நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இங்கு ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும் தலைப்புக்களும் இரண்டு பக்கங்களுடையவை. ஒவ்வொன்று பற்றியும் விரிவாக ஆராய்வோம். எனவே இப்பக்கத்திற்கு நாணயம் என்று பெயரிடப்பட்டுள்ளது. யாருடைய மனத்தையும் புண்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமன்று. நாணயத்தின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டுமென்பதுதான். ஆகவே நாணயம் போன்றிருப்பவர்கள் தாம் இப்பகுதியில் இடம்பிடிப்பார்கள். தமிழ் சுவைக்காக, ஆய்வுச்சுவைக்காக, பட்டிமன்ற சுவைக்காக எடுத்துக்கொண்ட ஆய்வே இது. இந்தச்சிந்தனைக்கு தலைப்புக் கொடுத்தவர் எமது இணைய நண்பர் அறிவழகன் கைவல்யம். அவர்களுக்கு எமது வலைப்பூ வாசகர்கள் சார்பாக நன்றிகளை உரித்தாக்குகிறோம். வாசகர்களும் உங்கள் தலைப்புக்களை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
புரட்சிக்கவிஞனே:
புரட்சிக்கவிஞந்தான். இதில் வேறு கருத்துக்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எத்துணை கவிகள்.அத்துணையும் காலத்தில் அழிக்க முடியாதவை. கண்ணன் பாட்டு, குயில் பாட்டு என இவற்றை மிஞ்ச ஆளேயில்லை. ஏன் இன்றும் கூட பல மேடைகளில் இவரின் கவிதைகளை மேற்கோள் காட்டுகிறார்களே.
உலகமாகவி:
அவரை உலகமாகவி என்று சொல்லாத ஆட்களே இல்லை. பார்ப்பனர்களிடத்திலிருந்து வேறுபட்டவர் எங்கள் பாரதி. முகம் முழுக்க மழித்துக்கொள்ளும் காலத்திலேயே காது வரை மீசை வைத்தவர். அந்த வீரத்தினை என்சொல்வது? வார்த்தைகளே இல்லை. அந்தணர்கள் யாரும் அக்காலத்தில் முண்டாசு கட்டாத காலத்தில் வீரத்துடன் முண்டாசு கட்டியவர். தடியினைப் பிடித்துக்கொண்டு பாரதி வீதியினை வலம் வருவதே அழகுதான்.
இதனை அறியா இக்காலச் சிறுவர்கள், பாரதி திரைப்படம் பார்க்க வேண்டுகிறேன். கைம்பெண் மறுமணம், தாழ்த்தப்பட்டோரை இறைவனின் பிள்ளைகள் என்று மாற்றியது என மிகுதியான எடுத்துக்காட்டுகள் பாரதியினை ஓர் உலகமாகவியாக ஏற்றுக்கொள்ள உதவும்.
பாரதி பாடல்கள்:
எல்லாவற்றிற்கும் மேலாக இவரின் மேல் கொண்ட நட்புக்காக, கனகசபை என்பவர் தன் பெயரையே பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டதை ஏற்றுக்கொண்டதே தமிழ் கூறும் நல்லுலகம். இன்றும் எத்துணை பாடல்கள் இவரின் பெருமை பறைசாற்றுகின்றன. சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா..., இந்த காற்று வெளியிடைக் கண்ணம்மா..., ஓடி விளையாடு பாப்பா..., முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை... என பள்ளிக்குழந்தைகள் பாடாத பாடல்களே இல்லை.
நாட்டுப்பற்று:
பாரதியின் நாட்டுப்பற்றுக்கு அளவே இல்லை. அவரின் பாடல்களில் அது தென்றென விளங்கும்.
"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடெனும் போதினிலே
புதுசக்தி பிறக்குது மூச்சினிலே.”
நாட்டினை தாய் என்றழைப்பதுதான் வழக்கம். ஆனால் பாரதி தந்தையர் நாடென்று அழைத்திருக்கிறார். மரபு தெரிந்து மரபு மீறியிருக்கிறார். அதனாலேயே புதுமை கிடைத்திருக்கிறது. தாம் புதுச்சேரியிலிருந்த காலத்தில் பிரெஞ்சு மொழியிலும் புலமை பெற்றிருக்கிறார். பிரெஞ்சுக்காரர்கள் பிடிக்க வரும் பொழுது ஒரு வீட்டில் சென்று ஒளிந்து கொண்டார் பாரதி. அவரை நாம் இழந்தது, ஈடு செய்ய இயலாத இழப்பேயாகும். உலகமாகவி இறந்த நாளை அல்லது பிறந்த நாளை கவிகள் நாளாகக் கொண்டாட வேண்டும். அதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதானதெங்கும் காணோம்.” என்ற இவரது உயர்கூற்று தமிழ்கூறும் நல்லுலகத்தின் அரிய உடைமை. இன்றும் இந்தக்கூற்று எல்லோராலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அது தவறு. ஏனெனில் பாரதி தமிழ்,மலையாளம்,வடமொழி,சமற்கிருதம்,பிரெஞ்சு,ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை பெற்றவர். எனவே அவர் இவ்வாறு சொல்வது சரியே. ஒரே ஒரு மொழியினை மட்டுமே தெரிந்த பிஞ்சுகள் இதனைப் பயன்படுத்தக்கூடாது என் தாழ்மையான கருத்து.
எல்லாமே எம்முயிர் எனக்கருதிய உயர்ந்த உள்ளம் :
தாமுண்ண வைத்திருந்த சோற்றினை காக்கைகளுக்கு இட்டு விட்டு காக்கை குருவி எங்கள் இனமே என்று பாடியவர் பாரதி. இவரது இச்செய்கை, வாடிய பயிர்களைக் கண்ட பொழுதெல்லாம், வாடினேன் என்று கூறிய வள்ளலாரின் செய்கையினை நினைவூட்டுகிறது.
தனியொரு மனிதருக்கு உணவில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம். என்று பாடியவர் பாரதி.
தம்மில்லத்திற்கு அழைத்து வந்து இழிவாகக் கருத்தப்பட்ட இனத்தோருக்கு பூணூல் அணிவித்து பெருமைப்பட்டவர் பாரதி.
"வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப்பூனை - அவை
பேருக்கொரு நிறமாம்.
பாம்பின் நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும் அதில் ஏற்றம் குறைவு உண்டோ”
என்று பாடி பூனையிலேயே ஏற்றதாழ்வில்லை, மனிதனில் ஏனப்பா இத்தனை பிரிவு என்றவர். மேலும் இசை பின்னோடிகளாக அவரது பிள்ளைகளை விட்டுச்சென்றுள்ளார். அவரது பெயரன் இராஜ்குமார் பாரதி ஒரு அருமையான கருநாடக இசைப்பாடகர். இத்தகைய பாரதி புரட்சிக்கவிஞனே. வாழ்க பாரதி புகழ்.
ஆரிய நச்சே - மறுபக்கம் :
என்னய்யா பெரிய பாரதி? இவரெல்லாம் ஒரு கவிஞரா? இழுவைக்கவிஞர் என்று மதுரைக்காரர்களால் அழைக்கப்பட்டவர். சரியான கஞ்சா குடிக்கும் பேர்வழி. இவரது பழைய ஒளிப்படங்களில் கன்னங்களெல்லாம் ஒடுங்கிக்காணப்படும். அதற்குக்காரணம் கஞ்சா இழுவையே. உலகமாகவி என்றழைக்கப்படும் இவர் இப்படி கஞ்சாவிற்கு அடிமையானவரே.
பல்லாண்டுகளுக்கு முன் வடநாட்டிலிருந்து வந்த பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து விட்டு ஏதோ தமிழைக் குத்தகைக்கு எடுத்தவர் போல் பிதற்றியவர். வீட்டில் அந்தணத்தமிழ் பேசிய இவர் தமிழ்க்கவிஞனா? வடமொழியினை தமிழில் நுழைத்தெழுத கவியெழுதியவர். தனிமை விரும்பி. சரியான பித்தர்.
தமிழ்க்கொலைகள்:
ஜகம் என்பது உலகம் அல்லது காடு. இதனை சகம் என்று எழுதி தமிழ்க்கொலை செய்தவர். தன்னைத்திட்டியவர்களைத் திட்டுவதற்காகவே கதைகள் எழுதியவர். காக்கைப்பார்லிமெண்ட் என்ற கதைகளையெல்லாம் எழுதியவர். காக்கைபார்லிமெண்ட் என்ன தமிழா? தான் எழுதியதுதான் சரி என்று பேசுபவர். அகம்பிடித்தவர். ஒருமைப் பன்மையினை மாற்றி எழுதிவிட்டு இதற்கு போகர் இலக்கணத்தில் இடம் இருக்கிறது என்றெல்லாம் சப்பைக்கட்டுக் கட்டுபவர்.
தன்னலமிக்கவர்:
தன்னினத்தார் யாருடனும் சரிவர பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாதவர். உலகமாகவி இந்த வார்த்தையை நினைத்தாலே சிரிப்புத்தான் வருகிறது. இவர் இறந்த போது வந்த கூட்டத்தில் மொத்தம் பதினெட்டே பேர்கள் தாம். இவர் உலகத்தை தன்னகத்தே கொண்டவரா? தன் விளம்பரத்திற்காக தன்னைப்பற்றியும், வகுப்புகள் பற்றியும் எழுதி பெயரெடுக்க நினைத்தவர். வீட்டில் உண்ணச் சோறில்லாத பொழுது பாடல் மூலம் உலகைக்கட்டியிழுக்க நினைத்தவர். வாழுங்காலத்தில் தன்னினத்தார் எல்லோராலும் ஏசப்பட்டவர் பாரதி.
புதுமை என்ற பெயரில்:
கடவுளை தாயாக நினைப்பர், தந்தையாக நினைப்பர். சரி இவர் ஒரு படி மேலே போய் காதலியாக நினைத்து எழுதியதுதான் கண்ணன் பாட்டு. இதில்தான் கண்ணன், கண்ணம்மா ஆகியது. கண்ணன் ஒரு ஆண்பால் அதை பெண்ணாக்கி எழுதியது புதுமையா என எண்ணத்தோன்றுகிறது. இதைப்பற்றி பெரியார் குழுவினர் வேறுபட்ட கீழ்த்தரமான கதைகளைக் கூறுவர். உயிரில்லா கண்ணனை கண்ணம்மா ஆக்கியதற்கு மாறாக தன் மனைவி செல்லம்மாவைப் பற்றி எழுதியிருந்தாலும் தகும்.
அகம்பிடித்தவர்:
அகம்பிடித்த இவரது பாடல்களில் ஒரு அச்சமின்மை தெரியும்.
"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்திலுள்ளோர் எல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
என்பதில் தொடங்கி
"காலா என் காலருகே வாடா
உன்னைச் சிறு புல்லென மிதிப்பேன்.”
என்பது ஈறாக அனைத்திலும் அகம்பிடித்தவராகவே செயற்பட்டிருக்கிறார். வாழுங்காலத்தில் புகழ் இல்லாதவர்தான் இந்த ஆரிய நச்சான பாரதி.
பதிவிறக்கம் செய்ய: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/bharathi.pdf
2 Comments:
எல்லா பக்கத்திலயும் எழுதி எல்லோரோட நாடியையும் பிடிக்கிறீங்களே. ம்ம்.. நல்லாயிருக்கு அண்ணே.
///
தாழ்த்தப்பட்டோரை இறைவனின் பிள்ளைகள் என்று மாற்றியது என மிகுதியான எடுத்துக்காட்டுகள்
///
இதையே தான் காந்தி “ஹரிஜனம்” என்ற அரிய கண்டுபிடிப்பாக திருவாய்மலர்ந்தார். அதனால தான் காந்தியோட உன்மையான முகமும் வெளிய தெரிஞ்சுது.
ஹரிஜனத்துக்கு உண்மையான அர்த்தத்த மொதல்ல தெரிஞ்சுக்கிட்டு எழுதுங்க. தேவதாசி முறை நடைமுறையில் இருந்த காலத்தில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் “அப்பா யாரும்மா”ன்னு அவங்க அம்மாவைக் கேட்டா, கோயில்ல இருக்க சாமியக் காட்டி அதுதாண்டா கண்ணு உன் அப்பான்னு சொல்லுவாங்க. இப்போ சொல்லுங்க, அரிஜனம்னு சொல்லிக்கிறது கௌரவமா, கேவலமா?
Post a Comment