சனி, 28 பிப்ரவரி, 2009

பொய்ப்புலம்பல்

"அடச்சே இதுதானா?
இது எனக்குத் தெரியுமே.
இதப்போயி சொல்லையே.
இதப்பத்தி என் வலைப்பூவெல்லாம்
மணக்குதே. ஆனா
அப்ப மறந்துட்டேனே."

பொய்யாப் புலம்பினான்
நேர்காணலில் தோற்ற
மென்பொறி நிறைஞன்.

மெய்யான முத்தாய்ப்பு

ஒன்றின் கீழொன்றாய்
ஏதேதோ எழுதி
கழித்தேன் பொழுதினை
பணியில்லா இருப்பினை ஆற்ற‌;
எழுதி முடித்துப்
பார்த்தால் பிறந்தது
முத்தாய்ப்பில்லாத
முக்கால் கவிதை.

க‌விதைக்கு அணியே
முத்தாய்ப்புத்தான்
அஃதே இல்லையே
என் செய்வேன் யான்?
எழுதினேன் உன் பெய‌ரை.
"அம்மா"

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

நான் கடவுள் இரண்டாம் பகுதிக்கு ஆயத்தம் - இயக்குனர் பேரரசு


கோடம்பாக்கத்தில் ஒருபடம் வெற்றி பெற்று விட்டால் போதும், அதே நடையில் கதை செய்து காசு பார்க்க நினைப்பார்கள். அவ்வகையில் அண்மையில் "வில்லு"வில் கையைச் சுட்டுக்கொண்ட கதையுடைத்தலைவனும், "திருவண்ணாமலை" சரிவர செல்லாததில் இயக்குனர் பேரரசுவும் இணைந்து நான் கடவுளை தலைகீழ் செய்து ஒரு கதை செய்ய நினைக்கிறார்கள். இது நகைச்சுவைக்காக பின்னப்பட்ட கற்பனையே. பிறர் சிந்தை நோகச் செய்ய அல்ல.

நான் கடவுள் படத்தின் கதையினைச் சுட்டு[1] தன் நடையில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார் பேரரசு. படத்தின் கதையுடைத்தலைவன்[2] அமர்ந்து இயக்குனரை கண்ணுங்கருத்துமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

"தலைவரே இதுல அஞ்சு பாட்டு; எல்லாமே நான் தான் எழுதறேன். படத்துக்குப்பேரு வாரணாசி. சிவகாசி, திருப்பாச்சி வரிசையில இதுவும் கலக்கீடும்.”

"ஒங்களுக்கு இணையா[3] மூன்றெழுத்து நடிகை[4]யக் கேட்டிருக்கிறோம். இந்தப்படத்தோட முதல் பகுதி ஏற்கனவே எடுத்துட்டதால இத நாம நகைச்சுவையா பண்றோம்.”

"எடுத்த ஒடனே நீங்க ஒத்தக்கால்ல நடனம் ஆடுறீங்க. நீங்க மட்டும் தான் ஆடுறீங்க.

'நாந்தாண்டா கடவுள்

எல்லாமே பொதுவில்,

உருளுங்கடா தெருவில்'

அப்டீன்னு, எல்லாரும் தெருவுல உருள்றாங்க. நீங்க மிதிச்சு மிதிச்சு அருள் தர்றீங்க. எப்டீ?”

"ம். நல்லாயிருக்கு.", கதையுடைத்தலைவர் தலையசைக்கிறார்.

"இசை நம்ம இசையமைப்பாளர்[5]தான். அவரும் இசைக்கருவிகள் மேல் உருண்டே எல்லா இசையும் இந்தப் படத்துக்கு அமைக்கிறார்.”
"அப்றம், இந்தப்படத்துல நீங்க ஒப்பனையில்லாம நடிக்கிறீங்க. எல்லாரும் ஒங்களப்பாத்து மிரள்றாங்க. தாடி, மீசையெல்லாம் ஒட்டுத்தான். நீங்கதான் வேற மாதிரி செய்யமாட்டீங்கள்ல‌.”

"கதையெல்லாம் முதல் பகுதி நான் கடவுள் மாதிரிதான். ஒங்கப்பன் ஆத்தாவயெல்லாம் போட்டு அடியடின்னு அடிக்கிறீங்க. எடைல கெட்ட வார்த்த பேசுறீங்க. அதுவும் வடமொழில[6]தான். எல்லாத்துக்கும் நீங்க பயிற்சி எடுத்துட்டு வரணும்.” பேரரசு அள்ளி விடுகிறார்.

"இதெல்லாம் எனக்கு ஒத்து வருமா? எதாச்சும் குத்துப்பாட்டு இருக்கா?” கதையுடை கனைக்கிறது.

"உச்சக்காட்சில சண்டைக்கு மாறா நாம குத்துப்பாட்டு வைக்கிறோம். குருட்டுப்பெண்ணான தலைவிக்கு நீங்க வாழ்வு தர்றீங்க. எதிர் நாயகனை ஒழிச்சுக்கட்டுறீங்க. அப்றம் ஒரு சாமியார் தலைவிக்கு பார்வை கொடுக்கறார். அப்றம் என்ன குத்துப்பாட்டுதான். வாரணாசிலயே எடுக்கறோம். அப்பப்ப சென்னயத் தொட்டுக்கறோம்."

"அந்த சாமியாரா நானே வர்றேன்; எம்பேரு மருதகாசி." பேரரசு தொடர்கிறார். "நீள நீளமா உரையாடல்[7] பேசப்போறேன்."

குத்துப்பாட்ட மறந்துட்டேனே.

"நீ கண்ணு கொடுத்த சாமி - ஒன்ன

கட்டிக்கிட்டேன் மாமி

ஒன்னோட எதயம் காமி - அதுல

நான் மட்டுந்தான் சாமி”

"யோவ் புதுசா எதாச்சும் சொல்லுயா நானே வில்லு ஓடாத கடுப்புல இருக்கேன்." கதையுடை மீண்டும் கனைக்கிறது.

இதே மாதிரி கோப்பப்படுங்க. எடைல ஓம். ஸம்பவாமி.. அப்டீயிப்டீன்னு கெட்ட வார்த்தை பேசுங்க. படம் பிச்சிக்கும். பேரரசுவின் பிதற்றல் தொடர்ந்தது.
"இதுல 'பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே...' பாட்ட நம்ம இசையமைப்பாளர் கலவை[8] செய்வார். அத வேண்ணா நீங்களே ஒங்க குரல்ல பாடுங்க.

"போடாங்... நீ இப்டீயே பேசிக்கிட்டு இருந்தேன்னா இந்தப்பாட்ட அப்றம் நம்ம தயாரிப்பாளர்தான் பாடணும்.” கோபமாகச் செல்கிறார் கதையுடை.
"அப்பாடா ஒரு வழியா நம்ம தலைவர படத்தோட பாத்திரத்துக்கு ஏத்த மாதிரி மாத்திட்டேன்.” பேரரசு பெருமூச்சு விடுகிறார்.



[1] வட்டார வழக்கு, திருடுதல் என்பது பொருள்

[2] விஜய்தான் வேறுயார்?

[3] Pair

[4] த்ரிஷா

[5] இற்றீகாந்த் தேவா

[6] சமற்கிருதம்

[7] Dialouge

[8] re- mix


ஏன் திரைத்துறை கட்டுரைகள் அதிகம் வருகின்றன?

திரைப்படத்துறையினைப்பற்றி கட்டுரைகள் எல்லா வலைப்பூக்களிலுமே அதிகமாகத்தான் தெரிகின்றன. ஏனெனில் முழுக்க முழுக்க திரையினைப் பார்த்து வாழ்வினை வாழக் கற்றுக் கொண்ட தலைமுறையினர்தாம் நாம்.

அதிகம் திரைப்படம் பார்த்த தலைமுறை:

ஒருதலைமுறை என்பது முப்பது ஆண்டுகள். இந்த முப்பது ஆண்டுகளாகத்தான் திரைத்துறை பொதுமக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. ஏனெனில் திரைப்படங்களை திரையில் மட்டும் பாராமல் தொலைக்காட்சிகளிலும், குறுவட்டுக்களிலும் அதிகம் பார்த்தது இத்தலைமுறைதான்.

திரைப்படத்துறை மெதுமெதுவாக அழிந்து வந்த போதிலும், அதைப்பற்றிய கட்டுரைகள், துணுக்குகள், செய்திகளுக்குப் பஞ்சமில்லை.

நான் ஏன் திரைத்துறை பற்றி அதிகம் எழுதுகிறேன்?

நானும் கூட தமிழ் எக்காளம் தொடங்கும் பொழுது திரைப்படத்துறையினைப்பற்றி குறைவாகவே எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் என்னையும் அறியாமல நானும் இத்தலைமுறையிலேயே இருப்பதால் நானும் இவ்வாறு அதிகமாக எழுத வேண்டியதாயிற்று.

திரைத்துறை பிறந்து நூறாண்டுகளுக்கு மேலாகி விட்ட பொழுதும், சென்ற தலைமுறையினர் இத்துணை அதிகமாக திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் காலத்தில் குறுவட்டு கிடையாது. உண்மையான திரைப்பட ஒலி நாடா வர மூன்றாண்டுகள் வரை பிடிக்கும். தொலைகாட்சிகள் பெரும்பாலும் கிடையாது. இருந்தாலும் அதில் ஒன்றிரண்டு படங்கள்தாம் வாரத்திற்கொரு முறை ஒளிபரப்பி வந்தார்கள்.
இதழ்கள்:

தங்களைத்தாங்களே முதலிடம் என்று பீற்றிக்கொண்டிருக்கும் வார[1], நாளிதழ்களும்[2] திரைத்துறையினை விடவில்லை. அவர்களைச் சிரமேற்கொண்டுதான் செயல்படுகின்றன. அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல.

திரைத்துறைக்கென தனியே இருக்கும் இதழ்களைக் காட்டிலும், இன்ன பிற வார இதழ்கள்தாம் திரைச் செய்திகளை முன்னர் கொடுப்பதில் தனியார்வம் காட்டி வருகின்றன.

எழுத்தாளர்கள்:

திரைத்துறைக்கு வரவே மாட்டேன் என்று கூறிவரும் எழுத்தாளர் ஞாநி கூட தனது கட்டுரைகளாக ஓ..பக்கங்களில் திரைத்துறையில் அண்மையில் வந்த சில திரைப்படங்கள் வன்முறையினைத் தூண்டுவதாக எழுதியிருந்தார். அவர் அத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தாலொழிய அந்தக் கட்டுரைகளை எழுதியிருக்க மாட்டார். பெரும் எழுதாளர்கள்[3] பகுதி நேரமாக திரைத்துறையில் பணியாற்றி பொருளீட்டுகின்றனர்.

தமிழ் எக்காளத்தில் ஏன்?

எல்லோருக்கும் திரைத்துறை என்பது வாழ்வளிக்கும் துறையாக இருக்கின்றது. நல்ல பாடல் குரல்வளமுடையவர், ஒரு முறையாவது திரையில் பாட மாட்டோமா? என்று நினைக்கிறார். அது போலவே ஒவ்வொருவரும் நினைப்பதால் இத்துறையில் கட்டுரைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் இத்துறை மெதுமெதுவாக அழிந்து வருகின்றது என்பது மட்டும் உண்மை. எதிர்காலத்தில் இத்திரைத்துறை இப்போது இருக்கும் நிலையிலிருந்து மாறுபட்டு வேறு வடிவம் பெரும் என்பது மறுக்க முடியாத உண்மை.எல்லோரையும் கவரும் இத்துறை இக்காரணங்களால் எம்முழக்கத்திலும் வருகின்றது.
விளைவுகள்:

திரைப்படம் பார்த்து வாழ்வினைக் கற்றுக்கொள்பவர்கள் நெகிழ்தன்மையுடைவராக இருப்பர். இவர்கள் அதிகம் உணர்ச்சி வயப்படுபவராகவோ, அல்லது ஞாநிபோல பிதற்றிக்கொண்டோ இருப்பர். வாழ்வின் ஒவ்வொரு பகுதியினையும் இவர்கள் திரைப்படத்தோடு ஒப்பிட்டுக்கொண்டே இருப்பர். இவர்களை விலை கொடுத்து வாங்குவது எளிது. இவர்களால் தன்னால் சிந்தனை செய்ய இயலாமல் பிறர் ஏற்கனவே செய்தவற்றை மெருகேற்றும் வேலையிலேயே இருப்பர். தன்னலமிக்கவர்களாக வாழும் இவர்களது வாழ்வு குமுகாயத்தோடு[4] பொருத்தமுற அமையாது.

நமக்கு முந்தைய தலைமுறையினர் தங்கள் செயல்களைத் தாமாகவே செய்தார்கள், சிரித்தார்கள். ஆனால் நாம் இன்று பொதுவாழ்வில் கூறிச்சிரிக்கும் சின்னச்சின்ன சிரிப்புகள் கூட ஏதோ ஒரு சிரிப்பு நடிகர் ஏற்கனவே ஏதோ ஒரு திரைப்படத்தில் செய்ததாகத்தான் இருக்கின்றது.

இப்படிப்பட்ட தலைமுறையினை ஏமாற்றுவதோ, விலை கொடுத்து வாங்குவதோ, மிதித்து நசுக்குவதோ நாடாள்வோருக்கு மிக எளிது. தமிழினமே தன்மானத்தோடு சிந்திப்போம்.



[1] குமுதம், ஆனந்த விகடன்

[2] தினகரன், தினத்தந்தி

[3] சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர்,பாலகுமாரன்

[4] Society

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

கந்தசாமி சில‌ செய்திகள்

சில ஆண்டுகளாக படப்பிடிப்பிலிருக்கும் படம் கந்தசாமி. தேவி இற்றீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை இயக்குனரும்1, அதைவிட சுவைஞர்களும்2 பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ஐந்து வழிகளில்3 வரும் கதையுடைத்தலைவன்4 இப்படத்தில் பாடலும் பாடியிருக்கிறார். பரம‌குடியில் பிறந்தவர்கள் நடிப்பில் கொடிகட்டிப்பறப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இப்படத்தினை பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
நகைச்சுவை நடிகரும்5, கதையுடைத்தலைவரும் கலக்குவார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் நகைச்சுவையாளரும் சில பாத்திரங்களில் தோன்றி சிரிக்க வைக்கிறார். கதையுடைத்தலைவி6 சும்மா தொட்டுக்கொள்ள மட்டுமில்லாமல் நடிப்பையும் வெளிக்காட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறது தலைவி வட்டாரம்.
அண்மையில் பல படங்கள் செய்து கையைச் சுட்டுக்கொண்ட தயாரிப்பாளருக்கு7 ஒரே நம்பிக்கை இப்படம்தான். படம் வெற்றி பெற வாழ்த்துவோம்.

1சுசி கணேசன்

2விசிறிகள்

3வேடங்களில்

4விக்ரம்

5விவேக்

6ஸ்ரேயா

7கலைப்புலி தாணு




வியாழன், 5 பிப்ரவரி, 2009

வலைப்பூவினை மெருகூட்ட‌


உங்கள் வலைப்பூவில்1 இப்பொழுது ஒலியினையும்2 பதிக்கலாம். இதற்காக தளம் ஒத்துழைக்கிறது. இதிலிருந்து குறிப்பிட்ட குறுநிரலை3 வெட்டி உங்கள் தளத்தில் ஒட்டினால் போதும். அது உங்கள் தளம் ஆங்கிலம் மற்றும் இசுபானிசு4 மொழியிலிருந்தால் அதைப்படிக்கும் ஒலிக்கோப்பினை உருவாக்கும். அதை நீங்கள் விரும்பினால் எம்.பி3 கோப்பாக இணையிறக்கம் செய்து கொள்ளலாம். நான் எனது ஆங்கிலத்தளங்களில்5 இதைச் சோதனை முயற்சிக்காகப் பொதிந்து வைத்துள்ளேன். நீங்களும் இது போன்று செய்து உங்கள் வலைப்பூவிற்கு மெருகூட்டலாமே!! இன்னும் இந்த வசதியானது தமிழ் மொழிக்கு வழங்கப்படவில்லை. இதற்கு http://www.vozme.com தளத்தினை அணுகவும். இதை எவ்வாறு பலவகைகளில் பயன்படுத்துவது என்பதைக்காண கீழ்க்காணும் தளம் சொடுக்கவும்.

http://vozme.com/webmasters.php?lang=en

1Blog

2Sound

3Java Script

4Spanish

புதன், 4 பிப்ரவரி, 2009

செல்வந்தனான சேரிநாய் தமிழ்ப்பதிப்பில் பாடும் நிலா பாலு - எஸ்.பி.பி


ஆங்கிலம், வட‌மொழியில் வெற்றி பெற்றது தொடர்ந்து தமிழிலும் வர இருக்கிறது குறிப்பிட்ட படம்1. தமிழில் நாயகனுக்கு2 சிம்புவும், இர்ஃபான் கானுக்கு இராதா இரவியும் குரல் தர இருக்கிறார்கள். வினாடி வினா நடத்தப்போகும் ஆளுக்கு3 குரல் கொடுக்கவிருப்பது வேறுயாருமல்லர், நமது பாடும் நிலா பாலுதான்.

1Slumdog Millionaire

2Dev Patel

3Anil Kapoor

திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை - ஒரு பார்வை

திருவண்ணாமலை

அடங்கவே அடங்காத பேரரசு எடுத்திருக்கும் அடுத்த படம். இதிலும் அடங்கவேயில்லை. நாம்தான் படம் பார்த்து அடங்க வேண்டியிருக்கிறது.

என்ன நினைத்துத்தான் படம் எடுத்தார்களோ தெரியவில்லை. இயக்குனர் சிகரத்தின்1 நிறுவனத்திலிருந்து இப்படியொரு படமா தலைவலிதான். நாயகனின்2 தாய்மொழி கன்னடம். எனவே கன்னட ஒட்டாக நாயகி3. ஆடுகிறார். வாயசைக்கிறார். ஆனால் நடிப்பு. ?? நாயகன் இருவழிகளில்4 வருகிறார். இருவர் என்றால் எப்போதும் வரும் மறுகாட்டுதலை5 இப்படத்தில் வைக்கவில்லை. அதற்கு பாராட்ட நினைத்தாலும், அடுத்தடுத்து வரும் கிறுக்குத்தனங்களைப் பார்க்கும் பொழுது அவ்வாறு செய்யத் தோன்றவில்லை.

எல்லாப்படத்திலும் வருவது போலும் இதிலும் வந்து படுத்துகிறார் பேரரசு6. ஒரு நாயகன்7 அமைதியாயிருப்பார் என்று நினைத்தால், அவரும் அடிக்கிறார். என்னதான் சொல்ல வருகிறார்களோ?? இசையமைப்பாளர்8 எப்பொழுதும் போல் இசைபழகி வருகிறார்.

சிரிப்பு நடிகரை9 அடித்தே கொல்கிறார்கள். அவரை அடிக்கும்பொழுது வரும் கூட்டம் நாயகனையோ, எதிர் நாயகனையோ அடிக்கும் பொழுது வருவதில்லை. ஒவ்வொருவராக வந்து அடி வாங்கிச் செல்கின்றனர். எல்லாரும் உரக்க ஒரு முறை சிரியுங்கள். பேரரசு படம் எடுத்திருக்கிறார்.

1கவிதாலயா

2அர்ஜீன்

3பூஜா காந்தி

4Dual role

5Flash back

6சுவாமி மலை என்னும் மருத்துவர்

7இறைய‌டியவர்

8இற்றீகாந்த் தேவா என சொல்லவும் வேண்டுமோ

9கருணாசு

திண்டுக்கல் சாரதி:

இதுவரை நகைச்சுவையாளனாக இருந்தவர்1 நாயகனாகி இருக்கும் முதல் படம். இவரது நடிப்பு பரவாயில்லை வகை. அவரது குரலில் இன்னும் தேர்ச்சி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றெண்ணத்தோன்றுகிறது.
மலையாளத்தில் எப்பொழுதோ வந்த கதையினை தட்டி எடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி2 விளம்பர முலாம் பூசித்தந்திருக்கிறார்கள். நாயகி3 நல்ல குண்டாக இருக்கிறார். நாயகனைத் தூக்கி ஆடுகிறார்.

பல நகைச்சுவையாளர்களை4த் திரையில் சந்தித்தவர்கள் நாம். ஆகவே இப்படம் அப்படியொன்றும் பெரிய சிரிப்பினை வரவழைக்கவில்லை என்பது சற்று கவலைக்குரிய செய்திதான். ஒரு குடும்பப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

தாழ்வு மனப்பான்மையில் வாடும் ஒரு மனிதனின் கதையினை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள். அதுவும் ஓரளவு எடுபட்டிருக்கிறது. மொத்தத்தில் திண்டுக்கல் சாரதி சற்றே சுணக்கத்தோடு நகைச்சுவை தருபவன்.

1கருணாசு

2Sun TV

3கார்த்திகா

4என்.எஸ்.கே,கிரேசிமோகன், கமலஹாசன்,நாகேசு,கௌண்டமணி,வடிவேலு

பதிவிறக்கம் செய்ய: http://pnaprasanna.blog.co.in/files/2009/02/thiruvanna.pdf