சனி, 17 ஜனவரி, 2009

திறனாய்வுகள்

அண்மையில் வெளியான நான்கு திரைப்படங்களின் திறனாய்வினைத் தருகிறேன். விடுமுறையாதலால் இது போன்ற திறனாய்வுகள் தெளிவாக எழுத முடிகிறது. திரைப்படங்கள் இவைகள் தாம். தெனாவட்டு, சிலம்பாட்டம், அபியும் நானும், சுப்ரமணியபுரம்.

சுப்ரமணியபுரம்:

மதுரையில் 1980ல் நடக்கும் கதை. முதல்படமான இதில் தானே நாயகனாகவும் நடித்திருக்கிறார் இயக்குனர்1. முதலில் கதை நடக்கும் சூழலுக்கு கூட்டிச் சென்றதற்கு அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். கலை, படப்பிடிப்பு அத்துணை நேர்த்தி.

கதை பழக்கப்பட்டதுதான் என்றாலும், அதை எடுத்த விதம் புதுமை;அருமை. இரண்டாவது பாதியில் வன்முறை கொஞ்சம் அதிகம் தான் என்றாலும், அது தொலைவான காட்சிகளில் காட்டப்பட்டிருக்கிறது. நாயகி அழகுப்பதுமை. அத்துணை நடிப்பினை அவரது சிறிய முகம் காட்டி விடுகிறது. கொஞ்சமாகத்தான் உரையாடுகிறார்.

எல்லாவற்றையும் தூக்கி நிறுத்துவது இசையே. அறிமுக இசையமையாளர்2 தானும் ஒரு இசையரசர்தான் என்று இப்படத்தில் காட்டியிருக்கிறார். அதுவும் அவர் பயன்படுத்தும் இசைக்கருவிகள் நம்மைத்தாளம் போட வைக்கின்றன. கருநாடகப்பின்னணியில் கண்கள் இரண்டால்... பாடல் தாமரையின் கோமேதக வரிகளில் ஒலிப்பது சிறப்பு. பல இடங்களில் இளையராஜாவின் பாடலைப் பின்னணி இசையாகக் கொடுத்தது காட்சிகளுக்கு வனப்பளிக்கிறது.

நகைச்சுவை காட்சியோடு, கதையோடு வருவது சிறப்பு. மதுரைத்தமிழ் தீயாகக் கலக்குகிறது. முரட்டுக்காளை பட வெளியீட்டு நாளினை காட்சியமைத்திருப்பது சிறப்பு. எல்லோரும் மிகையில்லாது நன்றாக நடித்திருக்கிறார்கள்.

தேவையற்ற பாசக்காட்சிகள், இழிவான காட்சிகள் இல்லாததற்கு பாராட்டுக்கள். வன்முறைக்காட்சிகளைக் குறைத்திருந்திருக்கலாம்.
வன்முறைகள், மெலிதான நெருடல்களைத் தவிர்த்து விட்டுப்பார்தால் இது உலக அரங்கை நெருங்கிய ஒரு உயர் படம் என்பது புரியும். அறிமுக இயக்குனர், இசையமைப்பாளர், பிறகலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

1சசிக்குமார்

2ஜேம்ஸ் வசந்தன்


அபியும் நானும் :

குழந்தை, "அப்பா காலைல என்ன சாப்டீங்க?" என்று கேட்டால் கூட புளகாங்கிதமடையும் ஒரு தந்தையின் கதை. சரி. தந்தை1 நன்றாக நடிக்கிறார். குழந்தையாக வரும் நாயகிக்கு2 நடிக்க வாய்ப்பே இல்லை. வாய்ப்பு இருந்து விட்டால் மட்டும் அவர் என்ன நடிப்பாரா என்கின்றனர் அரங்கில் சிலர். குத்தாட்டக்குருவியாக வலம் வந்து கொண்டிருந்த நாயகிக்கு சற்றே வேறுபட்ட பாத்திரம். ஆனால் அவர் சரிவர செய்யவில்லை.

இசையமைப்பாளர்கள் மொழி தெரியாத பாடகர்களைப் பாடவைப்பது தமிழ்த்திரையில் எழுதப்படாத விதியாகி விட்டது. பின்பென்ன, நாயகனின் அடிப்பொடிகள்3 இப்படத்திலும் விரவிக்கிடக்கிறார்க்ள். படம் முழுக்க முன்நடந்ததை4 சொல்வதாக எடுக்கப்பட்டிருக்கிறது.

நாடகத்தன்மையினை தவிர்த்திருந்தால் சுவைபட இருந்திருக்கும். பாடல்களை மீண்டும் கேட்க இயலாத அளவிற்கு கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்5. நாயகன் நடிப்பில் மற்றொரு நிலைக்குச் சென்றிருக்கிறார் என்று கூறலாம். அவருக்கு உண்மையிலேயே ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. அதை நினைத்து நிறைய கற்பனையை அள்ளித் தெளித்திருக்கின்றார் இக்கதையில் என்கிறார்கள் திரைப்பட ஆய்வலர்கள்.

உச்சகாட்சி6 என்று எதுவும் இல்லை. சுவைஞர்களை பதற்றப்படுத்தும் காட்சிகளும் ஏதும் இல்லை. நகைச்சுவை என்ற பெயரில் அவர்களே பேசி அவர்களே சிரித்துக் கொள்கிறார்கள். அதுதான் பெயர் வைத்திருக்கிறார்களே!!! அபியும் நானும் என்று. மற்றவர்கள் தேவையில்லை என்று நினைத்து விட்டார்கள் போலும். படத்தின் இடையில் தூங்கி விட்டு, பின்பு உச்சகாட்சிக்கு கொஞ்சம் முன்பிருந்து பார்த்தால் கூட படம் புரியும். இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருந்தால் பரவாயில்லை.

1பிரகாஷ்ராஜ்

2த்ரிஷா

3பிருத்விராஜ், ஐஸ்வர்யா,சிரிப்பு நடிகர்,மனோபாலா மற்றும் இயக்குனர்.

4Flash back

5வித்யாசாகர்

6Climax


தெனாவட்டு:

நாயகன்1 வேலை தேடி சென்னை வருகிறார். அரிவாள் அடிக்கும் வேலைக்குச் சேர்கிறார். எதிர்நாயகன் அரிவாள் வைத்து மரம் வெட்டுவதாக நினைத்துக் கொண்டு அரிவாள் செய்து கொடுக்கிறார் நாயகன். அவர் மனிதரை வெட்டுவதைப் பார்த்து விட்டு வேலையை விட்டுவிட்டு நாயகியை ஊருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்ய விரும்புகிறார். இடையில் வேறென்ன எதிர்நாயகன்2 மகன் ஒரு பொறுக்கி. அவன் நாயகியை வன்புணர‌3 விரும்புகிறான். பிறகென்ன, நாயகன் எதிர்நாயகன் மோதல். அதே பழைய மோர். நாயகன், நாயகி அரவாணிகளிடம் தஞ்சம் என்பது சற்றே புதிது போல் தோன்றுகிறது.
மரம் வெட்ட கோடரி பயன்படுத்துவார்கள். அறுவைப்பொறி4 பயன்படுத்துவார்கள். அரிவாள் பயன்படுத்துவார்களா? நாயகனுக்குத் தெரியவில்லை. நமக்கும் தெரியக்கூடாது என்று இயக்குநர் நினைக்கிறார் போலும். வேறேன்ன பல நடிகர்கள்5 நன்கு வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். கலாநிதி மாறன் படம் வாங்கியதால் இப்படி ஒரு படமிருப்பது தெரிகிறது.
இசையமைப்பாளர்6 நன்கு இசை கற்ற பிறகு இசையமைத்தால் நன்றாக இருக்கும். பல இடங்களில் தாளக்கருவியின் மேல் உருண்டிருப்பார் போலும். அத்துணை இரைச்சல். பழைய இசையமைப்பாளரின்7 பின்னணி இசை மட்டும் தெளிவாக ஒலிப்பது சிறப்பு.

"சில மாதங்களுக்கு முன்...” என்று கதை தொடங்குவதை என்றுதான் நிறுத்துமோ திரைத்துறை. இத்துணை வன்புணர்ச்சி8 காட்சிகளா? தீமை.

"தீயவை தீய பயத் தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.“

என்னும் குறளை இயக்குனர் படிக்கவில்லை போலும். வண்டி வண்டியாக உரையாடல் எழுதுபவருக்கு இக்குறள் தெரியாதது வியப்பே. திருட்டுக் குறுவட்டிற்குக் கூட தகுதியில்லாத இப்படம் நமது நேரத்தைக் கெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

1ஜீவா

2Villain

3Molest

4இரம்பம்

5மனோபாலா, கஞ்சா கருப்பு, சரண்யா

6இற்றீகாந்த் தேவா

7இளையராஜா

8rape


சிலம்பாட்டம்:

சிலம்பாட்டம் என்றதும் நாயகனின்1 சிலம்புச்சண்டையைக் காண்பிப்பார்கள் என நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அதே எங்க வீட்டுப்பிள்ளை காலத்து பழிவாங்கும் காண்டம். இரட்டைப் பொருள்2 தரும் உரையாடல்கள் மிகுதியாகக் கையாளப்பட்டிருக்கின்றன. நாயகி3 நடனம் ஆடுகிறார்; கவர்ச்சி காட்டுகிறார். நடிக்கும் வாய்ப்பு குறைவே. மறுகாட்டுதலில் வரும்4 நகைச்சுவை நடிகரின்5 நகைச்சுவை புதிது. கரியமிலவாயு6 பயன்படுத்தி வரும் சிரிப்புக்காட்சிகள் தேவையற்றவை. முகஞ்சுளிக்க வைப்பவை.

மறுகாட்டுதலில் வரும் நாயகி7 பரவாயில்லை. அவருக்கு குரல் கொடுத்த பின்னணி குரல் கலைஞர்8 நன்றாகச் செய்திருக்கிறார். வேறென்ன, சிம்பு பல நடிகர்களின்9 நடிப்பினைப் போலச் செய்து கைதட்டல் வாங்குகிறார். இசையமைப்பாளர் துள்ளாட்டப்பாடல்கள்10 மூலம் சுவைஞர்களை ஆட வைக்கிறார். மச்சான் மச்சான்... முணுமுணுக்க வைக்கும் வகை. மற்ற பாடல்கள் செயற்கைகோள் தொலைக்காட்சிகளில் சில நாட்களுக்கு ஒலி,ஒளிக்கும் வகை. இளைய திலகம் நன்கு வீணடிக்கப்பட்டிருக்கிறார். சிறுவன் கொலை செய்வது போன்ற காட்சிகள் தீமை பயப்பன. மொத்தத்தில் சிலம்பாட்டம் நாயகனுக்கு நல்ல விளம்பரம். வேறொன்றுமில்லை. தமிழ் கூறும் நல்லுலகத்தில் இப்படியொரு பாடல், இதை நாயகனே பாடியிருக்கிறார்.

"அடி உட்டாலக்கடி ஜின்னு - நீ

உருட்டியெடுத்த பன்னு - என்ன‌

ஏதாச்சும் நீ பண்ணு - இனி

நீயும் நானும் ஒன்னு.”

இதையெல்லாம் கேட்க வேண்டும். எல்லாம் தலையெழுத்து. எது எப்படியோ இவங்க அப்பாவுக்கு இவரு பரவாயில்லப்பா என்கிறார்கள் திரையரங்கில் பார்வையாளர்கள்.

1பெயர் சிலம்பரசன் என்றாலும் சிம்பு என்றுதான் காட்டுகிறார்கள்.

2பல இடங்களில் அதே கெட்ட ஒரு பொருள்தான்.

3வடக்கு வரவு சானாகான்

4Flash Back

5கருணாஸ்

6Carbon di oxide

7ஸ்நேகா

8தீபா வெங்கட்

9அஜித்,விஜய்,ரஜினி

10Where is the party, நலந்தானா


பதிவிறக்கம் செய்ய‌: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/tt.pdf

1 Comment:

Unknown said...

Dear Annan,

I am really amazed to see your blogs. you are really doing the great job. My suggestion apart from cinema and computer why cant you print your foot in the development of the youth. the critic on Silambatem is super. better he can stop acting and he absolutely disgrace for tamil cinema.

i am expecting your comment on NAN KADAVUL