நண்பர் இற்றீ கலியாண இராமன் இந்த இயேசு பிறப்பு பெருவிழா பற்றி ஏதேனும் கூறு என்று கேட்டிருந்தார். அதனாலேயே இக்கட்டுரையினை வரைகின்றேன்.
இயேசு பெருமான் பிறப்புப் பெருவிழா
ஆண்டு தோறும் வரும் இயேசு பெருமான் பிறப்புப் பெருவிழா என்றாலும், இது எனது திருமணத்திற்கு பிறகு வரும் பெருவிழாவாதலால் தனிச்சிறப்புப் பெற்றிருந்தது.நான் சிறுவனாயிருந்த பொழுது பார்த்த பெருவிழாவினை விட இது வேறுபட்டது. மாமன், மாமியின் புதுவகையான கண்ணும் கருத்து எனக்கு மகிழ்ச்சி தந்தது. நான் சென்றது நள்ளிரவு திருவழிபாடு. மனைவி ஊரான மாரம்பாடியில் நிகழ்ந்தது. புத்தாடைகள் அணிந்திருந்தோம். இதயத்தில் இயேசு மற்றுமொரு முறை பிறந்திருந்தார். இனிப்புகள் உண்டோம்.
புதிதாக ஏதேனும் சொல்ல வேண்டுமெனில் திருத்தலத்தின் வேலைப்பாடுகளைச் சொல்லலாம். எத்துணை முறை பார்த்தாலும் அலுக்காத அழகுடன் திருத்தலம் மின்னியது சிறப்பு. பெருமான் பிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட குடிலினை கைபேசி கொண்டு களவாடிக் கொண்டேன்.
பங்குத்தந்தை சொற்பொழிவு குறித்து ஏதும் சொல்ல வாய்ப்பில்லை. இப்பொழுதெல்லாம் பங்குத்தந்தைகள் தூங்கிவழிந்து கொண்டுதான் பேசுகிறார்கள். சற்றே வருத்தத்துடன்தான் உண்மையை எழுதுகிறேன். அதனாலேயேதான் கத்தோலிக்கர்கள் பிற இறை பிரிவிற்குச் சென்று விடுகின்றார்கள்.
ஏழைக்கு ஏதெனும் உதவ வேண்டும். ஏழையின் சிரிப்பில்தான் இறைவன் தெரிகின்றார் என்று என்றோ அண்ணா சொன்னதைத்தான் பெருமான் பிறப்புச் செய்தியாகக் கருதிக் கொண்டேன். திருத்தலத்திற்குள் ஒரு நாயும் அவ்வப்போது வந்து வழிபாடு செய்தது. பாவம் மார்கழிக் குளிர் வேறென்ன செய்யும் வெறும்நாய்?
முந்தாநாள் வயல்வெளி வீச்சுப்பார்வை:
இயேசு பிறப்பிற்கு முந்தின நாள் மாமன் மாமி நிலங்களைப் பார்க்கத் திட்டமிட்டோம். ஏறக்குறைய ஒன்றரை ஏக்கர் என்று சொன்னார்கள். இதோ இங்கதான்... என்று கூறிக்கொண்டே ஒரு மைல் தொலைவு என்னைக் கூட்டிச் சென்றார் மாமனார். சென்ற இடங்களையெல்லாம் கைபேசி ஒளிக்கருவியில் களவாடினேன். "சென்ற வாரந்தான் மழை கொட்டியது அதனால் தான் இந்தப் பசுமை" என்றார் மகிழ்வாக மேவாயைத் தடவியபடி. ஆம். மாமனாருக்கு மீசை இல்லை. நான் படமெடுப்பது பார்த்து என் மனைவிக்கும் மகிழ்ச்சி.
சுட்ட படங்களைத்தான் இங்கே பார்க்கிறீர்கள். பசுமைதான் உழவின் நிறம். பற்பல செய்திகளை அடுக்கிக் கொண்டே சென்றார் மாமன். பரவாயில்லையே!! ஒரு பசுமை இதழ் நடத்தும் அளவிற்கு இவருக்குத் திறமுண்டு என்று நினைத்துக் கொண்டே தலையாட்டினேன்.
பசுமை இல்லாமலிருந்ததால்தான் வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன். என்று வள்ளலார் பாடினார் என்பதை நினைவு கூர முடிந்தது. முந்தின நாள் மாலை வெயில் தாழும் நேரம் சென்றதால் ஒரு வீச்சுப்பார்வையுடன் வீடு திரும்பினோம். புளியமரம், நன்செய் பயிர்கள் என எல்லாவற்றையும் வீச்சுப்பார்வையிலேயே தொட்டதால், விரிவாக எழுத மற்றொரு முறை பார்க்க வேண்டியிருக்கிறது. என்போன்ற பொறிநிறைஞர்கள் மடிக்கணினியும், கணினி அமைவுகளும் கொண்டே வாழ்வதால், இது போன்ற வயல்வெளி வீச்சுப்பார்வைகள் கிட்டும் பொழுது வீடுபேறு அடைந்த மகிழ்ச்சி அடைவோம். இது போன்ற வீடுபேறு எப்போழுதும் கிடைக்காதா என்று ஏங்கும் மனத்துடன் வீச்சுப்பார்வை விடைபெற்றது.
மறுநாள் அக்காள் வீடு
அவசர அவசரமாகத்தான் சென்றோம் அக்காள் வீட்டிற்கு. குட்டிப்பையனுக்கு கணினி தருவதற்கு. கணினி தந்து விட்டு உண்டுவிட்டு சற்றே ஓய்வெடுத்தோம். நிரல்களை விட, ஏன் திரைப்படங்களை விட அதிகம் விளையாட்டுக்களையே அதிகம் விரும்புகின்றன. உள்ளிருப்பைவிட வேறு ஏதேனும் விளையாட்டுக்களை நிறுவாமல் போனது சற்றே என்னை நெளியவைத்தது. இருப்பினும் குட்டிப்பையனை உச்ச நடிகர் திரைப்படம் காட்டி நிறைவடையச் செய்தேன். மாலை ஆகி விட்டது. பிறகென்ன மறுநாள் அலுவலகம். அதே அவசரயுக வாழ்க்கை, தமிழ் படிப்பதால் சற்றே மகிழ்வோடிருக்கிறது.
பெருங்கோன்.பா.நி.ஆ. பிரசன்னா
பதிவிறக்கம் செய்ய: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/christmas1.pdf
3 Comments:
Great to read your blog. Please write mother's banglore visit,St.Mary's Basilica church too when time permits.
நன்றி அன்புத்தம்பி அறிவு. உன் போன்ற வாசகர்களின் கருத்துக்களாலேயே எம் வலைப்பூவின் தமிழ் நன்கு மணக்கிறது. மென்மேலும் மணக்க வைக்க வேண்டுகிறேன்.
விரைவில் நீ விரும்பியதும் எம் வலைத்தோட்டத்தில் மலரும்.
Post a Comment