வியாழன், 27 நவம்பர், 2008

அச்சுறுத்துவோரை அழிக்க வழியே இல்லையா?

அச்சுறுத்துவோரை அழிக்க வழியே இல்லையா?

மும்பையில் 26/11/2008 அன்று நடந்த தாக்குதல்களைப் பார்த்து கொடுஞ்சினங்கொண்டு எழுதுங்கட்டுரை இது. சினங்குறைய மேல்நாட்டு இசைமேதையின்1 இசைக்கோவைக்2 கேட்டுக்கொண்டே எழுதுகிறேன் இஃதினை.

---

அச்சுறுத்துவோர்3 (இழிவினத்தோரைக்கூட எந்தமிழ் எப்படியழைக்கிறது பாரீர்!) ஊடுருவலால் மும்பையில் நடந்ததை செய்தி அலைவரிசையில் கண்டால் கூட ஏதோ திரைப்படம் பார்ப்பது போன்றிருக்கிறது. சில இடங்களில் திரையினையும் மிஞ்சிவிட்டது நடப்பு. நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? காந்தி பிறந்த மண்ணிலா? என்றெண்ணம் மேலோங்கி ஒலிக்கிறது எல்லோர் மனதிலும். இவர்களை அழிக்க வழியே இல்லையா? பட்டாளத்தினர்4 விரைந்து வந்து எல்லையில் நாட்டைக் காப்பதினை விடுத்து ஊடுருவிய அச்சுறுத்துவோரைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எண்ணிலா வருத்தம் பீறிடுகிறது தமிழ் கூறும் நல்லுலகோர் நெஞ்சில்.

---

இவ்வச்சுறுத்தத்தினை ஒரு குறிப்பிட்ட குமுகாயத்தினர்5 செய்கின்றனர். அதற்கு அவர்கள் வைக்கும் பெயர் புனிதப்போர். நல்லகாலம் அவர்கள் தமிழ் பேசவில்லை. ஏனெனில் தமிழில் புனிதப்போர் என்பதற்கு பொருள் வேறு.

---

இன்று மும்பையில் நடந்தது நம் ஊருக்கு வர எத்தனை காலம் பிடிக்கும் என்ற அச்சம் அனைவர் மனதிலும் எழுவது உண்மைதான். இவ்வச்சுறுத்தற்காரர்கள் பொதுமக்களைக் குறி வைத்துத் தாக்குவதுதான் பெரும் வருத்தத்தினைத் தருகிறது.

---
அச்சுறுத்தற்காரர்களால் ஏற்படும் தீவிளைவுகள்:


  1. ஒட்டு மொத்த உலகத்தினையே தங்கள் பக்கம் இழுத்து வேறு எந்த வேலையையும் செய்யவிடாதிருத்தல்.(பாருங்கள்! நான் கூட வேறு வேலையிருந்தும், வேலை செய்ய மனமின்றி இதை பெரிதாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.)

  2. இவர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ள பாதுகாப்பு வழிமுறைகள் நாம் தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தல். (எண்ணிலா காவல் துறையினர், பட்டாளத்தார் இதனையே பார்த்துக் கொண்டிருத்தல்.)

  3. தீவினைகளை அவ்வப்போது கண்கூடாக விளைவித்தல்.

  4. பணயக் கைதிகளாக சிலரைப் பிடித்துக் கொண்டுr அரசைப் பணியவைத்தல். அவ்வாறு பணியாத போது, பணயக் கைதிகளை கொடூரமாகக் கொன்று விடுதல்.

  5. நம்மருகாமையிலிருக்கும், அண்ணன் தம்பி போல் பழகிவரும் இக்குமுகாயத்தினரின் மீது நமக்கு ஐயம் ஏற்படுத்துதல், நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் சமய நல்லிணக்கத்தைக் கலைத்தல்.

எப்படியும் அச்சுறுத்தர்காரர்களை, அச்சுறுத்தல் முறைமைகளை6 ஒழிக்க வேண்டும். அதற்கான முறை, வழிகளை கண்டறிதல் வேண்டும். அரசு கண்டறியுமா? பொதுமக்கள் வாழ்வு காக்கப்படுமா? வல்லரசுகள் இதனைக் கண்டு கொள்ளுமா?

ஒரு கட்டுரையின் மூலம் சிறு கல் எரிகிறேன். என்னோடு நிறைய கற்கள் வந்தால் பாதுகாப்பாக ஒரு கோட்டை கட்டலாம். இல்லையேல் வெறும் கல் மட்டுமே இருக்கும்.

---

பா.நி..பிரசன்னா.

1Mozart

2symphony

3Terrorists

4military

5Muslims

6terrorism

0 Comments: