சனி, 3 ஜனவரி, 2009

அறியத்தருகிறேன் உங்களுக்காக

அறியத்தருகிறேன் உங்களுக்காக.

விடுப்பு என்றால் வேறென்ன விடுபட்ட வார, திங்கள் இதழ்களைப் படிப்பதுதானே வேலை. விடுப்பில் படித்தவற்றை அறியத்தருகிறேன் உங்களுக்காக.

ஏரிகள் நாட்டு நண்பருக்கு1, நான் படித்த இது போன்ற ஏட்டுச் செய்திகளைக் கேட்பதில் விருப்பமே தனி. எதிலுமே நிறைகளை முதன் சொல்வதே மரபு. எனவே நிறைகளுடன் தொடர்கிறேன் கட்டுரையை.
வல்லரசு நாட்டு முன்னாள் அதிபர்2 அடிபட்டது. அதன் நகைச்சுவைகள், விளையாட்டுக்கள். பூ திரைப்பட இயக்குநர்3 பற்றிய பார்வை, சிலம்பாட்டம், பொம்மலாட்டம் திறனாய்வுகள். அச்சுறுத்தும் தன்மை பற்றிய ஆய்வுகள், நிகழ் வாழ்வில் ஏற்பட்ட அரசியல் நாடகங்கள் ஆகியவையே முதன்மை வகிக்கின்றன இதழ்களில்.
முன்னணி வார இதழில்4 நானே கேள்வி... என்றொரு பகுதி வருகிறது. வாசகர்களே கேள்வி கேட்டு விடையளிக்கின்றனர். அதற்கும் பரிசும் கொடுக்கின்றனர். நன்றாயிருக்கிறது. வாசகர்கள் கிண்டல். எடுத்துக்காட்டிற்குச் சில‌:

கேள்வி: புஷ்?

விடை: ஷீ.. ஷீ.. மாரி.5

கேள்வி: இரண்டாயிர கால தமிழனின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?

விடை: பத்துப்பாட்டு முதல் குத்துப்பாட்டு வரை6
இரண்டாவதாக ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் நிறைய இடைவெளி விடுவதில் வல்லவர் "பூ" இயக்குனரே7 என்கிற கிண்டல். இவரது பூ நன்கு மலராமல் நிகழ் காலத்தைக் காட்டாமல் இருப்பதாக இளைஞர்கள் கதைக்கிறார்கள். ஆனால் இயக்குனரோ அதைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

சிலம்பாட்டத்தை8 ஏறத்தாழ எல்லா வார இதழ்களும் ஒரே மாதிரிதான் ஆய்வு செய்கின்றன. இதழ்கள் படத்தில் வரும் இரட்டை பொருள் தரும் கீழ்த்தரமானவை குறித்து ஆய்கின்றன. இது போன்ற இதழ்களில் வரும் கீழ்த்தரமானவற்றை ஆராய்வது யார்? எவ்வாறு? சிந்திப்போம்.

பழைய கதையை புது சிம்பு9 முலாம் பூசி தந்திருக்கிறார்கள் சிலம்பாட்டத்தில். இசைஞானி பாடும் ஒரு பாட்டு தவிர எல்லாமே குத்து வகையறாக்கள். எது எப்படியோ படம் நன்றாக ஓடுகிறதாகக் கேள்வி. மேலும் குறித்த இணையதளத்தில்10 உரிய விதத்தில் பதிவிறக்கம் செய்யவும் ஏதுவாக இருக்கிறது இந்த சிலம்பாட்டம்.

அச்சுறுத்தும் தன்மையினை அழிப்பது எப்படி என்னும் பெயரில் நகைச்சுவை செய்திருப்பது முன்னணி இதழுக்கு அழகன்று. இத்தன்மையினை அழிப்பது குறித்து தொழிலடிப்படையிலான11 செய்தி வர வில்லை என்பது கவலைக்குரியதே.

இந்நாளைய தமிழக முதல்வரது12 குடும்பம் பிரிந்தது, அவர் தமது பேரன்களை இகழ்ந்தது, அவர்கள் மீண்டும் இணைந்தது எல்லாமே தங்களது கோடிகளைக் காத்துக் கொள்ளும் நாடகங்கள்தாம் என்கின்றன இதழ்கள். இந்நாடகம் குறித்து அரசியல் கலைஞர்கள் பேசிக் கொள்வது நான் எழுதிய "இரண்டுகால் இழிமா" கட்டுரையை விட கொந்தளிப்பானது. "கல்லறையில் புரண்டு படுக்கிறார்கள்", "தம் கட்சி தவிர வேறு கட்சிகள் இல்லாமல் போகவேண்டும் என்கிறார் கலைஞர்" என்று மின்சாரக்குரலில் சாடுகிறார்கள் இந்த நிகழ் நாடகத்தைப் பார்த்து.
நாடாளுமன்றம் போக வேண்டும்.

கட்சி நடத்த வேண்டும்.

தொலைக்காட்சி நடத்த வேண்டும்.

பாராளுமன்றம் போக வேண்டும்.

திரைப்படம் எடுக்க வேண்டும். - இல்லையேல் எடுத்த‌

திரைப்படம் வாங்க வேண்டும்.

இவையெல்லாம் செய்ய

அடுத்த பிறவியிலேனும்

படைப்பாய் கடவுளே - என்னையும்

முதல்வர் பேரனாய்.
என்ற கவிதையும் முதன்மையாக அச்சிடப்பட்டுள்ளது, இந்நாடகத்தினை தென்றென விளக்கும்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, திரையில் வீர உரைநடை பேசி வீட்டில் தெலுங்கு பேசும் புரட்சிக் கலைஞர் கட்சி13 ஆகியவையும் இதழ்களில் குறுஞ்செய்திகளாக வருகின்றன. ஈழத்தமிழர் சிக்கல், பருத்திவீர இயக்குனரின் அடுத்த படம் மற்றவையென வார இதழ் வீசுகிறது வெறுங்கை.

முன்பு ஒரு நடிகையின் கதை. இப்போது ஒரு நடிகனின் கதை வரப்போகிறதாம். தமிழ் வார இதழில் முன்னணி இதழாம்14 இஃது இந்த விற்பனை உயர்த்து சூத்திரத்தை இன்னும் விட வில்லை போலும். இதற்கு முன்னோட்ட விளம்பரம் வேறு. இக்கதை எழுதப்போவதும் அதே இழிவான எழுத்தாளர்15 தானாம். இது போன்று எழுதி தம் இதழை முன்னேற்றிக் கொள்வோரை இழிவான பட்டியலில் சேர்ப்பதை சாலப் பொருத்தம்.

தானுண்டு, தன்னெழுத்துண்டு என இதழோடு ஒத்து வராமல் ஓ போடுபவர் இந்த எழுத்தாளர்16. இவரது பகுதிகளே படிப்பதற்கு சற்றே உகந்தவையாக இருக்கின்றன.
எதையும் உடைத்து,கிழித்து எழுத வலைப்பூக்கள்தாம் வசதி என்பவருக்குத் தனியாக வலைப்பூக்கள் இதுவரை இல்லை. என்னைத் தொடர்பு கொண்டால் தொடங்கித்தர நான் ஆயத்தமாயிருக்கிறேன்.
நடிகைகளின், மட்டை ஆட்டக்காரர்களின்17 மறைவு வாழ்க்கை, வடமொழி திரையில் தமிழ் விண்மீன்கள் போன்றவற்றைக் கிண்டலடித்தே இதழ்கள் நகர்கின்றன. தமிழ் இதழ்கள் என்று கூறும் இவைகள், தமிழினை ஊறுகாய் போல மட்டுமே தொட்டுக் கொள்கின்றன. தமிங்கிலம், ஆங்கிலம், வடமொழி, சமற்கிருதம், அந்தணர் மொழி18 போன்றவற்றை வைத்து ஒரு தமிழ்க்கொலை நடையினை சிரமேற்கொண்டு செய்கின்றன. இது போன்ற வாக்கிய அமைப்பில்லாத நடைகளைப் படித்தால் தமிழ் ஏற்கனவே செத்துவிட்டதோ! என்றே எண்ணத் தோன்றுகிறது.
அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், கலை போன்றவை குறித்து எழுதியவர் குறித்த எழுத்தாளர்19. இவரது திறமைக்காக எல்லா முன்னணி இதழ்களும் இவரை தமது இதழ்களில் வினா விடை, கட்டுரைகள், கதைகள் எழுத வைத்தன. பொருளீட்டின. அவர் இறந்த பிறகும் அவரது மேன்மை எழுதாமல், அவர் படம் மட்டும் அச்சிட்டே பொருளீட்ட முயற்சிக்கின்றன. அப்படி எழுதப்பட்ட தொடரும் நின்றுவிட்டது இப்போது. அவரது இடம் வெறுமையாகவே இருக்கிறது. இனி என்ன செய்யும் இதழ்கள்? இக்கட்டுரை படித்த பிறகாவது ஏதாவது புதிதாக எழுதுமா பார்க்கலாம். எது எழுதினாலும் பரவாயில்லை. தமிழில் எழுதட்டும்.

1 Sri Kalyana Raman

2 George W. Bush

3 Sasi

4 ஆனந்த விகடன்

5இவரின் மீது காலணி எறியப்பட்டது செய்தி. அண்மையில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் "பூ" அதில் வரும் பாடல் ச்சூ.. ச்சூ.. மாரி. அதை இப்படி மாற்றி எழுதியதால் பரிசு.

6இப்போது மெல்லிசையே விட குத்துப்பாட்டுகளே திரையில் அதிகம்.

7இவரது முந்தைய படம் Dish um வந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. இவரது படம் எப்போதுமே தாமதாமாகத்தான் வரும்.

8சிம்பு நடித்து அண்மையில் திரைக்கு வந்த படம் இது. அப்பனைக் கொன்றவனை பிள்ளை பழி வாங்கும் கருப்பு வெள்ளை காலத்துக்கதை.

9 Masala

10http://www.isohunt.com தளம் சென்று silambattamஎன்று தட்டச்சு செய்து தேடவும்.

11Professional style of eradicating terrorism

12Mr.M. Karunanidhi

13விஜயகாந்த்

14குமுதம்

15பதலக்கூர் ஷ்ரினிவாசலூ

16எழுத்தாளர் ஞாநி

17Cricketers

18Slang of Bhramins

19Writer Sujatha – his real name is Mr.Rangarajan

பதிவிறக்க: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/art1.pdf

3 Comments:

பெயரில்லா said...

நா சொல்லணுன்னு நெனச்சேன். நீங்க சொல்லிப்புட்டீங்க அண்ணே. இவிங்க தொல்ல தாங்க முடியலப்பா.

பெயரில்லா said...

மறுபடியும் நடிகனின் கதையா வேற கதயே இல்லியா. ஐயா பதலுக்கூர் சீனிவாசலூ நிறுத்தும்மையா.

பெயரில்லா said...

என்னய்யா எங்க தலைவர ஒரு காமடியனோட சேத்து வச்சு பேசுறேங்க? இதல்லாம் தப்பு. இதுக்காகவே தலைவரு ஒரு படத்துல நடிப்பருங்கறேன்..