இக்கட்டுரையில் சில திங்கட்களுக்கு முன் வந்த சில திரைப்படங்களைப் பற்றிக்காணலாம்.
முத்திரை:
இரண்டு திருடர்கள்தாம் படத்தின் தலைவர்கள். ஒரு தலைவி ஆட்டக்காரி. இன்னொரு தலைவி உயர்தரக் கல்லூரி மாணவி. பிறகென்ன திருட்டுக்கள், துரத்தல்கள் என படம் சூடு பிடிக்கிறது. 1993ல் வந்த திருடா திருடாவைத்தான் துப்புரவாக்கியிருக்கிறார்கள்.
ஒட்டாக அரசியல் கலவை வேறு. படத்தின் முதன்மை அணிகள் இசையும்,ஒளிப்பதிவும் தாம். இசையமைப்பாளரும், ஒளிக்கருவியாளரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள். தலைவிகள் நன்றாக ஆடுகிறார்கள். மற்றபடி நடிப்பு கேள்விக்குறிதான்.
படத்திற்கு ஏன் இப்படித் தலைப்பு வைத்தார்களோ தெரியவில்லை.
வக்ரம்:
வடமொழியிலிருந்து ஒலிமாற்று செய்யப்பட்டு தமிழுக்கு வந்திருக்கும் இப்படம் இசை மூலமும் காட்சிகள் மூலமும் ஓரளவு சுவைஞர்களுக்கு அச்சம் தருவது உண்மைதான்.
படத்தில் கலைஞர்கள் பேசுவதைவிட பின்னணி இசையும், ஒளிப்பதிவுக்கருவியும் பேசுவதுதான் அதிகம்.
எல்லாம் சரிதான். என்னதான் சொல்ல வருகின்றார்கள் என்று பார்த்தால்....
தனிக்காட்டில் ஒரே ஒரு வீடு. அதில் தலைவி தன் இரண்டு குழந்தைகள், ஒரு தம்பியுடன் வசிக்கிறார். கணவனான தலைவனுடன் பூசல். அவன் அவளுடன் வசிக்கவில்லை.ஒரு ஊர்தி மட்டுமே ஒரு நேரத்தில் செல்லக்கூடிய குறுகலான பாலம் மூலமே வீட்டிற்குச் செல்ல முடியும்.
எதிர்பாராத அச்சங்கள் தலைவிக்கு மட்டும் அவ்வீட்டில் நிகழ்கின்றன.மற்றெல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்.
தானாகவே வந்து ஒரு கிழவி கொடுக்கும் திருமொழி வில்லையை வேறொருவருக்கு விற்று பணமாக்கி விடுகிறாள் தலைவி. சற்று நேரத்திற்கெல்லாம், அக்கிழவி ஒரு காட்டில் இறந்துகிடப்பதைப் பார்த்து அச்சுறுகிறாள் தலைவி. யாரோ (ஆவி) வந்து தன்னை வன்புணர்ந்ததாக தோழியிடம் கூற, அவள் கூறும் மருத்துவரை அணுகுகிறாள் தலைவி.
மருத்துவர் தலைவிக்கு இரட்டை ஆளுமை நோய் இருக்கிறது என்று கூறுகிறார். அதை தலைவி நம்ப மறுக்கிறாள்.
ஒருநாள் அந்தத்திருமொழி வில்லையை வாங்கியபெண் அதைத்திரும்ப தலைவியிடம் கொடுத்து விடுகிறாள். அவள் ஒரு திபெத்திய கிழவியால் துன்புறுத்தப்பட்டதாகவும், அக்கிழவி வந்து அவ்வில்லையைத் திரும்பக் கொடுக்க வேண்டுமென்று சொன்னதாகவும் தலைவியிடம் சொல்கிறாள்.
பிறகு வில்லையை எடுத்துக்கொள்ள ஆவி அவளை விடுத்து அவளது பிள்ளைகளுக்குத் தொல்லை கொடுக்கிறது. பிறகு எப்படி தலைவி தன் குழந்தைகளை மீட்கிறாள் என்பதே கதை. ஒலியுடனும், ஒளியுடனும் அச்சுற விரும்பினால் படம் பார்க்கலாம். மற்றபடி பாடல்கள் இல்லாதது ஒரு குறை. காதில் பூ சுற்றும் இக்கதை ஆமை விரைவில் செல்வது மற்றொரு குறை.
ஊர்தி தானாக ஓடுதல், கட்டில் தானாக அசைதல், ஆவி வன்புணர்ச்சி என பற்பல காட்சிகள் படத்தில். கணினி வரைகலைக்கு நன்றி.
மோதி விளையாடு:உயரிய நிறுவனங்களின் பின்னணியில் நடக்கும் கதை தமிழுக்கு புதிதே. அதை எடுத்த விதமும் கூட சராசரிக்கு சற்றே மேல் எனலாம். ஆனால் அதற்குரிய கலைஞர்கள் சரிவர தேர்வு செய்யப்படவில்லை.
எடுத்துக்காட்டாக வெளிநாடு வாழ் இந்தியராக கலாபவன் மணி; தாங்கமுடியவில்லை. விரைவாகச் செல்ல வேண்டிய காட்சிகளில் சந்தானம் நுழைந்து சிரிப்பு மூட்டிவிடுகிறார். கன்னடம் தோய்ந்த தமிழில் பேசுகிறார் படத்தின் தலைவர்.
இசை நல்ல வகை. பின்னணி இசையிலும் அருமையாக புத்திசையமைப்பாளர்கள் வலம் வருகிறார்கள். இது பற்றி தனியாகவே திறனாயலாம்.
வைரமுத்து வரிகளில் "புலி பாலுத்தி டீப்போடடா..." சுவைபட இருக்கிறது.
வேறென்ன இயக்குனர் சுவைஞர்களோடு மோதிவிளையாடுகிறார்.
அச்சமுண்டு அச்சமுண்டு:திரைக்கதையின் போக்கில் குழந்தைக்குக் கூட அச்சமுள்ள காட்சி ஒன்றுமில்லை. ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல் என்று அப்பட்டமாகத் தெரிகிறது.
நல்ல திறமையான கலைஞர்களை வைத்துக்கொண்டு இதுபோன்ற ஒரு படம் என்று நினைக்கும் பொழுது இன்னும் ஏதேனும் படக்குழுவினர் மெனக்கெட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
அயல் நாட்டினை சராசரியாக படமெடுத்திருக்கிறது ஒளிப்பதிவுக்கருவி. பாடல்கள் அரிதான இலங்கை வானொலியில் மட்டுமே ஒலிக்க நேரலாம்.
இந்த குறைந்த முதலீட்டுப்படத்தில் அச்சமேயில்லை.
ஐந்தாம்படை:ஒரு வேறுபாட்டிற்காக கதையினைப்பற்றித் திறனாயாமல் தொழிற்நுட்பங்களைப் பற்றி திறனாய விழைகிறேன். ஏனெனில் கதை என்ற ஒன்று சரிவர கையாளப்படவில்லை. இருந்தாலும் மருத்துக்கென்று கதையையும் தொட்டுக்கொள்கிறேன்.
தலைவனுக்கும் தலைவிக்கும் நடக்கும் உறவுப்போராட்டமே இந்த ஐந்தாம்படை. ஒற்றன் என்ற சொல்லுக்கு பெண்பால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இங்கே ஒற்றன் இல்லை. பெண் ஒற்றர் இருக்கிறார். அவர்தான் கதையுடைத்தலைவி. அவர் தலைவனின் திட்டங்களை எதிரிகளுக்குச் சொல்ல அதை தலைவன் தெரிந்து முறியடிப்பதே கதை.
வேறு புதிய நுட்பங்கள் எதுவும் கையாளப்படவில்லை. சில இடங்களில் கற்றுக்குட்டி கணினி வல்லுநர்களின் வரைகலை வெறுமையாய் வருகிறது.
கதையுடைத்தலைவன் நடித்த அடுத்தபடம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கருத்தினைச் செலுத்தியிருக்கலாம். நகைச்சுவை நடிகரே பல இடங்களில் கோலோச்சுகிறார்.
கதை திருநெல்வேலியில் நடக்கிறதாம்.குறித்த நகைச்சுவைக்கலைஞர் தவிர வேறுமுன்னணி கலைஞர்கள் யாரும் அந்த வட்டார வழக்கு பேசவில்லை.
இசை,ஒளிப்பதிவு எல்லாம் ஏனோ தானோ. உச்சக்காட்சியில் சற்றே நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். ஏதேனும் புதிது என்று பார்த்தால், அதே நகைச்சுவை வர வணக்கம் வருகிறது.
இயக்குனர் சுந்தர்.சி, நடிகர் சரத்குமார் இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்துவிட்டதாக திரைவிரும்பிகள் கூறுகிறார்கள்.
வெடிகுண்டு முருகேசன்:"தப தப" வென்று பேசும் பாத்திரம் தலைவனுக்கு. அவரும் பேசிக்கொண்டே இருக்கிறார். நடனத்தில் நல்ல தேர்ச்சி. தலைவி வருகிறார், அழுகிறார், சிரிக்கிறார். நடிப்பு இப்போதுதான் கற்றுக்கொண்டிருக்கிறார்.
எந்தப் புதிய தொழிற்நுட்பமும், கதை சொல்லும் விதமும் இல்லாத மற்றொரு படம். இயக்குனருக்கு இது இன்னொரு படமாம்.
பெண் நடுவராக வந்து பசுபதியைக் காப்பாற்றும் செய்திவாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி சிற்சில காட்சிகளில் வந்து போகிறார்.
சராசரிக்கும் சற்றுக் கீழான ஒளிப்பதிவு கருவிக் கோணங்களில் ஒரே ஆறுதல் மூன்றே பாடல்கள் மட்டும்தாம்.
"நீண்ட தூரம் போகும் பாதை..."
"சாரலே சாரலே...."
முணுமுணுக்கும் வகை. நீண்ட இடைவெளிக்குப்பின் K.J.Yesudas தமிழில் பாடியிருக்கிறார்.
பார்த்திபன் இடத்தை பசுபதி பிடித்து விட்டதாக அவர் வடிவேலுவிடம் பேசும் உரையாடல்களை வைத்துச் சொல்கின்றனர் திரைவிரும்பிகள்.