சனி, 3 ஜனவரி, 2009

என் மனங்கவர்ந்த வாசகர்கள்

என் மனங்கவர்ந்த வாசகர்கள்:

இரண்டரை ஆண்டு காலமாக தொழிற்நுட்ப இதழிலும்1, சிறிது காலமாக இணையத்திலும் தமிழில் எழுதி வரும் என் மனங்கவர்ந்த வாசகர்கள் பற்றி எழுதுகிறேன். வளர்ந்து வரும் எழுத்தாளனான எனக்கு இது போன்ற வாசகர்கள்தாம் ஆதரவு. நிறைய வாசகர்கள் இருப்பினும், விரல் விட்டு எண்ணும் அளவு வாசகர்களை மட்டும் இங்கு நினைவு கூர்கிறேன்.

இற்றீ கலியாண இராமன்2: இவர் எனது முதுகலை வகுப்புத் தோழர். எந்தப்படைப்பாயினும் சரி உள்ளது உள்ளபடி பாராட்டுவது இவருக்கு நிகர் இவர்தான். எனது தொழிற்நுட்பக்கட்டுரைகளை இதழ்களில் படிக்காவிடினும் எனது வலைப்பூவிலிருந்து பதிவிறக்கி படிப்பார். எனது வகுப்புத் தோழர் என்பதால் எவ்வித சிக்கலுமின்றி எனது கைபேசி எண் இவருக்குக் கிடைத்து விடும். பேசி பாராட்டும் பாங்கு இவரது சிறப்பு.

இராமசங்கரன்3: வல்லரசு4 நாட்டிலிருப்பவர். நேர்த்தியான மென்பொறிஞர். எனது தமிழ்க்கட்டுரைகளையும், மின்னஞ்சல்களையும் படிப்பவர். பொறிநிறைஞரே என்று அழைப்பவர். இதுவரை தொலைபேசவில்லை. மின்னஞ்சல் அனுப்புவார். அடுத்த முறை தமிழில் அனுப்புவதாகக் கூறியிருக்கும் இவரும் என்னுடன் முதுகலை ஒன்றாகப்படித்தவரே.

சவடையா: ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை என்னுடன் படித்தவர். வல்லரசுகள் கண்ட மென்பொறியாளர். என்னை எப்படியாவது கண்டறிந்து தொலைவிலிருந்தாலும் தொலைபேசியில் பிடிப்பவர். இணைய தொலை அரட்டையில்5 வருபவர். இந்த எழுத்துப் பரிமாணம் நீ பள்ளியில் என்னுடன் படிக்கும் பொழுது தெரியவில்லையே என்பவர். தொழிற்நுட்பம் தொடர்பாக சிலவற்றை மட்டும் குறித்தே இப்போது பேசுகிறார். பழகுதற்கினியவர்.

குமரவேல்: இவர் என்னுடன் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். இவரிடமிருந்து நான் நிரம்பத் தெரிந்து கொண்டேன். இவரும் எனது தொடர் வாசகரே. எல்லா வாசகரும் கதையிலிருப்பதைப் பார்த்தால், கதையில், கட்டுரையில் இல்லாத ஒன்றைத்தான் இவர் பார்ப்பார். இப்போது கரூரில் கல்வி இயக்குனராகப் பணியிலிருக்கிறார். இவர் தெளிவாக எது சரி எது தவறு என்று சுட்டிக்காட்டுவதில் வல்லவர். இவரால் எனது எழுத்து நிறையவே மெருகேறியது. இந்த வகையில் எனது திண்டுக்கல் தோழர் சபரி இராஜன், முனைவர். சாரா என்ற சுபா போன்றவர்களின் பங்கு பெரியது.
வரதராசன்: என்னைவிடச் சிறப்பாக எழுதக்கூடியவர். தொழிற்நுட்பங்களை புரிந்துணர்ந்து பல கட்டுரைகளை எழுதுபவர். திறனாய்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். ஒரு இதழில் இரண்டு முதல் மூன்று கட்டுரைகளை எழுதுபவர். தொழிற்நுட்ப இதழ் மூலம் நட்பானவர். தொலைபேசி நட்பு மட்டுமே உண்டு. இவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பினை எண்ணிப்பார்க்கிறேன். தொழிற்நுட்பக்கதைகள் மூலம் உங்களைப் பார்க்கிறேன் என்று பாராட்டுவார். அன்பிர்கினியவர். இவரது கொங்குத்தமிழ் சிறப்பு.
தமிழ்வாணன்: மின்னஞ்சல் மூலம் மிகுந்த தொடர்புண்டு. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலிருப்பவர். நான் செயற்கை நுண்ணறிவு தொடர் எழுதிய பொழுது எந்த ஒரு சிக்கலைக் கொடுத்தாலும் தீர்வு உடனே அனுப்பிவிடுவார். இதழ்கள் படிப்பதில் ஆர்வமுள்ளவர். ஒரு எழுத்தாளரை நெருங்கிய வாசகர்.

இரமேசு: இவர் திருநெல்வேலிக்காரர். அவ்வப்போது மின்மடலாடுவார். எப்போதாவது மின் அரட்டையடிப்பார். எப்போதும் தொழிற்நுட்பம் குறித்தே பேசுவார்.

கார்த்திக்: எழுத்தாளரைத் துரத்திப் பிடிப்பவர். எனது கட்டுரைகளைப் படித்து தொலைவிலிருந்தாலும் மிகவும் நெருங்கியவர். கொழுந்து வெற்றிலை ஊர்க்காரர். தொலைபேசும் வேறுபட்ட எழுத்தாளர். "அண்ணாத்தே..." என்றும் சில நேரங்களில் அழைப்பார். தமிழ், ஆங்கிலம் வடமொழி, சமற்கிருதம் என எல்லா மொழிகளிலும் இவருக்குப் புலமை உண்டு. நன்கு படிக்கக்கூடியவர். அண்மையில் இவரது தகுதிகாண் படிவத்தையும் அனுப்பியிருந்தார். என்னுடன் பேசிக்கொண்டே இருப்பதில் இவருக்கு அப்படியொரு மகிழ்ச்சி. மின் அரட்டையும் அடிப்பார்.

அறிவழகன் கைவல்யம்: இவர் வலைப்பூக்களின் மூலம் என் உள்ளங்கவர்ந்தவர். எனது வலைப்பூக்களை அவ்வப்போது பார்த்து தமிழில் மட்டும் உள்ளவற்றைச் சுட்டிக்காட்டுபவர். மின்னஞசல் நண்பர். எனது கலந்தாய்வுக்காக தலைப்புக்களையெல்லாம் கொடுப்பவர். விரைவில் இவர் கொடுத்த தலைப்பில் கட்டுரைகளை எனது வலைப்பூவில் காணலாம்.

சமுனா6: இவர் எனது தோழியாக அறிமுகமாகி பின் வாசகியானவர். தொலைபேசியில் நிறைய பேசுவார். மின் அரட்டையடிப்பார். என்னுடன் பணிபுரிந்தவரின் தங்கை என்பதால் இவர் எளிதில் என்னைத் தொடர்பு கொள்வார். இவரும் எனது எழுத்துக்களைப் படிப்பார். திறனாய்வு மிகக்குறைவாகத்தான் செய்வார். மென்பொருள் குழுத்தலைவியாக சென்னையிலிருக்கும் இவரும் நானும் இதுவரை சந்தித்ததில்லை.

சரண்யா: எனது மாணவியாக இருந்து எனது வாசகியாக மாறிய பெண் இவர். இவரது திட்ட அறிக்கை வழிகாட்டியும்7 அடியேந்தான். இந்தத் திட்ட அறிக்கையால் இவருக்கு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொறிஞையாக வேலை கிடைத்தது. சென்னையிலிருக்கும் இப்பெண் மின்னஞ்சலும், குறுஞ்செய்திகளும்8 அனுப்புவார்.

1 தமிழ் கம்ப்யூட்டர்

2Sri kalyana raman

3Ram Shankar

4United States of America

5Video Chatting

6Jamuna

7Project Guide

8Short Messaging Service

பதிவிறக்க: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/vasagarkal.pdf

0 Comments: