செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஓ காதல் கண்மணி பாடல்கள் ஒரு பார்வை

பாடல்களை வானொலியில் கேட்டு, ஒலிநாடாவில் கேட்டு, பின்பு குறுவட்டு, அடர் குறுவட்டுக்களில் கேட்டு, பண்பலையில் கேட்டு விருப்பப் பாடல்களாக மாறிய காலம் கோளேறிவிட்டது. இன்று யூ‍ட்யூப் மூலமே பாடல்கள் இலவசமாகக் கேட்கப்பட்டு புகழடைகின்றன. 
தமிழில் தலைப்பு வைத்திருப்பதிற்கு மகிழ்ச்சி. முன்பு சொன்னது போல் ஓகே கண்மணி இல்லை. ஓகே என்பது தமிழ் தான் என்று இக்காலத் தலைமுறை சொல்வதைக் கேட்டு அன்பாகக் கண்டிக்கலாம்.
தெலுங்கில் ஓ பங்காரம் என்று தலைப்பு. பங்காரம் என்பதற்கு தங்கம் என்று பொருள். படம் இந்தியில் வெளியாகவில்லை. தமிழிலேயே மணிரத்னத்தின் படமான கடலைப் பார்க்க ஆளில்லை. இதில் இந்தி வேறு எதற்கு என்று விட்டு விட்டதற்கு நன்றிகள்.
பாடல்களுக்கு வருவோம்.
இசைப்புயல் என்ன பாட்டுப் போட்டாலும் கேட்பதற்கு ஒரு கூட்டம் தொடக்க காலம் தொட்டே இருக்கிறது. இப்படத்தில் எல்லாப் பாடல்களும் மற்ற மணிரத்னத்தின் படங்கள் போல் வைரமுத்துவால் எழுதப்படவில்லை. அவர் ஒரு பாட்டிற்கே 25 ஆயிரத்திற்கு மேல் ஊதியம் கேட்கிறாராம். ஓ காதல் கண்மணி சிறு முதலீட்டுப் படம் என்பதறிக.
1. காரா ஆட்டக்காரா - ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் எழுதி தனது உறியடிக் குரலில் பாடியிருக்கிறார். தர்ஷணா, ஷாஷா திருப்பதி உடன் பாடியிருக்கிறார்கள். பாடலில் வரும் வரிகளை இசைப்புயலும், மணிரத்னமும் எழுதியிருக்கிறார்கள். இது கண்டிப்பாக ஒரு மாத்திரைதான். தொடர்ந்து கேட்டால் மனம் பறக்கும். சுவைஞர்களுக்குப் பித்துப் பிடிப்பது உறுதி. உறியடிக்குரலர் பாடியிருப்பது பல மேடைகளில் புதிய பாடகர்களால் பாடப்பட்டு பாராட்டுப் பெறும்.

2. ஏய். சினாமிக்கா - கார்த்திக் பாடியிருக்கிறார் வைரமுத்து வரிகளை. பாடலானது தொலைக்காட்சியில் ஒளி(லி)த்த பின்பு பாராட்டுப் பெறும்.

3. பறந்து செல்ல வா.. - கார்த்திக் உடன் ஷாஷா திருப்பதி சேர்ந்து பாடியிருக்கிறார். வரிகள் வைரமுத்து.  இசைப்புயலின் மெட்டமைப்பு புதியது.

4.  மென்டல் மனதில் -  இசைப்புயல் மணிரத்னத்துடன் சேர்ந்து எழுதி, ஜோனிடா காந்தியுடன் சேர்ந்து பாடியிருக்கிறார். பாடல் வரிகளுக்கு தலைமை இல்லாமல், இசைக்கு முதன்மை தரும் பாடல். இணையத்தில் ஏற்கனவே வெற்றி பெற்ற பாடல்.

5. நானே வருகிறேன் - வைரமுத்துவின் வரிகளை ஷாஷா திருப்பதியுடன் சேர்ந்து நமது விஜய் தொலைக்காட்சி புகழ் சத்யபிரகாஷ் பாடியிருக்கிறார். இது இசைப்புயல் வகை கரைநாட்டு இசை. வழக்கம் போல் ஆண் குரல் மேல் நிலைகளில் மட்டுமே பாடவைக்கப்பட்டுள்ளது. இதுவும் மனம் பறக்கும் பாடல்தான். மேடைப்பாராட்டுக்கள் பல பெறும்.

6. தீரா உலா - புயல் தர்ஷணா, நிகிதா காந்தியுடன் சேர்ந்து பாடியிருக்கிறார். வரிகள் வைரம் தான். கரை நாட்டு இசையினை, மேற்கத்திய இசையின் பின்புலத்தில் தன் குரலை கணினிமயமாக்கிக் கொடுத்திருக்கிறார் புயல் தன்வழியில்.

7. மென்டல் மனதில் (பெண்குரல் - ஜோனிட்டா காந்தி). பாடல் மறுகலவை செய்யப்பட்டுள்ளது. இப்பாடலில் இசைப்புயல் மணிரத்னத்துடன் சேர்ந்து எழுதிய‌ வரிகள் வேறு. ஆண் குரலில் இப்பாடல் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டதால் பெண் குரலில் வெற்றியடைவது ஐயம்.

8. மலர்கள் கேட்டேன் - சின்னக்குயில் சித்ராவுடன் புயல் இணைந்து பாடியிருக்கிறார். இதுவும் கரை நாட்டு இசைதான். இசையின் முதல் நிலையான ஏழு ஒலிகள் வருகின்றன. இசை கற்றோரை இது கவரும்.

9. மௌலா வா சல்லீம் - ஏ.ஆர்.அமீன் பாட வைக்கப்பட்டிருக்கிறார். அதிகமான மேல் நிலைகள் இல்லை. அரபு மொழி புரியாவிடினும் பாடலைக் கேட்டால் மனதில் ஓர் ஆழ் அமைதி கிட்டும். முகம்மதிய உடன்பிறப்புக்களையும் தாண்டி அனைவரையும் கவரும்.

பின்குறிப்பு: இசைப்புயலின் இசையை மட்டுமே நம்பி மணிரத்னம் படமெடுத்திருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. படம் கடலைப் போல் உள்வாங்காமல் வெற்றியடைய வாழ்த்துவோம்.

0 Comments: