துல எனக்கு என்ன நிலைமையோ தெரியல?” வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சுத்துடன் பேசினாள் ஊஞ்சலழகி.
"நீ தான் நல்லா வேல செய்யுறீயே..அப்டி எதாவதுன்னா, ஒன்னும் கவலப்படாத... நான் என் நிறுவனத்துல ஒனக்கு வேலைக்கு ஏற்பாடு பண்றேன்.”அவளைத் தேற்றினான் நெடிலன்.
"தொழிற்நுட்பச் சேதிகளெல்லாம் தெரிஞ்சாச்சு. வாங்க அந்தத் தோப்புல கொய்யாப்பழம் சாப்டலாம்.” சொன்னதோடு மட்டுமின்றி இரண்டு கொய்யாப்பழங்களைப் பறித்து நெடிலனுக்குக் கொடுத்தாள் நுட்பா.
"இது மரத்திலிருந்து கொய்த பழம் தானே, இதப் போயி ஏன் 'கொய்யாப் பழம்' ன்னு சொல்றாங்க. இது என்னோட முறை (this is my turn)” தமிழன் என்ற பெருமையோடு சிரித்தான் தன் வேலையை மட்டுமே நேசிக்கும் தொழிற்நுட்ப நெடிலன்.

0 Comments: