இலக்கணம் குறித்து நான் அறிந்தவற்றைத் தருகிறேன். இது இலக்கணம் என்னும் முழக்கமாக அவ்வப்போது எங்கள் தமிழ் எக்காளத்தில் முழங்கப்படும்.
ஒரு செய்யுளுக்கு அடிப்படை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பனவாகும்.
எழுத்தில் இரண்டு வகைகள். ஒன்று வரிவடிவம் (எழுதும் முறை), ஒலி வடிவம் (உச்சரிக்கும் முறை). உயிரெழுத்து - பன்னிரெண்டு மெய்யெழுத்து - பதினெட்டு உயிர்மெய் எழுத்து - இருநூற்றி பதினாறு ஆய்தம் - ஒன்று ஆக மொத்தம் இருநூற்றி நாற்பத்து ஏழு எழுத்துக்கள் தமிழில் உள்ளன.
அசைகள் இரண்டு வகைப்படும். அவையாவன நேரசை, நிரையசை.
நேரசை: குறில் தனித்தோ ஒற்றடுத்தோ, நெடில் தனித்தோ ஒற்றடுத்தோ வருவதோ நேரசையாகும். எ.கா: நேர்
நிரையசை: இருகுறில்கள் இணைந்தோ ஒற்றடுத்தோ, குறில் நெடில் இணைந்தோ ஒற்றடுத்தோ அமைவது நிரையசையாகும். எ.கா: நிரை
இரண்டசைச்சீருக்கான வாய்ப்பாடுகள்
நேர்நேர் - தேமா
நிரைநேர் - புளிமா
நிரைநிரை - கருவிளம்
நேர்நிரை - கூவிளம்
மூன்றசைச்சீருக்கான வாய்ப்பாடுகள்
நேர்நேர்நேர் - தேமாங்காய்
நிரைநேர்நேர் - புளிமாங்காய்
நிரைநிரைநேர் - கருவிளங்காய்
நேர்நிரைநேர் - கூவிளங்காய்
நேர்நேர்நிரை - தேமாங்கனி
நிரைநேர்நிரை - புளிமாங்கனி
நிரைநிரைநிரை - கருவிளங்கனி
நேர்நிரைநிரை - கூவிளங்கனி
இவ்வாறு பிரித்தெழுதுவது அசை பிரிப்பது என்றழைக்கப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று அசைகள் சேர்ந்து ஒரு சீர் உருவாகின்றது. அதுவே வார்த்தை அல்லது கிளவி என்றழைக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment