செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

ஏன் திரைத்துறை கட்டுரைகள் அதிகம் வருகின்றன?

திரைப்படத்துறையினைப்பற்றி கட்டுரைகள் எல்லா வலைப்பூக்களிலுமே அதிகமாகத்தான் தெரிகின்றன. ஏனெனில் முழுக்க முழுக்க திரையினைப் பார்த்து வாழ்வினை வாழக் கற்றுக் கொண்ட தலைமுறையினர்தாம் நாம்.

அதிகம் திரைப்படம் பார்த்த தலைமுறை:

ஒருதலைமுறை என்பது முப்பது ஆண்டுகள். இந்த முப்பது ஆண்டுகளாகத்தான் திரைத்துறை பொதுமக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. ஏனெனில் திரைப்படங்களை திரையில் மட்டும் பாராமல் தொலைக்காட்சிகளிலும், குறுவட்டுக்களிலும் அதிகம் பார்த்தது இத்தலைமுறைதான்.

திரைப்படத்துறை மெதுமெதுவாக அழிந்து வந்த போதிலும், அதைப்பற்றிய கட்டுரைகள், துணுக்குகள், செய்திகளுக்குப் பஞ்சமில்லை.

நான் ஏன் திரைத்துறை பற்றி அதிகம் எழுதுகிறேன்?

நானும் கூட தமிழ் எக்காளம் தொடங்கும் பொழுது திரைப்படத்துறையினைப்பற்றி குறைவாகவே எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் என்னையும் அறியாமல நானும் இத்தலைமுறையிலேயே இருப்பதால் நானும் இவ்வாறு அதிகமாக எழுத வேண்டியதாயிற்று.

திரைத்துறை பிறந்து நூறாண்டுகளுக்கு மேலாகி விட்ட பொழுதும், சென்ற தலைமுறையினர் இத்துணை அதிகமாக திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் காலத்தில் குறுவட்டு கிடையாது. உண்மையான திரைப்பட ஒலி நாடா வர மூன்றாண்டுகள் வரை பிடிக்கும். தொலைகாட்சிகள் பெரும்பாலும் கிடையாது. இருந்தாலும் அதில் ஒன்றிரண்டு படங்கள்தாம் வாரத்திற்கொரு முறை ஒளிபரப்பி வந்தார்கள்.
இதழ்கள்:

தங்களைத்தாங்களே முதலிடம் என்று பீற்றிக்கொண்டிருக்கும் வார[1], நாளிதழ்களும்[2] திரைத்துறையினை விடவில்லை. அவர்களைச் சிரமேற்கொண்டுதான் செயல்படுகின்றன. அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல.

திரைத்துறைக்கென தனியே இருக்கும் இதழ்களைக் காட்டிலும், இன்ன பிற வார இதழ்கள்தாம் திரைச் செய்திகளை முன்னர் கொடுப்பதில் தனியார்வம் காட்டி வருகின்றன.

எழுத்தாளர்கள்:

திரைத்துறைக்கு வரவே மாட்டேன் என்று கூறிவரும் எழுத்தாளர் ஞாநி கூட தனது கட்டுரைகளாக ஓ..பக்கங்களில் திரைத்துறையில் அண்மையில் வந்த சில திரைப்படங்கள் வன்முறையினைத் தூண்டுவதாக எழுதியிருந்தார். அவர் அத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தாலொழிய அந்தக் கட்டுரைகளை எழுதியிருக்க மாட்டார். பெரும் எழுதாளர்கள்[3] பகுதி நேரமாக திரைத்துறையில் பணியாற்றி பொருளீட்டுகின்றனர்.

தமிழ் எக்காளத்தில் ஏன்?

எல்லோருக்கும் திரைத்துறை என்பது வாழ்வளிக்கும் துறையாக இருக்கின்றது. நல்ல பாடல் குரல்வளமுடையவர், ஒரு முறையாவது திரையில் பாட மாட்டோமா? என்று நினைக்கிறார். அது போலவே ஒவ்வொருவரும் நினைப்பதால் இத்துறையில் கட்டுரைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் இத்துறை மெதுமெதுவாக அழிந்து வருகின்றது என்பது மட்டும் உண்மை. எதிர்காலத்தில் இத்திரைத்துறை இப்போது இருக்கும் நிலையிலிருந்து மாறுபட்டு வேறு வடிவம் பெரும் என்பது மறுக்க முடியாத உண்மை.எல்லோரையும் கவரும் இத்துறை இக்காரணங்களால் எம்முழக்கத்திலும் வருகின்றது.
விளைவுகள்:

திரைப்படம் பார்த்து வாழ்வினைக் கற்றுக்கொள்பவர்கள் நெகிழ்தன்மையுடைவராக இருப்பர். இவர்கள் அதிகம் உணர்ச்சி வயப்படுபவராகவோ, அல்லது ஞாநிபோல பிதற்றிக்கொண்டோ இருப்பர். வாழ்வின் ஒவ்வொரு பகுதியினையும் இவர்கள் திரைப்படத்தோடு ஒப்பிட்டுக்கொண்டே இருப்பர். இவர்களை விலை கொடுத்து வாங்குவது எளிது. இவர்களால் தன்னால் சிந்தனை செய்ய இயலாமல் பிறர் ஏற்கனவே செய்தவற்றை மெருகேற்றும் வேலையிலேயே இருப்பர். தன்னலமிக்கவர்களாக வாழும் இவர்களது வாழ்வு குமுகாயத்தோடு[4] பொருத்தமுற அமையாது.

நமக்கு முந்தைய தலைமுறையினர் தங்கள் செயல்களைத் தாமாகவே செய்தார்கள், சிரித்தார்கள். ஆனால் நாம் இன்று பொதுவாழ்வில் கூறிச்சிரிக்கும் சின்னச்சின்ன சிரிப்புகள் கூட ஏதோ ஒரு சிரிப்பு நடிகர் ஏற்கனவே ஏதோ ஒரு திரைப்படத்தில் செய்ததாகத்தான் இருக்கின்றது.

இப்படிப்பட்ட தலைமுறையினை ஏமாற்றுவதோ, விலை கொடுத்து வாங்குவதோ, மிதித்து நசுக்குவதோ நாடாள்வோருக்கு மிக எளிது. தமிழினமே தன்மானத்தோடு சிந்திப்போம்.[1] குமுதம், ஆனந்த விகடன்

[2] தினகரன், தினத்தந்தி

[3] சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர்,பாலகுமாரன்

[4] Society

0 Comments: